ஜீன் மெஸ்லியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

ஜீன் மெஸ்லியர்

ஜீன் மெஸ்லியர் என்பவர் “பகுத்தறிவு, அல்லது கத்தோலிக்க குருவின் மரண சாசனம்” என்னும் சிறந்த நூலை எழுதிய ஆசிரியர் ஆவார். இவர் 30 ஆண்டு காலம் ரோமன் கத்தோலிக்க குருவாயிருந்தார். மதக் கட்டளைகளின் போலித்தன்மையை நன்றாக உணர்ந்து, தனது இறுதிக் காலத்தில் “பகுத்தறிவு” என்ற பெயருடன் தனது மரண சாசனத்தை எழுதிவைத்தார். பிரஞ்சு மொழியில் எழுதப்பட்ட அந்நூல் அவருடைய மரணத்திற்குப் பின்னர் பல மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது. அந்நூலை  ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர், மிஸ்.ஆனாநூப் என்னும் பெண்மணியாவார். ஆங்கில நூலின் முதற்பாகத்தை நமது தோழர் எஸ்.குருசாமி அவர்கள் தெளிந்த - இனிய சுலபமான தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இது நமது பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஞானசூரியனாக நின்று மக்களின் அறியாமை இருளைப் போக்கிவரும் இந்நூலை ஒவ்வொருவரும் கற்க வேண்டியது அவசியமாகும்.

இத்தகைய பேரறிஞர் ஜீன் மெஸ்லியரின் வாழ்க்கைச் சரிதம் வருமாறு:-

“ஜீன் மெஸ்லியர் 1678ஆம் ஆண்டின் மாஸர்னி என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது தகப்பனார் ஒரு நெசவுக்காரர். கிராமத்தில் வளர்ந்து வந்த போதிலும் ஜீன் மெஸ்லியர் தத்துவ சாஸ்திரம் முதலிய சாஸ்திரங்களைப் படித்துப் படிப்படியாய் குரு ஸ்தானத்தை அடைந்தார். சிறு வயதிலிருந்தே நற்குணங்களும், நல்லொழுக் கங்களும் உடையவராதலால், அவர் குரு நிலைமையை அடைந்துங்கூட அதே குணங்கள் அவரிடத்தில் காணப்பட்டது ஆச்சரியமல்ல. அவர் தனது கடமைகளில் சிறிதும் தவறுவதேயில்லை. தன் ஊதியத்தில் மீதிப் பட்டதை ஏழைகளுக்குக் கொடுத்து உதவினார். அவருடைய இரக்கமான மனதிற்கும் குறையாத அன்பிற்கும் அவருடைய வாழ்க்கையிலிருந்து பல உதாரணங்கள் கூறலாம்.

ஒரு சமயம் அவருடைய கிராமத்தி லிருந்த பிரபு ஒருவர் சில விவசாயிகளைத் துன்புறுத்திய காரணத்திற்காக ஜீன் மெஸ்லியர் அவருக்காகக் கடவுள் வணக்கம் செய்ய மறுத்து விட்டார். இவ்விஷயத்தை அப்பிரபு மேலதிகாரிக்குத் தெரிவித்து ஜீன் மெஸ்லியரைப் பல வழிகளிலும் கொடுமைப்படுத்தினார். “ஏழைகள் பணக்காரர்களிடத்தில் படும் கஷ்டத்திற்கு தானே ஒரு உதாரணம். ஆனாலும், பிரபுவைக் கடவுள் மன்னிப்பாராக; ஏழைகளைத் துன்புறுத்தாதவாறு நல்ல குணங்கள் அவருக்கு அமைய வேண்டு மென்பதே எனது விருப்பம்“ என்று ஜீன் மெஸ்லியர் பொறுமையாகப் பதிலிறுத்தார்.

ஜீன் மெஸ்லியர் 1733ஆம் ஆண்டில் தனது 55ஆவது வயதில் காலஞ்சென்றார்.

அவர் இறந்ததும் சில கையெழுத்துப் பிரதிகள் அவரிடமிருந்து அகப்பட்டன. ஒவ்வொன்றும் 366 பக்கங்கள் கொண்டதாக 3 நகல்கள் கொண்ட அப்பிரதிகள் முழுவதும் அவரது கையாலேயே எழுதப்பட்டிருந்தன. அவைகளின் மேல் “எனது மரண சாஸனம்” என்று தலைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. இம்மூன்று நகல்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரிடம் போய்ச் சேர்ந்தது. கவுண்ட் கைலஸ் என்பவர் சில நாட்களுக்குள் அதில் 100 நகல்கள் எடுத்துப் பாரிஸ் நகரில் பரவச் செய்தார்.

ஜீன் மெஸ்லியர் தான் எழுதிய மூன்று நகல்களையும் ஒரு பழுப்பு நிறமான காகிதத்தில் சுற்றி வைத்திருந்தார். அக்காகி தத்தின் மீது அவர் எழுதியிருந்ததாவது:-

“மனிதர்களுடைய அக்கிரமங்களையும், குற்றங்களையும், கொடுமைகளையும், அறிவீனச் செயல்களையும் என் ஆயுள் முழுவதும் கண்டுணர்ந்தேன். அவைகளை நான் ரொம்பவும் வெறுத்தேன். ஆனால், நான் இருந்த நிலையில் அவைகளை வெளிப்படையாய்ச் சொல்வதற்கான தைரியமும், சந்தர்ப்பமும் எனக்கில்லை என்பதை நான் கண்ணிமாய் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனாலும் நான் இறந்துபோனதற்கு முந்தியாவது, நான் கண்ட உண்மைகளை உலகத்திற்குச் சொல்லிவிட்டு உயிர் விட வேண்டு மென்று நினைத்திருந்தேன். அந்த ஆசை நிறைவேறிவிட்டது. நானும் மனத் திருப்தியோடு உயிர் விடுகிறேன்.”

“நான் ஏதேனும் சொந்த நன்மையைக் கருதி இவ்வாறு மன மாற்றத்தை அடையவில்லை என்பதை உங்களுக்கு உறுதியாய்க் கூறுகிறேன். ஆனால், எனது உணர்ச்சிக்கு முற்றிலும் மாறான ஒரு வேலையை ஏன் ஒப்புக்கொண்டேன் என்றால், ஏதாவது பொருள் திரட்டும் நோக்கத்தினாலல்ல. பின் எதனால் என்றால், எனது பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிவது என் கடமை என்று நினைத்தேன். ஆனாலும் அதைவிட்டு வெளிப்பட்டு உண் மையை உரைத்து விட வேண்டுமென்ற ஆசை எனக்குண்டு. ஆனால், முதலி லேயே அப்படிச் செய்திருந்தால், எனது முழு அபிப்பிராயத்தையும் உலகத் திற்குச் சொல்லுவதற்கு முன்பே நான் கொல்லப் பட்டிருப்பேன்.”

“கடவுள் கிருபையை விலைக்கு வாங்குவதற்காகவென்று பாமர ஜனங்கள் பணத்தைக் கொண்டுவந்து கொட்டியதை நான் வெறுத்தேன். பல சமயங்களில் அதை ஏற்றுக்கொள்ளவும் மறுத்தேன். அய்யோ! என்ன கொடுமை! பாமர ஜனங்கள் கண்மூடித்தனமாய், குருவின் பாதத்தில் பணத்தைக் கொட்டி தங்களுக்காக கடவுளை வணங்குமாறு கேட்கிறார்களே, என்பது எனக்கு அவ்வளவு வருத்தமாயில்லை. ஆனால், படுபாவிகளான குருமார்கள் தாங்கள் செய்வது பெரும் ஏமாற்றுத்தனம் என்பதை மனப்பூர்வமாக அறிந்திருந்தும்கூட பண ஆசையாலும், அதிகார அவாவினாலும் அதைச் சந்தோஷமாய் அனுமதித்துக் கொண்டும், அனுபவித்துக்கொண்டும் இருக்கிறார்களே, என்பதுதான் என் உடலை நடுங்கச் செய்கிறது. குருமார்கள் தங்களுடைய நோகாத வாழ்க்கையை நினைத்துச் சந்தோஷப்பட்டாலும் படட்டும்; ஆனால், அதற்காகப் பாமர ஜனங்களை, சூதுவாதறியாத ஏழை ஜனங்களை மேலும் மேலும் குற்றங்கள் செய்யும்படி தூண்டுகிறார்களே, என்பதானது எனக்குச் சகிக்க முடியவில்லை.”

“ஓ! எனது கிராம ஜனங்களே! உங்களிடம் எவ்வளவு தடவைகள் பணம் பெறாமல் போதித்தேன். இன்னும் ஒரு தம்பிடி கூட வாங்காமல் போதிக்கக்கூடிய சக்தியில்லையே என்று எத்தனை தடவை உங்கள் முன் கதறியிருக்கிறேன்! நினைத்துப் பாருங்கள்! உங்கள் மதத்திலுள்ள ஆபாசங்களை எத்தனை சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறேன்! பக்தி மார்க்கமான பொய் மூட்டைகளை உங்கள் தலையில் கட்டியடித்ததற்காக, எத்தனை தடவைகளில் நான் எனது மார்பை அடித்துக் கொண்டிருப்பேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? நானே நம்பாத விஷயங்களையெல்லாம் வெள்ளை மனதான உங்களை நம்பும்படி செய்தேனே! அக்கொடுமையை நினைத்து நினைத்து எத்தனை தடவை வெட்கியிருப்பேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நான் செய்த மதப் புரட்டுகளை ஒரு பொது மேடையில் உங்கள் முன்பு சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டுமென்று சுமார் ஆயிரந்தடவை முயற்சித்திருப்பேன். ஆனால், எனது பலத்தை மீறிய பயமானது இந்த நிமிடம் வரையில் என் வாயை அடைத்துவிட்டது. நானும் உங்களை இருட்டிலேயே விட்டிருந்தேன். நான் ஒரு படுபாவி என்றே நினைக்கிறேன் - மன்னியுங்கள், இந்த நிமிடத்திலாவது உண்மையை, என் மனதில் இத்தனை ஆண்டுகளாய் அடைபட்டுத் திமிறிக் கொண்டிருந்த உண்மையை உங்கள் முன் கொட்டிவிட்டுச் சாகின்றேன் - கவனியுங்கள்’’ என்று சொல்லி உதாரணங்கள் மூலமாக விடயங்களை விளக்குகிறார்.

இவருடைய நூலாகிய பகுத்தறிவு அல்லது மரண சாசனம் என்பதைப் பற்றி அறிஞர்கள் கூறியிருக்கும் சில அபிப்பிராயங்கள் வருமாறு:-

“இப்புத்தகத்தைப் படித்தவர்கள் எல்லோரும் இதன் உண்மைகளில் முற்றிலும் திருப்தியடைந்துவிட்டார்கள் என்பதை நான் கண் முன்னே கண்டேன். இம்மனிதன் சாமான்யன். தர்க்கங்களைக் கிளப்பிவிட்டு நிரூபித்துக் காட்டுகிறார். ஜீன் மெஸ்லியருடைய மரண சாசனமானது, உலகில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் அளிக்கப்பட்ட ஒரு பெருஞ் செல்வமாகும். ஆகவே, உண்மையை நாடும் ஒவ்வொரு ஆண் பெண்ணிடமும் இப்புத்தகம் இருக்க வேண்டியது அவசியம்! அவசியம்!! அவசியம்!!! என்று சொல்லுவேன்’’ என்று பிரெஞ்சு தேசத்து அறிஞர் வால்டையர் கூறுகிறார்.

“யோக்கியமான குருவாகிய ஜீன் மெஸ்லியரால் எழுதப்பட்ட இப்புத்தகமானது சென்ற நூற்றாண்டில் நடந்த நிகழ்ச்சிகளுள் மிகவும் அதிசயமானதும், அதிக அபாரமானதுமான நிகழ்ச்சியாகும். “பெயின்’’ “வால்டையர் முதலியவர்கள் சில விடயங்களை மறைத்து வைத்தார்கள். ஆனால், ஜீன் மெஸ்லியர் அவ்விதம் செய்யவில்லை. அவர் ஒன்றையும் ரகசியமாய் வைத்துக்கொள்ளவில்லை” என்று ஜேம்ஸ் பார்டன் என்பவர் எழுதியிருக்கிறார்.

“மதக் கூட்டத்தினரெல்லாம் இயற்கைக்கு எதிராக அற்புதங்களைச் செய்யக்கூடிய வல்லமை, தங்களிடம் இருக்கிறதாகச் சொல்லுகிறார்களே ஒழிய அந்த அற்புதங்களின் உதவியினாலோ, அல்லது உதவியில்லாமலோ ஜீன் மெஸ்லியருடைய ஒரு சிறிய கேள்விக்குக்கூட அவர்களால் பதில் சொல்ல முடியாது போயிற்று’’ என்று பீட்டர் எக்களர் என்பவர் கூறியிருக்கிறார்.

இவ்வாறு அறிஞர்களால் பாராட்டப்பட்ட ஜீன் மெஸ்லியருடைய புத்தகத்தின் பெருமை அளவு கடந்ததாகும். மதவாதிகளின் புரட்டுகளையும், கடவுள் கொள்கையின் போலித் தன்மைகளையும் நன்கு அறியலாம்.

No comments:

Post a Comment