இளைஞரணி சார்பில் மண்டல மாநாடுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 24, 2023

இளைஞரணி சார்பில் மண்டல மாநாடுகள்

 * சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்துக!

* சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பரப்புரை செய்வோம்!

* ஏடுகளுக்குச் சந்தா சேர்ப்பு - சுவரெழுத்து விளம்பரங்கள்

கழக இளைஞரணி கலந்துரையாடலில் முத்தான ஒன்பது தீர்மானங்கள்!

திருச்சி, ஜன.24  சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்துக! சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத் துவம் கொடுத்துப் பரப்புரை செய்வோம்! ஏடுகளுக்குச் சந்தா சேர்ப்பு - சுவரெழுத்து விளம்பரங்கள் உள்ளிட்ட இளைஞரணி சார்பில் மண்டல மாநாடுகள் கழக இளைஞரணி கலந்துரையாடலில் முத்தான ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சி பெரியார் மாளிகையில் 22.1.2023 அன்று மாநிலம் தழுவிய திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அத்தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் 1:

சமூக நீதி பாதுகாப்பு பயணம்

உயர்ஜாதியினருக்கு அளிக்கப்படும் 10% இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட மாணவர்களின் உரிமைகளை பாதுகாத்திடவும், திராவிட மாடல் அரசை பாதுகாக்கும் வகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளும் சமூக நீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயண பொதுக்கூட்டங்களை அனைத்து மாவட்டங் களிலும், கழக பொறுப்பாளர்களோடு இளைஞரணி தோழர்கள் இணைந்து கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துவது எனவும், கூட்டங்களை நடத்துவதற்குத் தேவையான நன்கொடைகளை கடைவீதிகளில் திரட்டு வது என்றும், கூட்டங்கள் தொடர்பாக இளைஞரணி சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 2:

தீண்டாமை ஒழிப்பும், ஜாதி ஒழிப்பும் 

நமது கண்ணான கொள்கைகள்

2023 ஆம் ஆண்டிலும் ஜாதிக்கொடுமையா. இதனை ஒரு போதும் பெரியார் மண் அனுமதிக்காது. புதுக் கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஜாதி தீண்டாமை போன்ற கொடுமைகள் வேறு எங்கு நடந்தாலும் கழக இளைஞரணி தோழர்கள் உடனடியாக தலைமைக் கழகத்திற்கு தெரிவித்து களப்பணியிலும் உடனடியாக இறங்க வேண்டும்.

தீண்டாமை சட்டப்படி குற்றம். மனிதாபிமானத்திற்கும், மனித உரிமைக்கும் எதிரானது என்பது போன்ற விளம் பரங்களை கழக இளைஞரணி தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்க வேண்டும் என்றும், ஜாதி - தீண்டாமை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டும் அல்ல. சமூக மாற்றம் பற்றி தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டிய பிரச்சினையும் கூட என்பதை உணர்ந்து திராவிடர் கழக இளைஞரணியினர் முனைப்புடன் செயல்படுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3:

சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றிடுக!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார முன் னேற்றத்திற்கும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டுவதற்கான திட்டமுமான சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் என்பது கடந்த 150 ஆண்டு கால வரலாற்றை உள்ளடக்கிய திட்டமாகும்.

சேது கால்வாய் திட்டம் குறித்து நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொடர் பிரச்சார சுற்றுப்பயணத்தாலும், ஒன்றிய அரசில் தி.மு.க. அங்கம் வகித்ததன் பயனாக சேது கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டு ரூ.2.493 கோடி செலவழிக்கப்பட்டு 23 கி.மீதூரமே மீதமிருந்த நிலையில். ராமர் பாலம் (இல்லாத ஒன்றை) இடிபடக்கூடாது என்று அன்றைய பா.ஜ.க.. அதிமுக.. சுப்பிரமணிய சுவாமி போன்றோர் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு தடையாணை பெற்றனர்.

இந்நிலையில் ராமர் பாலம் அல்ல. அது வெறும் பவளம். சுண்ணாம்பு பாறைகளைக் கொண்ட ஆதாம் பாலம் தான் என்றும், ராமர் பாலம் இருந்ததற்கான அடையாளம் ஏதும் இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தெளிவாகத் தெரிவித்துள்ளார். மீண்டும் அந்த திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டுவர வேண்டு மென நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாளான 2022, டிசம்பர் 24 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.01.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சேதுக் கால்வாய் திட்டத்தை நடைமுறைப் படுத்தவேண்டும். என தனித் தீர்மானம் முன்மொழியப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு, மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும். தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் இக்கூட்டம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கழக இளைஞரணி சார்பில் தொடர் பரப் புரைக் கூட்டங்களை நடத்துவதென தீர்மானிக்கப்படு கிறது.

தீர்மானம் 4:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையிலான நெகிழி, ரசாயனக்கழிவுகள். ஊர்திப்புகை, அதிக ஒலி எழுப்புதல் போன்றவற்றால் ஏற்படும் நீர். நில. ஒலி மாசுகள் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்திட சிற்றூர் முதல் பெரு நகரங்கள் வரை கழக இளைஞரணி சார்பில் ஒத்த கருத்துடைய வர்களை இணைத்துக்கொண்டு விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொள்வதோடு,

 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் - 22 உலக நீர் நாள், 

ஏப்ரல்-22 உலக புவி நாள், 

ஜூன்-5 உலக சுற்றுப்புற சூழல் நாள், 

ஜூன்-17 பாலைவனமாதல் மற்றும் வறட்சியைக் கட்டுப்படுத்தும் உலக நாள், 

ஜூலை-22 உலக இயற்கை பாதுகாப்பு நாள்,

செப்டம்பர்-16 ஓசோன் நாள் 

ஆகிய நாள்களில் அவற்றின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே போட்டிகளை நடத்துவது என்றும், சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள புதிய இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது என்றும் தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் 5:

தமிழ்நாடு - புதுச்சேரியில் 

இளைஞரணி அமைப்பை பரவலாக்குதல்

திராவிடர் கழக இளைஞரணி மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் பொறுப்புக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கலந் துரையாடல் கூட்டங்களை நடத்தி கிராமங்களில் கிளைக் கழகங்களை உருவாக்குதல், ஒன்றிய அமைப்பு, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் வட்டக் கழக வாரியாக இளைஞரணி அமைப்புகளை உருவாக்குவது எனவும், இவ்வமைப்புகளுக்கு புதிய உறுப்பினர்களை இணைத்து தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களில் இளைஞரணி அமைப்பை பரவலாக்குவது எனவும் தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் 6: 

இயக்க இதழ்களுக்குச் சந்தா சேர்த்தல்

திராவிடர் கழக இளைஞரணி சார்பில் உண்மை மாதமிருமுறை இதழுக்கும். பெரியார் பிஞ்சு மாத இதழுக்கும் பெருமளவில் சந்தா சேர்த்து வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 7:

இன்றைய 'விடுதலை' படித்தீர்களா?

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான 'விடுதலை'யை நாடெங்கும் பரப்பிடும் வகையில் கழக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு இன்றைய 'விடுதலை' படித்தீர்களா? என்னும் வாசகம் அடங்கிய சுவர் விளம்பரத்தை விரைந்து எழுதுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 8:

பயிற்சிப் பட்டறைகள்

கழக இளைஞரணி சார்பில் மாவட்ட வாரியாக 2023 மே மாதம் முதல் வார இறுதி நாட்களில் தலைமைக் கழக பொறுப்பாளர்களைக் கொண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதென தீர்மானிக்கப்படு கிறது.

தீர்மானம் 9: 

இளைஞரணி மண்டல மாநாடுகள்

திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மண்டல இளைஞரணி மாநாடுகளை நடத்துவது எனத் தீர் மானிக்கப்படுகிறது.

- மேற்கண்ட தீர்மானங்கள் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment