தமிழர் தலைவர் ஆசிரியரின் பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

தமிழர் தலைவர் ஆசிரியரின் பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா

69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கு முழுப் பங்களிப்பும், சாதனையையும் செய்தவர் அய்யா ஆசிரியர்

பல்லாண்டு வாழ்ந்து, தமிழ்ச் சமுதாயத்திற்கும்,  சமூகநீதிக்கும் தொடர்ந்து பாடுபடவேண்டும்

சென்னை, டிச.13  69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கு முழுப் பங்களிப்பும், சாதனையையும் செய்தவர் அய்யா ஆசிரியர் பல்லாண்டு வாழ்ந்து, தமிழ்ச் சமுதாயத்திற்கும்,  சமூகநீதிக்கும் தொடர்ந்து பாடுபடவேண்டும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா அவர்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியரின் 

90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

கடந்த 2.12.2022 அன்று  மாலை சென்னை கலை வாணர் அரங்கில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா கருத்துரையாற்றினார்.

அவரது கருத்துரை வருமாறு:

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கூட்டத்தினுடைய தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

வரவேற்புரை நிகழ்த்திய அருமை நண்பர் 

வீ. குமரேசன் அவர்களே,

எனக்கு முன் உரையாற்றிய சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா அவர்களே,

தொடர்ந்து பாராட்டுரை வழங்கவிருக்கின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத் தரசன் அவர்களே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவர், பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்களே, எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் அவர்களே, திராவிட இயக்கப் போர்வாள் வைகோ அவர்களே,

தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் இங்கே இன்னும் சிறிது நேரத்தில் வரவிருக்கின்றார். அவருடைய பாராட்டுரை  இந்த நிகழ்ச்சியினுடைய சிறப்பாக அமையவிருக்கிறது.

இந்த விழாவின் நாயகராக இருக்கக்கூடிய ஆசிரியர் கி.வீரமணி அவர்களே

தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் சார்பில் பங்கேற்கிறேன்

அருமை நண்பர்களே, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களோடு 50 ஆண்டு காலம் அரசியலில் பயணித்த அருமைத் தோழர் ஒருவர், புவனகிரியில் இன்று காலமானதால், அந்த நிகழ்வில் பங்கேற்கவேண்டிய சூழல் ஏற்பட்டதால், காங்கிரஸ் கட்சியின் சார்பில் நான் பங்கேற்கிறேன்.

ஆசிரியர் அய்யா அவர்களோடு, அருமைத் தலை வர் கே.எஸ்.அழகிரிக்கும், அந்தக் குடும்பத்திற்கும் இருக்கும் நெருக்கத்தை அனைவரும் அறிவார்கள்.

திராவிடர் கழகத்தோடு நெருங்கிய 

நட்பு கொண்டவர்

கே.எஸ்.அழகிரி அவர்களுடைய குடும்பம் மட்டு மல்ல, திராவிடர் கழகத்தோடு அவருடைய தந்தை சம்பந்தம் அவர்களும் மிக நெருங்கிய நட்பு கொண்டவர்.

சம்பந்தம் அவர்களுக்கு மூன்று மகன்கள். ஒருவர் கே.எஸ்.அழகிரி, இன்னொருவர் சவுந்திரபாண்டியன், மற்றொருவர் பன்னீர்செல்வம்.

தன்னுடைய பிள்ளைகளுக்கு திராவிட இயக்கத் தலைவர்களின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தவர் அவரது தந்தை சம்பந்தம் அவர்கள்.

அந்த வகையில், அய்யா ஆசிரியர் அவர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர்தான் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள்.

இவர் யார்? என்று கேட்டார் 

முதலமைச்சர் கலைஞர்!

தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபொழுது, சட்டமன்றத்தில் உரையாற்றியபொழுது, இவர் அருமையாக பேசுகிறாரே, இவர் யார்? என்று கேட்டிருக்கிறார், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள், பேராசிரியர் அன்பழகன் அவர்களிடம்.

அப்பொழுது அன்பழகன் சொன்னார், ‘‘அவர் வேறு யாரும் அல்ல; திராவிடர் கழகத்தைச் சார்ந்த சம்பந்தம் அவர்களின் மகன்தான்’’ என்று பெருமையோடு சொன்னார்.

அந்த அளவிற்கு திராவிடர் கழகத்தோடு நெருங்கி இருந்த தலைவர் அழகிரி அவர்கள், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனது, உண்மையிலேயே எங்களுக்கெல்லாம் கூட ஏமாற்றம்தான்.

ஆனால், என்னைப் பொறுத்தவரை, தந்தை பெரியார் அவர்களோடு எனக்கு சரியான புரிதல் ஏற்படு வதற்கு காரணமாக இருந்தவர் மறைந்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி அவர்கள்.

அவரோடு நான் நாள்தோறும் மாலையில் கிட்டத் தட்ட 4, 5 மணிநேரம் அவருடைய அறையில் செலவிடு வதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தேன்.

தலைவர் கலைஞர் அவர்களே 

பாராட்டினார்

அந்தக் காலகட்டத்தில் அவரோடு இருந்த நட்பின் அடிப்படையில்தான், அவரோடு எனக்கு ஏற்பட்ட விவாதத்தின் அடிப்படையில்தான், ‘‘காமராஜர் ஒரு சகாப்தம்‘‘ என்ற நூலை நான் எழுதினேன்.

அந்த நூல், திராவிட இயக்கத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு எழுதப்பட்ட நூல் என்று தலைவர் கலைஞர் அவர்களே பாராட்டினார்.

அந்த நூல் வெளியீட்டு விழாவில், ‘‘நான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அறிவாலயத்தில் கருவூலம் அமைத்திருக்கின்றேன். அருமை நண்பர் கோபண்ணா அவர்கள், இந்த நூலின் மூலமாக ஒரு கருவூலம் அமைத்திருக்கிறார்’’ என்று பாராட்டினார்.

அந்த அளவிற்கு எனக்கும், பெரியார் திடலுக்கும் நெருக்கம் ஏற்பட்டதற்குக் காரணம், அய்யா சின்னக் குத்தூசி அவர்கள்தான்.

அவரோடு நான் பல கூட்டங்களில், பெரியார் திடலில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பது - தொடர்ந்து எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் செல்வோம்.

திராவிடர் கழகத்தைப்பற்றியும் ஒரு சரியான புரிதல் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர்

அந்த வகையில், திராவிடர் கழகத்தோடு எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. திராவிட முன்னேற்றக் கழகத்தைப்பற்றியும், திராவிடர் கழகத்தைப்பற்றியும் ஒரு சரியான புரிதல் ஏற்படுவதற்கு சின்னக்குத்தூசி காரணமாக இருந்தார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1920 ஆம் ஆண்டி லிருந்து 1937 ஆம் ஆண்டுவரை நீதிக்கட்சி ஆட்சி செய்தது.

1937 ஆம் ஆண்டிலிருந்து 1967 ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது.

இந்தியாவில் இருக்கிற அரசியலைத் தவிர, சென்னை மாகாணத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் நடை பெற்றுக் கொண்டிருந்தது.

இட ஒதுக்கீடு என்பது 

நீதிக்கட்சியினுடைய நோக்கமாக இருந்தது

இங்கே சமூகநீதிக்காகப் போராடிக் கொண்டிருந்த கட்சி - அன்றைக்கு சென்னை மாகாணத்தை கிட்டத் தட்ட 17 ஆண்டுகாலம் 1920 ஆம் ஆண்டிலிருந்து 1937 ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தார்கள்.

இட ஒதுக்கீடு என்பது நீதிக்கட்சியினுடைய நோக்க மாக இருந்தது; விடுதலையை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, 1937 ஆம் ஆண்டு பதவியேற்று, 1967 ஆம் ஆண்டுவரை தமிழ்நாட்டை ஆட்சி செய்தது.

அப்பொழுது இருந்த காங்கிரஸ் கட்சிக்கு, விடுதலை தான் நோக்கமாக இருந்ததே தவிர, சமூகநீதியை, விடுதலைக்குப் பிறகு அந்த லட்சியத்தில் ஈடுபடலாம் என்கிற சிந்தனை இருந்தது.

ஆனாலும், 1947 இல் விடுதலை பெற்ற பிறகு, 1950 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டம்  வந்தவுடன், அந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், சென்னையிலிருந்து மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும், தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டிருந்த கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது.

மிகப் பிரமாண்டமான போராட்டத்தை நடத்தினார் தந்தை பெரியார்!

அந்தத் தீர்ப்பை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் மிகப் பிரமாண்டமான போராட்டத்தை நடத்தினார். அண்ணா அவர்கள் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தார்.

அந்தப் போராட்டத்தின் தீவிர தன்மையை உணர்ந்த அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த காமராஜர் அவர்கள், நேருவிடம் வலியுறுத்தி, அன்றைக்கு அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றார்.

அன்றைக்கு அரசமைப்புச் சட்டத்தில், அரசியல் நிர்ணய சபையில், கிட்டத்தட்ட 80 சதவிகிதம் காங்கிரஸ் கட்சியினர்தான் இருந்தார்கள். அன்றைக்கு அந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

அதற்காக, பெருந்தலைவர் காமராஜர் அவர்களை, தந்தை பெரியார் அவர்கள், மிகப்பெரிய அளவிற்குப் பாராட்டினார்.

காமராஜரை 

தந்தை பெரியார் பாராட்டினார்!

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தந்தை பெரியார் ‘‘காங்கிரசை 60 அடி ஆழ குழிதோண்டிப் புதைப்பேன்’’ என்று பிரச்சாரம் செய்தார்.

ஆனால், 1954 ஆம் ஆண்டு, இராஜாஜி விலகி, காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அன்றே, ஏப்ரல் 13 ஆம் தேதி அந்தச் செய்தி கிடைத்தவுடன், தந்தை பெரியார் பாராட்டினார்.

முதல் முறையாக தமிழ்நாட்டில் ஒரு தமிழன் முதலமைச்சராகி இருக்கிறார் என்று தந்தை பெரியார் பாராட்டினார்.

அந்தப் பாராட்டு, அந்த ஆதரவு, அந்த உற்சாகமான ஆதரவு என்பனமூலம், ஒன்பதரை ஆண்டுகாலம் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைத் தாங்கிப் பிடித்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

திராவிடர் கழகத்திற்கும், 

காங்கிரஸ் இயக்கத்திற்கும் மிகப்பெரிய உதவியாக இருந்தவர், ஆசிரியர் அய்யா

ஆக, இப்படி தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில், திராவிடர் கழகத்திற்கும், காங்கிரஸ் இயக்கத்திற்கும் அந்தக் காலகட்டங்களில் மிகப்பெரிய உதவியாக இருந்தவர், ஆசிரியர் அய்யா அவர்கள்.

‘‘காமராஜரின் சாதனைகள்’’ என்ற வெளியீட்டை வெளியிடுவதற்குக் காங்கிரஸ் கட்சியினரே முன்வராத பொழுது, அந்த சாதனைகளைத் தொகுத்து வெளியிட்டவர் அய்யா வீரமணி அவர்கள்.

அய்யா வீரமணி அவர்கள் வெளியிட்ட சாதனை களை வைத்துதான், காங்கிரஸ் கட்சியினரே பிரச்சாரம் செய்தனர். 

நவீன பிரச்சார யுக்திகளை கையாண்டவர்கள் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள், தந்தை பெரியார் போன்றவர்கள்.

ஆக, இந்த வகையில், அய்யா வீரமணி அவர்களோடு இருக்கிற நெருக்கம் - சமூகநீதிப் பிரச்சினையில் 31-சி, 9 ஆவது அட்டவணைப் பற்றியெல்லாம் சொன்னார்கள்; 1994 இல் என்ன  நடந்தது?

69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கு முழுப் பங்களிப்பும், சாதனையையும் செய்தவர் 

அய்யா ஆசிரியர்

அப்பொழுது பிரதமராக இருந்த நரசிம்மராவ், 76 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து, அதை 9 ஆவது அட்டவணையில் பாதுகாப்பாக வைத்து, அதன்படி, 69 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்றால், அதற்கான முழுப் பங்களிப்பும், சாதனையையும் செய்தவர் அய்யா ஆசிரியர் அவர்கள்தான்.

பல்லாண்டு வாழ்ந்து, தமிழ்ச் சமுதாயத்திற்கும்,  சமூகநீதிக்கும் தொடர்ந்து பாடுபடவேண்டும்

அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக, 90 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அய்யா ஆசிரியர் அவர்கள் மேலும் பல்லாண்டு வாழ்ந்து, தமிழ்ச் சமுதாயத்திற்கும்,  சமூகநீதிக்கும் தொடர்ந்து பாடுபடவேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா அவர்கள் உரை யாற்றினார்.

     

No comments:

Post a Comment