எச்சரிக்கை! எச்சரிக்கை எல்லாம் ஹிந்தி மயம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 1, 2022

எச்சரிக்கை! எச்சரிக்கை எல்லாம் ஹிந்தி மயம்!

'உணவு வாணிபக் கழகத்தின் தென் மண்டல மேலாளர் பதவிக்கு ஹிந்தி தெரிந்தவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்' என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் "புட் கார்பரேசன் ஆப் இந்தியா" என்னும் 'உணவு வாணிபக் கழகம்' என்ற இந்தப் பொதுத்துறை நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் பதவிக்கான அறிவிப்பு இவ்வாறு வெளியாகி உள்ளது.

அந்த அறிவிப்பில் 'ஹிந்தி தெரிந்தவர் மட்டுமே' என்று சிறப்பு குறிப்போடு வெளியாகியுள்ளது.

 ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதி; இந்தப் பகுதிகளில் ஹிந்தி மொழி அறியாதவர்கள் பெரும்பாலானோர் இருக்கின்றனர். அப்படி இருக்க, இந்தப் பதவிக்கு 'ஹிந்திக்காரர் மட்டுமே' என்ற குறிப்போடு ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் நோக்கமென்ன? அந்தப் பதவிக்கு தென் மாநிலத்தவர்கள் யாருமே தகுதி இல்லாதவர்கள் என்பது மட்டுமல்ல; பெரும்பாலும் ஹிந்தி படித்திருப்பவர்கள் பார்ப்பனர் களாயிற்றே - அந்தத் தந்திரமும் இதற்குள் பதுங்கி இருக்கிறது. (இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் தான் வெல்லுவார் என்று கருதி ஜெர்மன் மொழி படித்தவர் களாயிற்றே பார்ப்பனர்கள்).

¬¬¬

இன்னொரு அதிர்ச்சித் தகவல் - இடிக்கு மேல் இடி!

சி.எஸ்.அய்.எப்-இன் பொதுப்பணிக்கான தேர்வுகள் ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே  என்றும் அறிவிப்பாணை வந்துள்ளது.

 ஒன்றிய அரசின் தொழிற்சாலைப் பாதுகாப்புப் பிரிவான சி.எஸ்.அய்.எப். பொதுப்பணிக்கான அறிவிப் பாணை தற்போது வெளியாகி உள்ளது, பணியாட்கள், முடிதிருத்துபவர், சலவைக்காரர்கள், தையல் தொழிலாளி, உதவியாளர், துப்புரவுப்பணியாளர், காலணி பழுது பார்ப்பவர்கள் உள்ளிட்ட 7 பொதுப்பணி இடங்களுக்கானத் தேர்வு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட உள்ளது.

நாடுமுழுவதும் உள்ள சுமார் 20,000த்திற்கும் மேற்பட்ட இந்தப்பணிகளுக்கு தெற்கு, வடக்கு, மத்திய, மற்றும் வடகிழக்கு, மேற்குப் பகுதிகளில் மேற்படி பணியாட்கள் நியமிக்கப்பட உள்ளனர். 

 இதற்கான கல்வித்தகுதியாக சில பணிகளுக்கு அய்.டி.அய். சான்றிதழ் மற்றும் பெரும்பாலான பணிகளுக்கு தொழில் முறை அனுபவம் இருந்தால் போதும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். பெரும்பாலான பணிகளுக்கு ஆரம்பக் கல்வி(5 அல்லது 8ஆம் வகுப்பு வரை) போதும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது போன்ற ஒரு தேர்வில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மட்டுமே என்று குறிப்பிடும் போது எழுதுபவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே ஹிந்தியைத்தான் தேர்வு செய்வார்கள். அதே நேரத்தில் ஹிந்தி தெரியாதவர்கள் ஆங்கிலமும் தெரியாத நிலையில் அவர்கள் இந்தப் பணிக்கான விண்ணப்பங்களை நிரப்பக்கூட முடியாது. 5ஆம் வகுப்பு 8ஆம் வகுப்புப் படித்தவர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தேர்வு எழுதிட முடியுமா?

ஹிந்தி பேசும் மக்கள் தமது தாய் மொழியில் தேர்வு எழுதும் போது மற்றவர்களும் தத்தம் தாய் மொழிகளில் தேர்வு எழுதுவது தான் சம உரிமை - சம வாய்ப்பு!  ஒன்றிய அரசு நிறுவனங்களுக்கான தேர்வைக்கூட இவர்களால் எல்லா மொழிகளிலும் நடத்த இயலவில்லை என்பது வெட்கக் கேடே!

ஹிந்தி என்பதே சமஸ்கிருதக் குடும்பம்தான் என்பது நினைவில் இருந்தால் இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சி வலை என்னவென்று புரியும்.

அசல் பார்ப்பன மனுதர்ம ஆட்சிக்கு அடிக்கல் நாட்டிக் கோபுரமும் எழுப்பப்படுகிறது! எச்சரிக்கை! எச்சரிக்கை!!

குறிப்பு: ஆங்கிலத்தில் வெளிவந்த இரு விளம்பரங் களையும் அருகே காண்க.

No comments:

Post a Comment