தீர்ப்புகள் அனைத்து மொழிகளிலும் வரவேற்கத்தக்கதே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 31, 2023

தீர்ப்புகள் அனைத்து மொழிகளிலும் வரவேற்கத்தக்கதே!

மகாராட்டிரம் - கோவா வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அதற்கான, தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தலாம்" என்று தெரிவித்தார். உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை  முதலமைச்சர் மாண்புமிகு  மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: "உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன். 

அதேபோல், உயர் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற நமது நீண்டநாள் கோரிக்கையையும் நிறைவேற்றுவது - நீதியை நாட்டின் சாமானிய மக்களுக்கு அருகில் கொண்டு வரும்; உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்ற இந்திய தலைமை நீதிபதியின் அறிவிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. இதனை திமுக சார்பில் வரவேற்கிறேன். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டும்; 

 நீதிமன்றத் தீர்ப்புகளை வழக்குத் தொடுக்கும் பாமர மக்கள் அறிந்துகொள்ள வசதியாக மாநில மொழிகளில் வெளியிட வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் வெளியிடும் திட்டம் ஏற்கெனவே 2019-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், சில வாரங்களில் இத்திட்டம் முடக்கப்பட்டு விட்டது. இப்போது தொடங்கப்படும் திட்டம் அதுபோல் இல்லாமல் தடையின்றி நீடிப்பதை உறுதி செய்யவேண்டும். 

சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். மாநில மொழிகளில் தீர்ப்புகள் வழங்குவது குறித்து நீதிபதி தெரிவித்த யோசனையை பிரதமர் வரவேற்றுப் பாராட்டியிருக்கிறார். இந்தியாவில் ஏராளமான மொழிகள் உள்ளன. உச்ச நீதிமன்றத்தினால் வெளியிடப்படும் தீர்ப்புகளை சாமானிய மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவரவர் சார்ந்த மாநில மொழியிலும் தீர்ப்புகள் வெளி யிடப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஒன்றிய அரசு அறிவிக்கும் திட்டங்களின் பெயர்கள் எல்லாம் ஹிந்தியிலும், சமஸ்கிருதத் திலும் தான் உள்ளன.

மற்ற மொழிக்காரர்களின் வாயில் நுழைய முடியாத பெயர்களாக உள்ளன. மற்ற மற்ற மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளி யிட்டால்தான் ஒன்றிய அரசு எந்தத் திட்டத்தை அறிவிக்கிறது என்று சாதாரண குடிமக்களும் புரிந்து கொள்ள முடியும்.

இன்னொன்றும் முக்கியமானது. 'மெட்ராஸ் ஹைகோர்ட்' என்பதை "சென்னை உயர்நீதி மன்றம்" என்று அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுப்பதில் உச்சநீதிமன்றத்துக்கோ அல்லது ஒன்றிய அரசுக்கோ என்ன நோக்காடு? அதையும் பரிசீலிக்கலாமே!

No comments:

Post a Comment