கள்ளக்குறிச்சி, டிச.20- தமிழ்நாடு பொதுப்பணித்துறை (கட்டடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட நூலகத் துறையின் சார்பில், சென்னை பைபாஸ் திடலில் கல்லை புத்தகத்திருவிழாவினை கடந்த 15.12.2022 அன்று திறந்துவைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன், ரிஷிவந் தியம் சட்டமன்ற உறுப்பினர் க.கார்த்திகேயன், உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுப்பணித்துறை (கட்டடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:
கண்ணுடையார் என்போர் கற்றோர், முகத்தில் இரண்டு புண்ணுடையார் கல்லாதவர் என்று திருக்குறள் சொல்கிறது. இதற்கு காரணம் புத்தகம் படிக்கும் பழக்கத்தினால் தான் வாழ்வில் நாம் மேலும் மேலும் வளர்ச்சியடைய முடியும். நமது பொருளாதாரம் வளர்ச்சி அடைய முடியும். பல்வேறு நிலைகளிலே சமநிலை என்ற பழக்கத்தை சமுதாயத்தில் கொண்டுவர முடியும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மேனாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய மூன்று தலைவர்களும் படி, படி என்று சொன்னார்கள். படித்தால் தான் சமுதாயத்தில் ஒரு சமநிலையை உருவாக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.
பொது அறிவு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை புத்தகங் களை படிப்பதன் மூலமாக மட்டுமே நாம் பெற முடியும் என ஜேசப் டேரன்ஸ் என்ற மனிதவள ஆலோசகர் தெரிவித்துள் ளார். 1949-ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டின் தலைநகரில் தான் முதல்முதலில் இந்த புத்தகத் திருவிழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக லண்டன் நகரிலே தொடர்ந்து புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
1972 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே டில்லியில் தான் முதன்முதலில் புத்தகத்திருவிழா உருவாக்கப்பட்டது. 28 மாநிலத்திற்கும் மேல் உள்ள இந்தியாவில் புத்தகத் திருவிழாவில் 3 ஆம் இடம் பிடித்திருப்பது கல்கத்தா. 1977 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி சென்னை புத்தகத் திருவிழா சென்னையில் முதல்முதலில் தொடங்கப்பட்டது. இதனை மெட்ராஸ் புக்பேர், சென்னை புத்தகக் கண்காட்சி எனவும் கூறுவார்கள்.
காலப்போக்கிலே புத்தகத்தின் பதிப்பாளர்கள், விற்பனை யாளர்கள், புத்தகம் எழுதுபவர்கள் ஒருங்கிணைந்து நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என நினைத்து, அரசுக்கு உறுதுணையாக இருந்து இப்புத்தகத்திருவிழாவினை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஒருகாலத்தில் சங்கமம் விழாவையொட்டி இப்புத்தகத் திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் இப்புத்தகத் திருவிழா நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மக்களின் மன நிலையை புரிந்துகொண்டு, நானும் இவர்களில் ஒருவன் என்ற முறையில் இந்த புத்தகத் திருவிழாவை பார்த்து புத்துணர்ச்சி அடைகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நடத் துவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.12 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
தமிழ்நாடு பாடநூல் கழக துணை இயக்குநர், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஒருங்கிணைந்து இவ்விழா நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் இப்புத்தகத் திருவிழாவில் பங்கேற்று, புத்தகங்களை வாங்கி வாழ்வில் வெற்றியடைய வேண்டும்.
- இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு உரையாற்றினார்.

No comments:
Post a Comment