முறையான - சரியான வகையில் இட ஒதுக்கீடு அமைய ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 9, 2023

முறையான - சரியான வகையில் இட ஒதுக்கீடு அமைய ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம்!

பீகார் மாநிலம் வழிகாட்டிவிட்டது -  தமிழ்நாடு அரசும் இப்பணியைத் தொடரட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

முறையான - சரியான வகையில் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட ஜாதி வாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகும். இதில், பீகார் மாநிலம் முந்திக் கொண்டு செயல்பட ஆரம்பித்துள்ளது. தமிழ்நாடு உள்பட மற்ற மற்ற மாநிலங்களும் ஜாதி வாரி கணக்கெடுப்பை செயல்படுத்தவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சமூகநீதியை செயலாக்கும் திட்டம்தான் இட ஒதுக்கீடு, பேதங்களால் பிற்படுத்தப்பட்ட மக்களைக் கீழ் ஜாதிகளாக்கி, அதனால் அவர்களை படிக்கக் கூடாதவர் களாக ஆக்கியதுதான் சனாதன மதமாகிய ஹிந்து மதம் என்ற ஆரிய மதம்.

சமூகநீதிக்கு அடிப்படை எது?

அதன் தீய விளைவுகளால் பல்லாயிரம் ஆண்டு களாக ஜனசமுத்திரத்தின் பெரும்பகுதி ‘தற்குறிகளாக்க'ப் பட்டது. மக்களில் சரி பகுதியான பெண்களும் அவர்கள் உயர்ஜாதியினராக இருந்தாலும் படிக்கவே கூடாது; பெண்கள் ‘நமோ சூத்திரர்கள்' - சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்கக் கூடாது என்பதைத் தர்மமாக - வர்ணதர்மமாக்கினர்.

காரணம், பகவத் கீதையில் பெண்களும், சூத்திரர் களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்பதாக சமூக இழிவு முத்திரை குத்தப்பட்ட பிரிவினராக்கப் பட்டனர்.

இந்தப் பல்லாயிரக்கணக்கான ஆண்டு சமூக அநீதி யிலிருந்து அவர்களை மீட்டெடுக்கவே சமூகநீதியான வகுப்புரிமை இட ஒதுக்கீடு ஏற்பாடு.

அதனை உயர்ஜாதி சூழ்ச்சி திட்டமிட்டே நீதிமன் றங்களைப் பயன்படுத்தி, செல்லுபடியாகாது என்று கூறி, அதன் பின் தந்தை பெரியார் தமிழ்நாட்டில் சூறாவளி யென சுழன்று நடத்திய பெரும் போராட்டமே - அரசமைப்புச் சட்ட முதல் திருத்தத்தை (1951) அன்றைய பிரதமர் நேருவும், சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத் கரும் நல்வாய்ப்பாக முயன்று நிறைவேற்றினர். மூடப் பட்ட சமூகநீதிக் கதவுகளைத் திறக்க வழி ஏற்படுத்தினர். 

அன்றும்கூட, முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு, விவாதமே நடைபெறாமல் அலமாரியில் பாதுகாப்பாக வைக்கப் பட்டது.

அதையும் தாண்டி, இரண்டாவது பிற்படுத்தப் பட்டோர் (மண்டல்) ஆணைய அறிக்கை - அதனை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் ஆட்சியில் நடைமுறைப்படுத்தினார். மீண்டும் உயர்ஜாதி ஆதிக் கமும், குறிப்பாக பார்ப்பனியமும், அவர்களின் முக்கிய கருவியான ஊடகங்களின்மூலம் மிரட்டியது!

மண்டலுக்கு எதிராகக் 

கமண்டலைத் தூக்கியோர் யார்?

மண்டலுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கமண் டலைத் தூக்கியதோடு, மண்டல் பரிந்துரையைச் செய லாக்கியமைக்காக வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தார்கள்.

அதையெல்லாம் தாண்டி, தடைகளை உடைத்துதான் இன்று பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் என்று கொள்கை அளவில் ஏற்கப்பட்டது. (நடைமுறையில் இதிலும் களவுகள், பகற்கொள்ளைகள் அநேகம்).

தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்' ஆட்சிகள் கடந்த 50 ஆண்டுகளில், இந்த சமூகநீதிக் கொடி தலைதாழாது பறந்ததின் விளைவு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு - 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பில் உள்ளது. (இன்றும் உறுத்துகிறது உயர்ஜாதிப் பார்ப்பனருக்கு; எனவே, ஊளைச் சத்தமும், உறுமலும் கேட்காமல் இல்லை).

நீதிமன்றங்களின் போக்கு!

இவை ஒருபுறமிருந்தாலும், உச்ச, உயர்நீதிமன்றங் களில் வழக்குகள் - அந்த வழக்குகள் - இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவற்றில், நீதிமன்றங்களால் ஒரு சாமர்த்தியமான கேள்விகள் அடிக்கடி - சமூகநீதி கேட்போரை நோக்கி, இத்தனை விழுக்காடு தருவதற்கு என்ன அடிப்படை? புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டனவா? எதன்மீது இந்த ஒதுக்கீடு தரப்படுகிறது என்ற கேள்வி!

பாலாஜி வழக்கில் முன்பு 50 விழுக்காட்டுக்குமேல் இட ஒதுக்கீடு தரப்படக் கூடாது என்று அது பொத்தாம் பொதுவில், வழக்கிற்கு அப்பாற்பட்ட நிலையில் தீர்ப்பில், (Obiter Dicta) கூறப்பட்டதே - அது எந்த புள்ளி விவரம் அடிப்படையில்?

அதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? எந்த அளவு? என்ற கேள்வி கேட்கப்பட்டதே கிடையாது!

அதுமட்டுமா? அரசமைப்புச் சட்டத்தில் எத்தனை விழுக்காடு - 50-க்குமேல் போகக்கூடாது என்று எங்கா வது குறிப்பிடப்பட்டுள்ளதா என்றால், பதில் கிடையாது.

ஜாதிவாரியான கணக்கெடுப்பு கட்டாயம்!

இந்நிலையில், சமூகநீதிக்கு எதிராக இப்படி ஒரு அஸ்திரத்தைப் நீதிமன்றங்கள் பயன்படுத்தி, அதை வீழ்த்தும் முயற்சியைத் தடுக்க சரியான வழி ஜாதி வாரி யான கணக்கெடுப்பை நடத்திடும் பணியை ஒன்றிய அரசு செய்வது தவிர்க்க முடியாத கட்டாயம் ஆகும்.

அதில், 1931 இல்தான் பிரிட்டிஷ் ஆட்சியில்தான் 92 ஆண்டுகளுக்குமுன் ஜாதி வாரி கணக்கெடுப்பு - அப்புறம் அதிகாரவர்க்கமும் ஆட்சியும் உயர்ஜாதியின் பார்ப்பனியத்தின் ஏகபோக உடைமையானதால், அதைத் தவிர்த்து வந்தனர்!

இதில் கட்சி இல்லை - ஆதிக்கவாதிகள் ஓரணியில் நின்று எதிர்க்கின்றனர். முதுகில் பூணூல் என்ற ஜாதி, பேதச் சின்னத்தை விடாமல் அணிந்துகொண்டே - கோவில் கருவறையில் ஆகமம் படித்துத் தேர்ச்சி பெற்றிருந்தாலும், ஆதிதிராவிடர்? மீதி திராவிடரா? எவரையும் அர்ச்சகராக அனுமதியோம் என்று சட்டக் கண்ணிவெடிகளை வைக்கின்றனர்!

ஜாதி மாறி திருமணங்களை செய்தால்கூட, மனு அதிலும் அனுலோமம், பிரதிலோமம் என்று பார்ப்பன ஆண், பார்ப்பனப் பெண் இருவருக்கும் ஜாதி அடிப் படையில் இரட்டை அளவுகோல் அணுகுமுறையை வைத்துள்ளனர்.

ஜாதி அடிப்படையிலா மக்களைப் பிரிப்பது? என்று நரிகள் ‘சைவத்தின்' பெருமை பேசும் கேலிக் கூத்து!

பீகார் வழிகாட்டுகிறது!

இதற்கெல்லாம் ஒரே சரியான பதில் பீகாரில் உள்ள 12 கோடி மக்களின் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை முதல மைச்சர்  நிதிஷ்குமார் ஆட்சி தொடங்கி விட்டது.

இந்தியாவுக்கே அவர் வழிகாட்டுகிறார்; மற்றவர் களும் பின்பற்ற வேண்டும்  - தக்க பாதுகாப்பு ஏற்பாட் டுடன் - திடீரென்று அவரவர் ஜாதி எண்ணிக்கையை கூட்டிச் சொல்லும் அபாயம் என்பதை நீக்கும் வகையில் போதிய பாதுகாப்புடன் இதைச் செய்தால் நல்ல ஏற்பாடு!

ஜாதி அடிப்படையிலா? என்று திடீரென்று ஜாதி ஒழிப்பு வீரர்களாக வேடம் போடுவோரே, ஜாதி நாட்டில் ஒழிந்துவிட்டதா? என்பதற்குப் பதில் சொல்லிவிட்டு, இந்தக் கேள்வியைக் கேளுங்கள் என்பது நமது பதில்.

தமிழ்நாடு அரசும் செயல்படுத்தட்டும்!

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரைப் பின்பற்றி, இதனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்து முடிக் கலாம் - இது கணினி 5ஜி காலம் - முயன்றால், முடியாதது எதுவும் இல்லை. மற்ற மாநிலங்களும் தமிழ்நாடு உள்பட இதனைச் செயல்படுத்த முன்வரவேண்டும்!

கி.வீரமணி

திராவிடர் கழகம்

தலைவர்,

9.1.2023

No comments:

Post a Comment