ஆசிரியர் பிறந்த நாள் செய்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

ஆசிரியர் பிறந்த நாள் செய்தி

 பறிக்கப்படும்  உரிமைகளை மீட்டெடுக்கும் பணிக்கு - இளைஞர்களே சுடர் ஏந்த வாருங்கள்!  மகளிரே உங்கள் பங்களிப்பும் தேவை!!

நாடு தழுவிய சமூகநீதி போராட்டப் பரப்புரை- 2023 இல் பெரும் மக்கள் தொடர் போராட்டம்!

பறிக்கப்படும்  உரிமைகளை மீட்டெடுக்கும் பணிக்கு - இளைஞர்களே சுடர் ஏந்த வாருங்கள்!  மகளிரே உங்கள் பங்களிப்பும் தேவை!! நாடு தழுவிய சமூகநீதி போராட்டப் பரப்புரை- 2023 இல் பெரும் மக்கள் தொடர் போராட்டம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தியாக அறிக்கை விடுத்துள்ளார்.

புத்திளமையோடு பணிபுரிய முடிகிறது!

இவ்வாண்டு (2022) டிசம்பர் இரண்டாம் தேதி எனக்கு 90 ஆம் ஆண்டு பிறக்கிறது. வயது வளருவதோ, முதுமையிலும் வாழ்வதோ இயல்பான ஒன்றேயாகும்! ஒவ்வொரு மனிதருக்கும் - பிறந்த நாளை வைத்து வயதைக் கணக்கிடும் முறைப்படி ஓராண்டு கடந்தால் ஒரு வயது; அதைத்தான்  biological age என்று கணக்கிடுகிறார்கள். எம் போன்ற பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள பொதுத்தொண்டர்களுக்கு -கொண்ட கொள்கை லட்சியத்தைப் பரப்பிடுவோர்க்கு - கடமை உணர்ச்சியால் அந்த வயதை முதுமை என்று நினைக்காமல், உற்சாகத்துடன் ஓடி ஆடி, ஊர் சுற்றி பிரச்சாரம், போராட்டங்களில் ஈடுபட்டு, மனதிற்குகந்த பொதுப் பணிகளைச் செய்வதில் நாட்டம் இருப்பதால் புத்திளமையோடு பணிபுரிய முடிகிறது!

இலட்சியப் பயணங்கள் நம் உள்ளத்தை வளமையாக்கி மேலும் மேலும் உழைக்க உறுதியேற்கவே செய்கிறது!

நான் கற்றதும், பெற்றதும் அய்யாவிடம்தான்!

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் தன் 90 ஆவது வயதில்,  சிறுநீர் பிரியும் பகுதியில் அறுவை சிகிச்சையை செய்து கொண்டு, குழாய் பொருத்தி, வடியும் சிறுநீரை ஒரு கண்ணாடிப் போத்தலில் சேரும் வகையில் அதை ஒரு வாளியில் வைத்து சேகரிக்க, அதை அவரே கையில் தூக்கிக்கொண்டு தனது 95 வயதுவரை பிரச்சாரப் பணியை ஊர் ஊராகச் செய்துகொண்டே இருந்தார்! கடும் வலியால் துடித்த நிலையிலும் அவர் பணி ஓய்ந்ததில்லை. 

வேலூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ‘‘சுற்றுப் பயண தள்ளி வைப்பு அறிவிப்பு செய்தி போடலாமா?'' என்று நாங்கள் கேட்டபோது, அதற்காக எங்கள்மீது கோபப்பட்டு, இசைவு தர மறுத்தார் - திரும்பிச் சென்று பிரச்சாரப் பணியைத் தொடரவே செய்ய வேண்டும் என்ற முடிவிலிருந்து பின் வாங்கவில்லை.

அருகில் இருந்து அதை அறிந்த தொண்டனாகிய என்னைப் போன்றவர்கள், அவர் வயதைவிடக் குறைந்த நிலையில், இந்த 90 ஆம் ஆண்டைச்  சாக்காகக் கூறி முடங்கி விடலாமா? இந்த எண்ண ஓட்டமும் அதன் காரணமாக என்னுள் ஏற்பட்ட மாறாத உறுதியும், தொய்வின்றித் தொடர் பணி செய்திடவே ஆணையிட்டு நாளும் வேலை வாங்குகிறது!

மேலும் நான் கற்றதும், பெற்றதும் எல்லாம் அய்யாவிடம் தானே!

எனது வாழ்நாளில் யான் பெற்ற பெரும் பேறு எனக் கருதுவது - என்னைக் கொள்கையால் செதுக்கிய என் அறிவு ஆசான் - தலைவர் எனக்குத் தந்த பொறுப்புகள் அனைத்தும் அவர்களது நம்பிக்கை என்ற வைப்பு நிதியால் எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்புகள்!

சுமை தாங்கியாக இருப்பதில் சுகம் காண்கிறேன்

கழகத்திற்கு 10 வயது சிறுவனாக என் ஆசிரியர் 

ஆ. திராவிடமணி அவர்கள் அழைத்து வந்து ஈடுபடுத்திய தொடக்கக் காலம் தொட்டு, இன்று தொண்ணூறு அகவையைத் தொடும் காலம் வரை, அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் என்மீது பொழிந்த நம்பிக்கை மழை, எப்படியோ தொடர் மழையாக அமைந்ததினால் எனது பொறுப்பும், கடமையாற்றிடும் உணர்வும் எப்போதும் இல்லாத மகிழ்ச்சியுடன் பிறருக்கு உதவுவதில் சுமை தாங்கியாக இருப்பதில் சுகம் காண்கிறேன்.

இன்று வரை எனக்கு சலிப்போ, ஏமாற்றமோ எதிலும் ஏற்பட்டதே இல்லை;

‘சலிப்பு’ ஏன் ஏற்படப் போகின்றது- விருப்பத்துடன் ஏற்ற பொறுப்பை மகிழ்ச்சியுடன் செய்யும் போது?

எனக்கு ‘ஏமாற்றம்' ஏற்பட்டதே இல்லை; காரணம், எதிர்பார்ப்பவர்களுக்குத்தானே  ஏமாற்றம் ஏற்படும் - அது கிடைக்காவிட்டால்!

எனக்குப் பல பொறுப்புகளைத் தந்தை பெரியார் வழங்கி அறிவித்தபோது, எனது இசைவினைக்கூட அவர் கேட்ட தில்லை;  அந்த அளவிற்கு என்னிடம் வேலை வாங்குவதை அவர் ஓர் உரிமையாகவே கருதினார் போலும். எனவே, அவற்றை நான் கட்டளையாகவே கருதி செயல்பட்டு வந்தேன் - வருகிறேன் - இனியும் வருவேன் என்ற உறுதியை எனது சக தோழர்களுக்கு எம் மக்களுக்கு பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சில நேரங்களில் எனக்கே வியப்பு ஏற்படுவது உண்டு - என் வாழ்க்கை நீட்டத்தைக் கண்டு!

கொலை முயற்சிகளைத் தாண்டி நான் 90 இல் இன்று நிற்கிறேன்!

இதய அறுவை சிகிச்சை நடந்து 31 ஆண்டுகள்; அதன் பிறகு இதய சிகிச்சைகள் மூன்று அல்லது நான்கு முறைகள்; மற்ற மற்ற அறுவைச் சிகிச்சைகள் பலப் பல!

எப்படியோ தாங்கியதோடு அவற்றையெல்லாம் தாண்டி, பணிகள் பாதிக்கப்படாத வகையில் உடல் நலம் ஒத்துழைக்கிறது!

அய்ந்து அல்லது ஆறு முறை எனது உயிருக்குக் குறி வைத்து நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சிகளைக் கடந்துதான் நான் 90 இல் இன்று நிற்கிறேன்!

எனது வாழ்விணையர் தோழர் மோகனாவின் பாதுகாப்பு, மருத்துவ வல்லுநர்களான நண்பர்களின் வழிகாட்டல், மருத்துவ உதவிகள், கழக உறவுகள், கண்ணிமைபோல் காக்கும் சுற்றுப்பயண உதவியாளர்கள், ஓட்டுநர்கள் - நாளும் தரும் களிப்பு ‘டானிக்குகள்’ கொள்கை எதிரிகள் என்னை எப்போதும் ஒரு களப்பணியாற்றிடத் தூண்டிக்கொண்டே இருக்கும் அவர்களது ஆதிக்கக் கண்ணிவெடி மற்றும் உத்திகள் - நம் தலைவர், வழிகாட்டிகள் பெற்றுத் தந்த வெற்றிகளை நாம் மேலும் பெருக்குகிறோமோ இல்லையோ, குறைந்த பட்சம் காப்பாற்றி சேதாரம் - இழப்பு ஏதுமின்றி இயக்கத்தை, நாம் பெற்ற கொள்கைச் சொத்துகளை (Periyar Legacy) காப்பாற்றிப் பெருக்கிட வேண்டும்.

வளமையை விரும்பி பொதுத் தொண்டுக்கு வரவில்லை!

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் தலைமையில் விட்ட பணிமுடிக்க, எடுத்துக் கொண்ட உறுதியை ‘நீர்மேல் எழுத்தாக்காமல்', ‘நிறை கல்வெட்டாக' ஆக்க மூச்சு நிற்கும்வரை, பணி  செய்து ஏற்ற கடமைக்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்ற உறுதி என்னை எப்போதும் இளமையாகவே வைத்துள்ளது. 

வளமையை விரும்பி இந்தப் பொதுத் தொண்டுக்கு வரவில்லை, கொள்கை பரப்புதல் என்ற பணியால் கிட்டும் இளமையை, இனிமையை எண்ணியே இன்றும் உழைத்து, மகிழ்ச்சியை வற்றாது சுரக்கும் வாய்ப்பாக உருவாக்கிக் கொள்கிறேன்!

என்பால் பேரன்பும், பெரும் பாசமும் கொண்ட எண்ணற்ற தோழர்களின், எதையும் எதிர்பார்க்காத உழைப்பு இந்த இளமைக்கு உரம் போட்டு நாளும் வளர்த்து வருகிறது!

“ஓய்வு என்பது ஒரு வகை நோய்!”

“ஓய்வு என்பது ஒரு வகை நோய்” என்று கருதி 95ஆம் ஆண்டு வரை உழைத்த நம் தலைவரை - அறிவாசானை எண்ணிடும்போது, எட்டிப் பார்க்கவே அஞ்சுகிறது - சோம்பல்!

பிரச்சாரம், போராட்டங்கள் என்று பெரியாரைப் பேராயுதமாகக் கொண்டு, இளைஞர்கள் இன்று நம் பட்டறையின் பகுத்தறிவுப் படைக்கலன்களாகி ஆயத்தமாகி நிற்பது, வயதைக் குறைத்து, வாழ்வைப் பெருக்கும் வசீகரத்தைத் தருகிறது!

நாளும் நம் எதிரிகள் புதுப்புது சூழ்ச்சிகளை, கண்ணி வெடிகளைப் புதைத்து நமது லட்சியப் போரினை சிக்கலாக்குகின்றனர்! 

அதிகார பலம், பண பலம், ஊடக பலம் என்பவற்றை எதிர்க்கும் எதிர் நீச்சலை நாம் செய்தே ஆக வேண்டும்; அதற்குரிய மன பலம் நம் தனி பலம்.

அந்த நெருப்பாற்றில் நீந்தி வெற்றி பெற்று, நெஞ்சுயர்த்தி நிற்கிறோம் என்ற நம்பிக்கையுடன் நமது லட்சியப் போர் தொடர்ந்தாக வேண்டிய மிக முக்கியமான காலகட்டம் இது!

இன எதிரிகளின் தந்திர வியூகங்கள், நம் மக்களிடம் அவர்கள்  அள்ளித் தரும் ‘மயக்க பிஸ்கட்டுகள்'பற்றி எச்சரிக்கைப் பிரச்சாரம் சுழன்றடிக்கும், சூறாவளியாக வீச வேண்டும் - நமது தோழர்களின் களப் பணியால்!

2024 இல் வரவிருக்கும் பொதுத் தேர்தல் வெறும் ஓர் அரசியல் தேர்தல் அல்ல; அதை ஒரு பரம்பரை யுத்தமான - சமூகப் போரின் புதிய பரிமாணமாகவே பார்க்க வேண்டும்!

வெறுமையை எதிரிகளுக்குப் 

பரிசாகத் தர நம்மால் முடியும்!

பலூன்போல அதிகாரம், பதவி வாய்ப்பால் எதிரிகள் பலம் பெருகி இருப்பதாகத் தோன்றக்கூடும். குண்டூசி போன்ற நம்மால் அதைக் குத்தி அந்த ‘பலூனை, பல தோற்றத்தை வெடிக்க வைத்து வெறுமையை எதிரிகளுக்குப் பரிசாகத் தர நம்மால் முடியும்!

தன்மானமும், தன்னம்பிக்கையும் நமது உயிரினும் மேலான உணர்வுகள்- உடைமைகள்!

‘‘உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு'' என்ற சாக்கில் சமூக நீதியை விரட்ட, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற ஒட்டகம் நமது சமூகநீதி கூடாரத்திற்குள் தலைநீட்டி, நம்மை வெளியேற்றும் தந்திர வியூகத்தை ஆர்.எஸ்.எஸ். உருவாக்குகிறது!

சமூக நீதி, பாலியல் நீதி, மாநில உரிமை நீதி மற்றும் மனிதநேய நீதி இவற்றிற்கு ஆபத்து தொடர்ந்த நிலையில் உள்ளது - இந்த ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில்.

புதிய தேசியக் கல்விக் கொள்கை என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கை நம்முடைய மாணவர்களது ‘‘கண்களை விற்று சித்திரம் வாங்கச்'' சொல்கிறது!

சமஸ்கிருதம், ஹிந்தி என்பது ஆரியப் பாம்பின் நடமாட்டத்திற்கான கதவுகளை அகலமாகத் திறப்பதற்கான ஏற்பாடுகளாகும். 

தீயணைப்புப் படை, காவல் படை, இராணுவம் போன் றவை எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பதுபோல, உணர்ச்சியுள்ள கொள்கை சிறக்கும்படியான நம் இளைஞர்களை நாம் களத்தில் இறக்கிட வேண்டிய கட்டாயம் உள்ளது.

நமது இலக்கு நோக்கிய இணையற்ற ஆட்சி - 

‘திராவிட மாடல்' ஆட்சி!

நல் வாய்ப்பாக தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சி நமது ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்துள்ளது. நமது இலக்கு நோக்கிய இணையற்ற ஆட்சியாக அது இருப்பதால், இப்பெரும் அறப்போரின் களங்களில் - சட்டப் போராட்டம் போன்றவற்றை - ஆட்சி, சட்ட வியூகங்கள் மூலம் சந்திப்பதோடு, சரித்திரமும் படைக்க ஆட்சி தவறவில்லை.

தாய்க் கழகத்தின் பணி, வாளும், கேடயமுமாக நின்று களப் போரை நடத்திட, நாம் எந்த சுணக்கமும் இன்றி, நமது கடுமையான பிரச்சாரக் களத்தை, போராட்டக் களத்தை வேகமாக முடுக்கி விட வேண்டிய கட்டாயம் நம்மீது வந்து விழுந்துவிட்டது!

தந்தை பெரியார் கூறுகிறார்!

“நம் மக்களை கொள்கைக்காகவே வாழும் மக்களாக ஆக்கவேண்டும்; நம்மைக் கண்டால் ‘கொள்கைத் தீவிர வாதிகள்' (ரகசியமற்ற வெளிப்படை வீரர்களான இவர்கள்) எதற்கும் தயாரானவர்கள் என்ற நடுக்கம் நம் (இன - கொள்கை) எதிரிகளுக்கு ஏற்பட வேண்டும்; இதுதான் ‘தியாகம்' என்பது; இத்தகையவர்களுக்குத்தான் லட்சியவாதிகள் என்று பெயர்!'' இது, 1947 - கடலூர் மாநாட்டில் 76 ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரியார் போதித்த பாடம் நமக்கு - அன்று நான் 13 வயது இளைஞன். இதுதான் நமது ரத்த நாளங்களில் கொள்கை ஓட்டமாக அமைய வேண்டும் தோழர்களே!

எனது  பணி, வரும் 2023 ஆம் ஆண்டு தொடங்கு வதிலிருந்து, நாடு தழுவிய சமூகநீதிப் போராட்டத்திற்கான ஆயத்த பரப்புரைப் பயணமாக அமையும். 

மார்ச்சில் மார்ச்!

2023 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பிரச்சாரப் பயணம் - மார்ச்சில் பெரும் மக்கள் தொடர் போராட்டம்- 1950-களில் தந்தை பெரியார் நடத்தியதைப்போல.

 இளைஞர்களே சுடர் ஏந்த வாருங்கள்! 

மகளிரே உங்கள் பங்களிப்பும் தேவையல்லவா!

நமது வாழும் நாட்கள் வரலாறு படைக்கும் நாட்களாகட்டும்!

பறிக்கப்படும்  உரிமைகளை மீட்டெடுக்கும் பணிக்கான போர்ச் சங்கை முழக்குங்கள்!

அணிவகுத்துப் பணி முடிக்க ஓடோடி வாருங்கள்!

கரோனா மற்றும் பல கொடுந்தொற்றுகள் பல லட்சம் உயிர்களைப் பலி கொண்டன; ஆனால், நம் கொள்கை எதிரிகள் நம் கொள்கைகளைக் கொன்று, தமது ஆதிக்க சாம்ராஜ்ஜியத்தின் கொடியைப் பறக்க விடுவதற்குப் பல்முனைத் தாக்குதல் நடத்த முனைகின்றனர் என்பதைப் புரிந்து,

திராவிடம் காக்க! நம் பணி வெல்லப் புறப்படுவீர்!

எம் பங்கு இதோ என்று வந்து ஆயிரக்கணக்கில் இணையுங்கள்!

மக்கள் சக்திமுன் எந்த அதிகார ஆணவமும் விடை பெற்றுத்தானே ஆகவேண்டும்!

எனவே, மக்களாட்சி காக்க, மாநில உரிமைகளை மீட்டெடுக்க, சாயும் சமூகநீதியை நிலை நிறுத்த, பாயும் ஜாதி வெறி, மதவெறியைப் புதை குழிக்குள் அனுப்ப, கடமையாற்ற ஆயத்தமாகுங்கள்!

‘‘எனது போராட்டத்தின் வெற்றி வேண்டுமானால் தாமதமாகலாம், என்றாலும் நான் ஒருபோதும் தோற்றதில்லை'' என்று முழங்கிய தந்தை பெரியாரின் படை வீரர்களான நாம் - இரட்டைக் குழல்களாக மட்டுமல்ல, பல குழல்களாக இருந்தாலும், ஓர் அணியில் நின்று கொள்கைப் போர் தொடங்கி, அதில் வெற்றி பெறுவோம்!

எனது தலை தாழ்ந்த நன்றி! நன்றி!!

முதுமையால் நோயாளியாகி, அல்லது விபத்தினால் நம் வாழ்வு முடிவதைவிட, கொள்கை, லட்சியப் போரில் ஈடுபட்டு அதற்குரிய விலையாக வாழ்வு முடியுமானால், அந்தக் களச்சாவு யாசித்தும் பெற்றுத் தீர வேண்டிய வாழ்க்கை என்பது எமது உறுதியான எண்ணம் என்று கருதி, உங்கள் அனைவரது அன்பான ஒத்துழைப்புடன் எனது தொடர்பணி தொய்வுக்கு இடமின்றி, இந்தத் தொண்ணூறிலும் தொடரும் என்று உறுதியளித்து, கட்சி, ஜாதி, மதம் என்பவற்றைத் தாண்டி இதுவரை என்னை ஊக்கப்படுத்தும் அத்துணைத் தோழர்களுக்கும்,  எமது அருமைத் தோழர்களுக்கும் - களம் காணத் துடிக்கும் சக போராளிகளுக்கும் எனது தலை தாழ்ந்த நன்றி! நன்றி!!

என்றும் உங்கள் தோழன், தொண்டன்,

கி.வீரமணி

ஆசிரியர், ‘விடுதலை' 

சென்னை

2.12.2022


No comments:

Post a Comment