திருப்பத்தூர் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

திருப்பத்தூர் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சிறப்புரை

 இன்று பெரியார் உயிரோடு இல்லை - நமது ஆசிரியர் மூலமாக வாழ்ந்துகொண்டுள்ளார்!

திருப்பத்தூர், டிச.29 இன்று பெரியார் உயிரோடு இல்லை; நமது ஆசிரியர் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்.

திருப்பத்தூரில் முப்பெரும் விழா

கடந்த 17.12.2022  மாலை திருப்பத்தூரில் நடைபெற்ற சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.கோபால் நூற்றாண்டு விழா -  தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா -  60 ஆண்டு ‘விடுதலை’ ஆசிரியர் பணியைப் பாராட்டி  சந்தா வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற 

சக்திகளுடைய தாளாளர்

நடைபெறுகின்ற முப்பெரும் விழாவில் தலைமைப் பொறுப்பை ஏற்று மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டி ருக்கின்ற எழிலரசன் அவர்களே, கலைவாணன் அவர் களே, மரியாதைக்குரிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

விழா நாயகராக, தமிழ்நாடு மதச்சார்பற்ற சக்திகளு டைய தாளாளராக, சுயமரியாதை வீரராக, பகுத்தறிவு மன்னனாக இங்கே வீற்றிருக்கின்ற தமிழர்களுடைய தலைவர் மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களே,

ஏறத்தாழ 30 ஆண்டுகாலமாக நான் அமைச்சர் வேலு அவர்களை அறிவேன். இத்தனை ஆண்டுகளிலும் அரசியலிலே எத்தனையோ ஏற்றங்கள், எத்தனையோ சரிவுகள், எத்தனையோ மாற்றங்கள் அத்தனையும் கண்டிருக்கின்றார் அவர், நானும் கண்டிருக்கின்றேன்.

ஆனால், இன்றைக்குக் கடைசி நிலை என்று சொல்லக்கூடாது - வயதாகிவிட்டது; பல நேரங்களில், பல கோணங்களில் பயணங்கள் செய்தாலும்கூட, இன்றைக்குத் தமிழ்நாட்டிற்குத் தேவையான ஒரு கோணம் என்னவென்று சொன்னால், மதச்சார்பற்ற சக்திகள் இங்கே வெற்றி பெற்றாக வேண்டும்.

ஏனென்றால், மதவெறியர்கள் இன்றைக்குத் தமிழ் நாட்டை எப்படியும் கையகப்படுத்தித் தீரவேண்டும் என்ற முழு வேகத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக் கின்றனர்.

எந்த நிலையிலும் மாறாதவர்; அமைதியாகப் பேசக்கூடியவர் அமைச்சர் எ.வ.வேலு

வேலு அவர்களைப் பொறுத்தவரையில், எந்த நிலையிலும் மாறாதவர்; அமைதியாகப் பேசக்கூடியவர்; ஆனால், செயல் வீரர் என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும். காரணம், நாங்கள் இருவரும் சட்டமன்ற உறுப் பினர்களாக அந்தக் காலத்திலேயே இருந்திருக்கின்றோம். அவரோடு இந்நிகழ்வில் கலந்துகொள்வதில் பெருமை யடைகிறேன்.

திருப்பத்தூரில் இப்பொழுதுதான் இடி முழக்கம் முடிந்திருக்கிறது ம.தி.மு.க. செந்திலதிபன் உரையால்!

அண்மையில், சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளையும் புயல் தாக்கியது, மின்னல் வெட்டியது, இடி முழங்கியது. அத்தனையும் இரண்டு நாள்களில் ஓய்ந்தது என்று நினைத்தோம். ஆனால், ம.தி.மு.க.வைச் சேர்ந்த அருமை நண்பர் செந்திலதிபன் அவர்களின் உரையைக் கேட்கும்பொழுது, திருப்பத்தூரில் இப்பொ ழுதுதான் இடி முழக்கம் முடிந்திருக்கிறது என்று நினைக் கத் தோன்றுகிறது. அவ்வளவு சிறப்பாகப் பேசினார்; சிறப்பாகப் பேசினார், சிறந்த குரலிலே பேசினார் என்பதைவிட, சிறந்த கருத்துகளைச் சொன்னார்.

என்னுடைய அறிவை விருத்திச் செய்யக்கூடிய அளவிற்கு ஷாநவாசின் பேச்சு உள்ளது

அதேபோல, என்னுடைய அருமை நண்பர், சட்ட மன்ற உறுப்பினர் ஷாநவாஸ்  அவர்களோடு நேரிடை யாக அதிகமாகப் பழக்கமில்லை என்று சொன்னாலும் கூட, தொலைக்காட்சி விவாதங்களில் அவர் கலந்து கொள்கின்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பவன் என்பது மட்டுமல்ல, என்னுடைய அறிவை விருத்திச் செய்யக்கூடிய அளவிற்கு அவருடைய பேச்சு அமைந்திருக்கின்றது.

அமெரிக்காவை சார்ந்த என்னுடைய மரியாதைக் குரிய சோம.இளங்கோவன் அவர்களுக்கும் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிஞர் அண்ணாவின் கொள்கை உணர்வும் - உரையில் இருக்கும் கிண்டலும் எனக்குப் பிடிக்கும்!

இன்னொன்று, நான் அடிக்கடி ரசிக்கக் கூடிய பேச்சுகள் பல உண்டு. என்னுடைய தந்தையாருடைய பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். அறிஞர் அண்ணா வினுடைய பேச்சும், அந்தப் பேச்சில் இருக்கின்ற கொள்கை உணர்வும், அதேநேரத்தில், அந்த உரையில் இருக்கும் கிண்டலும் எனக்குப் பிடிக்கும்.

அதேபோல, நம்முடைய மரியாதைக்குரிய மறைந்த கலைஞர் அவர்களுடைய உரையின் வார்த்தை ஜாலங் களை ரசிப்பவன் நான்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முத்தாய்ப்பான உரையை ரசிப்பவன்!

இப்பொழுது அதிலே ஒரு பகுதியை மு.க.ஸ்டாலி னிடம் ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.

10 நாள்களுக்கு முன்பு அவர் ஒரு நிகழ்வில் உரை யாற்றும்பொழுது, தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக் கின்ற ஆட்சி என்பது ஒரு கட்சியின் ஆட்சியல்ல; ஓர் இனத்தின் ஆட்சி என்றார்.

எவ்வளவு பெரிய சிந்தனை பாருங்கள்; எவ்வளவு பெரிய சொற்றொடர் பாருங்கள்.

அதேபோன்று நான் ரசிக்கின்ற பேச்சுகளில், கடந்த 2, 3 ஆண்டுகளாக சுப.வீரபாண்டியனுடைய பேச்சை நான் ரசித்து வருகின்றேன்.

2, 3 ஆண்டுகளாகத்தான் அவர் ரசிக்கும்படியாக பேசுகிறாரா என்று நீங்கள் கேட்கலாம். இல்லை, பல ஆண்டுகளாக அவர் பேசுகின்றார்; ஆனால், அந்த நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது 2, 3 ஆண்டு களாகத்தான்.

தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் 

விரும்பியது!

ஆக, இத்தனை பேரும் இந்த மேடையில் இருக்கும் பொழுது, நானும் இருக்கவேண்டும்; அதிலும் திருப்பத் தூரில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியில் நானும் இருக்கவேண்டும் என்று தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் விரும்பியது மட்டுமல்ல, என்னை அழைப்ப தற்கென்றே கவிஞர் அவர்களை நியமித்துவிட்டார்.

நான்கூட ‘‘நம்முடைய உடல்நிலை சரியில்லையே திருப்பத்தூருக்குப் போகாமல் இருந்துவிடலாமா? என்று நினைத்தபொழுது, கவிஞர் அவர்கள், நிகழ்ச்சிக்கு வந்தே ஆகவேண்டும் என்று கூறினார்.

திருப்பத்தூருக்குப் போவது என்பது எனக்கு மாமியார் வீட்டிற்குப் போவது போல் இருக்கவேண்டும். அதுபோல்தான், ஈரோட்டிற்கும், திருப்பத்தூருக்கும் ஓர் உறவு பல ஆண்டுகளாக இருக்கிறது. ஏனென்றால், ஈரோட்டு ஆண்களைத் துணிந்து மணம் செய்யக்கூடிய துணிவு, திருப்பத்தூர் பெண்களுக்கு இருக்கிறது'' என்று சொன்னால், அந்தத் துணிவு மிக்கப் பெண்களைக் கட்டிக் காக்கக் கூடிய துணிவு, ஈரோட்டு ஆண்களுக்கு இருந்தது என்று சொன்னால், அது மிகையாகாது.

காலத்தை நாம் விரயம் 

செய்தோம் என்றால்...

இந்த ஊரைப் பொறுத்தவரையில், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். என்னுடைய திருமணத்தின்போது, இந்த இடம் புதிய பேருந்து நிலையமாக இருந்தது; இப்பொழுது பழைய பேருந்து நிலையமாக மாறிவிட்டது. எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், காலம் எவ்வளவு வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆக, இந்தக் காலத்தை நாம் விரயம் செய்தோம் என்றால், இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய முடியாமல் போய்விடும்.

நம்முடைய ஆசிரியர் அவர்கள்மூலமாக 

வாழ்ந்து கொண்டிருக்கின்றார் பெரியார்!

இன்றைக்குத் தமிழ்நாட்டில் பெரியார் அவர்கள் உயிரோடு இல்லை; ஆனால், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் தமிழ்நாட்டில் என்று சொன்னால், அது நம்முடைய ஆசிரியர் அவர்கள்மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

ஆசிரியர் அவர்களை நான் வாழும் பெரியாராகப் பார்க்கின்றேன்.

பெரியாரை சிறிய வட்டத்திற்குள் வைத்துவிட வேண்டும் என்று நினைப்பவன் கிடையாது

பெரியார் அவர்கள் எனக்கு உறவு முறை. என்னு டைய தாத்தாவின் தம்பிதான் பெரியார். ஆனால், பெரி யாரைப் பொறுத்து நான்  நினைக்கும்பொழுது, அவரை என்னுடைய தாத்தா என்ற சிறிய வட்டத்திற்குள் வைத்து விடவேண்டும் என்று நினைப்பவன் கிடையாது.

இங்கே இருக்கின்ற உங்களுடைய மனதில் எப்படி பெரியார் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கின்றாரோ, அதுபோலத்தான் என்னுடைய உள்ளத்திலும் பிரம் மாண்டமாக நிற்கின்றார்.

இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், என்னுடைய தாத்தா என்று சொல்வதற்கு, எனக்கு வெட்கமாக இருக்கிறது. காரணம், அவ்வளவு பெரிய மனிதருக்கு நாம் பேரனாக இருப்பதற்குத் தகுதி இருக்கின்றதா? என்பதுதான் அதற்குக் காரணம்.

இன்றைக்குத் தமிழ்நாடு சனாதன சக்திகளிடமிருந்து காக்கப்படவேண்டும். நல்வாய்ப்பாக  தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சி ஏற்பட்டு இருக்கிறது.

கொள்கைகள் காப்பாற்றப்படுவதற்கும் 

வாரிசு அரசியல் தேவை!

கலைஞர் வாரிசு அரசியல் நடத்தினார் என்று சொல்கிறார்கள்; இன்றைக்கு வாரிசு அரசியல் என்பது தேவைதான். பதவிக்காக மட்டும் அல்ல வாரிசு அரசியல். கொள்கைகள் காப்பாற்றப்படுவதற்கும் வாரிசு அரசியல் தேவை.

இரண்டு, மூன்று நாள்களுக்கு முன்பு, ஸ்டாலின் அவர்களுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சராகப் பொறுப்பேற்றார். எனக்கு அவரோடு அதிகம் பழக்கம் கிடையாது. என்னுடைய மகன் வயதிற்கும். அவருடைய வயதிற்கும் இரண்டு, மூன்று ஆண்டுகள் வித்தியாசம் இருந்தாலும்கூட, அவரோடு எனக்குப் பழகுகின்ற வாய்ப்பு இல்லை.

கலைஞர் குடும்பத்தோடு நெருக்கமாக பழகுகிறவன் நான்!

ஆனால், கலைஞர் குடும்பத்தில் எல்லோருடனும் எனக்குத் தொடர்பு உண்டு. மு.க.முத்துவில் தொடங்கி, முரசொலி செல்வத்தில் தொடங்கி எல்லோருடனும் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன்; இன்றைக்கும் பழகிக் கொண்டிருக்கின்றேன்.

ஆனால், இன்றைக்கு வாரிசு என்று சொல்லும் பொழுது, உதயநிதி அவர்கள் தேர்வை ஒரு சரியான தேர்வாகத்தான் நான் நினைக்கின்றேன்.

நாட்டை வழிநடத்திச் செல்லக்கூடிய 

ஆற்றல் படைத்த ஓர் இளைஞரை 

ஸ்டாலின் உருவாக்கி இருக்கின்றார்!

இங்கேகூட நம்முடைய அருமைத் தலைவர் தமிழர் தலைவர் வீரமணி அவர்களிடம் சொன் னேன், இரண்டு நாள்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அளித்த ஒரு பேட்டியைப் பார்த்தேன். அப்பேட்டி யைப் பார்த்தவுடன், ஆகா, எவ்வளவு பெரிய சிந்த னைகளுக்குச் சொந்தக்காரராக இந்த இளைஞர் இருக்கின்றார்; கண்டிப்பாக நாட்டை வழிநடத்திச் செல்லக்கூடிய ஆற்றல் படைத்த ஓர் இளைஞரை ஸ்டாலின் உருவாக்கி இருக்கின்றார் என்று நினைக் கும்பொழுது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

பல கேள்விகள் அந்தப் பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டன. இங்கே இருக்கும் சில பேர் ரசிக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், இங்கே இருக்கும் கருப்புச் சட்டைக்காரர்களில் நூற்றுக்கு நூறு பேர் அதை ரசிப்பீர்கள் என்பதோடு மட்டுமல்ல, அதை விரும்புவீர்கள்; உதயநிதி ஸ்டாலினுடைய வழிகாட்டு தலுக்கு நீங்கள் உங்களைத் தயார்படுத்திக் கொள்வீர்கள் என்பதற்காக நான் இதைச் சொல்கின்றேன்.

உதயநிதியிடம் சமாதானமும் கிடையாது;  சமரசமும் கிடையாது

பல கேள்விகள் அவரிடம் கேட்கப்படுகின்றன; அதற்கு ஒரே வார்த்தையில் அவர் பதில் சொல்லி யாகவேண்டும்.

அந்தக் குறும்புக்கார செய்தியாளர் கேட்ட கேள்வி களுக்கு உதயநிதி ஸ்டாலினும் மிக அருமையாகப் பதில் சொன்னார்.

அதில் ஒரு கேள்வி, கடவுள் என்றால் என்ன நினைக்கின்றீர்கள் என்பது.

நானாக இருந்தாலும்கூட, மிக சாமர்த்தியமாக, சாணக்கியத்தனமாக பதில் சொல்வதுபோல், பெரியார் சொன்னாரே, அதுபோல், இருந்தால் வரச் சொல்லுங்கள் என்று சொல்லியிருப்பேன்.

செய்தியாளரின் கேள்வியும் - 

உதயநிதியின் பதிலும்!

ஆனால், உதயநிதி ஸ்டாலினிடம் அந்தக் கேள்விக்கு ஒன்றும் சமாதானமும் கிடையாது;  சமரசமும் கிடையாது.

‘கடவுள்’ என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்று பதில் சொன்னார்.

இந்தத் துணிவு இன்றைக்கு எத்தனை பேருக்கு வரும்?

மனதில் இருப்பதை வெளியில் சொல்வதற்குக்கூட இன்றைக்குப் பல பேர் பயந்துகொண்டு, கோழைத் தனமாக இருக்கின்றார்கள் என்று சொன்னால், அதற்குக் காரணம், மதவெறி பிடித்த சக்திகள், இன்றைக்கு வல்லூறுகளாகத் தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் கொஞ்சம் ஏமாந்தால், விமானம் மூலமாக அழைத்துச் செல்கிறோம் என்பார்கள்!

ஏமாந்த தமிழர்களை காசிக்கு ரயிலில் இலவசமாக அழைத்துச் செல்வது. எதற்குமே லாயக்கற்றவர்; குடும் பத்தைப்பற்றி தெரியாதவர்; எதுவரை படித்திருக் கின்றீர்கள் என்ற கேள்வி கேட்டால், அதற்கும் பதில் கிடையாது. அப்படிப்பட்ட மனிதர், இன்றைக்கு தமிழ் நாட்டை எப்படியாவது அபகரித்துவிடவேண்டும் என்று நினைக்கிறார். தமிழ்நாட்டு மக்களை எப்படியாவது அடிமைப்படுத்தவேண்டும் என்பதற்காக, இலவசமாக காசிக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சொல்கின்றார். இன்னும் கொஞ்சம் ஏமாந்தால், விமானம் மூலமாக இமாச்சலப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்வோம் என்று சொல்வார். அல்லது இன்னும் கொஞ்சம் ஏமாந் தால், இளைஞர்களைக் குஷிப்படுத்தவேண்டும் என்ப தற்காக, பாரீசுக்கு உங்களை விமானத்தில் அழைத்துச் செல்கிறேன் என்றும் சொல்வார்.

நாசகார சக்திகளிடமிருந்து தமிழ்நாடு காப்பற்றப்படவேண்டும் என்றால்...

ஆக, எப்படியாவது தமிழர்களை தங்கள் வயப் படுத்திவிடவேண்டும் என்கிற இந்த நாசகார சக்திகளி டமிருந்து தமிழ்நாடு காப்பற்றப்படவேண்டும் என்றால், இங்கே ஸ்டாலினுடைய ஆட்சி என்பது காப்பாற்றப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல; அதுதான் அரசாள வேண்டும்.

நேற்றைக்கு ஓர் ஆங்கிலப் பத்திரிகை எழுதியிருக் கின்றது. இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி தமிழ்நாட்டில் தான் நடக்கிறது என்று.

இத்தனைக்கும் அந்தப் பத்திரிகை எப்படியென்று சொன்னால், மேல்ஜாதிக்காரர்களுக்குத் தாளம் போடு கின்ற பத்திரிகை; நூலை முதுகிலே போட்டுக்கொண்டு ஜாலம் காட்டுகின்ற பத்திரிகை. ஆனால், அந்தப் பத்திரிகை எழுதியதை இன்றைக்கு யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனாலும், அந்தப் பத்திரிகையும் உண்மையைச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்ட காரணத்தினால், இன்றைக்குத் தமிழ்நாடுதான் இந்தியா விலேயே சிறந்த ஆட்சியைத் தருகிறது என்று சொல் கின்றது.

நமக்கு ஒரு வீரமணியல்ல - 

ஆயிரம் வீரமணிகள் நமக்குத் தேவை

இப்படிப்பட்ட நிலையில், நமக்கு ஒரு வீரமணியல்ல - ஆயிரம் வீரமணிகள் நமக்குத் தேவை.

ஆனால், ஒரு வீரமணியாக எப்படி அவர் சமாளிக் கின்றார் என்றால், அவர் வீரமணியாக அல்ல - தந்தை பெரியாராக இருக்கின்ற காரணத்தினால், இன்றைக்கு அவர் அதை சமாளித்துக் கொண்டிருக்கின்றார்.

நான் காங்கிரஸ்காரன்தான்; இறக்கின்ற வரைக்கும் நான் காங்கிரஸ்காரனாகத்தான் இருப்பேன்; ஓர் இந்தியனாக இருப்பேன்; ஆனால், அதைவிட எனக்கு முக்கியம், நான் தமிழன்.

மதச்சார்பின்மை காப்பாற்றப்படவேண்டும்; சமூகநீதி இங்கே காப்பாற்றப்படவேண்டும் என்பதில் அக்கறை கொண்டவன் நான்.

அரசியலில் மீண்டும் உனக்கு அமைச்சர் பதவி தருகின்றேன்; சமூகநீதியைப்பற்றி பேசாதே என்று யாரா வது சொன்னால், ‘‘உனக்கும் ஒரு கும்பிடு; உன்னுடைய அமைச்சர் பதவிக்கும் ஒரு கும்பிடு, ஆளை விடு'' என்று சொல்வேன்.

கடைசி காலத்திலாவது, கடைசி சில ஆண்டுகளி லாவது, என்னுடைய உள்ளத்தில் இருப்பதைப் பேசிவிட்டு மறைகின்றேன் என்றுதான் சொல்வேன்.

எனக்கு தைரியம் வந்திருப்பது; உள்ளம் உறுதியடைந்திருப்பதற்குக் காரணம் என்ன? 

எனக்கு இன்றைக்கு அந்தத் தைரியம் வந்திருக் கின்றது; உள்ளம் உறுதியடைந்திருக்கின்றது என்று சொன்னால், அதற்குக் காரணம், தமிழர் தலைவர் அவர்களோடு கடந்த 2, 3 ஆண்டுகளாக கொஞ்சம் நெருக்கமாகப் பழகுகின்ற காரணத்தினால்தான்.

பார்க்கும்பொழுதெல்லாம் புத்தகங்களைத் தருவார்; புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்று தோன்றுகிறதோ, இல்லையோ, கண்டிப்பாக படித்தாகவேண்டும். ஏனென் றால், அடுத்த முறை சந்திக்கும்பொழுது, ‘‘இந்தப் புத்தகத்தைக் கொடுத்தேனே, படித்தீர்களா? எப்படி இருக்கிறது?'' என்று கேட்டால், என்ன செய்வது.

தமிழர் தலைவரோடு போட்டி போட முடியாது!

அவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முன்பெல்லாம் கையை நீட்டுவார்; நானும் கையைத் தருவேன். இப்பொழுது கையை நீட்டினார், அதுவும் நடந்து செல்லும்பொழுது கையை நீட்டினார். நான் கையைத் தரவில்லை. காரணம், கையை நீட்டியிருந்தால், என்னை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்து விடுவார். அவருக்கு இன்றைக்கும் இளமை ஊஞ்சலாடுகிறது; ஆனால், நான் என்ன செய்வது? எனக்கு உடல்நிலை சரியில்லை; ஆகவே, அவரோடு என்னால் போட்டி போட முடியாது.

உடலளவிலும் போட்டி போட முடியாது; சிந்தனை அளவிலும் போட்டி போட முடியாது. தியாகத்தாலும் போட்டி போட முடியாது.

பெரியாரோடு நெருங்கிப் பழகுகின்ற 

வாய்ப்பு ஏற்படவில்லை

பெரியாருடைய பேரன் என்ற அந்த உறவு எனக்கு இருந்தாலும்கூட, இவரோடு நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்புப் போன்று, எனக்குப் பெரியாரோடு நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்பு ஏற்படவில்லை.

அவர் வாழ்ந்த காலத்தில், ஒரு 30, 40 முறை பார்த் திருப்பேன். அப்பொழுது பெரிய பெரிய விவாதங்கள் கிடையாது.

சாப்பிட்டாயா? என்பார்.

சாப்பிட்டேன் என்பேன்.

என்னுடைய மாமா ராஜூ அவர்களின் மகன் பிறந்த நாள் விழாவில், பிரியாணி போட்டார்கள். எனக்கு வயிற்று வலி காரணமாக நான் பிரியாணி சாப்பிடவில்லை.

அதுகுறித்து என்னுடைய தாத்தா பெரியார் அவர்கள்,

‘‘ஏன் இன்றைக்குப் பிரியாணி சாப்பிடவில்லை?’’ என்று ஒருமுறை கேட்டார்.

‘‘சாப்பிடவில்லை’’ என்று சொன்னேன்.

‘‘சாப்பிடவில்லையா? அல்லது சாப்பிடக் கூடாது என்று சொன்னார்களா?’’ என்றார்.

‘‘சாப்பிடக் கூடாது என்று சொன்னார்கள்’’ என்றேன்.

‘‘நீ எவ்வளவு வேண்டுமானாலும் பிரியாணியை சாப்பிடு; நான் அதற்குத் தேவையான மாத்திரைகளை எப்பொழுதும் பையில் வைத்திருக்கிறேன்’’ என்று சொன்னார்.

இதுபோன்று சின்னச் சின்ன விஷயங்கள் போதுதான் நான்  அவரோடு பேசியிருக்கிறேன்.

50 ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார் பெரியார்!

அவர் இறப்பதற்கு முன்பாக, சென்னையில், ஓர்  இஸ்லாமிய குடும்பத்தில் இருந்த பெரியவர்கள், இராஜாஜி அவர்கள் வீடு கட்டுவதற்கு நிலத்தை இலவ சமாகக் கொடுத்த குடும்பத்தினர். அந்தக் குடும்பத்தைச் சார்ந்த என்னுடைய நண்பர், எப்படியாவது தந்தை பெரியாரோடு ஒளிப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னபொழுது, நான் அவரை அழைத்துச் சென்று, பெரியார் அவர்களிடம், உங்களோடு ஒளிப்படம் எடுக்கவேண்டும் என்று சொன்னேன்.

எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

படம் எடுத்து முடித்தவுடன், 50 ரூபாய் கொடுத்தோம்.

எதற்கு? என்று கேட்டார் பெரியார்.

படம் எடுத்தால் 50 ரூபாய் கொடுக்கவேண்டும் என்று சொல்வீர்களே என்றேன்.

அந்தப் பணம் அவனவன் சொந்த உழைப்பில் சம்பாதித்த பணம். அவர்கள் கொடுக்கிறார்கள் சரி; உனக்கு நம்ம வீட்டில் சோறு போடுவதே தண்டம்; 50 ரூபாயை நீயே வைத்துக் கொள் என்றார்.

தமிழர் தலைவர் அவர்களிடம் இதைக் கேட்க வேண்டும், அதைக் கேட்கவேண்டும் என்று இல்லை. 

சமுதாயத்திற்குச் செய்யவேண்டிய கடமைகள் இன்னும் இருக்கின்றன

கடந்த 3, 4 ஆண்டுகளாக நம்முடைய தமிழர் தலைவர் அவர்களோடு நெருங்கிப் பழகும்பொழுது, இந்த சமுதாயத்திற்குச் செய்யவேண்டிய கடமைகள் இன்னும் இருக்கின்றன. அதை கடைசிவரை நாம் செய்தாகவேண்டும் என்ற முனைப்பில்தான், இன்று எனக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும்கூட, இம் முப்பெரும் விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என்ற வந்தேன்.

இன்னும் இதுபோன்ற கூட்டங்களில் அதிகமாக நான் கலந்துகொள்வேன்.

காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஊக்கச் சக்தியாக தமிழ்நாட்டில் இருப்பது திராவிட இயக்கங்கள்!

அகில இந்திய அளவில் பாரதீய ஜனதா கட்சியை எதிர்க்கக் கூடிய துணிவும், ஆற்றலும் படைத்தது காங்கிரஸ் பேரியக்கம் என்று சொன்னால், அந்தக் காங்கிரஸ் பேரியக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு சக்தியாக தமிழ்நாட்டில் இருப்பது திராவிட இயக்கங்கள் என்பதை மட்டும் சொல்லி விடைபெறுகின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment