குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்க காவல் நிலையங்களில் தனிப்படைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்க காவல் நிலையங்களில் தனிப்படைகள்

சென்னை, டிச.12 சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களையும் முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், ரவுடிகளை கண்காணிக்க காவல் நிலையம் தோறும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலை முயற்சி, 2-க்கும் மேற்பட்ட அடிதடிவழக்குகள் மற்றும் பணம் கேட்டு மிரட்டும் குற்றவாளிகள் கண் காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட் டுள்ளனர். மேலும் வாகனத் தணிக்கை மற் றும் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், குற்றப் பின்னணி கொண்ட 685 ரவுடிகளை அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று அவர்களின் நடவடிக்கைகளை காவல்துறையினர் கண்காணிக்கின்றனர். 12 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணைப் பத்திரம் பெறப்பட்டுள்ளது.

இதுதவிர சட்டம், ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்த ரவுடிகள் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே 442 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினின் எச்சரிக்கையை மீறி குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ, பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர  காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.


No comments:

Post a Comment