தந்தை பெரியாரும் சேகுவேராவும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

தந்தை பெரியாரும் சேகுவேராவும்

பிரின்சு என்னாரெசு பெரியார்

“இந்த அதிசயக் காலத்தில் எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன் என்று முட்டாள்தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?” இப்படி சொல்லக் கூடிய துணிச்சல் யாருக்கு இருக்கும் என்று எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் சொல்லி விடலாம், இது தந்தை பெரியாரின் கூற்று என்று! ஆம், 14.11.1972 ‘விடுதலை’யில் வெளியான தந்தை பெரியாரின் கருத்து இது.

உலகப் பார்வை

1972இல் மட்டுமல்ல... தொடக்கம் முதலே தந்தை பெரியாரின் பார்வை உலகப் பார்வை தான்... உலகம் தழுவிய மனித நேயப் பார்வைதான். மனிதகுலத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட எவருக்கும் அதில் நிறம், இனம், மொழி, ஜாதி, மதம், பண்பாடு, நாடு, கண்டம் என்ற எல்லைகளை வைத்துப் பேதம் பார்க்கத் தோன்றாது. ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதும் பற்றுக் கொண்டவர்கள் தான் உண்மையில் புரட்சியாளர்களாகவும், சிந்தனையாளர்களாகவும் இருக்க முடியும். உலகின் விரிந்த பரப்பளவினாலும், மொழி, பண்பாடு, அடிப்படைப் பிரச்சினைகள், நாட்டு எல்லைகள், வாழும் காலம் ஆகியவற்றினாலும் இத்தகைய உலகளாவிய சிந்தனை கொண்டோருக்குத் தடைகள் ஏற்படலாம். அவையெல்லாம் அவர்களின் செயல்பாட்டு எல்லையை சிறிதளவு வேண்டுமானால் தடுக்க இயலுமே தவிர, முழுமையாகத் தடுக்கவியலாது. அப்படியே செயல்பாட்டைத் தடுக்க வியன்றாலும், அவர்களின் சிந்தனைகளை எல்லைகளால் தடை செய்யவியலாது. உலகின் கடைக் கோடி மனிதனுக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும், விடுதலையும், சுயமரி யாதையும் வேண்டும் என்ற தீரா வேட்கையுடன்தான் அத்தகையோர் செயல்கள் அமையும். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர் தம் சிறகு விரியும். 

“தோழர்களே.. நாம் உலகம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்கிறோம். நம் இயக்கம் உலக இயக்கம். உலக இயக்கம் என்றதும் மனிதன் மலைப்பான். இவர்கள் இங்கிருந்துகொண்டுதானே பேசுகிறார்கள் என்று! முற்காலத்தில் மனிதனுக்கு 25 மைலுக்கு அப்பால் உள்ளதே மலைப்பாக இருக்கும். அன்றைக்கு உலகத்தினை உணர அவனுக்குச் சாதனங்கள் இல்லை. அது மட்டுமல்ல, தமது நாட்டைப்பற்றிக்கூட உணர  வசதியில்லை. இன்று அப்படியல்லவே! அமெரிக்காவா னது 10ஆயிரம் மைல்கள் என்றாலும் ஒன்றரை நாளில் அங்கு போய்விடலாமே! நமக்கும் ரஷ்யாவுக்கும் 8மணி நேரப்பயணம்தானே! அங்கு போக 8மணி, காரியம் பார்க்க 8 மணி, திரும்பி வர 8 மணி என்று வைத்துக்கொண்டால் 24 மணி நேரத்தில் ரஷ்யாவுக்குப் போய் வந்துவிடலாமே! இப்படியாக உலகம் விஞ்ஞான வளர்ச்சி காரணமாகப் பக்கத்தில் வந்து கொண் டிருக்கிறது” என்று உலகோடு உறவாட விழைகிறார் தந்தை பெரியார். (விடுதலை 14.11.1972)

இனி வரும் உலகம்

மனிதராக ஒன்றிணைவதற்கு எந்தத் தடை வரினும் அவற்றைக் குறித்தோ, அவற்றின் மீதான புனிதம், மக்கள் ஆதரவு என்பவை குறித்தோ எவ்விதக் கவலையுமின்றி, ஏறி மிதித்துக் கடந்து செல்கிறார். இந்தப் போக்கு தான் உலகளாவிய அவரது பார் வைக்குக் காரணம். 

‘இனி வரும் உலகம்’ என்று ஒரு தொலைநோக்காள ராகத் தந்தை பெரியார் கண்ட உலகம், தொழில்நுட்ப ரீதியிலும், அறிவியல் முறையிலும் வளர்ந்த உலகம் மட்டுமல்ல; மனிதர் ஒன்றே என்னும் உள்ளம் கொண்ட, சுயமரியாதையும், சுகவாழ்வும் கொண்ட உலகம். அவர் காண விரும்பியதும், இனி வரும் உலகம் இப்படித்தான் இருக்கும் என்று விரித்து ரைத்ததும் அறிவியலையும், ஆற்றலையும் மனித சமூகம் முழுமைக்கும் பாகுபாடின்றி பயன்படுத்த வேண்டும் என்ற வேணவா நிறைவேறிய உலகம். அத்தகைய உலகம் பண்பட்ட மக்களால் உருவாகும்; பண்பட்ட மக்களை உருவாக்கும் என்ற எண்ணம்தான் தந்தை பெரியாரின் அந்த உரைக்கு அடிப்படை. அது உட்டோப்பியன் உலகம் அல்ல; மாறாக, பண்பட்ட மனிதத் தன்மையினை நோக்கிச் சென்றே ஆக வேண்டிய கட்டாயமும், சாத்தியப்பாடும் நிறைந்த எண்ணம் அது!

ஒரு மனிதன் தனது காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ வலி இருந்தாலும் அவன், எனக்கு வலிக்கிறது என்று சொல்வது போல, உலகில் வேறு எந்தத் தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும் குறைபாடுகளை யும் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்டதுபோல நினைக்கும்படியும் அனுபவிப்பதுபோல் துடிக்கும்படி யும், அவ்வளவு கூட்டுவாழ்க்கையும் ஒற்றுமை உணர்ச்சியும் (உள்ள சமுதாயம்) ஏற்படும் என்று தந்தை பெரியார் 1943-இல் திருவத்திபுரத்தில் நடை பெற்ற ஒரு திருமணத்தில் ஆற்றிய உரையின் நோக் கத்தை, விருப்பத்தை, பேரவாவைப் பூமிப் பந்தின் இன்னொரு கோடியிலிருந்து உங்களால் கேட்க முடிந் தால், சந்தேகமின்றி அது சேகுவேராவின் குரலாக இருக்கும்.

நீயும் என் தோழனே

‘If you tremble with indignation at every injustice then you are a comrade of mine'. “உலகில் எங்கேனும் நடக்கும் அநீதிக்கு எதிராக நீ குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே!” என்ற உலகப் புகழ்பெற்ற எர்னெஸ்டோ சே குவேராவின் வார்த்தை களில் தொனிக்கும் மனிதப் பற்று, தந்தை பெரியாரின் மனித நேயத்திற்கும், அதற்கான போராட்ட உணர் வுக்கும் ஒப்பானதன்றோ?

தன்னலம் கருதாத உழைப்பு என்பதிலேயே பல வகை உண்டு. தன்னலம் கருதாமல் குடும்பத்திற்காக உழைப்போர், தன் சுற்றத்திற்கு உழைப்போர், தன் ஊரை மட்டும் கருத்தில் கொள்வோரெல்லாமும் தன்னலமற்றோர் என்றே கருதப்படுவர். ஆனால் அவற்றைத் தன் சொற்களால் தெளிவாக  வரையறுக் கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

“தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு 

சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டென்போன் 

சின்னதொரு கடுகு போல் உள்ளங் கொண்டோன்!

தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!

கன்னலடா என் சிற்றூர் என் போனுள்ளம் 

கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம்!

தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச் 

சுதந்திரத்தால் பிற நாட்டைத் துன்புறுத்தல்!

ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார்,

அவரவர் தம் வீடு நகர் நாடு காக்க 

வாயடியும், கையடியும் வளரச் செய்வார் 

மாம் பிஞ்சின் உள்ளத்தின் விளைவும் கண்டோம்!

தூய உள்ளம் அன்புள்ளம் சமத்துவ உள்ளம்

தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே எனும்

தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே 

சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே!” 

என்றார் புரட்சிக் கவிஞர். வரையறையற்ற தம் மனிதப் பற்றால் தூய உள்ளம் அன்புள்ளம் சமத்துவ உள்ளம் தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே எனும் தாயுள்ளம் கொண்டோரென்ற வரையயறைக்குள் தந்தை பெரியாரையும், சே குவேராவையும் நம்மால் ஒருங்கே கொண்டுவரமுடியும்.

சளைக்காத போராளிகள்

இந்தப் பேரன்பே சளைக்காத போராளிகளாக அவர்களை இறுதிவரை வைத்திருந்தது. தங்கள் ஆயுளின் இறுதிக் கணம் வரை மனிதகுலம் குறித்தே சிந்தித்த மகத்தான தலைவர்களாக தந்தை பெரியாரை யும் சே குவேராவையும் நாம் காணலாம். கடுமையான நோய்ப் பாதிப்பின் இடையிலும் களத்தில் நின்றவர்கள் இருவரும். சிறுவயது முதலே சே குவேராவைப் பாடாய்ப் படுத்தியது ஆஸ்துமா. அவர் பயணத்தில் இருந்தபோதும், ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் இருந்தபோதும், ஆட்சியில் இருந்தபோதும், மீண்டும் மற்றொரு போர்க் களத்தில் புகுந்தபோதும் அவரைப் பிரியாதிருந்தது ஆஸ்துமா. ஆனால், அத்தனை நோய்த் தொல்லைகளைக் கடந்தும் தளராமல் களத்தில் நின்றார் சேகுவேரா. 

தந்தை பெரியாரின் உடல்நிலை எத்தகையது? அன்னை மணியம்மையார் குறித்து எழுதவந்த புரட் சிக் கவிஞர் இதோ தந்தை பெரியாரின் உடல்நிலையை விவரிக்கிறார். "பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால், பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.

ஆயினும், காற்றிறங்கிய பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக்காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது; அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை, அன்னை என்று புகழாமல் நாம்வேறு என்ன என்று புகழவல்லோம்?"

இவ்வாறு புரட்சிக் கவிஞர் தன் குயில் ஏட்டில் எழுதியது 10.04.1960இல்! அதற்குப் பின் 13 ஆண்டுகள் 8 மாதங்கள் 14 நாட்கள் தந்தை பெரியார் மக்கள் தொண்டாற்றினார். கடைசி மூன்று நாட்கள் மருத்துவ மனையில் இருந்த தந்தை பெரியார், டிசம்பர் 19, 1973 வரை இம் மக்களுடன் களத்தில் நின்றவர்; பேசியவர்; எழுதியவர். மூச்சிரைப்போடு அடர்காட்டில் போர்க் களத்தில் நின்ற சேகுவேராவைப் போல், தன் உடல் உபாதைகள் அனைத்தையும், வயது தந்த தொல்லை கள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு விலங்கி னும் கீழாய் அடைக்கப்பட்டிருந்த மக்கள் நிறைந்த கானகமாகக் கிடந்த இச் சமூகப் போர்க் களத்தில் சமராடியவர் பெரியார்.

உடல்நிலையைப் பாராமல் உழைத்தவர்கள்

1960-இல் தான் இந்த நோய்த் தொல்லையா? இல்லை, 1949-ஆம் ஆண்டு தந்தை பெரியாரை விட்டுப் பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் கண்டு, 18 ஆண்டுகளுக்குப் பின் தந்தை பெரியாரை, வெற்றி மாலையோடு வந்து சந்தித்த அறிஞர் அண்ணா தீட்டினார் ஓர் எழுத்தோவியம்.  

“அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, இப்போது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன.” அண்ணா குறிப்பிடுவது 1934-1935 கால கட்டத்தை! புரட்சிக் கவிஞர் குறிப்பிடும் 1960-க்கும் 25 ஆண்டு களுக்கு முன்பு!

அப்போது தந்தை பெரியாரின் உடல் நிலை எப்படியிருந்தது என்பதைத் தான் படம்பிடித்துக் காட் டியிருக்கிறார் அறிஞர் அண்ணா. ஒன்றா இரண்டா? எத்தனையெத்தனை நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்ட முடியும்? 

மருத்துவமனையில் இருந்தபடி, மருத்துவருக்குத் தெரியாமல் பொதுக் கூட்டத்திற்குப் போய் பேசிவிட்டு, நல்ல பிள்ளையைப் போல மீண்டும் வந்து மருத்துவ மனையில் சேர்ந்து கொண்டதாகட்டும்; வயிற்றுக் கடுப்பினால் படுக்கையில் கிடந்தபோது வைக்கத்தில் போராட அழைப்பு வந்ததும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து, களத்திற்குச் சென்றதாகட்டும்; நாவில் புற்று வந்தபோது, அதைச் சரிசெய்து கொண்டு மக்கள் மத்தியில் மீண்டும் நாத்திகக் கருத்துகளைப் பேசியதா கட்டும்... பெரியாரின் வரலாற்றில், உடல்நிலையைப் பாராமல் அவர் உழைத்த உழைப்பு பக்கம் பக்கமாகக் காணக் கிடைக்கிறது. மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டும், பெருத்த தன் உடம்பை இருவர் தோளில் தாங்கிக் கொண்டும் பிரச்சாரம், போராட்டம் என்று உழைத்த உழைப்பை, இன்ஹேலர் துணையோடு ஆஸ்துமாவுக்கு எதிராகவும், துப்பாக்கி துணையோடு ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராடிய சேகுவேராவின் போராட்டத்தோடு நாம் பொருத்திப் பார்க்க முடிகிறது.

அதிகாரத்தின் மீது பற்றில்லாதவர்கள்

பொதுவாழ்வில், மக்கள் நலனில் அவர்கள் கொண் டிருந்த அக்கறையும், ஈடுபாடும் தான் அவர்களை நகர்த்திச் சென்றது அதிகாரத்தின் மீதில்லாத பற்று - போராட்டத்திலேயே வாழ்க்கை.

சே - அமைதி வழியையும் விரும்பியவர், பெரியார் வன்முறையின் தேவை வரலாம் என்கிறார். மக்களின் மீதான நேயம் தம் உயிரையும் பற்றிக் கவலை கொள்ளாமல் மக்கள் பணியாற்ற வைத்தது. பெரு நாட்டின் அமேசான் நதிக்கரை தொழுநோயாளிகள் குடியிருப்பில் அவர்களோடு தங்கி மருத்துவ உதவி செய்தவர் சே. நோயாளிகளுக்கு தாழ்வுணர்ச்சி வந்து விடக் கூடாது என்பதற்காக கையில் உறை கூட அணி யாமல் பணியாற்றினார். ஈரோட்டில் பெருந்தொற்றாகப் பரவியிருந்த பிளேக்கில் பலர் மடிந்து கொண்டிருந்த போது, அம் மக்களுக்கு உதவியதோடு, இறந்துபோன வர்களின் உடலையும் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தியவர் தந்தை பெரியார்.

(தொடரும்)


No comments:

Post a Comment