தி.மு.க. ஆட்சியின் மாபெரும் சாதனை சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

தி.மு.க. ஆட்சியின் மாபெரும் சாதனை சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம்!

சென்னை,ஜன.14- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று (13.1.2023) ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய பதிலுரை வருமாறு:

கடல்கண்டு மலைகண்டு பயன் கொண்ட தமிழ்நாடு வாழ்க!

களங்கண்டு கலை கண்டு கவின் கொண்ட தமிழ்நாடு வாழ்க!

உடல்கொண்டு உரங்கொண்டு உயர்வாண்ட தமிழ்நாடு வாழ்க!

உளமாண்டு உலகாண்டு புகழாண்ட தமிழ்நாடு வாழ்க! வாழ்கவே!

என்று தாய்த் தமிழ்நாட்டை வாழ்த்தி, பேரவைத் தலைவர் அவர்களுக்கும், இந்த மாமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளையும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துகளையும் கூறி, எனது உரையை நான் தொடங்குகிறேன்.

தாய்த் தமிழ்நாட்டைக் காக்க ஒப்படைத்துக் கொண்டு தூங்காமை, கல்வி, துணிவுடமை ஆகிய மூன்றையும் முறை மேற்கொண்டு முறைசெய்து வெல்லும் திராவிட மாடல் ஆட்சியானது நடைபெற்று வரும் வேளையில் மகிழ்ச்சியான மனநிலையில் இந்த மாமன்றத்தில் நான் கம்பீரமாக நிற்கிறேன்.

சமூகநீதி சுயமரியாதை

சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியானது வீரத்துடனும், விவேகத்துடன் நடைபெற்று வருகிறது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியத் துணைக்கண்டமே இப்போது உணர்ந்துவிட்டது.   

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், சமத்துவப் போராளி அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர்களுக்கெல்லாம் பேரறிஞர் அண்ணா,   எங்களை எல்லாம் ஆளாக்கி அழகு பார்த்த நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்,  இவர்களது கொள்கை களையும், இலட்சியங்களையும் கொண்டு செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே இந்த திராவிட மாடல் ஆட்சி! 

மாநில சுயாட்சி

சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் எழுப்பப்பட்ட பலம் வாய்ந்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.    அரசியல் களத்தில் எந்த நோக்கத்தை விதைத்ததோ, அதே நோக்கம் கொண்ட மக்களாட்சியை எந்தவித சமரசத்துக்கும் இடமின்றி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நாங்கள் நடத்தி வருகிறோம்.

திராவிட மாடல்

தமிழ்நாட்டின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் செழிப் புக்கும் உயர்வுக்கும் வழிவகுக்கும் 'திராவிட மாடல்' கொள் கையை உருவாக்கி அதன் தடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி செயல்பட்டு வருகிறது.  செயல்பட்டு வருகிறது என்பதை விட - திராவிட மாடல் ஆட்சியானது வெற்றி பெற்று வருகிறது என்பதுதான் சரியானதாகும்.  

'எல்லார்க்கும் எல்லாம்' என்ற அடிப்படையிலேயே தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியானது அமைய வேண்டும் என்று நாம் திட்டமிட்டோம்.  தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்; அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்று விரும்பினோம்.  வளர்ச்சி என்பது பொரு ளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.

பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய அய்ந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலை ஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. அது தான் திராவிட மாடல் வளர்ச்சி!  அதுதான் தமிழ்நாடு காணும் தனித்துவமான வளர்ச்சி.  அத்தகைய திராவிட மாடல் சிகரத்தை நோக்கிய பயணமானது ஒரு சரித்திரப்  பயணமாக - ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்.  

கடந்த 9 ஆம் தேதியன்று ஆளுநர் இந்த மாமன்றத்தில் 2023-2024 ஆம் ஆண்டின் தொடக்கத்துக்கான தொடக்க வுரையை ஆற்றினார்கள்.  தமிழ்நாடு அரசின் பன்முகக் கூறுகளை விளக்கியும், தமிழ்நாடு அரசு எந்த வகையில் எல்லாம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்பதைப் பாராட்டியும், எதிர்காலத்தில் செயல்படுத்த இருக்கக்கூடிய முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து சுருக்கமாக அறிவித்தும் தனது உரையை இந்த மாமன்றத்துக்கு ஆற்றினார்கள்.

அன்றையதினம் நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசி அரசி யலாக்க நான் விரும்பவில்லை.  அதே நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பைக் காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும், நூற்றாண்டைக் கடந்த இந்த சட்டமன்றத்தின் விழுமியங்களைப் போற்றவும் நான் என்னுடைய சக்தியை மீறியும் செயல்படுவேன்   என்பதை இந்த மாமன்றமும் என்னை இச்சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய தமிழ்ப் பெருமக்களும் நன்கு அறிவார்கள்.

அறிவிப்புகள்

கடந்த இரு நாட்களாக உறுப்பினர்கள் இந்த அவையில் எடுத்து வைத்திருக்கக்கூடிய கருத்துகள் தொடர்பாக நான் அமைச்சர்களோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு ஆலோசித்தேன்.  அதனடிப்படையில் சில அறிவிப்புகளை தற்போது நான் வெளியிட விரும்புகிறேன். 

முதலாவதாக, கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத் தின் அடிப்படையில்  முக்கிய ஊராட்சி ஒன்றியச் சாலைகளை வலுப்படுத்தவும், தரம் உயர்த்தவும், “முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதியத் திட்டத்தை அரசு செயல்படுத்தும்.  முதற்கட்டமாக, 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. அளவுக்கு ஊராட்சி ஒன்றிய சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

மாநிலத்தில் உள்ள 

அனைத்து அரசுப் பள்ளிகளிலும்...

இரண்டாவதாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.9.2022 அன்று மதுரையில் தொடங்கப்பட்டது.  1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு முன் னோடி முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் முதற்கட்டமாக, 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 இலட்சம் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளியில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் பெரும்பாலான பொது மக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் பாராட்டப்பட்டு, அதை மகிழ்ச்சி யோடு வரவேற்றுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த முயற்சியின் பயனாக, பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, இந்தத் திட்டத்தினை 

2023-2024 ஆம் ஆண்டு, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்திட முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

மூன்றாவதாக ஒரு முக்கியமான அறிவிப்பு. உலக முத லீட்டாளர்கள் மாநாடு. பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது. 

2030 ஆம் ஆண்டிற்குள்...

முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங் கிடவும், மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய் திடவும், நான் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்தேன். அதனை அடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த இலக்கினை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் விதமாக, பல முதலீட்டாளர்கள் மாநாடுகளை துபாய் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டன. 

மேலும், உலகளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில் துறை அமைச்சர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு, ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளுக்கும் பயணம் மேற்கொண் டார்கள். 

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரத்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின்ஆண்டுக் கூட்டத்தில் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

“உலக முதலீட்டாளர்கள் மாநாடு”

நம் மாநிலத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்த்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரம் வளர்ச்சி அடை வதற்காக, “உலக முதலீட்டாளர்கள் மாநாடு” வரும் 2024 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 10, 11 ஆம் நாட்களில், 100-க்கும் மேற் பட்ட நாடுகளின் பங்கேற்புடன், பெருமளவில் பிரம்மாண்ட மாக சென்னையில் நடத்தப்படும் என்பதை இம் மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment