ஆளுநர் உட்பட சாற்றப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் தி.மு.க. ஆட்சிக்கு உரமாகப் பயன்படும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

ஆளுநர் உட்பட சாற்றப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் தி.மு.க. ஆட்சிக்கு உரமாகப் பயன்படும்!

 தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் எதிர் கொண்டு சவால்களை வெற்றி கொண்ட தொடர் சாதனைகள்!

‘மாண்டஸ் புயலால்' அதிக உயிர்ச் சேதமின்றி மக்களைக் காப்பாற்றிய "திராவிட மாடல் அரசு!"

தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் கரோனா, மழை வெள்ளம் உள்ளிட்ட ஏராளமான சவால்களை எதிர் கொண்டு வெற்றி பெற்று வருகிறது. மாண்டஸ் புயலையும் முன் கூட்டியே அறிந்து, தொலை நோக்கோடு திட்டங்கள் தீட்டப்பட்டு,  அதிக உயிர்ச்  சேதமின்றி  மக்களைக் காப்பாற்றியது 'திராவிட மாடல்' அரசு. பொய்க் குற்றச்சாட்டுகள் இந்த ஆட்சிக்கு எருவாகப் பயன்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

'சமூக நீதிக்கான சரித்திர நாயகர்' முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஏற்பட்டு வரும் சோதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

பதவியேற்கும் போது கோவிட் - 19 என்ற தொற்றின் உச்சக் கட்ட வேதனை - பிறகு அதுவே உருமாறி பல ரூபங்களில் வந்து மக்களை மேலும் அச்சுறுத்தி பாதிப்புக்கு ஆளாக்கியது.

தி.மு.க. ஆட்சி தொடக்கம் 

முதல் சந்தித்த சவால்கள்

முந்தைய அ.தி.மு.க. ஆட்சி வைத்த அதிகக் கடன் தொகை ஒருபுறம்; கஜானா காலி என்ற நிதி நிலை நெருக்கடி மறுபுறம்.

கோவிட் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த இளைஞர்கள் எண்ணிக்கைப் பெருக்கம்.

தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்த நிலை. இதன் பின் மழை, வெள்ளம் சென்னை போன்ற மாநகர்களிலும், புறநகர்களிலும் தேங்கிய வெள்ளம் காரணமாக தண்ணீரில் மிதந்திருந்த மக்களின் கண்ணீர்க் காட்சிகள்.

இப்படி நாளும் பிரச்சினைகள் பெருகி, இந்த ஆட்சிக்கு சோதனைமேல் சோதனை.

இவற்றைத் தாண்டி,  நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுகளுக்கு (மசோதாக்களுக்கு) ஒப்புதல் தராததோடு, ஒரு போட்டி அரசு நடத்துவது போன்று ஒவ்வொரு நாளும் ஆட்சியின் கொள்கை, தத்துவங்களை எதிர்த்து  பட்டாங்கமாய் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் போல் செய்து வரும் ஓர் ஆளுநரின் அடாவடித்தனம், பொய் குற்றச்சாட்டுகளை நாளும் அவிழ்த்துக் கொட்டி அரசியல் நடத்தும் காவிகளின் கண்ணியமற்ற கபோதித்தனம், உளறும் எதிர்க் கட்சித் தலைவரின் உப்பு சப்பு அற்ற விமர்சனங்கள்  - இப்படி பலப்பல.

இதனை நமது முதலமைச்சரும் அவரது அமைச்சர்களும், அவர்களுடன் கடுமையாக உழைக்கும் அரசு அதிகாரிகளும் எதிர் கொண்டு,  மலைபோல் உள்ளதாக ஊதிக் காட்டப்படும் குற்றச்சாற்றுகளைப் பனிபோல கரைய வைத்து, பார் போற்றும் ஆட்சியாகவே "திராவிட மாடல்" ஆட்சி ஒவ்வொரு சோதனைத் தீயிலும் காய்ச்சப்படும் போதெல்லாம் புடம் போட்ட தங்கமாகவே அவரது தலைமையின் ஆளுமை ஒளி விட்டுப் பிரகாசிக்கிறது!

மாண்டஸ் புயலை சமாளித்த 

அமைச்சர்களும், அதிகாரிகளும்

'மாண்டஸ் புயல்' - சில நாள்களுக்கு முன் தமிழ்நாடு அரசுக்குச் சவால் விட்டு அச்சுறுத்தும் நிலை ஏற்படுவதை முன்கூட்டியே கணித்து, 'வருமுன்னர் காத்து' தேவையான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார் நமது முதலமைச்சர்.

நமது அமைச்சர்கள், அதிகாரிகள், தேசியப் பேரிடர் மீட்புத் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை, மின்சாரத் துறை, வானிலை அறிவிப்புத் துறை போன்றவற்றை சரியாக ஒருங்கிணைத்தும், மாவட்ட ஆட்சியர்கள் மூலம், புயல் தாக்கும் வாய்ப்புள்ள பல துறைமுகங்கள், கடலோர மாவட்டங்கள், மற்றும் மழை, வெள்ளப் பாதிப்புகள், நீர் தேங்காமல் தடுக்கும் நடவடிக்கைகள், மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றம், மீனவர் களுக்கு சரியான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு எல்லாம் சரியாக முதலமைச்சர், உள்ளாட்சிப் பொறுப்பாளர்கள் ஆகியோரின் அயராத கண்காணிப்பு எல்லாம் மாண்டஸ் புயலின் சேதாரம் பெரிய அளவில் ஏற்படாது - தடுக்கப்பட்டது!

அதிக உயிர்ச் சேதம் ஏற்படாமல் மக்களைக் காப்பாற்றிய 'திராவிட மாடல்' அரசு

சென்னை மாநகர சாலைகளில் தொடர் மழை பெய்தும் தண்ணீர் வெள்ளமாக தேங்காமல் ஓடி விட்டது!

வழக்கமாக, ஏற்படும் உயிர்ச் சேதங்கள் அதிகம் ஏற்படாது, 'உயிர் காக்கும் ஆட்சி' என்ற பெருமிதத்தையும் பெற்று உயர்ந்துள்ளது இந்த 'திராவிட மாடல்' ஆட்சியின் மாட்சி!

வெறும் வாயை மெல்லும் சில காவி ஆதரவு நாளேடுகளின் வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு, இவ் வாட்சியின் சாதனைக்குத் தகுந்த 'சர்டிபிகேட்'

புயல் 60-70 கி.மீ.க்கு மேல் வேகமாக வீசவில்லையாம்! அதனால் அதிக சேதம் ஏற்படவில்லையாம்! இப்படி ஒரு சன்னமான விஷமப் பொடி - சில ஏடுகளில்.

மற்றொன்று -  'திராவிட மாடல்' ஆட்சிக்கு எதிரான 'பூணூல் மலர்' ஏட்டுக்கு - எந்தத் தீனியும் கிடைக்காததால், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா அவர்கள் காரில் தொங்கி வந்தார்; சென்னை மாநகராட்சி ஆணையர் ஓடி வந்தார் என்று ஒரு படம் - செய்தியோடு தனது அரிப்பைத் தீர்த்துக் கொள்ளுகிறது!

எங்கள் பெண்களின் வீரம் ஆண்களுக்கு சளைத்ததல்ல  - என்று இதன் மூலம் அறியட்டும்.

(எதனால் அந்த நிகழ்வு ஏற்பட்டது என்பதை சென்னை மாநகராட்சி செய்தியே நன்கு விளக்கியிருக்கிறது).

வீணான எதிர்ப்புகள் எருவாகும்

'திராவிட மாடல்' ஆட்சியைப் பாராட்ட மன மற்றவர்கள் இப்படி சேற்றைத் தேடுகிறார்கள்; எதை  வீசினாலும் எங்களது 'திராவிட மாட'லுக்கு - அவை எருக்கள் தான்; பயிர் செழிப்புடன் வளரவே செய்யும்.

வசவுகளையும், வாழ்த்துகளையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளும் தந்தை பெரியாரின் பாடத்தைப் படித்தவர்கள் தான் இன்று ஆட்சியை நடத்திடும் பக்குவப்பட்ட புடம் போட்ட தங்கம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

வசவாளர்களைப் பார்த்து "வாழ்க வசவாளர்கள்!" என்ற அண்ணா உருவாக்கிய ஆட்சி இது என்பதை மறக்காதீர்!   இதை ஒப்பாரி நாயகர்களும், ஏடுகளும் புரிந்து வாய் பொத்தினால் உலகம் உங்களையும் அறிவாளிகளாக நினைத்துக் கொள்ளும்.


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

12.12.2022

No comments:

Post a Comment