'நீட்' விலக்கு மசோதா மீண்டும் விளக்கம் கேட்கிறது ஒன்றிய அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

'நீட்' விலக்கு மசோதா மீண்டும் விளக்கம் கேட்கிறது ஒன்றிய அரசு

சென்னை, ஜன.20- நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஒன்றிய அரசு மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  சென்னையில் செய்தியாளர் களிடம் நேற்று (19.1.2023) கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, கடந்த 13ஆம் தேதி நீட் விலக்கு மசோதா தொடர்பாக, ஒன்றிய ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் வந்துள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு அரசு மற்றும் சட்ட வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்ட விளக்கத்தில் இருந்து, மேலும் ஒரு சிறிய விளக்கம் பெறுவது குறித்து அவர்கள் கேட் டுள்ளனர்.

இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி, விரைவில் உரிய பதில் அனுப்பப்படும். நீட் மசோதா நிராகரிக்கப்படவில்லை. அவர்களுக்கு இருக் கும் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வகையில், தொடர்ச்சியாக விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 3,949 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுகாதார மய்யங்களில், செவிலியர் பணி நியமனம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. பிப்ரவரி மாத இறுதிக்குள் 3,949 பணியிடங்களும் நிரப்பப்படும். கரோனா காலத்தில் பணியாற்றிய 1,800 செவிலியர்களும் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக நான்கு மாதங்களுக்கு முன்பே அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். ஏற்கெனவே அவரது அறிக்கைக்கு பதில் அளித்துள்ளோம். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment