சித்த மருத்துவப் பாடப் புத்தகத்தில் ஜாதி-தீண்டாமைப் பார்வையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 13, 2023

சித்த மருத்துவப் பாடப் புத்தகத்தில் ஜாதி-தீண்டாமைப் பார்வையா?

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் சித்த மருத்துவ பாடநூல் வெளியீட்டுப் பிரிவு வெளியிட்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ள “நோயில்லா நெறி” என்ற நூலில் (ஆசிரியர்: டாக்டர் கோ.துரைராசன்) இயல் 6 வீடு என்ற பாடத்தில் ’மனைத் தேர்வு’ என்ற தலைப்பில் கீழ்க்காணுமாறு இடம் பெற்றுள்ளது.

“பலபேர்களுக்குப் பாட்டையாய் இருக்கும் நிலம், பாழடைந்த தேவாலயம், மலசலங் கழிக்குமிடம், பறையர், சக்கிலிகள் குடிசை கட்டியிருக்குமிடம், முனிகள், சந்நியாசிகள் வசிக்கு மிடம், யுத்த வீரர்கள் போராடும் நிலம், சுடுகாடும், புத்தும், பாறையு முள்ள இடம், அத்தி, ஆல், அரசு, வில்வம், எட்டி இவைகளும், சுத்த மரங்களாகிய மா, பலா, புன்னை, பாதிரி, வேம்பு, கொய்யா, நாவல்,எலுமிச்சை முதலியவைகளும் சேர்ந்து நிற்கும் இடம், ஆலயத்திற்குப் பக்கத்திலும், எதிரிலும் உள்ள நிலம், காளி கோயிலின் வலப் பக்கத்திலுள்ள நிலம், பிசாசு முதலிய கிரகங்கள் வசிக்கும் நிலம், பாழடைந்த கேணி, மருத பூமி, ஏரிக்கரைக்கு அருகிலுள்ள நிலம், சோலைகளைச் சார்ந்த பூமி, அகண்ட குளத்திற்கு அருகிலுள்ள நிலம் ஆகிய இடங்களில் வீடுகட்டலாகாது என்று சிற்ப நூல்கள் கூறுகின்றன” என்று இடம் பெற் றுள்ளதை எழுத்தாளர் தினகரன் செல்லையா சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்நூலின் பக்கங்களைப் பார்க்கையில், அதற்கடுத்த பத்திகளிலேயே ’மனை உயர்வு தாழ்வு இலக்கணம், வாஸ்து புருஷன்’ என்றெல் லாம் இடம்பெற்றுள்ள பகுதிகள் இது சித்த மருத்துவ நூலா, இல்லை ஜோதிட நூலா என்ற அய்யத்தை எழுப்புகின்றன.

மருத்துவம் என்பது அறிவியல். அறிவியலில் இத்தகைய மூடக் கருத்துகள் இடம் பெற முடியுமா? ’சித்த மருத்துவம் வளரவில்லை, புறக்கணிக்கப்படுகிறது’ என் றெல்லாம் எழும் குரல்களுக்குச் செவி சாய்த்துதான், சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழக அரசு அறிவித்துள்ளது. 

ஆனால், அதன் வளர்ச்சி என்பது அம் மருத் துவமுறையை ஆய்வுக்குட்படுத்தி ஏற்பதிலும், நிறுவுவதிலும், அதிலுள்ள மூடக் கருத்துகளை பழமைவாதத்தைப் புறந்தள்ளு வதிலும் மட்டுமே இருக்க முடியும். 

ஜாதி, வருணாசிரமம், மந்திரித்தல், ஜெபித்தல், மந்திரம் சொல்லுதல், வாஸ்து என்றெல்லாம் இருக்கும் கசடுகளை ஒழிக்கா விட்டால் அறிவுக்கும், அறிவியலுக்கும், சமத்துவ உலகுக்கும் பொருந்தாததாகித் தான் போகும் என்பதை உணர வேண்டும். 

”பறையர், சக்கிலிகள் குடிசை கட்டியிருக்குமிடம் வீடுகட்டக்கூடாத இடம்” என்பது அப்பட்டமான தீண்டாமை அல்லவா? இப்படி அறிவுக்கும், மருத்துவத் துக்கும் தொடர்பில்லாத, ஜாதிப் பார்வை யோடு இருக்கும் இந்த நச்சுக் கருத்துகளை உடனடியாக நீக்க ஆவன செய்ய வேண்டும். 

- அறிவன்


No comments:

Post a Comment