சட்டமன்றத்தில் ஆளுநர் செய்ததுபோல -நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் நடந்துகொண்டால் என்னவாகும்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 11, 2023

சட்டமன்றத்தில் ஆளுநர் செய்ததுபோல -நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் நடந்துகொண்டால் என்னவாகும்?

*ஆளுநர் அரசியல்வாதிபோல் நடந்துகொள்வதா?

* இனி ஆளும் கட்சியாக வரப்போவதேயில்லை என்று அ.தி.மு.க. முடிவு செய்துவிட்டதா?

ஆளுநர் அரசியல்வாதிபோல் நடந்து கொள்வதா? இனி ஆளும் கட்சியாக வரப் போவதேயில்லை என்று அ.தி.மு.க. முடிவு செய்துவிட்டதா? சட்டமன்றத்தில் ஆளுநர் செய்ததுபோல -நாடாளுமன்றத்தில் குடி யரசுத் தலைவர் நடந்துகொண்டால் என்ன வாகும்? என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த 9.1.2023 அன்று இவ்வாண்டிற்குரிய தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் உரையாற்றி தொடங்கி வைக்க வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் நடந்து கொண்ட முறை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் அரசிற்கும், அதன் அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவமானம் ஏற்படுத்தும்படியாக அமைந்தது.

வழக்கமான மரபுப்படி சட்டப் பேரவைத் தலைவர், செயலாளர் வரவேற்க, அமைச்சரவை தயாரித்த அரசின் கொள்கை உரையை, திட்டங் களை, தமிழ்நாடு அரசின் சாதனைகளை அவையோர்மூலம் நாட்டு மக்களுக்குப் பறை சாற்றுவது ஆளுநர் அறிக்கையாகும். அவர் எழுதிய உரை அல்ல; அமைச்சரவை தயாரித்துக் கொடுக்கும் உரையாகும்.

இதனை சட்டப் பேரவையில் ஆளுநர்கள் வழமையாக வாசிப்பதற்குமுன், அமைச்சரவை யால் தயாரிக்கப்பட்ட அவ்வுரையின் வரைவு நகலை (Draft Speech) ஆளுநருக்கு அனுப்பி, அவரது இசைவினைப் பெற்றே இந்த உரை ஏற்பாடு செய்யப்படும்; தற்போதும் அவ்வாறே செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் அரசியல்வாதியா?

உரை நிகழ்த்தி முடிந்து, ‘நாட்டுப்பண்' பாடி, எல்லோரும் எழுந்து நின்று, பிறகே ஆளுநர் விடை பெறுவது இதுவரை இருந்த நடைமுறை.

அரசியல் கட்சிகள் சட்டமன்றத்தில் வெளி நடப்பு செய்வதைப் புரிந்துகொள்ள முடியும்; ஆனால், ஆளுநர் அதைச் செய்யலாமா? ‘‘நானும் எதிர்க்கட்சிகளோடு சேர்ந்துவிட்டேன்'' என்று காட்டுகிறாரா? அதற்கான உரிமை உண்டா என்பது முக்கிய கேள்வியாகும்.

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இப்படி வெளிநடப்பு செய்து, அவையை அவமதித்து - ஆளுநர்கள் வெளியேறிய வரலாறு உண்டா?

சட்டப்பேரவை மரபினை மிதித்ததோடு ஆளுநர் மாளிகையிலிருந்து - தாம் நடந்து கொண்ட ஜனநாயக விரோத, அரசமைப்புச் சட்ட விதிகளுக்குப் புறம்பான நடவடிக்கைகளை நியாயப்படுத்த ஒரு விளக்க அறிக்கையொன்றை தந்துள்ளது ‘‘ராஜ்பவனம்.''

ஆளுநரை நோக்கிய கேள்விகள்!

நாம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களை நோக்கி சில கேள்விகளை முன் வைக்கிறோம். அதற்குத் தெளிவான விளக்கம் அளிக்கட்டும் அவர்.

மாண்புமிகுஆளுநர் அவர்களே, 

1. உங்களுடைய பதவி மக்களால், உங்களுக்குக் கிடைத்த பதவியா?

தேர்வின்மூலம் கிடைத்ததா?

நியமனம்மூலம் கிடைத்த பதவியா?

2. தமிழ்நாடு மக்கள் வரிப் பணத்திலிருந்து ஊதியம் பெறும் நீங்கள் அரசு ஊழியரா (Public Servant) - இல்லையா?

3. இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 159-இன்படி எடுத்த பதவிப் பிரமாணத்தின்படி அந்த அரசமைப்புச் சட்ட விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியவர்; அதற்கு முரணாக நடப்பது - அரசியல்வாதிபோல், ஆட்சிக்கு எதிரான - கொள்கை முடிவுகளைக் கூட விமர்சிப்பதில் தொடங்கி, சட்டப்பேரவையில் ஒருமனதாக 1967 இல் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசால் ஒப்புக் கொள்ளப்பட்டு, சென்னை ராஜ்ஜியம் (Madras State) என்பது ‘‘தமிழ்நாடு'' என்று மாற்றம் செய்து, அரசமைப்புச் சட்டத் திருத்தத்தில் இடம் பெற்றுள்ள பெயரை மாற்றிட வேண்டுமா? ‘‘தமிழ்நாடு என்பதற்குப் பதிலாக ‘தமிழகம்' என்று அழைக்கப்படவேண்டும்'' என்ற ஓர் அபத்த கருத்தை அடாவடி  அரசியல்வாதியைப் போலக் கூறி, தமிழ் மக்களின் உணர்வுக்கு எதிராக ஒரு கொந்தளிப்பான கொதிநிலையை நாட்டில் உருவாக்கிடத் துடிப்பதன் பின்னணி என்ன?  

யாருடைய தூண்டுதல்?

தமிழ்நாட்டு மக்களை வம்புச் சண்டைக்கு இழுப்பது தவிர, வேறு என்னவாம்?

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான ‘‘திராவிட முன்னேற்றக் கழகம்; எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்ற பல எதிர்க் கட்சிகளிலும் திராவிடம் என்ற சொல்லாக்கம் உண்டு என்ற நிலையில், திராவிடம், பிரிவினை வாதம் என்பது உண்மைக்கு மாறான கருத் தினைக் கொண்டது அல்லவா? 

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுத் தீயை விசிறி விட்டுக் கொண்டிருப்பது, நாளும் ஒவ்வொரு புதுப்புது சர்ச்சைகளை குறிப்பாக ஆளும் கட்சிக்கு எதிரான பிரச்சினைகளைப் பேசுவது எல்லாம் எவ்வகையில் சரியானது? வகிக்கும் பதவிக்கு முறையானதா?

''தமிழ்நாடு வாழ்க'' என்ற முழக்கம்!

இதனால் ஆத்திரப்பட்ட சட்டப்பேரவை எதிர்க்கட்சியினர் பலரும், ‘‘தமிழ்நாடு, தமிழ்நாடு'' என்று முழக்கமிட்டு, தாங்கள் வரும்பொழுது கூறும் நிலையை உருவாக்கியது அதன் விளைவு தானே! தூண்டியவர் நீங்கள்தானே - உங்கள் பேச்சுதானே!

Every Action has Its Own Reaction  என்ற அறிவியல் விதிக்கேற்ப நடந்ததுதானே  அது!

எதிர்க்கட்சியினர் வெளிநடப்புச் செய்ய உரிமை உள்ளதுபோல, அவர்களது உணர்வினை கூட்டணிக் கட்சிகள்  அறவழியில் வெளிப்படுத் துதல் தவறாகுமா? ‘தமிழ்நாடு' என்று பெயர் மாற்றப்பட்ட அன்று, முதலமைச்சர் அறிஞர் அண்ணா, அப்பெயர் மாற்றத்திற்குப் பின், ‘‘தமிழ்நாடு'' என்று முழங்க, ‘‘வாழ்க, வாழ்க!'' என்று முழங்கிய உறுப்பினர்களைக் கொண்ட வரலாறு படைத்த மாமன்றம் அல்லவா இது! மறக்கலாமா அதனை?

அரசு ஊழியரான ஆளுநர் திட்டமிட்டே இப்படிப் பேசினால், அவருக்கு அது தவறு - ‘‘நாங்கள் இதில் உறுதியாக இருப்போம்'' என்று காட்ட, அவர் பேசுவதற்குமுன் உறுப்பினர்கள் முழங்குவது எவ்வகையில் தவறாகும்?

அ.தி.மு.க. இனி ஆட்சிக்கு 

வரப்போவதில்லை என்ற எண்ணமோ!

இதற்குமுன்பு ஆளுநர் பேச்சை இடை மறித்துப் பேசிய - வெளியேறிய நிகழ்வுகளை செய்தவர்கள் அதை வசதியாக மறந்துவிட்டு இன்று ஆளுநருக்கு ‘‘வக்காலத்துப்'' போட்டு - விசித்திரங்களை நியாயப்படுத்துவது விவேகம் உள்ள அரசியல் ஆகுமா?

நாளை இவர்கள் பதவிக்கு வந்தால், இப்படி ஒரு நிலையை அப்போதைய ஆளுநர் எடுத் தால், நிலைமை என்ன என்ற தொலைநோக்குச் சிந்தனைகூட இல்லையே!

(ஒருவேளை இனி பதவிக்கே வர முடியாத நமக்கு எதற்கு அப்படிப்பட்ட அதீதச் சிந்தனை என்று நினைத்தார்களோ, என்னவோ!)

ஆளுநர் தயாரித்த அறிக்கையா?

ஆளுநர் உரை என்பது அவரே தயாரிப்பதா? 

அமைச்சரவை தயாரிப்பதா?

இதேபோல, ஓர் உரையை, நாடாளுமன்றத்தில் ஆற்ற வரும் குடியரசுத் தலைவர் - அரசின் அறிக்கையை விட்டுப் படித்தால், மாற்றிப் படித்தால், நாடாளுமன்ற ஆளுங்கட்சியினர் செரிமானம் செய்து, மவுனமாக இருப்பார்களா?

அதே நிலைதான் ஆளுநர்களின் நிலை;  (இந்த அதிகாரம்பற்றிய விளக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பு - பேரறிவாளன் வழக்கு) மாநிலங்களுக்கு எதிரானவற்றை ஏற்க முடியுமா?!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

11.1.2023

No comments:

Post a Comment