"ஜெய் சிறீராம்" கோஷம் போட வேண்டுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 4, 2023

"ஜெய் சிறீராம்" கோஷம் போட வேண்டுமா?

மத்தியப் பிரதேசம் கட்வா மாவட்டத்தில் உள்ள பங்கனா என்ற ஊரில் இசுலாமியர்கள் மற்றும் ஹிந்துக்கள் இரண்டு மதத்தினரும் சமமான எண்ணிக்கையில் உள்ளனர். இந்த நிலையில் இசுலாமிய சிறுவன் காலையில் பள்ளிக்குச்சென்று கொண்டு இருந்தான். அப்போது ஆருத் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சிலர் அவனை அழைத்து, 'ஜெய் சிறீராம்' சொல்லச் சொல்லி உள்ளனர். அவன் மறுக்கவே அவனை அடித்துத் துன்புறுத்தி அருவருப்பான சொற்களால் திட்டித் தீர்த்துள்ளனர்.

இது தொடர்பாக, சிறுவனின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். சிறுவனிடம் அவனது பெற்றோர்  மற்றும் அப்பகுதியில் இருந்த கடை ஊழியர் முன்பாக விசாரணை செய்தனர். அப்போது அச்சிறுவன் காவல் துறையினரிடம் கூறியதாவது: "நான் தினமும் பள்ளிக்கு இந்த வழியாகத்தான் செல்வேன், அப்போது அங்கு இருந்த சிலர் என்னை அழைத்தனர், நான் அவர்களிடம் சென்றபோது, அவர்கள் "என்ன படிக்கிறாய்" என்று கேட்டார்கள். 

"நான் 5 ஆம் வகுப்பு" என்று கூற, ஹிந்தி நன்றாகப் பேசுகிறாய், உருது பேசாதே! என்றும் கூறிக்கொண்டே இருந்தனர். இதனால் எனக்குப் பள்ளி செல்வது தாமதமானது; நான் செல்ல முற்படும் போது 'ஜெய்சிறீராம்' சொல் என்றார்கள். நான் "பள்ளி செல்வதற்குத் தாமதமாகிறது" என்று கூறினேன்.  அப்போது ஒருவர் என்னை கன்னத்தில் அறைந்தார், மற்றொருவர் என்னை உதைத்தார். பிறகு நான் பயந்து 'ஜெய் சிறீராம்' என்று கூறினேன். என்னை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, தூங்கும் போதும் இதையே கூற வேண்டும் இல்லை என்றால் வீட்டுக்கு வந்து அடிப்பேன், என்றார்கள்" என்று கூறினான். இது தொடர்பாக, தைனிக் பாஸ்கர் நாளிதழுக்கு அப்பகுதி கடைக்காரர் ஒருவர் கூறும் போது, "நாங்கள் அந்த சின்னப் பையனை அடிப்பதைப் பார்த்தோம்; என்ன என்று விசாரிப்பதற்குள் சிறுவன் அழுது கொண்டே சென்று விட்டான். அவர்களும் சென்று விட்டனர்.  சிறுவனை 'ஜெய் சிறீராம்' சொல்லச்சொல்லி அடித்தது மிகவும் தவறான செயல்" என்று கூறினார். 

இதனை அடுத்து சட்டப்பிரிவு 295-இன் கீழ் அடை யாளம் தெரியாத மூன்று நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது, மேலும் குற்றவாளியை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் கட்வா காவல்துறை இறங்கி உள்ளது.  மாவட்ட காவல்துறை ஆணையர் அனில்சிங் கூறும் போது, "மத விரோத நடவடிக்கை, மற்றும் மதமோதல்களை உருவாக்கும் இது போன்ற நடவடிக்கைகளை காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்" என்று கூறினார். 

இதே மாவட்டத்தில் இசுலாமிய மாணவியை "நீ இந்திய கலாச்சாரத்தை நேசிக்கிறாய்  என்றால் பொட்டு வைக்க வேண்டும்" என்று ஆசிரியர் ஒருவர் மிரட்டிய நிகழ்வு சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

வட மாநிலங்களில் இது சர்வ சாதாரணமாகவே நடந்துகொண்டுதான் இருக்கிறது. 

கல்விக்கூடங்களுக்குள் நுழைந்தே இப்படிக் கூறச் செய்யும் அராஜகம் தலை விரித்தாடுகிறது.

பிஜேபி ஆளும் மாநிலங்களில் கேட்கவே வேண்டாம். 'இது நாடா கடும் புலிவாழும் காடா?' என்று கேட்கத் தோன்றுகிறது.

மேனாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் போன்ற அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்கூட இத்தகைய அச் சுறுத்தல்கள் ஆபத்தானவை! இவற்றைத் தகுந்த முயற்சி எடுத்துத் தடுக்க  வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இப்பொழுது தேவை எல்லாம் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஒற்றுமையே! பொது எதிரியை வீழ்த்த வேண்டிய நேரத்தில் வேறு விடயங்களைக் கொண்டு திணிப்பது விபரீதத்திற்கு  வெண் சாமரக் குடையைப் பிடிப்பதாகும் - எச்சரிக்கை!


No comments:

Post a Comment