இதுதான் பிஜேபியின் ஒழுக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 26, 2023

இதுதான் பிஜேபியின் ஒழுக்கம்!

 "விமானத்தின் அவசர காலக் (எமெர்ஜென்சி) கதவை திறந்த விவகாரத்தில், பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மன்னிப்புக் கேட்டுவிட்டார்” என ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

இந்த செயலின்படி மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதே நேரத்தில் ஓர் இஸ்லாமியர் இந்தச்செயலைச்செய்திருந்தால் "விமானத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி" என்று முன்னணி நாளிதழ்கள் பெரிய தலைப்பிட்டு எழுதியிருக்கும்.

இண்டிகோ விமானத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்குப் பயணம் செய்தபோது, விமானத்தின் அவசர காலக் கதவை பெங்களூரு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்ததாகச் செய்திகள் வெளியாகின. மேலும், அந்நிகழ்வு குறித்து அப்போது தேஜஸ்வி யாதவ் மன்னிப்பு கடிதம் கொடுத்ததாகவும், அவருடன் பயணித்தது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என்றும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் ஊடகம் ஒன்றிடம், "தேஜஸ்வி யாதவ் தான் விமானத்தின் அவசரகாலக் கதவைத் திறந்தார்.  அவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார்" என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், “இதனால் எல்லாப் பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர். அதைத் தொடர்ந்து தேஜஸ்வியிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கப்பட்டது. பிறகு அதே விமானத்தில் பயணிக்க மாற்று இருக்கை ஒதுக்கப்பட்டது. இதனாலேயே விமானம் புறப்பட 2 மணி நேரம் தாமதமாகியது” எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து, இந்த விவகாரம்  மீண்டும் பேசு பொருளானது. இதுகுறித்து  தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறைமுகமாகத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். விமானத்தின் அவசரக்காலக் கதவைத் திறப்பது சட்டப்படி குற்றம். அப்படித் திறந்தவர்கள் மீது கடந்தகாலங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த விடயத்தில் அரசாங்கமும், இண்டிகோ நிறுவனமும் இதுவரை எந்தப் பதிலும் தரவில்லை என விமர்சனம் வைக்கப்பட்டது. அதேநேரத்தில், இதுகுறித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், பாஜக எம்பிக்கு தாக்கீது அனுப்பியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இதுகுறித்து  ஒன்றிய விமான இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்த விஷயத்தில் தேஜஸ்வி சூர்யா மன்னிப்புக் கேட்டுள்ளதாகவும், கதவு தவறுதலாகத் திறக்கப்பட்டது என்றும், அதற்காக அவர் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தேஜஸ்வி சூர்யா மீது உகந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அந்தப் பயணி அல்லது பயணிகள் யார் என்ற விவரத்தை இண்டிகோவோ, டிஜிசிஏஓவோ வெளியிடவில்லை.  இந்த நிலையில் அந்த விமானத்தில் பயணித்த சக பயணி ஒருவர் கூறும் போது,  பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா மற்றும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை  அந்நிகழ்வின்போது இருந்தனர் என்று கூறி உள்ளார்.

 கதவை அவர்கள் முழுமையான பலம் கொண்டு பாதுகாப்பு கிளிப்புகளை அகற்றி திறந்துவிட்டனர். விமான அவசரகாலக் கதவுகளை விமானப்பணிப்பெண்கள் மற்றும் பைலட், இதர சிப்பந்திகள் மட்டுமே எளிதில் திறக்கமுடியும். பொதுமக்கள் அவ்வளவு எளிதில் திறந்துவிடமுடியாது, 

 அப்படி இருக்க, அவர்கள் சுயநினைவு அற்றவர்களாக இருந்தால் தான் இவ்வாறு வலுக்கட்டாயமாக கதவைத் திறந்திருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.  விமானம் பறந்துகொண்டு இருக்கும் போது இவர்கள் இப்படிச்செய்திருந்தால் மிகப் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும், ஆனால் ஒன்றிய அரசு இந்த விவகாரத்தை மூடி மறைத்துவிட்டது. சட்டம் ஒழுங்குபற்றி வாய்க்கிழிய பேசுபவர்கள் இது குறித்துப் பேசாதது ஏன்? 

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் சமூக வலைதளப் பதிவு மற்றும் மக்கள் கொடுத்த அழுத்தம் ஒன்றிய அரசை உண்மை பேச வைத்துள்ளது. இருப்பினும் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை எதுவுமே இல்லையாம். இதே செயலை இஸ்லாமியர் ஒருவர் இப்படிச் செய்திருந்தால் வலதுசாரி ஆதரவு ஊடகங்கள்  அய்.எஸ். தீவிரவாதி, அல்கொய்தா தீவிரவாதி என்று எல்லாம் தலைப்பிட்டு எழுதித் தள்ளி இருப்பார்கள்.

பிஜேபியில் நேர்மை, நாணயம், ஒழுங்கு முறை எதுவும் கிடையாது - ஒரே கை சரக்கு ஒரே மதம். அந்த ஹிந்து மதத்தில் எந்தக் கொடூர குற்றம் (பாவம்) செய்தாலும்தான் எளிதான பிராயச் சித்தம் உள்ளதே  - இந்த மன்னிப்புக் கடிதமும் இவ்வகையைச் சார்ந்ததே!


No comments:

Post a Comment