‘‘பாதை மாறா பயணம்‘‘ நூலினைப் பெற்றுக்கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

‘‘பாதை மாறா பயணம்‘‘ நூலினைப் பெற்றுக்கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

 ராமன் பாலம் என்ற ஒன்று கிடையாது என்று  ஒன்றிய அமைச்சரே ஒப்புக்கொண்டுவிட்டாரே!

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவேண்டும்; ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புக் கிட்டுமே!

பாலு வழிகாட்டியுள்ளார்; வரலாற்றைப் பதிவு செய்வீர்!

‘‘பாதை மாறா பயணம்‘‘ நூலினைப் பெற்றுக்கொண்டு  தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

சென்னை, ஜன.8 ராமன் பாலம் என்ற ஒன்று கிடை யாது என்று ஒன்றிய அமைச்சரே ஒப்புக் கொண்டு விட்டாரே! சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; ஆயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்புக் கிட்டுமே! பாலு வழிகாட்டியுள்ளார்; வரலாற் றைப் பதிவு செய்வீர்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘பாதை மாறா பயணம்‘‘  நூல் வெளியீட்டு விழா

நேற்று (7.1.2023)  மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அவர் கள் எழுதிய ‘‘பாதை மாறா பயணம்‘‘ நூல் வெளியீட்டு விழாவில்,   நூலின் முதல் தொகுதி யினைப் பெற்றுக்கொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும் ஒரு நூல் வெளியீட்டு விழா - அதுவும் தன்வரலாறு என்ற சாதனைக் களஞ்சியமாக அமைக்கப்பட்டு இருக்கக் கூடிய ‘‘பாதை மாறா பயணம்”  என்ற தலைப்பில், மாறாத பாதையை என்றைக்கும் தேர்ந்தெடுத்து, அந்த வகையில், ஓர் அற்புதமான தலைப்பினையும் தந்து, ஏறத்தாழ 1400 பக்கங்களுக்குமேல் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டு இருக்கின்ற தன் வரலாற்று நூல் வெளியீட்டு விழா - நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல்மிகு பொருளாளர் அருமைச் சகோதரர் மானமிகு மாண்புமிகு டி.ஆர்.பாலு அவர்கள் எழுதிய இந்த நூலின் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை தாங்கியிருக்கின்ற இந்தி யாவின் நம்பர் ஒன் முதலமைச்சர் என்று இன எதிரிகளால்கூட, பத்திரிகைகளால்கூட பாராட்டப்படக் கூடிய ஒப்பற்ற திராவிட மாடல் ஆட்சியை இன்றைக் கும் நடத்தி, உலகப் புகழ் திராவிடத்திற்கு உண்டு என்று காட்டக் கூடிய பெருமைமிகு  எங்கள் ஒப்பற்ற முதலமைச்சர் இந்த நிகழ்ச்சியினுடைய தலைவர் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக உரை யாற்றி அமர்ந்துள்ளவரும், இரண்டாவது பாகத்தைப் பெற்றுள்ளவருமான கவிப்பேரரசு அவர்களே,

இந்நிகழ்ச்சியில் சிறப்பாக வாழ்த்துரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், நீர் வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு மானமிகு சகோதரர் துரைமுருகன் அவர்களே,

அனைவரையும் வரவேற்று உரையாற்றிய அருமைக் கவிஞர் கனிமொழி எம்.பி., அவர்களே,

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சார்பாக, இளைஞர் களின் சார்பாக சிறப்பாக உரையாற்றிய மாண்புமிகு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அன்பிற்குரிய திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களே,

இந்நிகழ்வில், சிறப்பாக உரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி கொள்கையாளராக இருந்து, கூட்டணியில் நேரிடையாக இல்லாவிட்டாலும், இன எதிரிகளுக்கு சிறப்பாகப் பதில் சொல்லிக் கொண் டிருக்கின்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் அன்பிற்குரிய சகோதரர் பேரா சிரியர் சுப.வீ. அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுபெரும் தோழர், தியாகச் செம்மல் என்று சொல்லலாம்; 49 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் எல்லாம் மிசாவில் சிறையில் இருந்தபொழுது,  சிறையில் இருந்தவர்கள் பட்டபாட்டை, இன்றைக்கும் நம்முடைய சகோதரர் ஆற்காடு வீராசாமி அவர்களைப் பார்க்கின்ற நேரத்தில், அந்த உணர்விற்கு ஆளாகியிருக்கின்றோம்; அப்படிப் பட்ட உணர்வு படைத்த திராவிட முன்னேற்றக் கழகத் தின் முக்கிய பொறுப்பாளரான அருமைச் சகோதரர் ஆற்காட்டார் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர்களே, மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, அருமைத் தோழர்களே, வெளியீட்டாளரான ஆழி செந்தில்நாதன் அவர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு பாகங்களைப்பற்றி இங்கே அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அடுத்து நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சிறப்பாக அதைப்பற்றிய விளக்கத்தையும் எடுத்துச் சொல்லவிருக்கின்றார்கள்.

பாலு அய்யரா?

இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்லவேண்டும். இங்கே கவிஞர் அவர்கள்கூட சொன்னார்கள்; முதல் பாகத்தை நான் படித்து முடித்து, பெற்றிருக்கின்றேன். இரண்டாவது பாகத்தை அவர் பெற்றிருக்கிறார். இரண்டு பாகங் களையும், இரண்டு பேரும் படித்திருக்கின்றோம். அதைப்பற்றி சொல்லவேண்டுமானால், ஓர் ஆய்வரங் கமே நடத்தலாம்.

அதைவிட ஒரு முக்கியமான அம்சம் என்ன வென்றால், எனக்கு இப்பொழுது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது - தளிக்கோட்டையில் டி.ஆர்.பாலு அவர்கள் இளைஞராக படித்துக் கொண் டிருந்தபொழுது பார்த்தபொழுது, பாலு அய்யரை நான் பார்த்ததில்லை.

பாலு அய்யர் எப்படி நம்முடைய இயக்கத்திற்கு வந்திருக்கிறாரே, என்று மிகப்பெரிய அளவிற்குப் பார்த்தனர். பிறகு, அவருடைய பரிணாம வளர்ச்சியில் வரிசையாக வருகிறபொழுது, பாலசுப்பிரமணியம், பிறகு கலைஞரால், டி.ஆர்.பாலு என்று அவர்கள் ஆக்கப்பட்டு, அதைத்தான் நண்பர்கள் இங்கே குறிப்பிட்டதைப்போல, மிக முக்கியமாக நிரந்தரமாக ஆகியிருக்கிறது.

எத்தனையோ செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம். அவர் முதன்முதலில் திருப்பாலக்குடி என்ற அவருடைய ஊருக்குப் பக்கத்தில் இருக்கின்ற ஊரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் பொதுக்கூட்டத்திற்குச் சென்று பார்த்திருக்கிறார்; அய்யா அவர்களைப் பார்த்த நேரத்தைவிட, அய்யா அவர்களின் பக்கத்தில் இருந்த நாயைப் பார்த்து, அவர் பயந்துகொண்டே அப்படியே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்ததால், பள்ளிக்கூடம் போவதற்குத் தாமதமாகி விட்டது.

‘பள்ளிக்கு ஏன் தாமதம்?’ ஆசிரியர் கேள்வி

பள்ளிக்குச் சென்றதும், அவருடைய ஆசிரியர் கேட்கிறார்,   ‘‘ஏன் பள்ளிக்கூடத்திற்குத் தாமதம்?’’ என்று.

அவர் சொன்னார், ‘‘பெரியாருடைய கூட்டம் நடை பெறுவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால், நான் தாமதமாக வந்தேன்’’ என்று சொன்னார்.

‘‘சரி, சரி, அடிக்கடி பெரியார் கூட்டத்தைக் கேளுங்கள்'' என்று, அந்த ஆசிரியர் இன்னும் அதிகமாக அவரை ஊக்கப்படுத்தினார்.

அன்றைக்குத் தொடங்கிய அவருடைய பயணம் என்பது, இன்றைக்கும் - நாளைக்கும் - என்றைக்கும் ஒரே பாதையில் என்ற பெருமைக்குரிய பயணமாக இருக்கிறது. அதைத்தான் நாம் பாராட்டவேண்டும்.

எத்தனையோ சோதனைகள் -இந்த இயக்கத்தைப் பொறுத்தவரையில், இந்தப் புத்தகத்தைப் பொறுத்த வரையில், அதாவது தன் வரலாறு என்பது இருக்கிறதே, அது வெறும் சம்பவக் கோர்வை அல்ல. தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்றதை மட்டும் அவர் குறிப்பிடவில்லை.

மாறாக, இங்கே வெளியிடப்பட்ட  1400 பக்கங்கள் கொண்ட இரண்டு தொகுதிகளையும் படித்தால், என்ன தெரிந்துகொள்ளலாம் என்றால், திராவிட இயக்கத் தினுடைய வரலாற்றை - ஏறத்தாழ 60 ஆண்டுகால வரலாற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

வரலாற்றைப் பதிவு செய்யவேண்டும்!

அதேபோல, திராவிட இயக்கத்திற்குக் குறிப்பாக என்னென்ன சோதனைகள் ஏற்பட்டன? அதைத் தெரிந்துகொள்ளலாம். அதைவிட எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருந்தபொழுது, என்னென்ன சங்கடங்கள் ஏற்பட்டன? சாதனைகள் பின்னால் வருகின்றன; சோத னைகளைத் தாண்டியிருக்கின்றோம் என்பதையெல்லாம் அவர் பட்டியல் போட்டுக் காட்டியிருக்கிறார். ஒரு சம்ப வத்தைக்கூட விடவில்லை. இதில் கொள்கை உறவுகள், குடும்ப உறவுகள், இப்படி எல்லா உறவுகளைப்பற்றியும் அவர் எடுத்து, ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறார்.

இங்கே நம்முடைய பொதுச்செயலாளர் துரை முருகன் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, ‘‘சம்பவங்கள் இயக்கத்தால் பதிவு செய்யப்படவேண்டும்‘‘ இந்த இயக்கத்தில் அப்படி எழுதக்கூடிய தோழர்கள் ஏராளம் இருக்கின்றார்கள்.

ஏனென்றால், இந்த இயக்கம் சிலர் நினைப்பதுபோன்று, சாதாரணமாக நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் அல்ல என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

பலவகையான சங்கடங்கள்; பல வகையான எதிர் நீச்சல்கள்  இவற்றையெல்லாம் சந்தித்துத்தான் இன் றைக்கு இந்தக் கட்டத்திற்கு வந்திருக்கிறார்கள்.

இந்த ஆட்சியை சோதித்துப் பார்க்கலாம்; குறுக்குச் சால் ஓட்டிப் பார்க்கலாம்; போட்டி அரசாங்கத்தை நடத்திப் பார்க்கலாம்; தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கிப் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு, இதை ஆட்டலாம், அசைக்கலாம் என்று யாராவது நினைத்தால், அவர்களுடைய இந்த எண்ணம் ஒரு போதும் இந்த நாட்டில் ஈடேறாது.

அதற்குரிய பாடத் திட்டம் - எச்சரிக்கை போன்றது தான் இங்கே வெளியிடப்பட்ட நூல்கள்.

ஏன் இந்தப் புத்தகங்களைப் படிக்கவேண்டும் என்றால், அவருடைய சாதனைகளைப்பற்றி மட்டும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல; எல்லாவற்றையும் தாண்டி, இறுதியில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று சொல்லக்கூடிய - நம்பிக்கை ஊட்டக்கூடியதற்கு இதுபோன்ற நூல்கள் பயன்படு கின்றன.

எத்தனையோ செய்திகள் உள்ளன; ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன்.

சேது சமுத்திரத் திட்டம் நமது முக்கிய பிரச்சினை

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் - 150 ஆண்டுகால கனவுத் திட்டம் என்று கருதப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்களால் ‘‘எழுச்சி நாள்’’ என கொண்டாடப்பட்ட போராட்டம்; நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், இதற்காகவே மிகப்பெரிய அளவிற்கு போராட்டங்களையெல்லாம் நடத்தி, பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஒன்றிய ஆட்சியில் அங்கம் வகித்தபொழுது, கப்பல் துறைதான் வேண்டும் என்று கேட்டு வாங்கி, அதை யார் பொறுப்பாக செய் வார்கள் என்று யோசித்து, அந்தப் பொறுப்பை நம்மு டைய சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களிடம் ஒப்படைத்து, சீக்கிரமாக செய்து முடிக்கவேண்டும் என்று சொன் னார்கள்.

அதற்கான நிதி ஆதாரம் ஏராளம் இருக்கின்ற நிலை என்றாலும்கூட, அதற்கு சேது சமுத்திரக் கால்வாய் கழகம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, சொந்தமாக அந்தச் சிந்தனையைச் செயல்படுத்தும் ஆற்றல் ஒருவருக்கு- டி.ஆர்.பாலுவுக்கு உண்டு என்பதை அவர் பதிவு செய்திருக்கின்றார் என்றால், இந்த இயக்கம் எப்படிப்பட்டவர்களைப் பெற்றிருக்கிறது என்பதை நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.

வெறும் சாதாரண கொள்கைப் பிரச்சாரகர்களை மட்டும் திராவிட இயக்கம் பெற்றிருக்கவில்லை. ஆற்றலாளர்களைப் பெற்றிருக்கின்றது என்பதற்கு அடையாளம். அந்தத் திட்டத்திற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் செலவழிக்கப்பட்டு, அந்தத் திட்டத்தால், பயண காலம் 400 மைல் மிச்சமாகக் கூடிய நிலையில், இலங்கை முழுவதும் சுற்றிவரக்கூடிய நிலையில் மாற்றங் கள் பெற்று, மிகப்பெரிய அளவிற்கு பயன்பெறலாம் என்ற நிலையில்,  மக்கள் வரிப் பணம் செலவழிக்கப்பட்ட நேரத்தில், இன்னும் 23 கிலோ மீட்டர்தான் மீதம் இருக் கிறது இந்தத் திட்டம் முடிவதற்கு என்று சொல்லும் பொழுது, குறுக்கே இராமனைக் கொண்டு வந்தார்கள்.

‘‘எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும்?’’

இராமர் பாலம் என்ற ஒன்றைச் சொல்லி, பக்தியைக் காட்டினார்கள். இந்தத் திட்டத்தை முதலில் ஆதரித்த வர்கள், பின்னாளில் ஏன் எதிர்த்தார்கள்? இந்தப் பெருமை தி.மு.க.விற்கு வந்துவிடக் கூடாது; இந்தப் பெருமை கலைஞருக்கு வந்துவிடக் கூடாது; இந்தப் பெருமை யு.பி.ஏ. அரசாங்கத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

இந்தத் தொலைநோக்குத் திட்டம் நிறைவேறியிருந்தால், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு எத்தனையோ ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கும்.

இன்றைக்கு இளைஞர்களுக்காக வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதற்காக ஏராளமான திட்டங்களை வகுக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறீர்களே, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை - ஆதாம் பாலம் என்று சொல்லி, இராமர் பாலம் என்று சொல்லி, அதைத் தடுத்து  நிறுத்தியிருக்காவிட்டால், இன்றைக்குத் தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு எத்தனையோ லட்சம் பேருக்கு வேலை கிட்டியிருக்கும்.

இவற்றையெல்லாம் துணிவாக எழுதியிருக்கிறார் இந்த புத்தகத்தில். இதற்காக 60 பக்கங்களை அதற்காகவே செலவழித்திருக்கிறார்.

எனவே, இதுபோன்ற ஒவ்வொரு திட்டங்களையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். 

ராமர் பாலம் என்பது இல்லை - ஒன்றிய அமைச்சரே ஒப்புதல்

அன்றைக்கு இராமரைக் கொண்டு வந்து, அந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டீர்களே, இன்றைக்கு என்ன நிலை? உண்மை எந்தப் பக்கம் இருக்கிறது?

இன்றைய பா.ஜ.க. ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில், நாடாளுமன்றத்தில்  கேள்வி கேட்டபொழுது, ஒன்றிய அமைச்சர் அதற்குப் பதில் சொல்கிறார்,

‘‘இராமர் பாலம் இருந்ததற்கான எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது’’ என்று.

இப்பொழுது வெற்றி பெற்றவர்கள் யார்?

திராவிட இயக்கத்தவர் அல்லவா!

இன்னமும் ஏன் அந்தத் திட்டத்தைத் தடுத்துக் கொண்டிருக்கவேண்டும் என்பதுதான் இப்பொழுது பிரச்சினை.

இவற்றையெல்லாம் கேட்கிறோம் என்பதற்காகத் தான், இப்பொழுது, ‘தமிழ்நாடு’ என்று சொல்லாதீர்கள்; ‘தமிழகம்‘ என்று சொல்லுங்கள் என்கிறார்கள்.

அதில்கூட ஒரு பிரிவினை மனப்பான்மை. இரண்டு பேரையும் மோத விடுகிறார்கள்.

தமிழ்நாடு என்றால் பிரிவினையா?

தமிழ்நாடு என்று சொன்னால், பிரிவினை மனப் பான்மை என்று சொல்வதற்கு இவர் யார்?

பேரறிஞர் அண்ணா அவர்கள், மிகத் தெளிவாக ‘‘கவர்ன்மென்ட் ஆஃப் தமிழ்நாடு’’ - தமிழ்நாடு அரசு என்றார். 

வெறும் சம்பளம் வாங்கக்கூடிய ஓர் ஊழியர், தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்று சொன்ன நேரத்தில், அதற்கு முதல் பதிலடி எங்கே இருந்து வந்தது என்றால், அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர் களிடமிருந்துதான். மிகத் தெளிவாக, உடனடியாக அதற்கான பதிலைச் சொன்னார்கள்.

அந்த வகையில்தான், ஒரு கொள்கை வீரருடைய பயணம் இது. பாதை மாறாத பயணம் இருக்கிறதே - அது சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில்கூட, பாதையை மாற்றத் தேவையில்லை என்று அவர்களே சொல்லக் கூடிய அளவிற்கு, இன்றைக்கு ஒப்புக்கொண்டிருக் கிறார்கள்.

எனவேதான், இது வெறும் வாழ்க்கை வரலாறு நூல் அல்ல நண்பர்களே! இது ஓர் இயக்கத்தின் வரலாறு - அரசியலின் வரலாறு - கொள்கை வெற்றியினுடைய வரலாறு.

இப்படிப்பட்ட நூல்களைப் படிக்கவேண்டும்; இந்த நூல்கள் பரவினால்தான், ‘நூல்’களின் அட்டகாசம் அடங்கும் - அதுதான் மிகவும் முக்கியமானது; அதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

சரியான காலகட்டத்தில், இந்த நூல் பயன்படக் கூடிய அளவிற்கு இங்கே வெளியிடப்பட்டு இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இன்றைக் கும் நம்முடைய எழுச்சிக்கு இதுபோன்ற நூல்கள் தேவை.

‘‘பதவி என்பது மேல்துண்டு; கொள்கை என்பது வேட்டி!’’ அண்ணா சொன்னார்!

கொள்கையில் நாம் சமரசம் செய்துகொள்ளவேண்டிய அவசியம் கிடையாது. அதை இங்கே வெளியிடப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் மிக அழகாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த நூலில் உள்ள ஒன்றை மட்டும் சொல்கிறேன்; பேரறிஞர் அண்ணா அவர்கள் எடுத்துச் சொன்னதை, ஓர் அருமையான பகுதியை இங்கே அவர் எடுத்துக் கையாண்டிருக்கிறார்.

உண்மையான கொள்கைப்பற்று என்பது எது?

‘‘பதவிகள் வரும், போகும்; ஆனால், கொள்கை என்பது மாறாதது; மாறக்கூடாது’’ அதுதான் முக்கியம்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்குப் பாடமாக எடுத்துச் சொன்ன பகுதி, 

‘‘பதவி என்பது ஒருவருக்கு மேல் துண்டு; ஆனால், கொள்கை என்பது வேட்டி போன்றது’’ என்றார்.

அந்தக் கொள்கைகளைத் தெளிவாகச் சொல்லக் கூடிய அளவிற்கு வாய்ப்புகளை அவர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் எழுத்தைவிட, அவருடைய செயல்கள் எப்படித் தெளிவாக உருவாகியிருக்கிறது; அவரை சிந்திக்க வைத்திருக்கிறது என்பதற்கு ஓர் அடையாளம்.

அவர் ஒன்றிய அமைச்சராக இருந்தபொழுது செய்த இந்தியாவிலுள்ள சாலைகளின் சிறப்பைப் பற்றிச் சொன்னார்கள்; இங்கே இருக்கக்கூடிய சாலைகளின் பெருமைகளைச் சொன்னார்கள்; இன்னமும் தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய சாலைகளின் பெருமைகளையும் எடுத்துச் சொல்லுகின்ற நேரத்தில், இவையெல்லாம் சிறப்பாக இருக்கிறது - கலைஞர் அவர்கள் பாராட்டினார் என்பதைப்பற்றியெல்லாம் இங்கே எடுத்துச் சொன் னார்கள்.

நண்பர்களே, நான் இப்பொழுது சொல்கின்ற தகவலை நன்றாக கவனிக்கவேண்டும்.

சிறீபெரும்புதூரில் மறுபடியும் வெற்றி பெறுகிறார். அப்படி வெற்றி பெற்ற அவருக்கு, அமைச்சர் பதவி இல்லை.

அதற்குப் பிறகு என்ன அவர் இயக்கத்தைவிட்டு ஓடிவிட்டாரா? இயக்கம் வேண்டாம் என்று போய் விட்டாரா? சங்கடப்பட்டாரா?

இந்த இடத்தைத்தான், இந்தப் புத்தகத்தில் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டியது - பெற்றுக்கொண் டால் மட்டும் போதாது நண்பர்களே - கற்றுக்கொள்ள வேண்டிய பகுதி இருக்கிறது.

பதவிகள் வரும், போகும். கொள்கைகள் நிலைக்கும். பாதை மாறவேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவாக நினைத்தார்.

ஏனென்றால், ஒரு தலைமை, சில முடிவுகளை எடுக்கின்றபொழுது, சில வாய்ப்புகளை சிலருக்குக் கொடுப்பார்கள் - சில நேரங்களில். அதற்குரிய காரண காரியங்களை, பல நேரங்களில் வெளிப்படையாகச் சொல்ல முடியாது; சொல்லத் தேவையும் இல்லை.

ஆனால், தொண்டர்கள், தோழர்கள் என்பவர்கள், பின்பற்றுபவர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடிய பெருந்தன்மை இருக்கிறதே, அதுதான் உண்மை யான கொள்கை என்பது மிக முக்கியமானதாகும்.

தந்தை பெரியார் ஒன்றைச் சொல்வார்,

''ஒருவருக்கு உதவிகள் கிடைக்கும்பொழுது, அதுவும் அவரும் விரும்புவது கிடைக்கும்பொழுது, அவர் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது முக்கியமல்ல; அவர் விரும்பியது கிடைக்காதபொழுது, எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியமானது; அதை வைத்துத்தான் அந்த மனிதரை அளக்கவேண்டும்‘‘ என்று சொல்லுவார்.

அந்த வகையில் பார்க்கும்பொழுது, தோழர், சகோதரர் பாலு அவர்கள் சாதாரண மனிதர் அல்ல; ஒரு மாமனிதர் என்பதை, அந்த வாய்ப்புகளில் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

இந்தப் பகுதியில் என்ன அவர் எழுதப் போகிறார் என்று கவனத்துடன் நான் படித்துக்கொண்டே வந்தேன். மற்ற வரலாறுகளையெல்லாம் பதிவு செய்துகொண்டு வருகிறாரே, இந்தக் காலகட்டத்தை அவர் எப்படி கையாளப் போகிறார்? ஏனென்றால், இவ்வளவு திறமை உள்ளவருக்கு வாய்ப்பில்லை என்று மற்றவர்கள் சங்கடப்பட்டார்கள்; அது உண்மை; அந்தக் காலகட்டம் எங்களுக்கும் தெரியும்.

ஆனால், அந்த நேரத்தில்கூட, அமைதியாக, நான்கு வரிகளில் தாண்டிவிட்டு, ‘‘என்னுடைய கடமையை நான் செய்கிறேன்; என்னுடைய கொள்கையை நான் செய் கிறேன்” என்று, கலைஞரிடத்தில் தோளோடு தோளாக நின்றார்.

அதுதான் ஒரு நல்ல தொண்டன்

அதுதான் ஒரு நல்ல பணியாளன்

அதுதான் ஒரு நல்ல கழகத்துக்காரன்

அதுதான், திராவிட இயக்கத்தின் தன்மை

எனவே, இந்த இயக்கத்தை நீங்கள் மாற்றலாம்; அசைக்கலாம் என்று நினைக்காதீர்கள்.

சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்ற முழக்கம்!

இது தமிழ்நாடு! தமிழ்நாடு!! தமிழ்நாடு!!! என்று சொல்லி,

இந்த நேரத்தில் உங்களுக்கு ஒன்றைச் சொல்லு கிறேன், அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று பெயர் மாற்றுகின்ற நேரத்தில், சட்டமன்றத்தில் அண்ணாவே சொன்னார், சட்டமன்றத்தினுடைய வரலாற்றில், ‘‘தமிழ்நாடு என்று நான் குரல் கொடுக்கிறேன்; வாழ்க என்று நீங்கள் சொல்லுங்கள்’’ என்று அண்ணா அவர்கள் சொன்னார், எந்த ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பும், அந்த சட்டத்திற்கு, இப்படி ஒரு குரல் கொடுத்து எந்த ஒரு முதலமைச்சரும் நிறைவேற்றவில்லை. அதுதான் சிறப்பானது, சட்டமன்ற வரலாற்றில்.

அதை மாற்றிவிடலாம் என்று நீங்கள் நினைக் காதீர்கள்.

நாடு என்று சொன்னால், உடனே, அது பெரிய அளவிற்குப்  பிரிவினையாம்!

நாடு என்ற சொல் வந்தாலே, பிரிவினையாகிவிடுமா?

இன்றைக்குக்கூட ‘விடுதலை’யில் ஒரு பெட்டிச் செய்தி போட்டிருக்கிறோம்.

பைத்தியக்காரர்களே, பக்தர்களே நீங்கள் என்ன பாடுகிறீர்கள்?

‘‘தென்னாடுடைய சிவனே போற்றி!’’ என்பதில் நாடு வரவில்லையா?

‘‘தென்னாடுடைய சிவனே போற்றி!’’ என்று.

தென்னாடு என்று சொன்னால், பிரிவினையா?

அப்படி பாடியவர்கள்மீது கிரிமினல் வழக்குப் போடுவீர்களா?

ஊர்களுக்குக்கூட பெயர் வைத்திருக்கிறார்களே, தஞ்சை மாவட்டத்திற்குள் சென்றால் தெரியுமே! ஒரத்த நாடு, வல்லநாடு என்று இருக்கிறதே, அந்த ஊர்ப் பெயரையெல்லாம் மாற்றுவார்களா? அந்த ஊர் பிரிவினை ஊர் என்று ஆகிவிடுமா?

எனவேதான், இந்தப் பூச்சாண்டிகளை இங்கே காட்டாதீர்கள். உங்களை அனுப்பவேண்டிய அளவிற்கு இந்த நாடு தயாராக இருக்கிறது; தமிழ்நாடு தயாராக இருக்கிறது.

இப்போது நண்பர்களே முழங்குங்கள், 

தமிழ்நாடு! தமிழ்நாடு!! தமிழ்நாடு!!!

(அனைவரும் ''வாழ்க, வாழ்க, வாழ்க!'' என்று முழக்க மிட்டனர்)

இதுதான் பதில், இதுதான் தொடர்ச்சி, இதுதான் அடுத்த பாகம்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.


No comments:

Post a Comment