சென்னையில் மூன்று நாள்கள் இலக்கியத் திருவிழா: முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 4, 2023

சென்னையில் மூன்று நாள்கள் இலக்கியத் திருவிழா: முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

சென்னை, ஜன. 4-  சென்னை இலக்கியத் திருவிழா இந்தாண்டு 06.01.2023 முதல் 08.01.2023 வரை மூன்று நாள்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற வுள்ளது. படைப்பரங்கம், பண்பாட்டு அரங்கம், கல்லூரி மாணவர்களுக்கான பயிலும் அரங்கம் மற்றும் சிறுவர் களுக்கான இலக்கிய அரங்கம் என நான்கு அரங்கங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருவிழா பள்ளிக்கல்வித் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாட வுள்ளனர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

இந்த இலக்கியத் திருவிழாவில் தொடக்க விழா ஜனவரி 6 ஆம் நாள் காலை 10 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் மாநாட்டு அரங்கத்தில் தொடங்கும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவைத் தொடங்கி வைத்து நிகழ்வில் கலந்துகொள்வார். அதனைத் தொடர்ந்து, பவா செல்லதுரை தொடக்கவுரை மற்றும்  பால் சக்காரியா வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.

விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எஸ்.ராமகிருஷ்ணன், இமையம், கரன் கார்க்கி, தமிழ்ப்பிரபா, சு.தமிழ்ச்செல்வி, இளம்பிறை, மனுஷ்ய புத்திரன், ஜெ.ஜெயரஞ்சன், ஏ.எஸ்.பன்னீர்செல்வன், ஆர்.விஜயசங்கர், வெற்றிமாறன், மிஷ்கின், யுகபாரதி, கபிலன், கதை சொல்லி சதீஷ், தெருக்குரல் அறிவு, இளங்கோ கிருஷ்ணன், விஷ்ணுபுரம் சரவணன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாடவுள்ளனர்.

சபாஷ் சரியான நடவடிக்கை

தெருக்களில் சுற்றித்திரிந்த 446 மாடுகள் பிடிபட்டன

சென்னை, ஜன. 4- கடந்த 2 வாரத்தில் சென்னை தெருக்களில் சுற்றித்திரிந்த 446 மாடுகள், மாநகராட்சி அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, அபராதமாக ரூ.8.92 லட்சம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் பொதுமக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்கள் மீது மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் ரூ.2 ஆயிரம் வரை அபராதமாக வசூலிக்கப் படுகிறது. அதன்படி, கடந்த டிச.14 முதல் 27ஆம்தேதி வரை 2 வாரத்தில் மட்டும் சென்னை தெருக்களில் சுற்றித் திரிந்த 446 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டலங்களில் தலா 50 மாடுகளும், கோடம்பாக்கத்தில் 36 மாடுகளும், வளசரவாக்கத்தில் 35 மாடுகளும் பிடிபட்டன. இவ்வாறு பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.8.92 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு: உச்சநீதிமன்றத்தில் தள்ளிவைப்பு

சென்னை, ஜன. 4- நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு அளித்த மனு மீதான விசாரணையை ஒரு மாதத்துக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இதனால் நீட் தேர்வுக்கு தடை கோரி நீண்ட நாட்களாக பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், நீட் தேர்வை சட்டமாக்கிய சட்ட திருத்தத்துக்கு தடை கேட்டு தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. இந்த மனு மீதான விசாரணையை ஒரு மாதத்துக்கு சுப்ரீம் கோர்ட் தள்ளிவைத்துள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான 

தேர்தல் வழக்குகள் தள்ளுபடி- உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன. 4- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேப்பாக் கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், இந்த இரு வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீது நடத்தப் பட்ட விசாரணை முடிவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment