சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தக் கோரி விளக்கச் சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 4, 2023

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தக் கோரி விளக்கச் சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்

 «     சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு 150 ஆண்டுகால வரலாறு உண்டு

« சேது சமுத்திரத் திட்டத்தைத் தொடங்கியதே பி.ஜே.பி. ஆட்சிதானே!

இந்தத் திட்டத்தை அறிவித்தால் பிரதமருக்கு நற்பெயர் கிடைக்கும் - அரசியலுக்கு அப்ணீபாற்பட்டு வரவேற்கத் தயார்!

இந்தத் திட்டத்தால் தமிழ்நாடு பெரும் பலன் அடையும்!



சென்னை, ஜன.4 சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. இத் திட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்றினால், நாங்கள் வரவேற்கத் தயார் - இதில் அரசியல் இல்லை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் விளக்கச் சிறப்புக் கூட்டம்
நேற்று (3.1.2023)  மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் - செயல்படுத்தக் கோரி விளக்கச் சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
மீண்டும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்ற தமிழன் கால்வாய் ஏன் முன்னெடுக்கப்படவேண்டும்? அத்திட்டத்தை முடித்தால் என்னென்ன பயன்? அத னுடைய வரலாறு என்ன? அத்திட்டம் ஏற்பட்டால், எந்த அளவிற்குப் பொருளாதாரப் பலனும், அதேபோல, தமிழ்நாட்டின் வளமும் ஏற்படும் என்பதையெல்லாம் எனக்குமுன் மிகத்தெளிவாக இந்த சிறப்புக் கூட்டத்தில்  எடுத்து விளக்கி அமர்ந்துள்ள கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
வரவேற்புரையாற்றிய தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் மானமிகு முத்தைய்யன் அவர்களே,
நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று, சேது சமுத் திரக் கால்வாய்த் திட்டத்தைப்பற்றிய முழுத் தெளிவோடு, பல்வேறு செய்திகள் நமக்குப் பயன்படக் கூடியவை, மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டியவை என்ற அள விலே மிக அருமையாக எடுத்துரைத்த ஓய்வு பெற்ற ஒன்றிய அரசு அதிகாரியான அய்யா வேலுமணி அவர்களே,
இந்நிகழ்ச்சியில், சிறப்பாக எனக்குமுன் உரையாற்றிய கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே,
நன்றியுரை கூறவிருக்கக் கூடிய சென்னை மண்டல கழக செயலாளர் அருமை நண்பர் தேசெ.கோபால் அவர்களே,
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்ற அறிஞர் பெருமக்களே - இந்த அவையைப் பார்க்கிறேன், ஏராள மான முக்கிய அறிஞர் பெருமக்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள்.
தங்களை ஆரம்பத்திலிருந்த இத்திட்டத்தில் ஈடு படுத்திக் கொண்ட ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள் எல்லாம் இந்த அரங்கத்தில் இருக்கிறார்கள்.

‘பெரியார்’ வலைக்காட்சி வாயிலாக...
இங்கே இருந்து கேட்பதைவிட, பெரியார் வலைக் காட்சியின்மூலமாக இதைக் கேட்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றவர்கள், கேட்கக்கூடியவர்கள் உலகம் முழுவதும் ஏரளாமாக இருக்கிறார்கள்.
எல்லோருக்கும் என்னுடைய அன்பான வேண்டு கோள் - சுருக்கமாக இந்தக் கருத்துகளை எடுத்து வைத் திருக்கிறார்கள் என்றாலும், முழுமையாக இப்பொழுது விளக்கப்படவேண்டிய அவசியம் வந்திருக்கிறது.
நல்ல வாய்ப்பாக உண்மைகள் எப்பொழுதும் களப் பலியாவதில்லை; ஆரம்பத்தில் அது தோற்றுவிடுவதைப் போல இருந்தாலும், இறுதியில் உண்மை வெற்றி பெற்றே தீரும் என்பதற்கு அடையாளம்தான் இந்த சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தைப்பற்றி இதுவரையில் செய்த மோசடிப் பிரச்சாரம் எல்லாம், இப்போது மிகப் பெரிய அளவிற்கு சூரியன் முன்னால் இருக்கக்கூடிய பனி உறைவதைப்போல, இன்றைக்கு உறைந்து கொண்டிருக்கக் கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

ஒன்றிய அரசுக்கு வளர்ச்சித் திட்டத்தின்மீது அக்கறையிருந்தால்...
இந்த நிலையில், இத்திட்டத்தைப்பற்றி தமிழ்நாடு முழுவதும்  விளக்கவேண்டும் என்பது மட்டுமல்ல, ஒவ்வொருவரும் வாய்ப்பு ஏற்படும்பொழுது, அவசியம் இந்தப் பிரச்சாரத்தை, கட்சி வேறுபாடு இல்லாமல், கருத்து மாறுபாடில்லாமல், தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி, தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுடைய வேலை வாய்ப்பு, தமிழ்நாட்டில் உள்ள வணிகர்களுடைய தொழில் வளம், தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு துறைமுகங்களின் வளர்ச்சி - இப்படி பலவகை கண்ணோட் டத்தோடு பார்க்கின்ற நேரத்தில், அத்த னையும் பயன்படக் கூடிய ஓர் அருமை யான வாய்ப்புதான் இந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்.
ஏதோ திராவிடர் கழக, திராவிட முன் னேற்றக் கழகப் பிரச்சாரத்திற்குரிய ஓர் அரசியல் கருவியல்ல. மாறாக, ஒன்றிய அரசுக்கு வளர்ச்சி என்பதில் உண்மை யிலேயே அக்கறை இருந்தால், அவர்கள் இதை எடுத்துச் செயல்படுத்திடவேண்டும்.
எனவேதான், இதைப்பற்றி எந்தவித மான அய்யம் உங்களுக்கு ஏற்பட்டாலும்; ஏனென்றால், இடையில் ஓர் இடைவெளி இருக்கிறது. நேற்று நடந்ததையே இன்றைக்கு மறந்துவிடக் கூடியவர்கள் மக்கள். நமக்கே மறதி அதிகம். மக்களுடைய மறதிதான் பல நேரங்களில், அரசியல் நடத்தக் கூடியவர்களுக்கே மூலதனம்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைக்கு இதை நினைவூட்டிடத் தொடங்குகின்றோம்.

மதுரையில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்று தொடங்கப்பட்ட திட்டம்!
ஏற்கெனவே மதுரையில்தான் இந்தத் திட்டத்தை நம்முடைய பிரதமராக இருந்த மன்மோகன்சிங், முத்தமிழ் அறிஞர் கலைஞர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி, அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துத் தொடங்கினார்கள். 
அதே மதுரையில், திராவிடர் கழகம் சார்பாக வருகிற 27 ஆம் தேதி, மீண்டும் அனைத்துக் கட்சித் தலைவர் களையும் அழைத்து மிகப்பெரிய அளவில் திறந்தவெளி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
அதற்கடுத்து, தமிழ்நாடு முழுக்க சுழன்றடிக்கும் சூறா வளிபோல, இந்தப் பிரச்சாரத்தை, மூலை முடுக்கெல்லாம், பட்டிதொட்டியெல்லாம் நடத்தவேண்டும் என்று நினைக்கின்றோம்.
இது எங்களுக்காக அல்ல - நம்முடைய சந்ததிகளுக் காக. இன்றைக்கு எப்படிப்பட்ட சூழல் இருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால், முன்பு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடங்கப்பட்டபோது இருந்ததை விட, இப்போது இன்னும் அதிகமாக அத்திட்டப் பணிகள் முடிக்கப்படவேண்டும் என்பதற்குக் காரணங் கள், சூழ்நிலைகள் ஏராளமாக வந்திருக்கின்றன.
அந்தக் காலச் சூழ்நிலையை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். அதற்கு முன்பாக சில செய்திகளை நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ளவேண்டுமானால், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைப்பற்றிய கேள்வி  - பதில்; ‘‘ஊன்றிப்படித்து உண்மையை உணருங்கள் - சேது சமுத்திரத் திட்டமும் - இராமன் பாலமும்'' என்ற தலைப்பில் புத்தகம் வெளிவந்து, இப்பொழுது 9 ஆம் பதிப்பு வெளிவந்திருக்கிறது.
பொதுக்கூட்டத்தில் பேசுவது என்பதில் ஒரு அரை மணிநேரம்தான் பேச முடியும். அந்த நேரத்திற்குள் எல்லா செய்திகளையும் எடுத்துச் சொல்லிவிட முடியாது. இங்கே நீங்கள் இந்தப் புத்தகத்தை வாங்கியிருக்கிறீர்கள். அதை மற்றவர்களிடம் நீங்கள் பரப்பவேண்டும். எனக்கு ஒரு மகிழ்ச்சி என்னவென்றால், ஒவ்வொருவரும் 5, 6 புத்தகங்களை வாங்கி இருக்கிறீர்கள். அந்தப் புத்தகங் களை மற்றவர்களுக்குக் கொடுக்கவேண்டும்; விவாதிக்கவேண்டும். ஏதாவது சந்தேகம் இருந்தால், எங்களிடம் கேளுங்கள்.

நாங்கள் சொல்லுவதை 
நம்பாதீர்கள் - சிந்தியுங்கள்!
திராவிடர் கழகமும், சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும், தந்தை பெரியாரும் கூட் டத்தில் உரையாற்றிய பிறகு, ‘‘நாங்கள் சொல்வதை நம்பாதீர்கள்; சிந்தித்துப் பார்த்து, உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள்’’ என்று சொல்பவர்கள்.
மற்ற மதவாதிகளாக இருந்தாலும் சரி, ஆன்மிகத்தைப் பேசுபவர்களாக இருந்தாலும், ‘‘நாங்கள் சொல்வதை நம்பு, நம்பு; இல்லையென்றால் நீங்கள்நரகத்திற்குப் போய்விடுவீர்கள்’’ என்று அச் சுறுத்துவார்கள். கடவுள் நம்பிக்கையே நம்பிக்கை தானே!
நாளைக்கு நாங்கள் கொஞ்ச நேரம் தூங்கினால், இந்த இடத்தில் பிள்ளையார் சிலையைக் கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். பிள்ளையார் இங்கேதான் இருந் தார், அந்த இடத்தைத்தான் பெரியார் மாற்றிவிட்டார்; ஆகவே, இந்த இடம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று வருவார்கள்.
இது வட நாடு அல்ல;  இங்கே வந்தால், என்ன விளை வுகளை அனுபவிப்பார்கள் என்பதைப் பிறகு அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.
ஆகவே, உண்மைகள் பலியாகக் கூடாது; உண்மை கள் காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் புத்தகம்.
கவிஞர் அவர்கள் இங்கே உரையாற்றும்பொழுது சொன்னார்கள்; அறிஞர் அண்ணா அவர்கள் முதல மைச்சராக இருந்த காலத்தில் இந்தத் திட்டத்திற்கென ‘‘எழுச்சி நாள்’’ கொண்டாடினார்கள் என்று  தி.மு.க., தி.க. மாநாடுகள், பொதுக்குழுக்கள் அத்தனையிலும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் 
சொன்னது என்ன?
சென்னை அமைந்தகரையில் புல்லாரெட்டி அவென் யூவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் நாங்கள் எல்லோரும் உரையாற்றிய பிறகு, கலைஞர் அவர்கள் இறுதியாக உரையாற்றினார். 
அப்பொழுது சேது சமுத்திரத் திட்டத்தைப்பற்றி விளக்கி அருமையாக, அவருக்கே உரிய முறையில், தெளிவாக சொன்னார். ‘‘இந்தத் திட்டத்தினால் எவ்வளவு பெரிய வசதி ஏற்படுகிறது என்று சொன்னால், 400 கிலோ மீட்டர் பயணம் குறையும்; அதனால், எரிபொருள் செலவு மிச்சமாகும்; பயணம் நேரமும் 20 மணிநேரம் குறையும்‘‘ என்றார்.
அவருடைய சொந்த அனுபவத்தை வைத்தும் ஒரு கருத்தைச் சொன்னார், மக்களுக்குப் பளிச்சென்று விளங்குவது போன்று.
‘‘குளித்தலை, முசிறி நடுவில் ஆறு ஓடிக் கொண் டிருக்கும். நான் குளித்தலை தொகுதியில் தேர்தலில் நின்றபொழுது, அங்கே உள்ள மக்கள், ‘‘நீங்கள் வெற்றி பெற்றால், பாலம் கட்டிக் கொடுக்கவேண்டும்; ஏனென் றால், இங்கே இருந்து நாங்கள் திருச்சிக்குச் சென்றுதான் முசிறிக்கு வரவேண்டி இருக்கிறது. அதற்குப் பதிலாக பாலம் கட்டிக் கொடுத்தால், எங்களுக்குப் பயன் ஏற் படும். இதுவரையில் நாங்கள் ஆற்றில் படகில்தான் சென்று கொண்டிருக்கிறோம்'' என்றனர்.
உடனே நான் பதில் சொன்னேன், ‘‘ஒருவேளை நாங்கள் ஆளுங்கட்சியாக வரக்கூடிய வாய்ப்பிருந்தால், நிச்சயம் செய்வேன்'' என்று சொன்னார்.
அதேபோன்று, அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன், சொன்னபடி பாலத்தைக் கட்டிக் கொடுத்தார்.
‘‘சொன்னதைச் செய்வதும், செய்வதைச் சொல்லு வதும்தான்'' திராவிட இயக்கத்தினுடைய பணி. பாலத்தைக் கட்டிக் கொடுத்ததோடு, அந்தப் பாலத்திற்குப் பெரியார் பாலம் என்று பெயர் வைத்தார். இன்றைக்கும் அந்தப் பாலம் இருக்கிறது.
அதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். அந்தப் பாலத்தில் திராவிடர் கழகத்துக்காரர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்காரர்களும் மட்டுதான் பயணம் செய்கிறார்களா? பா.ஜ.க. அண்ணாமலை போனதில் லையா? மற்றவர்கள் போனதில்லையா? பொதுமக் களுக்குப் பயனாக அது இருக்கிறது.
அதுபோன்று, இந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது ஒரு வளர்ச்சித் திட்டமாகும்.

பிரதமர் மோடி நல்ல வித்தைக்காரர்!
இன்றைய பிரதமர் மோடி அவர்கள் நல்ல வித்தைக்காரர்; நிறைய வித்தைகளைச் செய்வார். அறிவியலைப்பற்றியும் பேசுவார்; அதேநேரத்தில், மூடநம்பிக்கைகளைப்பற்றியும் பேசுவார்.
அவர் தேர்தலின்போது மிகப்பெரிய சத்தம் எழுப்பினார். அப்படி சத்தம் கொடுத்துத்தான் தொடர்ந்து 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக் கிறார்கள். 
திடீரென்று, தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் எழுந்து கொள்வது போன்று, ‘‘சப்கா சாத்; சப்கா விகாஸ்'' என்று சொல்வார்.
அதற்கு என்ன அர்த்தம் என்றால், ‘‘வளர்ச்சி, வளர்ச்சி'' என்பதுதான். அந்த வளர்ச்சியில் உங் களுக்கு நம்பிக்கை இருந்தால், வளர்ச்சிதான் எங்களுக்கு மிக முக்கியமான இலக்கு என்று சொன்னால், நீங்கள் உடனடியாக செய்யவேண்டிய வேலை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மீண்டும் தொடங்கவேண்டாமா?
இதுதான் எங்களுடைய முதல் கேள்வி.
‘‘இல்லை, இல்லை அது இராமர் பாலம்'' என்று சொன் னால், அது இராமர் பாலம் இல்லை என்று நீங்களே சொல்லிவிட்டர்களே? இதுவரையில் நாங்கள் சொன் னதை, இப்பொழுது நீங்கள் சொல்கிறீர்கள்.
‘விடுதலை', ‘முரசொலி' பத்திரிகையில் எப்படி செய்திகளைப் போடுவோம் என்றால், ‘‘சொன்னோம், சொல்கிறார்கள்'' - ‘‘நாங்கள் முன்பு சொன்னோம்; இவர் கள் இப்பொழுது சொல்கிறார்கள்’’ என்றபடி வெளியிடுவோம். ஏனென்றால், உண்மையை ஒப்புக் கொண்டு சொல்வது போன்று சொல்கிறார்கள். இன்றைக்கு அவர்களுக்கு வேறு வழியில்லையே!
சுமார் ரூ.2 ஆயிரம் கோடி திட்டத்தை, எப்படியெல் லாம் ஒன்றிய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு எந்தளவிற்கு முன்னெடுத்தார் என்பதை இங்கே ஓய்வு பெற்ற அதிகாரி நண்பர் வேலுமணி அவர்கள் எடுத்துச் சொன்னார்.
கப்பல் துறைக்கு அமைச்சராக டி.ஆர்.பாலு அவர் களை நியமிக்கவேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கேட்டு வாங்கினார் கலைஞர் அவர்கள்.
ஏன்? எதற்காக?
சொந்தத்தில் அவர் கப்பல் விடுவதற்காகவா என்றால், இல்லை.

150 ஆண்டுகால வரலாறு இருக்கிறது!
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்கிற கனவுத் திட்டம்,  சர்.ஏ.இராமசாமி முதலியார் கொடுத்த திட்டத்திலிருந்து வரிசையாக வந்து, இது ஒரு 150 ஆண்டுகால வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டிருக்கின்றதாகும். இந்தத் திட்டம் நிறைவேறினால், தமிழ்நாட்டு இளை ஞர்கள், குறிப்பாக தென்மாவட்டத்துக்காரர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும்; தமிழ்நாடு செழுமை யாகும். மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்புகள் ஏற்படும்.
இது தமிழ்நாட்டுக் கண்ணோட்டத்தோடு. இங்கே அருமையாக அய்யா வேலுமணி ஒரு கருத்தைச் சொன்னார்.
இன்றைய சூழ்நிலையில், இன்னும் அதிகமான தேவை அந்தத் திட்டத்திற்கு இருக்கிறது.
நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையும் 

இதில் இருக்கிறது என்பதை மறக்கலாமா?
சீனா, அருணாசலப் பிரதேசம் அதைப்பற்றிய பிரச்சினைகள் என்ன என்றும் கடைசியாகத் தொட்டுக் காட்டினார்.
இன்றைக்கு அம்பன்தோட்டா என்று சொல்லக் கூடிய அளவிற்கு, துறைமுகங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்ற ஆபத்து வருகிறது.
இன்னொரு பக்கத்தில், அமெரிக்காவிற்கு மற்ற நேரத்தில், பாகிஸ்தானோடு பிரச்சினைகள் ஏற் பட்ட நேரத்தில், ‘‘தி செக்யூரிட்டி  பாயிண்ட் ஆஃப் வியூ'' என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நாட்டின் பாதுகாப்பினையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
இராமர் எல்லாம் பிறகு இருக்கட்டும்; இராமரைக் கொண்டு போய் அங்கே நிறுத்த முடியுமா? இராமர் பார்த்துக் கொள்வார் என்று இருக்க முடியுமா? இராம ருடைய வில்லையே நாம் நம்பவில்லையே! ரபேல் விமானங்களுக்குத்தானே விலை கொடுத்து வாங்கு கிறோம்.
இராமன் அம்பு விட்டால், ஏழு மராமரங்களையும் துளைத்து, அதற்கப்பாலும் துளைக்கும் என்பதை நம்பிக் கொண்டிருக்க முடியுமா?
இன்றைக்கு வெளிநாட்டு விமானங்களை வாங்கு கிறோம்; ஏவுகணைகளுக்கு ஆர்டர் தருகிறோம்.
இந்தக் காலகட்டத்தில், ஏழாவது கப்பற்படையை எங்கே நிறுத்தினார்கள் என்றால், திரிகோணமலைக்குப் பக்கத்தில்தான். எனவே, இந்தியாவினுடைய கடற்பகுதி, பாக் நீரிணைப்பு போன்ற பகுதிகளையெல்லாம் தாண் டிப் பார்க்கின்றபொழுது, இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கே இந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் அமைந்தால், அது மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். இத்திட்டம், தமிழ்நாட்டின் வளத்திற்கு மட்டுமல்ல, இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கே பயன்படக் கூடிய ஒன்று என்பதை ஏன் நீங்கள் மறக்க வேண்டும்?
இத்திட்டம் நிறைவேறக்கூடாது என்று மூன்று பார்ப்பனர்கள் முட்டுக்கட்டை போட்டனர்.
ஒருவர் சுப்பிரமணியசாமி
இன்னொருவர் சோ இராமசாமி
மற்றொருவர் ஜெயலலிதா அம்மையார்.
இந்த அம்மையார், அண்ணா வழியில் சிந்தித்த பொழுது, இந்தத் திட்டம் நிறைவேறவேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள்.
இத்திட்டத்தினுடைய பலாபலன்கள் என்னவென் பதை இப்பொழுது நாம் சொல்கிறோம் பாருங்கள், அதைவிட, அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம் மிகத் தெளிவானது.
அ.தி.மு.க. நண்பர்களும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்; அவர்களுக்கு நேரம் இல்லை; கோர்ட்டு சண்டைக்கே நேரமில்லை. கட்சி யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை; அது வேறு விஷயம்

இன்னும் 23 கி.மீ. தூரம்தான் 
வேலை பாக்கி!
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்காக ரூ.2 ஆயிரம் கோடி செலவழித்து, 
இன்னும் 23 கிலோ மீட்டர் தூரம்தான் பணிகள் மீதமுள்ளன. அதை முடித்து விட்டால், இத்திட்டம் நிறைவேறிவிடும்.
அப்படி நிறைவேறினால், இந்தப் பெருமை காங் கிரசுக்குப் போய்ச் சேரும்; தி.மு.க.விற்குப் போய்ச் சேரும். குறிப்பாக கலைஞருக்குப் பெருமை ஏற்படும் என்பதால், இத்திட்டம் நிறைவேறக்கூடாது என்று நினைத்தார்கள்; இது அரசியல் கண்ணோட்டம், அரசியல் பார்வைதான்.
அதனால், இத்திட்டத்தைப்பற்றி முன்பு என்ன சொன்னார்களோ, அதற்கு நேர் எதிராக, இத்திட்டத் தினால் ஒரு பலனும் இல்லை என்று பின்பு சொன்னார்கள்.
இதை நாங்கள் கற்பனையாக சொல்லவில்லை. பாராட்ட வேண்டிய நேரத்தில், எவரையும் பாராட்டு கின்றோம். கண்டிக்க வேண்டிய நேரத்தில், தயவு தாட்சண்யமின்றி கண்டிக்கின்றோம்.
அந்த வகையில் நண்பர்களே,  இதோ என் கைகளில் இருப்பது தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2001, மே -  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை -  அந்த அம்மையார் அவர்கள் கொடுத்த தேர்தல் அறிக்கையில், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அவர்கள் எப்படி வரவேற்றார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
இங்கே நாம் இத்திட்டத்தைப்பற்றி விளக்கங்களைச் சொன்னோம் அல்லவா! அந்த விளக்கத்திற்கு எவ்வளவு அழகான தீர்மானம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தால் 
ஏற்படும் பயன்கள்!
‘‘இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சி யான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாகக் கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்லவேண்டுமானால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது.
இதற்குத் தீர்வாக அமைவதுதான், சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி இராமேசு வரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் இவற்றை அகற்றி ஆழப் படுத்தி கால்வாய் அமைப்பது சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்.''
சொல்வது யார்?
கலைஞர் அல்ல.
சொல்வது யார்?
டி.ஆர்.பாலு அல்ல.
சொல்வது யார்?
வீரமணி அல்ல.
சொல்வது, மேனாள் முதலமைச்சர், அந்நாள் எதிர்க் கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள்.

அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை 
என்ன கூறுகிறது?
மேலும் அந்த அறிக்கையில்,
‘‘இந்தத் திட்டம் காலம் காலமாக ஏறத்தாழ நூறு ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறதே தவிர, சரியாக உருவாகவில்லை.
ஆங்கிலேயர் காலத்திலிருந்து பேசத் தொடங்கி, நாடு விடுதலை பெற்ற பின், சற்று அதிகமாகப் பேசப்பட்டு, பல்வேறு நிபுணர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டு, அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டு, பின் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இத்திட்டத்திற்கு ஒரு உந்துதலை, 1981 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசுதான் கொடுத்தது. இருப்பினும், திட்டத்தை நிறைவேற்ற வேண்டி மத்திய அரசு இத்திட்டத்திற்கான உரிய கவனத்தையோ, முக்கியத்துவத்தையோ கொடுக்க வில்லை.
தற்போது ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி., - தி.மு.க. கூட்டணி அரசின் பிரதமர் சென்னை வந்தபோது, சேது சமுத்திரத் திட்டம் நிறை வேற்றப்படும் என்று வாக்களித்தார். அதற்குமுன் இராமேஸ்வரம் வந்து சென்ற அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரும் இதே பல்ல வியைத் தான் பாடினார்.
ஆனால், நடந்தது என்னவென்றால், பலமுறை ஆய்வு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்யப் போகிறோம் என்றுதான் இப் போதும் சொல்லப்படுகிறதே தவிர, இத்திட்டத்திற் கான தற்போதைய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யவில்லை.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தால், நம் நாடு மட்டுமல்ல; தென்கிழக்கு ஆசிய நாடுகளும், கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயனடையும். வாணிபமும், தொழி லும் பெருகும்; அன்னிய முதலீடு அதிகரிக்கும்; அன்னிய செலாவணி அதிகம் கிடைக்கும். கப்ப லின் பயண தூரம் பெருவாரியாகக் குறைவதால், எரிபொருள், நேரமும் மிச்சமாகும்.
ஏற்றுமதியும், இறக்குமதியும் அதிகரிக்கும். குறிப்பாக, இராமநாதபுரம் போன்ற மிகமிகப் பிற்படுத்தப்பட்ட தமிழக தென்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்; வேலை வாய்ப்புப் பெருகும். தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும்; சுற்றுலா வளர்ச்சியடையும்.
இன்ன பிற நன்மைகளைத் தரவிருக்கின்ற இத்திட்டத்தின் தேவையை, முக்கியத்துவத்தை கழக அரசு வெகுவாக உணர்ந்திருக்கிறது. நிதி நெருக்கடியை ஒரு சாக்காகக் கூறிக் கொண்டிருக் காமல், உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவ னங்களுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு, வேண்டிய நிதியைத் தேடி, இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து, ஒரு காலக்கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும்படி மய்ய அரசை விடாது நாம் தொடர்ந்து வலியுறுத்துவோம்'' என்று சொல்லுகிறார்கள்.’’
இதைவிட, எல்லாக் கோணத்திலும் தெளிவான விளக்கம்- இன்றைக்கு என்னென்ன கேள்விகள் வைக்கப்படுகிறதோ, அதற்கும் விளக்கம் சொல்லப்பட்டு இருக்கிறது.

2009 இல் தலைகீழ் பல்டி ஏன்?
அதேநேரத்தில், அவர்களே 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கை. சேது சமுத்திரத் திட்டத்திற்கு வாய்ப்பே கிடையாது; அந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பதாகும்.
2001 ஆம் ஆண்டில் இருந்த நிலைப்பாடு; எப்படி தலைகீழாக மாறும்? இவ்வளவு விளக்கங்களையும் சொல்லிவிட்டு, எப்படி மாறுகிறார்கள்?
காரணம் என்னவென்றால், அந்தத் திட்டம் முடிவடைவதற்கு 23 கிலோ மீட்டர் பணிகள்தான் மீதமிருந்தன. அப்படி அந்தத் திட்டம் முடிந்தால், அந்தப் பெருமை தி.மு.க.விற்கு, காங்கிரசுக்கு, யு.பி.ஏ. கூட்ட ணிக்கு வந்துவிடும் என்கிற ஒரே அரசியல் காரணத் திற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இராமர். 
இராமர்தான் கருவியானார்.
ஆனால், தமிழ்நாட்டில் இந்தக் கருத்து எடுபடாது. காரணம், தந்தை பெரியார், இராமர் யோக்கியதை என்ன? என்பதை பல ஆண்டுகளாக சொல்லிவிட்டார்.

தமிழ்நாட்டில் பிள்ளையாரை வைத்து அரசியல் நடத்த முடியாது!
வட நாட்டில் இராமரை வைத்து அரசியல் வியாபாரம் செய்யலாம்; பிள்ளையாரை வைத்து அரசியல் வியாபாரம் செய்யலாம். 
ஆனால், தமிழ்நாட்டில், இராமரை வைத்தோ, பிள்ளையாரை வைத்தோ அரசியல் நடத்த முடி யாது. நல்ல சிந்தனையாளரான சிவ.சுப்பிரமணியம் அவர்கள் இதுகுறித்து ஒரு புத்தகத்தையே எழுதியிருக்கிறார்.
இங்கே பிள்ளையார் அரசியல் நடப்பதில்லை; அதனால்தான் இங்கே கலவரங்கள் ஏற்படுவ தில்லை.
‘‘தென்திசையைப் பார்க்கின்றேன்
அடடா, பூரிக்கின்றேன் சிந்தையெல்லாம்‘‘ 
என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இது இராவண காவியம் பாடிய மண், பெரியாருடைய மண்.
காரணம் என்ன, பகுத்தறிவு!
17  லட்சம் ஆண்டுகளுக்கு முன் இராமர் கட்டினார் பாலம் என்கிறீர்களே, இராமாயணம் உண்மையில் நடந்த கதையா? இராமர் என்கிற ஒருவர் பிறந்தாரா? அவர் அவதாரமாகப் பிறந்தாரா?
பிறந்தார் என்று நீ எழுதியிருக்கிறாய்; அவதார் என்கிற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் என்ன அர்த்தம் தெரியுமா? நேரிடையாகக் கீழே இறங்கியவர் என்று அர்த்தம்.
அவதார் என்றால், கீழே இறங்குவது; அவர் பிறக்கமாட்டார். ஆனால், இராமாயணத்தில் பிறந்தார் என்று சொல்கிறார்கள்.
எப்படி பிறந்தார்? என்கிற ஆராய்ச்சிக்கு நாம் போகவேண்டிய அவசியமில்லை.
ஆகவே,  இல்லாத இராமர் பிறந்தார் என்று சொல்லி, அவர் பாலம் கட்டினார் என்கிறார்கள்.

இராமன் என்ன இன்ஜினியரா? 
- கலைஞர் கேட்ட கேள்வி!
ஈரோட்டு குருகுலத்தில் படித்ததினால் கலைஞர் கேட்டார், ‘‘இராமர் என்ன இன்ஜினியரா? அவர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்? அவர் பாலம் கட்டினாரா?’’ என்று.
உடனே, அத்வானி உள்பட எல்லோரும் கலைஞர் அந்தப் பேச்சை திரும்பப் பெறவேண்டும் என்றார்கள். வடநாட்டில் உள்ள ஒரு சாமியார், ‘‘கலைஞரின் தலையை சீவிக் கொண்டு வருபவர் களுக்குப் பணம் கொடுக்கிறேன்’’ என்றார்.
உடனே கலைஞர் அவர்கள், ‘‘ரொம்ப நாளாச்சுப்பா, என் தலையை நானே சீவி’’ என்றார். 
‘‘என் தலையை சீவ வேண்டும் என்றுதான் நானே ஆசைப்படுகிறேன்; ஆனால், சீவுவதற்கு ஒன்றுமே இல்லையே அங்கே’’ என்று பதற்ற மடையாமல் வேடிக்கையாகப் பதில் சொன்னார்.
பெரியார் ஒரு கேள்வி கேட்டார், இராமாயணம் நடந்த கதையா? என்று.
‘‘நான்கு யுகங்கள் என்று சொல்கிறீர்கள்; அதில் திரேதா யுகத்திற்கு 12 லட்சம் ஆண்டுகள்;  மொத்தம் 17 லட்சம் ஆண்டுகள். திரேதா யுகத்தில் இராமாயணம் நடந்ததாகச் சொல்கிறீர்களே, இராமாயணம் நடந்த கதையா?’’ என்று கேட்டார்.
இராமாயணப் பாத்திரங்கள் என்ற நூலில் அவர் எழுப்பிய  கேள்விகளுக்கு இதுவரையில் யாரும் பதில் சொல்லவில்லை.
இராமாயணத்தில், இராவணன் 50 லட்சம் ஆண்டுகள் ஆண்டான் என்று உள்ளது.
பெரியார்தான் கேட்டார், ‘‘ஏண்டா, நடந்ததே மொத்தம் 17 லட்சம் ஆண்டுகள்; அதில் எத்தனையோ சங்கதிகள், நடப்புகள் இருக்கின்றன. அதிலே  ஒரு பாத்திரம் இராவணன். அந்த இராவணன் 50 லட்சம் ஆண்டுகள் ஆண்டான் என்று சொல்கிறீர்களே, மொத்த ஆண்டுகளே, 17 லட்சம் ஆயிற்றே’’ என்று கேட்டார். 

தந்தை பெரியார் சொன்ன உதாரணம்!
அதற்கு ஓர் உதாரணம் சொன்னதை, அவர் சொன்னதுபோன்றே அப்படியே சொல்கிறேன்.
‘‘கடலூரில் மாலை 7 மணிக்குக் கூட்டம் தொடங்கி, இரவு 10 மணிக்குக் கூட்டம் முடிந்தது. 3 மணிநேரம் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், இன்னின்னார் பேசினார்கள்; கடைசியாக இராமசாமி இராமசாமி என்ற ஒருத்தர்  7 மணிநேரம் பேசினார் என்று எழுதினால், என்ன நினைப்பார்கள்?’’ என்று மக்களுக்கு விளங் கும்படி, புரியக்கூடிய அளவிற்குத் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை, இராமர் பாலம் என்று சொல்லி, நீதிமன்றத்தில் தடை வாங்கினார்கள்.

அரசமைப்புச் சட்டம் என்ன சொல்லுகிறது?
அரசமைப்புச் சட்டத்தின்படிதான் நீதிபதிகள் பதவிப் பிராமணம் எடுத்துக் கொள்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ பிரிவில், 
It shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform
அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், ஏன்? எதற்கு? என்று கேட்கக்கூடிய உணர்வு, சீர்திருத்தம் ஆகிய நான்கு அம்சங்களும் மிகவும் முக்கியம்.
இதன்மீது பதவிப் பிராமணம் எடுத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றவர்கள்தானே மாண்புமிகு நீதிபதிகள்.
அப்படி இருக்கும்பொழுது, வெறும் நம்பிக்கை என்று சொல்லி, மக்களுக்குப் பயன்படக்கூடிய திட்டம்; அதனால், பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய ஒரு திட்டம்; பல பகுதிகள் வளரவேண்டிய ஒரு திட்டம் - அந்தத் திட்டத்தை, வெறும் மூடநம்பிக்கைக்காக, ஆதாரமில்லாத ஒரு நம்பிக்கைக்காக கிடப்பில் போடுவதா?
அதுவும் மக்கள் வரிப்பணம் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்யப்பட்டுள்ள ஒரு திட்டம். இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை; அந்தத் தடையை நீக்கி, மீண்டும் அந்தத் திட்டத்தில் மீதமுள்ள பணிகளை மேற்கொண்டு, அன்றைக்குத் தேவைப்பட்ட தைவிட, இன்றைக்கு அதிகமான அளவுக்குச் செலவு ஏற்படலாம். அதனையும் சமாளித்து செய்து முடித்து விட்டு, ‘‘சப்கா சாத்; சப்கா விகாஸ்’’ என்று ‘‘வளர்ச்சி, வளர்ச்சி’’ என்று சொல்லிவிட்டுப் போங்களேன். அந்தப் பெருமையை நீங்கள் தட்டிக் கொண்டு போங்களேன்.

சேது சமுத்திரத் திட்டத்தை மோடி நிறைவேற்றினால் வரவேற்கத் தயார்!
தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வந்தால், ‘‘சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றிய மோடி அவர்களே வருக! வருக!’’ என்று பதாகைகளை வைக்கிறோம்.
‘‘கோ பேக் மோடி’’ என்று தமிழ்நாட்டில் குரல்கள் எழாதே?
அந்த எண்ணம் இல்லையே உங்களுக்கு. 
அது இராமர் பாலம்; இராமருக்குத்தான் நாங்கள் கோவில் கட்டுவோம் என்று சொன்னால், என்ன அர்த்தம்?
உங்களுடைய அமைச்சரே சொல்லிவிட்டாரே, ‘‘இராமர் பாலம் இருந்ததற்கான எந்தவிதமான ஆதார மும் இல்லை’’ என்று ஒப்புதல் அளித்திருக்கிறாரே!
நீதிமன்றத்தில் அந்த வழக்கு இருக்கிறது; அரசாங்கத் தரப்பிலிருந்து பதில் வரவில்லை; ஆகவே, வாய்தா, வாய்தா என்ற சென்று கொண்டிருக்கின்றது.
ஒன்றிய அமைச்சரே நாடாளுமன்றத்தில் தெளிவாக சொல்லிவிட்டார், அவை வெறும் மணற்பாறைகள்தான்; இராமர் பாலத்திற்கான ஆதாரங்கள் இல்லை என்று.
இதை நீண்ட நாள்களுக்கு முன்பாக, ஒவ்வொரு கூட்டத்திலும் நாம் சொல்லியிருக்கின்றோம். இது போன்று முழுக்க முழுக்க விளக்கிச் சொல்லியிருக் கிறோம்.

டாக்டர் ஏ.இராமசாமி எழுதிய நூலிலிருந்து...
கலைஞர், எங்களைப் போன்றவர்கள், தமிழ்நாட்டுத் தலைவர்கள் எல்லாம் சொன்னது மட்டுமல்ல - தமிழ்நாட்டினுடைய கல்வித் துறையில் இருக்கக் கூடிய உயர்கல்வித் துறையினுடைய துணைத் தலைவராக இருக்கக் கூடிய, பல்கலைக் கழக மேனாள் துணை வேந்தர் டாக்டர் இராமசாமி எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள், ‘‘ஆதாம் ஓர் ஆய்வு’’ என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அந்தப் புத்தகத்தில் உள்ளதைப் படிக்கிறேன்:
‘‘ஜோன்ஸ் வால்டர் என்கிற ஜெர்மானிய ஆராய்ச்சி யாளர் 1991 ஆம் ஆண்டு, ஆதாம் பாலத்தை நேரில் ஆய்வு செய்து ‘‘ஆதாம் பாலம் அணையின் வரலாறு’’ என்ற தலைப்பில் ஓர் அரிய ஆய்வு நூலை எழுதி யுள்ளார்.
அவர் ஆதாம் அணை உருவான விதம்பற்றி - சுருக்கமாகக் கூறுவதென்றால், கடலின் மேலோட்டமாகப் படிந்துள்ள மணல் அடுக்குகள் மீதான இந்தியப் பெருங்கடலின் தாக்கமும், அவற்றுடன் இந்திய பெருங்கடல் கொண்டிருந்த இடையறாத உறவும்தான் ஆதாம் பாலம் உருவாவதற்குக் காரணம்‘‘ என்பதை மிகத் தெளிவாக அந்தப் புத்தகத்தில் பல கோணங்களில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
கம்ப இராமாயணத்தில் உள்ளதைப்பற்றி இங்கே கவிஞர் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.
ஆகவே, இன்றைய தினம் மிக முக்கியமாகத் தேவை என்பது சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்பதாகும்.

திட்டத்தைத் தொடங்கியது பி.ஜே.பி.தானே!
ஒன்றிய அரசு அத்திட்டத்தை நாங்கள் நிறைவேற்று கிறோம் என்று சொல்லவேண்டும். அதுமட்டுமல்ல, இந்தத் திட்டத்தை காங்கிரஸ் அரசாங்கம் கொண்டு வந்தது; ஆகவே, அரசியல் ரீதியாக அதை நாங்கள் செய்யமாட்டோம் என்று சொல்வதற்கும் அவர்களுக்கு வாய்ப்பில்லை.
ஏனென்றால், இந்தத் திட்டத்தைத் தொடங்கியது பா.ஜ.க. அரசாங்கம்தான். வாஜ்பேயி அவர்கள் ஆதரித்த திட்டம்தான் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்.
அதுமட்டுமல்ல நண்பர்களே, அந்தத் துறைக்கு அன்றைக்கு எப்படி டி.ஆர்.பாலு அவர்கள் அமைச்சராக இருந்தாரோ, அதே பொறுப்பில் இல்லாவிட்டாலும், மற்ற பொறுப்பில் இருக்கக்கூடியவர் நிதின்கட்காரி அவர்கள். அவர் பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவராக இருந் தவர்.
இத்திட்டம் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்டபொழுது என்ன சொன்னார், ‘‘சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நாங்கள் கைவிடவில்லை; அதை நாங்கள் நிறைவேற்றுவோம்‘‘ என்றார்.
நாடாளுமன்றத்தில் வைத்து அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவேண்டும்.
திட்டமிட்டு எதை எதை அறிவிக்கிறார்களோ, அந்த அறிவிப்புகளை நாடாளுமன்ற முறைப்படி நடை முறைப்படுத்த வேண்டும் என்பது நாடாளுமன்ற, ஆட்சிமன்ற நடவடிக்கைகள் அல்லவா?
எனவே, நாங்கள் கேட்பது தர்க்க ரீதியாக, சட்ட ரீதியாக, நியாய ரீதியாகக் கேட்கிறோம்.
அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் என்ன சிக்கல்?
மேலும், இன்றைக்கு வேலையில்லா திண்டாட்டத் தால், உலகம் முழுவதும் நெருக்கடி வரக்கூடிய சூழல்.
]
‘சப்கா சாத்’ என்று சொன்னாரே பிரதமர் மோடி - அது என்னாயிற்று?
இந்தியாவில், ‘‘சப்கா சாத்’’ என்று சொல்லி, இரண்டு கோடி பேருக்கு ஓராண்டில் வேலை கொடுப்போம் என்று சொன்னார் பிரதமர் மோடி பதவிக்கு வரும் பொழுது - இப்பொழுது 9 ஆண்டுகள் ஆகிவிட்டது; 9 ஆண்டுகளில் 18 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்கவேண்டும். எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்திருக்கிறார்கள்?
இங்கே இருக்கின்ற அண்ணாமலைகளுக்கு இது தெரியாமல்,  தி.மு.க. வேலை கொடுத்ததா? என்று கேட்கிறார்.
நீங்கள் எதைச் சொல்லி, ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தீர்களோ, அதை முதலில் நிறைவேற்றுங்கள்.
தமிழ்நாட்டிற்குக் கொடுக்க வேண்டிய பணத்தை - ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையைக் கொடுக்காமல் ஒன்றிய அரசு இருக்கிறது. இவ்வளவு சிக்கல்கள் இருக்கும்பொழுதுகூட, எங்களுடைய ‘திராவிட மாடல்’ முதலமைச்சர், எடுத்துக்காட்டாக தொழிற்சாலைகள் வருவதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக் கின்றார்.
இந்த சூழ்நிலையில், இன்றைக்கு ஒன்றிய அரசும் - மாநில அரசும் தெளிவாக வளர்ச்சியை நோக்கிப் போகவேண்டும் என்றால், அதற்கு செய்யவேண்டிய வேலை என்ன?

நீதிமன்றத் தடை ஆணையை நீக்கவேண்டும்!
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும், எதிர்காலத்தில் வரவிருக்கக் கூடிய ஓர் இக்கட்டான பொருளாதார சிக்கல்களிலிருந்து இளைஞர்களை மீட்பதற்கும் - ஏற்கெனவே கரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகள்  பொது முடக்கத்தால் வேலை வாய்ப்புகள், பொருளாதார நிலைகள் பாதிக் கப்பட்டு இருக்கின்றன. அதற்கெல்லாம் ஒரு சரியான மாற்று வழியாக இன்றைக்கு இத்திட்டம் இருக்கிறது.
ஒன்றே ஒன்றைத்தான் அதற்குக் காரணமாக சொல்கிறீர்கள், நீதிமன்றத் தடையாணை இருக்கிறது என்று. தடையாணைக்கு இடமில்லை.
நம் நாட்டினுடைய நீதிமன்றப் பார்வை எப்படி இருக்கிறது என்பதைப்பற்றி நம்முடைய அருள்மொழி அவர்கள் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
நீதிமன்றங்கள் என்னென்ன சொல்கின்றனவோ அவை சரியாக இல்லை என்பதற்கு, நாடாளுமன்றத்தில் அவர்களே சொல்லியிருக்கிறார்கள். கொலிஜியத்தில் சொன்னபடி எங்களுக்கு வரவில்லை என்று. அந்தப் பிரச்சினைக்கெல்லாம் இப்பொழுது போகவேண்டிய அவசியமில்லை.
தடை ஆணையை நீக்கவேண்டும். 
ஏனென்றால், இந்த வழக்கில், இதுவரை ஒன்றிய அரசு பதில் சொல்லவில்லை என்பதனால்தான், அந்த வழக்கைத் தள்ளி வைத்திருக்கிறார்கள்.
வழக்குத் தொடுத்த சுப்பிரமணிய சாமியும் உங்கள் கட்சியில் இல்லை. அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்று அவருக்கே தெரியாது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைய தினம், இந்தப் பதில்கள் பல வகையில், பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைந்திருக்கிறது.
நாசாவிலிருந்து படம் பிடித்து வந்தது என்றார்கள்.  அங்கெங்கே ஆளைப் பிடித்தார்கள்.
ஆகவே, மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய செய்தி நண்பர்களே, இன்றைய இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, வணிகர்களுடைய வாய்ப்பு, தமிழ்நாட் டினுடைய செழுமை - இவை அத்தனையையும் கருதினாலும்,  மூடநம்பிக்கையினால் அந்தத் திட்டம் முடக்கப்பட்டு இருக்கிறது.

புண்படுத்துவதல்ல திராவிடர் கழகத்தின் வேலை - ஊசி போட்டால் வலிக்கத்தான் செய்யும்!
தமிழ்நாட்டில் ஏன் மூடநம்பிக்கை ஒழிப்பை திராவிடர் கழகம் இடையறாமல் செய்கிறது? ஏன் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்கிறது?
உடனே சொல்வார்கள், ‘‘அய்யோ எங்களைப் புண்படுத்துகிறார்கள்; எங்களைப் புண்படுத்துகிறார்கள்’’ என்று சொல்கிறார்கள்.
டாக்டர் ஊசிப் போடும்பொழுது, வலிக்கத்தான் செய்யும்.  அந்த ஊசி போடுவது, உங்களை சாகடிப்ப தற்காக அல்ல; உங்கள் நோய் தீர்த்து, உங்களை வாழ வைப்பதற்காக.
எங்களுக்காக அல்ல அது - உங்கள் பிள்ளை களுக்காக.
யாரையும் நாங்கள் புண்படுத்துவதில்லை; மக்களைப் பண்படுத்தித்தான் எங்களுக்குப் பழக்கம்.
எனவே, இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அத்துணை பேரும், வேலை வாய்ப்பு வேண்டும் என்று கேட்கும் இளைஞர்களே, நீங்கள் அடுத்தபடியாக வேலை வாய்ப்பு வேண்டும் என்று கேட்பதற்குப் பதிலாக, உங்கள் குரலை கொஞ்சம் உயர்த்தி, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்ற கேளுங்கள்; வேலை வாய்ப்பு உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்.
இது ஏதோ தி.மு.க.வுக்கோ, காங்கிரசுக்கோ மட்டும் சொந்தமல்ல; பா.ஜ.க.வும் உரிமை கொண்டாடலாம்; நாங்கள்தான் தொடங்கினோம் என்று சொல்லுங்கள். எல்லோரும் உரிமை கொண்டாடலாம்.
எங்களுக்கு இந்தத் திட்டம் நிறைவேறவேண்டும்.
எங்களுக்குத் தமிழ்நாட்டின் வளர்ச்சி முக்கியம்.
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முக்கியம்.
இதையெல்லாம் விட்டுவிட்டு, சமஸ்கிருதத்திற்கு இத்தனை கோடி ரூபாயை ஒதுக்குகிறோம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கவேண்டாம்.
ஏதேதோ சொல்லி, வடநாட்டில் இராமர் கோவிலைக் கட்டுகிறோம் என்று அந்தப் பணியை செய்துகொண் டிருக்கிறீர்கள்.
அதைவிட மிகவும்  தமிழ்நாட்டில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் முக்கியமானது.
சேது என்பதினுடைய பொருளோ, இராமர் பாலம் கட்டினார் என்பதற்கு ஆதாரமோ இல்லை என்கிற விவாதத்திற்குக்கூட போகவேண்டிய அவசியமில்லை.
இந்தப் பிரச்சினையில் எவ்வளவு உண்மையான அக்கறை உடையவர் கலைஞர், அவருடைய பெருந் தன்மைக்கு என்ன என்பதற்கு ஒரு சிறிய உதாரணம், சேது சமுத்திரக் கால்வாய்த்  திட்டத்தை, இராமர் பாலம் என்ற காரணம் கூறி, அந்தத் திட்டத்தையே நிறுத்தக் கூடிய அளவிற்கு வந்தபொழுது, வேதனைப்பட்டு  எங்களையெல்லாம் அழைத்து, ‘‘பரவாயில்லை, அந்த இடத்தைவிட்டுவிட்டு, வேறு பாதை வழியாக அந்தத் திட்டத்தை நிறைவேற்றினால்கூட போதும்; எங்களுக்குத் திட்டம் நிறைவேறினால் போதும்‘‘ என்றார்.
அப்படியும் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற வில்லையே! அப்படியென்றால், தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியில் உங்களுக்கு உள்ள உண்மையான அக்கறை என்ன என்பது இதில் தெரிகிறதே!
யாருடைய குழந்தை என்கிற வழக்கு வந்தபொழுது, குழந்தையை இரண்டாக வெட்டி, ஆளுக்கொன்று கொடுங்கள் என்று சொன்னபொழுது, உண்மையான தாய், பரவாயில்லை, அந்தக் குழந்தையை அந்தத் தாயிடமே கொடுத்துவிடுங்கள் என்று சொன்னதுபோல,

இது ‘திராவிட மாடல்’ ஆட்சி நடக்கும் 
காலகட்டம்!
எங்களுக்கு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறினால் போதும்; இராமரை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லக்கூடிய அளவில் கலைஞர் இருந்தார் என்றால், அதற்குக் காரணம் என்ன?
உண்மையான மக்களைப்பற்றிய கவலை, சிந்தனை திராவிட இயக்கத்திற்கு உண்டு. அதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடல்!’
மக்களைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் வெறும் பக்தியைத்தான் காட்டுவோம் என்று சொன்னால், அது ‘வேறு மாடல்’.
ஆகவே, நண்பர்களே! நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
எனவேதான், இந்த ‘திராவிட மாடல்’ ஆட்சி இருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், நிச்சயமாக வாதாடு கிற கட்டம் இப்பொழுது வந்திருக்கிறது; வாதாடுவதன் மூலமாக எடுத்துச் சொல்லுகிறோம்; மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, சந்து பொந்துகள், பட்டிதொட்டிகள், நாடு, நகரம் முழுவதும் இந்த விளக்கங்களைச் சொல்லுவோம். தேவைப்பட்டால், பிறகு போராட்டக் களமாகவும் இது மாறும்; அதற்கும் நாங்கள் தயார் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
அனைத்துத் தோழர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
இது ஒரு தொடக்கம் - இந்தத் தொடக்கம் பெருகவேண்டும்; இளைஞர்களுடைய வேலை வாய்ப்பு - தமிழ்நாட்டினுடைய எதிர்காலம் இதில் அடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு விடைபெறுங்கள்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

No comments:

Post a Comment