சங்கிகள் சட்டத்தை மதிக்கும் யோக்கியதை இதுதான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

சங்கிகள் சட்டத்தை மதிக்கும் யோக்கியதை இதுதான்!

 பாரம்பரியம் என்ற பெயரில் உயரதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி ஹிந்து அமைப்பினர் காவல் நிலையத்தை பூக்களால் அலங்கரித்து அங்கிருந்து கலசமெடுத்து காவடி தூக்கிச் சென்றனர்

வேளிமலை முருகன் கோவிலுக்கு காவல் நிலை யத்தை அலங்கரித்து அங்கிருந்து காவடி எடுத்துச் செல்ல  தடை விதிக்கப்பட்டதால் காவல் நிலையத்தை ஹிந்து அமைப்பினர் முற்றுகையிட்டனர். 

தக்கலை அருகே உள்ள குமாரகோவிலில் வேளிமலை முருகன் கோவில் ஒன்று உள்ளது.  திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் இருந்தும், நாட்டில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், மக்கள் பசி, பட்டினி இன்றி வாழவும், சண்டை சச்சரவு இன்றி நிம்மதியுடன் வாழவும் தக்கலை பொதுப் பணித்துறை காவல்நிலையத்திலிருந்து வேளிமலை முருகனுக்கு  ஆங்கிலேயர் காலத்திலும் காவடி எடுத்துச் செல்வார்களாம். இந்த பாரம்பரிய மரபு தொன்று தொட்டு  கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதாம்.

இந்த ஆண்டு காவல் நிலையத்தில் இருந்து காவடி எடுத்துச் செல்லக்கூடாது என உயர் அதிகாரி வாய்மொழியாக உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் காவல் நிலையத்தில் காவடி எடுக்க பூக்களால் அலங்கரிக்கும் பணி நடைபெறவில்லை. 

இதனை அடுத்து  ஹிந்து அமைப்பினர் நள்ளிரவில் காவல் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.  பின்னர் ஆய்வாளர் நெப்போலியன் ஹிந்து அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் கூறும் போது, "காவல் நிலையம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான இடம். ஆகவே இங்கு வைத்து காவடி கட்ட முடியாது" என கூறினார்.

 இதைக் கேட்டு ஆவேசமடைந்த ஹிந்து அமைப்பினர் பாரம்பரியமாக நடைபெறும் நடை முறையை மாற்றக்கூடாது என தெரிவித்ததோடு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து அங்கு துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர் கணேஷ் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தியதோடு உயர் அதிகாரிகளுடனும் பேசினார். எனினும் ஹிந்து அமைப்பினர் அங்கிருந்து நகரவே இல்லை. காவல் நிலைய வாசலிலேயே அமர்ந்திருந்தனர்.  ஆனால், முடிவு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர். மேலும் இந்தப் பிரச்சினை குறித்து ஹிந்து அமைப்பினர் பாஜகவினருக்குத் தகவல் தெரிவித்தனர்.  இதனை அடுத்து சென்னையில் இருந்து பாஜக தலைமை காவல் துறையினரிடம் பேசி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது

அதன் பிறகு காலை 11 மணிக்கு காவல் நிலையத்தில் இருந்து காவடி கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்த நிகழ்வால் நள்ளிரவில் தொடங்கிய பதற்றம் காலையில்தான் முடிவுக்கு வந்தது.

சங்பரிவார்கள் எந்தச் சட்டத்தையும் மதிக்கத் தயாராக இல்லை என்பது  இதன் மூலம் தெரிய வில்லையா?

ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாநிலத்தில் சட்டத்தை மதிக்கத் தவறுவது எந்த அடிப்படையில்?

"மதச் சார்பற்ற அரசின் அலுவலகத்தில் குறிப்பிட்ட மத நடவடிக்கையையை எப்படி ஆதரிக்க முடியும்" என்று காவல்துறை அதிகாரி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல இயலாத நிலையில் வல்லடியாக செயல்பட்டதும், அதற்குப் பிஜேபியின் தலைமை 'சபாஷ்' கூறி ஊக்குவிப்பதும், பிஜேபி சங்பரிவார்களின் தரத்தை, ஒழுக்கமின்மையை, சட்டத்தை ம(மி)திக்கும் போக்கு எத்தகையது என்பதையும் வெளிச்சமாகக் காட்டவில்லையா?


No comments:

Post a Comment