ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: மின்னணு இயந்திரங்கள் சரிபார்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 26, 2023

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: மின்னணு இயந்திரங்கள் சரிபார்ப்பு

ஈரோடு,  ஜன. 26- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ளன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று முன்தினம் (23.1.2023) மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை பார்வையிட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலரு மான எச்.கிருஷ்ணன் உன்னி கூறியதாவது: ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்து வதற்காக 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன. பெங்களூரு பெல் நிறுவனத்தின் 8 பொறியாளர்கள் கொண்ட குழுவினர் கடந்த வாரம் இந்த இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.இதில், 20 இயந்திரங்களில் குறைபாடு கண்டறியப்பட்டது. இவை தவிர, எஞ்சியுள்ள இயந்திரங்கள் தேர்தலுக்கு பயன்படுத் தப்பட உள்ளன. இவற்றில் 1 சதவீத இயந்திரங்களில் 1,200 வாக்குகள், 2 சதவீத இயந்திரங்களில் 1,000 வாக்குகள், மேலும், 2 சதவீத இயந்திரங்களில் 500 வாக்குகள் என சுழற்சி முறையில் 25 இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட்டு சரி பார்க்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வில், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

வாக்கு எண்ணும் மய்யத்தில் ஆய்வு:

இதைத் தொடர்ந்து, வாக்குகள் எண்ணும் மய்யமான, சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியை (அய்ஆர்டிடி), மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணன் உன்னி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: வாக்கு எண்ணும் மய்யத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும். எங்கு வாக்கு எண்ணிக்கை நடத்தலாம் என்பது தொடர்பான இறுதி முடிவை தேர்தல் ஆணையம் எடுக்கும். வாக்குப்பதிவு நடைபெற உள்ள 238 வாக்குச் சாவடிகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. தற்போது வரை கண்டறியப்பட்ட 20 பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment