கழக மணம் வீசிய திருப்பத்தூர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 18, 2022

கழக மணம் வீசிய திருப்பத்தூர்!

திருப்பத்தூரில் (வ.ஆ.) "சுயமரியாதைச் சுடரொளி" மானமிகு ஏ.டி. கோபால் நூற்றாண்டு நிறைவு விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, 'விடுதலை' சந்தா அளிப்பு விழா (இரண்டாம் தவணை) ஆகிய முப்பெரும் விழாக்கள் நேற்று (17.12.2022) வெகு சிறப்புடன் நேர்த்தியாக நடைபெற - திருப்பத்தூர் நகரமோ திராவிடர் கழக மயமாகக் காட்சியளித்தது.

விழாவிற்கு வருகை தந்த ஆசிரியர் கி.வீரமணி அவர்களை ஜோலார்பேட்டை இரயில் நிலையத்தில் மாவட்டக் கழகத்தலைவர் கே.சி. எழிலரசன் தலைமையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் திரண்டு வந்து வரவேற்றனர். தாரை - தப்பட்டை முழங்க ஆசிரியர் அவர்களை வரவேற்று, திருப்பத்தூர் வரை இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் சைக்கிள்களிலும் வழி நெடுக வரவேற்று அழைத்துச் சென்ற காட்சி பொது மக்களிடையே பரபரப்பையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தியது. 

கழகத் தலைவர் தங்கிய விடுதியில் சாரை சாரையாகக் கழகத் தோழர்களும், கழகக் குடும்பத்தினரும் வருகை தந்து சால்வைகள் அளித்தும், கனிகளை அளித்தும் தங்கள் தலைவருக்கு அன்பைப் பொழிந்தனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், சமுதாய அமைப்புகளைச் சார்ந்தவர்களும் கழகத் தலைவரைச் சந்தித்து சால்வைகள் அணிவித்து தங்கள் மரியாதையை வெளிப்படுத்தினர்.

முப்பெரும் விழாவையொட்டி ஊரே விழாக் கோலம் பூண்டிருந்தது.

சுவர் எல்லாம் முப்பெரும் விழாவின் முழக்கங்களாகவும் -  சாலைகளின் இரு பக்கங்களிலும் விழாவுக்கான பதாகைகளாகவும் அலங்கரித்தன.

சாலையின் இரு மருங்கிலும் திராவிடர் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. மற்ற கட்சிகள் சும்மா இருக்குமா? தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் கொடிகளும் காற்றில் அசைந்தாடி, திருப்பத்தூர்  முப்பெரும் விழாவிற்கு வருகை தந்தவர்களை வரவேற்றன. 

அழகுக் குலுங்கும், சித்திரக் கூடமோ என்று வியக்கும் வகையில் மன்றல் சூடும் மணமகள்(ன்) போல முப்பெரும் விழாவின் விழாப் பந்தல் கண்டோரின் கண்களைக் குளிரச் செய்தது. பிரமாண்டமான மேடை! மாநில மாநாட்டையேகூட அறிவித்து நடத்தியிருக்கலாமே என்று நினைக்கத் தோன்றியது.

மாநிலக் கழகப் பொறுப்பாளர்கள், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை செயராமன், கழகச் சொற்பொழிவாளர் பெரியார் செல்வன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் பெ. கலைவாணன், சி.எ. சிற்றரசன், அண்ணா. சரவணன் உள்ளிட்ட தோழர்களும் கடந்த பத்து நாள்களாகக் கண் துஞ்சாது, பசி நோக்காது, கருமமே கண்ணெனக் கொண்டு பாடுபட்டதன் நேர்த்தியை நிச்சயமாகக் காண முடிந்தது.

முப்பெரும் விழா ஏற்புரையில், கழகத் தலைவர் ஆசிரியர் முப்பெரும் விழாவிற்கு வெகுவாகப் பாடுபட்ட தோழர்களுக்குப் பாராட்டு மழை பொழிந்து, அந்த உழைப்புத் தேனீக்களின் மனங் குளிர வைத்தார்.

No comments:

Post a Comment