பா.ஜ.க.வை - மதவாத சக்திகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் முதலமைச்சரைப் பெற்றுள்ளோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 25, 2022

பா.ஜ.க.வை - மதவாத சக்திகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் முதலமைச்சரைப் பெற்றுள்ளோம்!

அவர் பின்னால் நின்று போராடுவதற்குத் தயாராவோம்! 

‘‘திராவிட மாடல்’’ அரசினைப் பாதுகாப்போம்!

நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கைப் 

பிரகடன நாள் கருத்தரங்கில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் கருத்துரை

சென்னை, டிச.25 பா.ஜ.க.வை - மதவாத சக்திகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் முதலமைச்சரைப் பெற்றுள் ளோம்! அவர் பின்னால் நின்று போராடுவதற்குத் தயாரா வோம்!  ‘‘திராவிட மாடல்’’ அரசினைப் பாதுகாப்போம் என்றார் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள்.

நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கப் பிரகடன நாள் கருத்தரங்கம்

கடந்த 20.12.2022  அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நடை பெற்ற ‘‘நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கைப் பிரகடன நாள்’’ கருத்தரங்கத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடக்கவுரையாற்றினார்.

அவரது கருத்துரை வருமாறு:

பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை பிரகடன நாள் கருத்தரங்கத்திற்குத் தலைமை உரை ஆற்றியிருக்கின்ற திராவிடர் வரலாற்று மய்யத்தின் தலைவர் முனைவர் மானமிகு ஜெகதீசன் அவர்களே, வரவேற் புரையாற்றி இருக்கின்ற மய்யத்தின் செயலாளர் மானமிகு பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்களே,

இங்கே சிறப்பு செய்யப்பட்ட, 97 வயது இளைஞராக வருகை தந்து சிறப்பித்த முனைவர் வேதகிரி சண்முக சுந்தரம் அவர்களே,

இங்கே சிறப்புரையாற்றி விடைபெற்றுச் சென்றிருக் கின்ற திட்டக்குழு மேனாள் துணைத் தலைவர் மரியாதைக்குரிய முனைவர் மு.நாகநாதன் அவர்களே,

சிறப்புரையாற்றவிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பு செயலாளர் மரியாதைக் குரிய அண்ணன் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,

இறுதியாக நிறைவுரையாற்றவிருக்கின்ற, பட்டுப் போகாமல் சுயமரியாதை உணர்வைக் காத்துக் கொண்டிருக்கின்ற  நம்முடைய தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களே,

நன்றியுரையாற்றவிருக்கின்ற மய்ய செயலாளர் முனைவர் ரா.சரவணன் அவர்களே,

மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, அண்ணன் அன்புராஜ் அவர்களே,

மற்றும் நிகழ்வில் பங்கேற்று இருக்கின்ற தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்புகலந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கையில், இடம்பெற்றிருக்கின்ற செய்திகள் மிக முக்கியமானவை

1916 இல் வெளியிடப்பட்டு இருக்கின்ற பார்ப்பனரல்லா தார் கொள்கை அறிக்கையில், இடம்பெற்றிருக்கின்ற செய்திகள் மிக முக்கியமானவை. அதனால்தான், இன் றைக்கும் இந்தப் பிரகடனத்தை நினைவுகூரும் வகை யில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அந்தப் பிரகடனத்தில் இடம்பெற்றிருக்கின்ற வரிகளில், 1892 ஆம் ஆண்டு முதல் 1904 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற 16 பேரில், 15 பேர் பார்ப்பனர்கள்.  அது நூற்றுக்கு 95 சதவிகிதம். 

அதேபோல, அதற்கு முன்பாக 20 ஆண்டுகளில், மைசூர் மாகாணத்தில், மைசூர் சிவில் சர்வீசுக்கென வைக்கப்பட்ட போட்டி தேர்வுகளில், பார்ப்பனர்கள் 85 சதவிகித இடங்களைக் கைப்பற்றினர்.

சென்னை மாகாணத்தில், உதவிப் பொறியாளர்கள் பணிக்கு எடுக்கப்பட்டபொழுது, அதே 20 ஆண்டு காலத்தில்,  பார்ப்பனர் 17 பேராகவும், பார்ப்பனரல்லாதார் 4 பேராகவும் எடுக்கப்பட்டனர். கணக்குத் தணிக்கைத் துறையில் நடைபெற்ற தேர்வுகளிலும் இதே மாதிரி முடிவே இருந்தது. சென்னை மாகாணத்தில் உதவி ஆட்சியர் 140 இடங்களில், பார்ப்பனருக்கு 77 இடங்கள். பார்ப்பனரல்லாதாருக்கு 30 இடங்கள். ஏனைய இடங்கள் முகமதியர், இந்திய கிறிஸ்துவர், அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர் முதலானவர்களுக்குக் கிடைத்தன.

இப்படி இந்தப் பட்டியல் செல்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் -மறுமலர்ச்சி ஏற்பட்டது!

இந்தப் பட்டியல், இப்படி முழுமையாக பார்ப்பனர் களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டபொழுது, ஆக்கிர மிக்கப்பட்டபொழுது இந்தக் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. அதன் காரணமாகத்தான், நம் முடைய தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டு, மறு மலர்ச்சி ஏற்பட்டு, வட இந்தியா போல அடிமைச் சிந்தனை இல்லாமல், நாம் இன்றைக்கு இருக்கின்றோம்.

அந்த வேளையில், இன்னும் ஏன் இதை நினைவுகூர வேண்டும் என்கிற சிந்தனை இங்கே வந்திருப்பவர் களுக்கு எழ வாய்ப்பில்லை; காரணம், இந்தக் கொள் கையில் ஊறியவர்கள்தான் இங்கே வந்திருக்கின்றோம்.

சமூக ஊடகங்களின்மூலமாக இந்த நிகழ்ச்சியைக் காணுகின்றவர்களுக்குச் சொல்லவேண்டிய செய்தி யாகத்தான் நான் இந்த செய்தியை சொல்ல விரும்பு கின்றேன்.

மேற்சொன்ன மாற்றங்கள் எல்லாம் ஏற்பட்டு, இப் பொழுது அப்படிப்பட்ட நிலை - 1920 ஆம் ஆண்டிற்கு முன்பாக இருந்த நிலை இல்லை என்று இருந்தாலும், கடந்த காலத்தில் நாம் கண்ட காட்சியை சிறிது நினைவுகூரவேண்டும்.

மிகுந்த சக்தி வாய்ந்த துறை என்று காவல்துறையை நான் சொல்வேன். அதேபோன்று மிகுந்த சக்தியாக உள்ள இன்னொரு துறை என்று சொன்னால், பேனா வைக் கையில் வைத்திருக்கின்ற ஊடகத் துறை என்று சொல்வேன்.

ஊடகத் துறை பெண்மணியை இழிவாகப் பேசியவரை கைது செய்ய அஞ்சிய காவல்துறை!

அந்த ஊடகத் துறையை ஒரு சல்லிக்காசுக்கும் பெறாத ஒருவன், அதிலிருக்கும் ஒரு பெண்ணை இழிவாகப் பேசுகிறான். அவன்மீது வழக்குத் தொடுக் கப்படுகிறது. அந்த வழக்குத் தொடுத்த பிறகும், அவனை கைது செய்வதற்குக் காவல்துறை அஞ்சி நின்றது; இந்த நிகழ்வு 3, 4 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வு இது.

எஸ்.வி.சேகர் என்கிற ஒருவர், சினிமாவில் நடிப்பு என்கிற பெயரில் இம்சை கொடுத்த ஒரு மனிதன், ஊடகத் துறையில் இருக்கின்ற ஒரு பெண்ணை மிகத் தவறாகப் பேசிய பிறகு, அதற்காக வழக்குத் தொடுக் கப்பட்ட பிறகு, அவரை கைது செய்வதற்குத் துணிச்சல் இல்லாமல் காவல்துறை இருந்தது.

காவல்துறை எப்படிப்பட்ட காவல்துறை?

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களை, நள்ளிரவு நேரத்தில் தரதரவென்று இழுத்து வந்த காவல்துறை. 

ஆனால், நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்தால், ஒரே ஒரு நபர்கூட அவர் வசிக்கின்ற தெருவிலிருந்து குரல் கொடுக்க வரமாட்டார்கள். அப்படியிருந்தும் அவரைக் கைது செய்யாமல் இருந்ததற்குக் காரணம் என்ன?

ஒரே ஒரு நபர் உச்சக்கட்ட அதிகாரத்தில் இருந்த காரணத்தினால்; அந்த ஒரே ஒரு நபரும் ஒரு பார்ப்பனராக இருந்த காரணத்தினால், எஸ்.வி.சேகர் என்ற பார்ப்பனர்மீது நடவடிக்கை எடுப்பதற்குக் காவல்துறை அன்றைக்குத் தயங்கி நின்றது.

ஏன், பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கையை இன்றைக்கும் படிக்கவேண்டும்?

இவ்வளவு மாற்றங்களுக்குப் பிறகும், நாம் ஏன், பார்ப் பனரல்லாதார் கொள்கை அறிக்கையை இன்றைக்கும் படிக்கவேண்டும்? அதை இன்றைக்கும் உயிர்ப்பிப்பிதற் கான சூழலில் நாம் இருக்கிறோம் என்பதற்கு மிகச் சிறந்த ஓர் உதாரணமாக இந்த நிகழ்வை நான் கருதுகிறேன்.

எப்படிப்பட்ட சூழலுக்கு இன்றைக்கு இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது என்பதை, அதிலும் குறிப்பாக பாசிச பா.ஜ.க. அரசு ஒன்றியத்தில் அமைந்திருக்கின்ற சூழலில், ஹிந்துத்துவாவாதிகளின் கைகளில், ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கைகளில் அதிகாரம் மாட்டிக்கொண்டு, மெல்ல மெல்ல எதை நோக்கி நகர்த்திக் கொண்டிருக் கின்றார்கள் என்பதை நாம் உணர்வோம்.

எனவே, இந்த சூழலில், நாம் தொடர்ந்து போராடவேண்டிய  நிலையில்தான் இருக்கிறோம். நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்றாலும், அந்த வெற்றியைத் தொடர்ந்து தக்க வைப்பதற்குப் போராடவேண்டிய சூழல் இருப்பதினால்தான், இந்தக் கருத்தரங்கு - இந்த நிகழ்வு மிக அவசியமானதாக இன்றைக்கு இருக்கிறது.

நீட் தேர்வை முதன்முதலில் எதிர்த்தது திராவிடர் கழகமும் - திராவிட முன்னேற்றக் கழகமும்தான்!

நீட் தேர்வு வந்தபொழுது, தலைவர் கலைஞர் தலை மையில் திராவிட முன்னேற்றக் கழகமும், ஆசிரியர் அய்யா அவர்களின் தலைமையில், திராவிடர் கழகமும் மிகக் கடுமையாக எதிர்த்து களத்தில் நின்ற இயக்கங்கள்.

அப்படி களத்தில் நிற்கின்றபொழுது, திராவிடர் கழ கத்தின் சார்பாக அரியலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு நான் தலைமையேற்று பங்கேற்ற நிகழ்வில்தான், அனிதா அவர்கள் முதன்முதலில் போராட்டக் களத்திற்கு வெளியில் வந்தார்.

நீட் தேர்வினுடைய மிகக் கொடுமையான நிலைகள் வெளி உலகிற்குத் தெரிந்தது!

அப்பொழுதுதான் நீட் தேர்வினுடைய மிகக் கொடுமையான நிலைகள் வெளி உலகிற்குத் தெரிய ஆரம்பித்தன.

அதுவரையில், நீட் தேர்வில் குறைந்த மதிப் பெண்களை நம்முடைய பிள்ளைகள் எடுத்ததினால்தான், மருத்துவப் படிப்பிற்குச் செல்வதற்கான வாய்ப்பு குறைகிறது என்கிற எண்ணம் இருந்தது.

ஆனால், அந்தப் போராட்டத்தின்மூலமாக அனிதா வெளிவந்த பிறகுதான், பனிரெண்டாம் வகுப்பில் 1200 மதிப்பெண்ணிற்கு 1176 மதிப்பெண் பெற்ற அனிதா, நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத ஒரு சூழல் இருக்கிறது.

கிராமப்புறத்தில் உள்ள பெண் என்கிற காரணத் தினால், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கவும், பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கவும் வசதி இல்லாத காரணத்தினால், நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத நிலை இருக்கிறது என்று தெரிந்த பிறகு, அந்தப் போராட்டம் வலுப்பெற்றது.

அந்தப் போராட்டம் வலுப் பெற்ற பிறகு, பாதிக் கப்பட்ட  நம்முடைய மாணவச் செல்வங்களையெல்லாம் சென்னைக்கு அழைத்து வந்து, பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து, அதன்மூலமாக நீட் தேர்வின் கொடூரத்தின் வீரியத்தை வெளிப்படுத்திய பிறகு, போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்தது.

திராவிடர் கழகம் தொடங்கிய போராட்டம்தான், நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டமாக மிகப்பெரிய அளவிற்கு வெடித்தது.

அதற்குப் பிறகு ஒன்றிய அமைச்சர், அன்றைக்கு இருந்த மாநில அமைச்சர்கள் எல்லாம் கொடுத்த தவறான வழிகாட்டுதலில், நீதிமன்றம்மூலமாகத்தான் இதற்கொரு விடை கிடைக்கும் என்கிற எண்ணத்தில், நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது.

அப்படி அனிதா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தபொழுது,  உச்சநீதிமன்றம் அனிதாவினுடைய குரலைக் கேட்பதற்குக்கூட ஒரு நிமிடத்தை ஒதுக்கவில்லை.

அனிதா, தன்னுடைய இன்னுயிரை மாய்த்துக் கொள்ளக்கூடிய சூழல்!

நீட் தேர்வின் பாதகத்தை எடுத்து வைப்பதற்கு, அங்கே இடம் கொடுக்கவில்லை. அந்த வழக்கையே தள்ளி வைத்துவிட்டு, நீட் தேர்வு அடிப்படையில் மருத் துவ சேர்க்கையைத் தொடங்குங்கள், வழக்கைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னபொழுதுதான், மாணவி அனிதா மனம் உடைந்து போய், தன்னுடைய இன்னுயிரை மாய்த்துக் கொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டது.

அதற்குக் காரணமாக இருந்த உச்சநீதிமன்றம் யாரு டைய கைப்பிடியில் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

‘‘உச்சிக்குடுமி மன்றம், உச்சிக்குடுமி மன்றம்‘‘  என்று நம்முடைய ஆசிரியர் அவர்கள் பல முறை சொல்லியிருக்கிறார்.

நீட் தேர்வினால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு எதிரான நிலையைத்தான் நீதிமன்றம் மறுபடியும் உறுதிபடுத்தியது.

அதன் காரணமாகத்தான் இந்த அறிக்கையை நாம் தொடர்ந்து கையிலே தூக்கிப் பிடித்திருக்கவேண்டிய சூழல் இன்றைக்கும் இருக்கிறது.

தேசியக் கல்விக் கொள்கையைக் கொண்டுவருவதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்

அதுமட்டுமல்ல, இன்றைக்கு ஒன்றிய அரசு எதன்மீதெல்லாம் தாக்குதல் நடத்துகிறது தெரியுமா? நம்முடைய கல்விக் கொள்கையை முற்றிலுமாகத் துடைத்தெறிந்துவிட்டு, தேசியக் கல்விக் கொள்கையைக் கொண்டுவருவதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி ஒரு சூழல் வந்தால், மீண்டும் ராஜாஜி கொண்டு வந்த அந்தக் குலக்கல்விதான் இங்கே நடைமுறைக்கு வரும் என்ற சூழல் இருக்கிறது.

இப்படி எந்த நிலையில் பார்த்தாலும், மீண்டும் மீண்டும் பார்ப்பனீயம் தலைதூக்கி, நம்மையெல்லாம் அடிமைப்படுத்துவதற்கு, நம்மையெல்லாம் மீண்டும் பழைய சூழலுக்குக் கொண்டு செல்லுவதற்குத் துடித்துக் கொண்டிருக்கின்ற வேளையில், நாம் இந்தப் பார்ப் பனரல்லாதார் கொள்கை அறிக்கையை மனதில் தாங்கி, தொடர்ந்து போராடவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என்பதுதான் இந்த நிகழ்வின்மூலமாக நாம் எடுத்துக் கொள்ளவேண்டிய செய்தி - நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதி!

அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லுகின்ற பணி

அந்த வகையில், இந்த நிகழ்வு என்பது மிக அவசிய மான நிகழ்வு. இங்கே மேடையில் அமர்ந் திருப்பவர்கள் எல்லோரும் மூத்தவர்கள்; இந்த மேடையில் என்னை ஏன் அமர வைத்தார்கள் என்கிற ஒரு சந்தேகம் வந்தது. பிறகுதான், தொடக்கவுரை என்று போட்ட பிறகுதான், இது தொடக்கவுரை அல்ல - இதைத் தொடங்கி, அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லுகின்ற பணியை எளிதாக செய்யவேண்டும் என்கிற காரணத் திற்காகத்தான் என்று தெரிந்தது.

ஆசிரியர் அவர்கள் இங்கே வந்து அமர்ந்தவுடன் என்னிடம் சொன்னார்கள், பல செய்திகளை சமூக ஊடகங்களின்மூலமாகக் கொண்டு செல்லவேண்டிய பணியும், கடமையும் உங்களுக்கு இருக்கிறது; அந்தப் பணியைத் தொடர்ந்து செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

வருங்காலத் தலைமுறையினரைக் காக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு

அதற்காகத்தான் இந்த மேடையில் நான் அமர வைக்கப்பட்டு  இருக்கிறேன் என்ற அந்த செய்தியை மனதில் தாங்கி, நான் பணியாற்றுவேன் என்கிற உறுதி யளித்து, அதுவே இங்கே வந்திருக்கின்ற நம் ஒவ்வொரு வரின் கடமையாகும். வருங்காலத் தலைமுறையினரைக் காக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பை நம்முடைய ஆசிரியர் அவர்கள் தன் தோள்மீது சுமந்து இங்கே இருக்கிறார்கள். அவர்களுக்குத் துணையாக நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள், ‘‘திராவிட மாடல்’’ ஆட்சி, ‘‘திராவிட மாடல்’’ ஆட்சி என்று எங்கே வாய்ப்புக் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் மிக அழுத்தமாகப் பதிவு செய்துகொண்டிருக்கின்றார்.

திராவிடத்தை ஒருவனும் தொட்டுப்பார்க்கக்கூட முடியாது!

அப்படி பதிவு செய்வது மட்டுமல்ல, யாராவது திராவிடத்தை வீழ்த்திவிடுவோம் என்று எங்கேயாவது  செய்தி வந்தால், திராவிடத்தை ஒருவனும் தொட்டுப் பார்க்கக் கூட முடியாது என்று ஒங்கி ஒலிக்கின்ற ஒரு தைரியமுள்ள முதலமைச்சராக இருக்கிறார்.

பா.ஜ.க.வை எதிர்த்து, பாசிச சக்திகளை எதிர்த்து, ஹிந்துத்துவாவை எதிர்த்து, ஆர்.எஸ்.எசை எதிர்த்து இன்றைக்கு இந்தியாவில் கொள்கை ரீதியாக எதிர்த்துக் குரல் கொடுக்கின்ற ஒரு முதலமைச்சராக, ஒரு மாநிலக் கட்சியின் தலைவராக அவர் இருக்கின்ற வேளையில், நாம் அவர்கள் பின்னால் நின்று போராடுவதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டி, விரும்பி அழைக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் தொடக்கவுரை யாற்றினார்.

 

No comments:

Post a Comment