''சமூகநீதிக்கான சரித்திர நாயகர்'' மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி - நீதிக்கட்சியின் நீட்சியே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 20, 2022

''சமூகநீதிக்கான சரித்திர நாயகர்'' மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி - நீதிக்கட்சியின் நீட்சியே!

 டிசம்பர் 20 ஆம் (1916) நாள்: பார்ப்பனர் அல்லாதார் கொள்கை வெளியிடப்பட்ட வரலாற்றுச் சிறப்பு நாள்!

வகுப்புவாரி உரிமை, பெண்களுக்கு வாக்குரிமை, ஒடுக்கப்பட்டோர் தெருவில் நடக்கும்  உரிமைகளைப் பெற்றுத் தந்ததும் நீதிக்கட்சி ஆட்சிதான்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

 இந்நாள் (டிசம்பர் 20) நீதிக்கட்சியின் சார்பில் பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்க அறிக்கை வெளியிடப்பட்ட நாள். வகுப்புரிமை, பெண்களுக்கு வாக்குரிமை, ஒடுக்கப்பட்டோர் வீதியில் நடக்கும் உரிமைகளை மக்களுக்கு வழங்கிய ஆட்சி நீதிக் கட்சி ஆட்சியே - அதனுடைய நீட்சிதான் இன்றைய ''திராவிட மாடல் ஆட்சி'' என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

பழைய சென்னை மாகாணத்தில் (Madras Presidency) - ஆந்திராவையும், கேரளத்தின் ஒரு பகுதி, கருநாடகத்தில்  சில பகுதிகளைக் கொண்ட அம் மாகாணத்தின் மிகப்பெரும்பாலாரான பார்ப்பனரல் லாதாரின் உரிமைகளை, நலத்தைப் பாதுகாக்கத் தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்' என்ற ஜஸ்டீஸ் பார்ட்டி!

அப்பெயர் மக்களுக்கு எளிதில் வாயில் நுழையாத நிலை காரணமாக, அக்கட்சி நடத்திய ‘ஜஸ்டீஸ்' என்ற ஆங்கில நாளேட்டினை முதன்மைப்படுத்தி, ‘ஜஸ்டீஸ்' கட்சி என்றே வெகுமக்களால் அழைக்கப்பட்டது!

டிசம்பர் 20: பார்ப்பனரல்லாதார் 

கொள்கைப் பிரகடன நாள்!

இன்றுதான் (1916 டிசம்பர் 20 ஆம் தேதி) அக்கட்சியின் கொள்கைப் பிரகடன அறிக்கையான ‘‘பார்ப்பனரல்லா தார் கொள்கை அறிக்கை'' -அதன் முக்கிய நிறுவனர் களில் ஒருவரான சர்.பிட்டி தியாகராயர் அவர்களால் சென்னையில், சென்னை மாநகராட்சி தலைமையிடமான ‘ரிப்பன் கட்டடம்' அருகில் உள்ள ‘விக்டோரியா பப்ளிக் ஹாலில்' வெளியிடப்பட்டு, சமூகநீதிக்கான ‘பூபாளம்' தொடங்கியது!

1920 இல் குறிப்பிட்ட சில அதிகாரங்கள் மட்டுமே  தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற அதிகாரங்கள் என்று  வரையறுக்கப்பட்டிருந்தன- அன்றைய பிரிட் டிஷ் ஆட்சியினரால்.

அந்தக் குறுகிய எல்லையில்கூட திராவிடர் ஆட்சி யான நீதிக்கட்சியின் ஆட்சி ஒடுக்கப்பட்டவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் இருந்த மகளிருக்கு அரசியல் உரிமையான வாக்குரிமையை, படிப்புரிமை யைத் தந்தது - ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பார்ப்பனர் உள்பட ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற அடிப்படையில், இட  ஒதுக்கீடு செய்து, கல்வி யையும், வேலைவாய்ப்பையும் பார்ப்பன ஏகபோகத்தின் கோரப் பிடியிலிருந்து மீட்டெடுக்கும் பெரும் பணியை - சட்ட ரீதியாகவே நீதிக்கட்சி ஆட்சியாளர்கள் செய்து வெற்றி கண்டனர்.

வகுப்புரிமை உள்ளிட்ட சட்டங்களை நிறைவேற்றியது நீதிக்கட்சி!

அன்றைய நிலையில், அதிகாரங்கள் குறுகிய நிலையிலும் இந்த வரலாற்றுப் பெருமைமிகு சாதனை யான வகுப்புரிமை ஆணையை நிறைவேற்றி, உரிமை முழக்கத்தை முதல் முழக்கமாக டாக்டர் சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் போன்ற தலைவர்களும், பானகல் அரசர் போன்ற ஆளுமை களும் முழங்கினர். 1920 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றியையும் ஈட்டினர். வகுப்புரிமை உள்ளிட்ட கொள்கைகள் நிறைவேற்றி, உரிமைகளை உண்மை களாக ஆக்கி, ஒடுக்கப்பட்டோருக்கு முதுகெலும்பு உண்டு என்று உலகுக்குக் காட்ட உதவினர்!

வைக்கத்தில் போராடி, ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கு வழி செய்தார் தந்தை பெரியார்!

பார்ப்பன ஆதிக்கம் கல்வியிலும், உத்தியோகங்களில் மட்டுமின்றி, தேர்தல் களத்திலும் ‘பூணூல் திருமேனிகளே' நிரப்பப்பட்ட தளமாகக் காட்சியளித்த நிலையிலும், பதவியாசைக்காக தமது தாயின் மடியையே அறுக்கத் துணிந்தவர்களது, அடாத துரோகத்தையும் - பாழ் செய்த உட்பகையாய் சமாளித்தது பல புரட்சிகரமான சாதனைக்கு எடுத்துக்காட்டு.

தெருவில் ஆதிதிராவிடர் நடக்கும் பொது உரிமை யைத் தடுக்க எவருக்கும் அதிகாரமில்லை என்ற ஆணையை தாத்தா இரட்டைமலை சீனிவாசன் முன் மொழிய, முதலமைச்சர் பானகல் அரசர் நிறைவேற்றிக் கொடுத்தார்.

பக்கத்துத் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், வைக்கம் தெருவில் நடமாடும் உரிமைக்காக ஓராண்டு சத்தியா கிரகம் - ஜெயில் தண்டனை எல்லாம் அனுபவித்த பெரியார், இறுதியில் வெற்றியை அம்மக்களுக்கு காங்கிரஸ் தலைவராக இருந்து பெற்றுத் தந்தார்.

பெண்களுக்கு வாக்குரிமை - கல்வி, உத்தியோகத்தில் உரிமை, ஆதிதிராவிடர் படிக்கப் பள்ளிகள், அந்தப் பகுதியில் இப்படி ஒரு நீண்ட பட்டியல் 100 ஆண்டு களுக்குமுன்னால், சாதனை மலர்களின் பூங்காவாக அவ்வாட்சி நடைபெற்றது!

அதன் தொடர்ச்சிதான் முத்தமிழறிஞர் கலைஞர், அதன் நீட்சிதான் இன்றைய முதலமைச்சர் ‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர்' மு.க.ஸ்டாலின் சமூகநீதிக் கொடி ஏற்றத்தின் கொள்கை ஒளிவீசிப் பறக்கும் பரவசம்!

ஒரு வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார்!

ஆய்வறிஞரும், மூத்த வரலாற்றுப் பேராசிரியருமான என்.சுப்ரமணியன் அவர்கள் - அவர் உயர்ஜாதி பார்ப்பனர் என்ற நிலையிலும் நடுநிலை தவறாது எழுதிய பண்பாளர் ஆனபடியால்,  தமது, 'The Brahmin in the Tamil Country'' என்ற ஆய்வு நூலில், ‘‘நீதிக்கட்சி 1937 வுடன் முடிந்திருந்தாலும், அதுபோட்ட பாதையில், பின்வந்த ஆட்சிகள் - அதுபோலவே பெரியார் ஈ.வெ.ரா.வின் தத்துவ ரீதியாக நடந்தே தீர வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஏற்பட்டது'' என்றார்.

ஒழுக்கச் சீலர் ஓமந்தூரார், கல்வி வள்ளல் காமராஜர், அதையொட்டிப் பின் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிகளும் வேறு திசைக்கு மாற முடியாத பாதுகாப்பு சமூகநீதிக்கு ஏற்படவே செய்தது!

அந்த அடித்தளத்தினால், இன்றைய ‘திராவிட மாடல்' ஆட்சி ஒப்பற்றதாகவும், உயர் தனிச் சாதனை நாளும் மலரும் புது யுகப் புரட்சியை அமைதிப் புரட்சியாக நடத்தி வருகின்றது.

நீதிக்கட்சியின் நீட்சியே 

இன்றைய 'திராவிட மாடல் ஆட்சி!'

‘‘இந்தியாவின் முதல் முதலமைச்சர், முதல் தர ஆட்சி'' என்று வடநாட்டு ஏடுகளும் பாராட்டித் தீர வேண்டிய அரிய சாதனை படைத்துக் கொண்டுள்ளது!

இந்த நாளில், வேர்களின் உறுதியையும், விழுதுகளின் பலத்தையும், பழுது உண்டாக்கிப் பயன் பெற நினைப் போர் படுதோல்வி அடைவார்கள் என்பது உறுதி!

இன்றும் நம் தலைவர்கள் அமைத்த அடித்தளத்தில் எழுந்த பல அடுக்கு மாளிகைகள், பலருக்கு வாழ்வாதாரமாகவும் புகலிடமாகவும், புகழிடமாகவும் மாறியிருக்கின்றன; இதனை இந்நாளில் பெருமையுடன் நினைவு கூருகிறோம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

20.12.2022

No comments:

Post a Comment