குடியரசு நாள் அலங்கார வண்டியிலும் அரசியலா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

குடியரசு நாள் அலங்கார வண்டியிலும் அரசியலா?

அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக குடியரசு தின அணிவகுப்பில் 7ஆவது ஆண்டாக பீகார் மாநிலத்தின் சார்பில் காட்சிக்கு வைக்கப்பட்ட அலங்கார ஊர்தி புறக் கணிக்கப்பட்டதாக அம்மாநிலத்தை ஆளும் அய்க்கிய ஜனதா தளம் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. குடியரசுத் தலைவரின் கொடியேற்றத்தைத்  தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அன்றைய தினம் பல்வேறு மாநிலங்களின் அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான அணி வகுப்பும் நடைபெறும். முன்னதாக ஒவ்வொரு மாநிலங்களின் கருப்பொருளை மய்யப்படுத்திய அணிவகுப்பு விவரங்கள் ஒன்றிய அரசின் வல்லுநர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி இந்த முறை நடக்கும் விழாவிற்கு, பீகார் மாநிலம் கயாவின் பால்கு ஆற்றின் மீது கட்டப்பட்ட ரப்பர் அணையை பீகாரின் அடையாளமாக காட்சிப்படுத்த வேண்டும் என்று அம்மாநில அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், மாநில அரசின் பரிந்துரையை ஒன்றிய அரசின் நிபுணர் குழு நிராகரித்துவிட்டது. 

இதற்கான காரணம், "முன்மொழியப்பட்ட அட்ட வணையில் குடியரசு தின அணிவகுப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளும் அய்க்கிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவர் ராஜீவ் சிங் லாலன் கூறுகையில், ‘பீகார் விரோதப் போக்கை ஒன்றிய அரசு கடைப்பிடித்து வருகிறது. பீகாரில் எதுவும் நடக்கவில்லை என்பதைக் காட்ட ஒன்றிய அரசு விரும்புகிறது. பீகாரின் வளர்ச்சி, புதிய சிந்தனை மற்றும் பெரிய திட்டங்களை ஒன்றிய அரசு வெறுக்கிறது. குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் தொடர்ந்து  7ஆவது ஆண்டாக பீகார் புறக்கணிக்கப்பட்டுள்ளது’ என்றார். 

பாஜக ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டு அங்கு ராப்ரி தேவி அரசு, அதன் பிறகு நிதீஷ்குமார்  - லாலுபிரசாத் கூட்டணி அரசு தொடர்ந்தது, இதனால் ஒன்றிய அரசு பீகாரின் அலங்கார ஊர்திக்கு அனுமதி கொடுக்க மறுத்து வந்தது, அதன் பிறகு அங்கு பாஜக, நிதீஷ் குமாரோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தது, அந்த ஆட்சியில் அவ்வளவாக குடியரசு தின  அலங்கார ஊர்தி அணி வகுப்பில் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் பாஜக சார்பில் துணை முதலமைச்சராக இருந்த சுஷில் மோடி மீது வைக்கப்பட்டது, தற்போது அங்கு மீண்டும் நிதீஷ்குமார் மற்றும் லாலுபிரசாத் கூட்டணி அதாவது அய்க்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சியில் உள்ளது. இதனால் மீண்டும் பீகார் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. ராணுவம் மற்றும் ஒன்றிய அரசுத்துறைகளில் பீகாரிகள் அதிகம் இருந்தும், அரசியல் காரணங்களுக்காக பீகார் அலங்கார ஊர்தியை தொடர்ந்து அனுமதிக்காமல் ஒன்றிய அரசு பழிதீர்த்து வருகிறது. 

 பீகார் மாநிலம், கவுதம புத்தரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகித்த மாநிலம் ஆகும். நாலாந்தா பல்கலைக்கழகம் முதல் புத்த கயா உள்ளிட்ட பல வரலாற்றுப்பெருமைகள் நிறைந்த மாநிலமாக இருப்பதால் அந்த மாநில அலங்கார ஊர்தியில் புத்தரின் அடையாளங்களை தொடர்ந்து காட்சிப்படுத்தி வந்தனர். ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து ஹிந்துத்துவ அடையாளங்களைச் சேர்க்க வற்புறுத்தி, அதற்கு மறுத்த காரணத்தால் பீகார் மாநில அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்படுவதாகவும் ஒன்றிய அரசில் பணி புரியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர்  தமிழ்நாட்டிலும் இதே போன்று கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியை ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை. இதனை அடுத்து அதே அலங்கார ஊர்தியை தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களின் பார்வைக்கு வலம் வரச் செய்தார் 'திராவிட மாடலின்' முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  அவர்கள். 

மேலும் பொது மக்களிடையே ஒன்றிய அரசுக்கு கடுமையான அவப்பெயரும் ஏற்பட்டது. ஆகையால் இந்த முறை உடனடியாக அனுமதி கொடுத்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஒன்றிய அரசு என்பது பல மாநிலங்களின் கூட்டமைப்பு என்ற அரசமைப்புச் சட்ட ரீதியான நிலையை நிர்மூலப்படுத்தி தான் தோன்றித்தனமாக, சூத்திரன் சம்பூகனின் தலையைக் கொய்த ராமனின் வர்ணாசிரம வாளாக நடந்து கொள்வது மோசமான கீழிறக்க நடவடிக்கையே!

தேசியக் கொடியிலும், ஒன்றிய அரசின் முத்திரையிலும் புத்தரின் தம்ம சக்கரம் தானே இருக்கிறது! அதையும்கூட இந்த மதவாத ஒன்றிய அரசு நீக்கி விடுமோ! இந்த அரசை நீக்காதவரை  நல்லவை நீக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கும்.

மக்கள் எழுச்சி பெறட்டும்!


No comments:

Post a Comment