இந்தியாவின் பெண்ணுரிமைச் சின்னம் சாவித்ரிபாய் பூலே பிறந்தநாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

இந்தியாவின் பெண்ணுரிமைச் சின்னம் சாவித்ரிபாய் பூலே பிறந்தநாள்

நாட்டின் முதல் பெண்ணியச் சின்னமாக போற்றப்படும் சாவித்ரிபாய் புலே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ஆவார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் சமூக சீர்திருத்த வாதி யாகவும், கல்வியாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தார். 1831 ஜனவரி 3ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்ற சிற்றூரில் விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், லட்சுமி மற்றும் கண்டோஜி நெவேஷே பாட்டீல் இணையரின் மூத்த மகள் ஆவார்.

ஜோதிராவ் புலே சாவித்திரிபாய்  திருமணம்  1840ஆம்  ஆண்டு நடந்தது. ஜோதிராவ் புலே மகாராஷ்டி ராவின் சமூக சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் ஆவார். எனவே தனது மனைவி சாவித்திரிபாயை ஜாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தன்னுடன் இணைத்து கொண்டார் ஜோதிராவ்.

இந்த இணையர்களுக்கு  குழந்தைகள் இல்லாததால் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு  யஸ்வந்த்   என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். திருமணத்திற்கு பின் ஜோதிராவ் தான், தன் மனைவி சாவித்ரிக்கு படிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுத்தார். சாவித்ரிபாய் கற்பிப்பதில் ஆர்வம் கொண்டிருந்ததால், பின் அகமதுநகரிலுள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார். அதனை தொடர்ந்து புனேவில் மற்றொரு ஆசிரியரின் பயிற்சி வகுப்பிலும் பங்கேற்று படித்தார்.

பின் மகர்வாடாவில்  இஸ்லாமியப் புரட்சிகர பெண்ணியலாள பாத்திமாஷேக்குடன் இணைந்து சிறுமிகளுக்கு கற்பிக்கத் தொடங்கினார். சில நாட்களில் சாவித்ரிபாய், ஜோதிராவ் மற்றும் பாத்திமாஷேக் ஆகி யோர் இந்தியாவில் சிறுமிகளுக்கான முதல் பள்ளியை தொடங்கினர். 1848ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட முதல் பெண்கள் பள்ளியில் 9 மாணவர்கள் மட்டுமே படித்தனர். ஆசிரியராக பொறுப்பேற்ற சாவித்ரிபாய், சிறுமிகள் படிப்பை தொடர ஊக்கத் தொகையும் வழங்கினர். மேலும் இதுபோன்றே சிறுமிகளுக்காக மேலும் 18 பள்ளிகளையும் அடுத்தடுத்து தொடங்கினர்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை படிக்க வைப்பதற்காக உயர் ஜாதி மக்களிடமிருந்து அதிக எதிர்ப்புகளும் தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதாக அமைந்தது. இத்தனை தடைகளையும் மீறி கணவன் மனைவி இருவரும் வாழ்நாளில் 18 பள்ளிகளுக்கு மேல் கட்டி தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி அளித்து வந்தனர்.

விதவைப் பெண்களின் தலையை மொட்டை யடிப்பதைக் கண்டித்து நாவிதர்களை திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார். 1870ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் ஆதரவற்றவர்களான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார். இதனால் தான் இந்தியாவின் முதல் ஆசிரியை என்றும் பெண்ணியத்தின் தாயார் என்றும் அழைக்கப்படுகிறார்.


No comments:

Post a Comment