Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பதிலடிப் பக்கம்
January 13, 2023 • Viduthalai

4.1.2023 நாளிட்ட 'துக்ளக்'கிற்குப் பதிலடி

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

கேள்வி: ‘பெரியார் கடவுள் இல்லை' என்று சொன்னார். அவர் நீண்ட நாள் வாழ்ந்தார். அவரைக் கடவுள் தண்டிக்கவில்லையே ஏன்?

பதில்: நீண்ட நாள் வாழ்வதும் தண்டனைதான். நீண்ட காலம் வாழ்ந்த ஈ.வெ.ரா.வை அவரது சிஷ்ய கோடிகளே கேவலமாகக் கார்ட்டூன் போட்டுப் பேசினர் - அசிங்கப்பட்டு அவமானப்பட்டார் அவர். கீர்த்தி உள்ளவனுக்கு வரும் அபகீர்த்தி மரணத்தை விடக் கொடியது என்கிறது பகவத் கீதை. நீண்ட நாள் வாழ்ந்தது அவருக்கு பெருமையா, தண்டனையா என்பதை நீங்களே கூறுங்கள்.

நமது பதிலடி: நீண்ட நாள் வாழ்வது தண்டனை என்றால், அவாளது மகா பெரியவா(ல்)ள் காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி வாழ்ந்ததும் அந்தப் பட்டியலில் வருமே!

 ஏச்சு - பேச்சு, கல்லடி - சொல்லடிகளைக் கடந்து தான் தந்தை பெரியார் மறைந்து 49 ஆண்டுகளாகியும் போற்றப்படுகிறார். ஆச்சாரியார் ராஜாஜியைப் பற்றிப் பேச நாதியில்லையே! கீர்த்தி உள்ளவனுக்கு வரும் அபகீர்த்தி மரணத்தை விடக் கொடியது என்கிறது பகவத் கீதையாம்.

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கிற அந்த பகவத் கீதையா? பார்ப்பன வீட்டுத் தாய்மார்களும் இதில் அடங்கமாட்டார்களா? அடங்க மறுக்கும் அவுட்டுத் திரிகளே சிந்திப்பீர்களா?

- - - 

கேள்வி: தமிழகத்தில் பா.ஜ.க. அபார வளர்ச்சிக்குக் காரணம் தேச நலன் சார்ந்த அரசியலா?

பதில்: காங்கிரசின் வீழ்ச்சிக்குப் பிறகு தேசியத்தின் குரல் நலிந்த தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்தாலும், காங்கிரஸ் வளர்ந்தாலும் நாட்டுக்கு நல்லது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், காங்கிரஸ் வளருவ தில்லை என்று விரதம் எடுத்திருக்கிறது. அதனால் பா.ஜ.க. வளருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க. வளர்கிறது என்று எனக்குத் தோன்ற மூன்று காரணங்கள். ஒன்று - பா.ஜ.க.வுக்கு முன்பு செல்வாக்கு இல்லாத இடங்களில் கூட, இன்று அதற்கு கூட்டம் சேருகிறது என்று தொடர்ந்து செய்தி வருகிறது. இரண்டு - அதன் கூட்டங்களுக்கு இளைஞர்கள் அதிகம் வருவதாகவும் கூறுகிறார்கள். மூன்று - அ.தி.மு.க. பிரிந்து, ஒருவரை ஒருவர் சாடிக் கொள்ளும் நிலையில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் கடுமையான தி.மு.க. எதிர்ப்பு நிலையால், பா.ஜ.க. தான் தி.மு.க.வை எதிர்ப்பதில் முன்னிற்கிறது என்ற தோற்றம் உருவாகி இருக்கிறது.

நமது பதிலடி: பா.ஜ.க.வுக்கு கூட்டம் சேர்கிறதாமே! அப்படி எங்கெங்கெல்லாம் கூட்டம் சேர்கிறதாம்? பா.ஜ.க.வில் எந்தெந்த பேச்சாளர் பட்டாளம் இருக்கிறது? பட்டியல் போட முடியுமா? இருக்கிற ஆள்களுக்குள்ளேயே அடிதடி - கள்ளக் குறிச்சியில் தான் அந்தக் கந்தாயத்தைப் பார்த்தோமே!

ஒரு வகையில் பார்த்தால் அண்ணாமலை பா.ஜ.க. வில் உள்ள அவாளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டார்

அது ஒரு புறம் - அண்ணாமலையை நினைத்தால் அவர் எத்தகைய ‘அறிவுக் கொழுந்து' என்பதை கண்டு நாடே சிரிக்கிறது. மு.க.ஸ்டாலின் மிசா கைதி இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு அரசியல் அறிவு அவருக்கு அளவுக்கு அதிகமாகவே இருக் கிறது. அந்த விடயத்தில் கம்பராமாயணத்தை எழுதி யவர் சேக்கிழார் என்ற எடப்பாடியாருக்கு சரியான ஜோடிதான் அண்ணாமலை.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்தபோதே தஞ்சையில் வெற்று நாற்காலிகளின் எண்ணிக்கை தான் அணிவகுத்து நின்றதை நாம் பார்க்கவில்லையா?

இளைஞர்கள் அதிகம் வருகிறார்களாம். பேட்டை ரவுடிகளையும், குண்டர் சட்டத்தில் கைதாகி வந்தவர் களையும் கட்சியில் சேர்த்துப் ‘பலத்தை'க் கூட்டிக் கொண்டுபோகிறது பா.ஜ.க. பலே, பலே!

- - - - -

கேள்வி: ‘எதையும் பகுத்தறிவோடு பார்த்து உதயநிதியின் அரசியல் பயணம் தொடரட்டும்' என்று கி.வீரமணி வாழ்த்தியுள்ளாரே? 

பதில்: மார்கழி மாதம் பிறப்பதற்கு முன், நல்ல முகூர்த்தம் பார்த்து பதவியேற்று, ஆரத்தி எடுத்து, நெற்றிக்கு இட்டு வீட்டுக்குச் சென்ற அளவு பகுத்தறி வுக்கு மேலே போகாமல், உதயநிதியின் பயணம் தொடரட்டும் என்று உள்ளுக்குள் பிரார்த்தனை செய்கிறார் கி வீரமணி.

நமது பதிலடி: வீரமணி உள்ளுக்குள் பிரார்த்தனை செய்கிறார் என்ற வரியின் மூலம் குருமூர்த்தி மண்டைக்குள் இருப்பது அசல் களிமண் தான் என்பது விளங்கிவிடும். 1971இல் ‘செருப்படிப்பட்டும்' இன்னும் இந்தக் கும்பலுக்குப் புத்தி வரவில்லையே! 

கடவுளைப் பற்றி கேட்டதற்கு ஒற்றையடியாக ‘எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை' என்று ‘காதறுந்த' பொருளால் அடித்தாரே அதற்கப்புறம் கூடப் புத்தி கொள்முதல் பெற மாட்டார்களா? 

இவர்களின் சாவர்க்காரே கடவுள் நம்பிக்கை அற்றவர் தான். அதற்காக ஆற்றில் குளத்தில் விழுந்து செத்துப் போய் விடுவார்களா?

- - - - -

கேள்வி: ‘படிப்பது ராமாயணம் இடிப்பது கோயில்' என்ற பழமொழிக்கு அரசியல் ரீதியான விளக்கம் கூறுங்கள். 

பதில்: ‘இடிப்பது கோயில் படிப்பது ராமாயணம்' என்று அதைத் தலைகீழாகப் போட்டு, அரசியல் ரீதியாக விளக்கம் கொடுக்கலாம். கோடிக்கணக்கான ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்திப் பேசுவது, குடும்ப நலனுக்காக மனைவியை நேர்த்திக்கடன் செய்யச் சொல்லுவது, இது இடிப்பது கோயில், படிப்பது ராமாயணம் பாணி அரசியலுக்குப் பொருந்தும்.

நமது பதிலடி: இராமாயணத்தைப் படித்ததால் தான், உண்மை நிலையை உணர்ந்து அது எரிக்கப்பட்டது. அந்த கதாநாயகனுக்குச் “சாத்துப்படி"யும் நடந்தது. எதையும் படிக்காமல், உண்மை நிலையை அறியாமல் கண்மூடித்தனமாக செய்யாததற்குப் பெயர்தான் பகுத்தறிவு. 

தந்தை பெரியார் எழுதிய "இராமாயணப் பாத்தி ரங்கள்" எனும் நூல் 20 பதிப்புகளுக்கு மேல், இலட்சக் கணக்கில் மக்களிடம் போய் சேர்ந்துள்ளதே. ஹிந்தியி லும் "சச்சு இராமாயணம்" என்ற தலைப்பில் வெளி யானதே - அதனை உ.பி. அரசு தடை செய்த நிலையில் உச்சநீதிமன்றம் தடையை நீக்கியதே. இந்த வரலாறு எல்லாம் கணக்கப்பிள்ளை குருமூர்த்திகளுக்குத் தெரியுமா? அல்லது தெரிந்திருந்தும் மறைக்கிறார்களா?

"இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ - ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும். இவை உண்மையென்று நான் நம்பவில்லை. "பஞ்சதந்திரம்", "அராபியன் நைட்" முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை என்பதே என் கருத்து" என்று எழுதினாரே - பண்டிட் ஜவஹர்லால் நேரு (‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா', பக்கம் 76-77? 

இதற்குப் பதில் என்ன?

"தென் இந்தியாவில் இருந்த மக்களே தான் இராமா யணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டுள்ளார்கள்" என்று அமெரிக்கா வரை சென்று இவர்களின் சரக்குகளை விநியோகம் செய்து வந்த விவேகானந்தர் கூறியதற்கு என்ன பதில்? 

("சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழி வுகளும்,  கட்டுரைகளும்" - ‘இராமாயணம்' எனும் தலைப்பில் பக்கம் 187)

இராமாயணத்தின் மூல நூலாகிய வால்மீகி இராமாயணத்தில் இராமன் பிறப்புப் பற்றிக் கூறப்பட்ட ஆபாசச் சகதியைப் பேசலாமா குருமூர்த்தியே!

குதிரையோடு புணர்ந்தது எல்லாம்... இதுதான் ஆரிய கலாச்சாரம் என்று ஏற்றுக் கொள்வார்களா?

தந்தை பெரியார் கேட்ட 

அறிவுப்பூர்வமான கேள்வி.

திரேதாயுகத்திற்கு உண்டான வருஷம் 12,96,000 தான். ஆனால் அந்த யுகத்தில் இராவணன் 50 லட்சம் வருஷங்கள் ஆண்டிருக்கிறான் என்கிறது இராமா யணம்.

நான்கு யுகமும் சேர்ந்ததே 43 லட்சத்து 20 ஆயிரம். இதில் 50 லட்சம் ஆண்டுகள் இராவணன் ஆண்டான் என்பது அறிவுக்குப் பொருந்துமா? என்று தந்தை பெரியார் கேட்டாரே - பதில் எழுதுமா குருமூர்த்தி கும்பல்?

- ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம் ‘துக்ளக்' கும்பலே!

இராமாயணத்தைப் படித்து உண்மையை உணர்கிற வன் பெருமாள் கோயிலை இடிக்கத்தான் செய்வான்.

- - - - -

பிறக்காத கடவுளுக்கு 

கிருஷ்ண ஜெயந்தி ஏன்?

கேள்வி: பிறந்த நாள் கொண்டாட்டம், புத்தாண்டுக் கொண்டாட்டம் பற்றி... உங்கள் கருத்தென்ன?

பதில்: பிறந்த நாள் கொண்டாட்டம் அளவாக இல்லையென்றால் குடும்பம் சீரழியும்; புத்தாண்டுக் கொண்டாட்டம் அளவை மீறினால் சமுதாயம் சீரழியும் (‘துக்ளக்', 18.1.2023).

நமது பதிலடி: கிருஷ்ண ஜெயந்தியையும், இராம நவமியையும் கொண்டாடினால் என்னாகுமாம்? (இவாள் கூற்றுப்படி பிறக்காத கடவுளுக்குப் பிறந்த நாள் ஒரு கேடாம்!)

- - - - -

கேள்வி: தமிழ்நாட்டில் பகுத்தறிவின் வளர்ச்சி எந்த அளவில் உள்ளது?

பதில்: கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி அனைவரும் வாழ்க  என்று கோஷமிடும் அளவுக்குப் பகுத்தறிவு வளர்ச்சி பெற்றிருக்கிறது.

நமது பதிலடி: அவர்கள் கட்சியைச் சேர்ந்தவர் களுக்கு வாழ்க கோஷம் போடுவதில் குருமூர்த்திக ளுக்கு என்ன வந்ததாம்?

மடத்துக்கு வந்த ஒரு எழுத்தாளர் பெண்ணைக் கையைப் பிடித்து இழுக்கும் ஓர் ஆளை ஜெகத் குரு என்று இன்று வரைக்கும் கூறும் குருமூர்த்திகள் இதைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது.

மோஷத்தின் அட்ரஸ் என்ன?

கேள்வி: இந்திய கலாச்சாரம் கற்பிப்பது வாழ்க் கைக்கான பொருளாதாரமா அல்லது பொருளாதாரத் திற்கான வாழ்க்கையா?

பதில்: இந்தியக் கலாச்சாரம் கற்பிப்பது - அறத்தின் அடிப்படையில் பொருளை ஈட்டி அளவான இன்பத்தை அனுபவித்து, இறுதியில் மோக்ஷம் என்ற நோக்கத்தை அடையும் உயிர் வாழ்க்கைக்கான பொருளாதாரம்.

- ‘துக்ளக்', 18.1.1023 பக். 28

அறத்தின் அடிப்படையில் என்றால் என்ன? ஒரு குழவிக்கல்லை கர்ப்பக்கிரகம் என்று சொல்லி, அதற்குள், வைத்து மக்களின் பணத்தை சுரண்டுவது தானா? அளவான இன்பம் என்பது கோயில் கருவ றைக்குள்ளேயே அர்ச்சகப் பார்ப்பான் சல்லாபத்தில் ஈடுபடுவதுதானா? அதுசரி மோக்ஷம்  - அதற்கு அட்ரஸ் என்ன?


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காந்தியாரின் 76 ஆவது நினைவு நாள் இன்று!
January 30, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பதிலடிப் பக்கம்
January 27, 2023 • Viduthalai
Image
அதானி நிறுவன ஊழல்
January 28, 2023 • Viduthalai
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்திய மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 28, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn