நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கைப் பிரகடன நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் எழுச்சியுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கைப் பிரகடன நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

 சமூக அநீதி இருந்ததால்தான் ஒரு நூற்றாண்டுக்குமுன் நீதிக்கட்சி என்ற பார்ப்பனரல்லாதார் கட்சி தோன்றியது!

தோழர்களே, நீதிக்கட்சி தலைவர்களின் நூல்களைப் படியுங்கள் - தந்தை பெரியாரைப் பேராயுதமாகக் கொண்டு உரிமைகளை மீட்டெடுங்கள்!

சென்னை, டிச.21 சமூக அநீதி இருந்ததால்தான் ஒரு நூற்றாண்டுக்குமுன் நீதிக்கட்சி என்ற பார்ப்பனரல்லாதார் கட்சி தோன்றியது! தோழர்களே, நீதிக்கட்சி தலைவர் களின் நூல்களைப் படியுங்கள் - தந்தை பெரியாரைப் பேராயுதமாகக் கொண்டு உரிமைகளை மீட்டெடுங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கப் பிரகடன நாள் கருத்தரங்கம்

நேற்று (20.12.2022)  மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நடைபெற்ற ‘‘நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கைப் பிரகடன நாள்’’ கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருத்துரையாற்றினார்.

அவரது கருத்துரை வருமாறு:

மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக் கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கைப் பிரகடன நாள் கருத்தரங்கம் என்ற இந்த சிறப்புமிகு, கருத்துமிகு கருத்தரங்கத்தின் தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் மேனாள் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் அய்யா ஜெகதீசன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் மிகச் சிறப்பான வகையில், 97 வயதானாலும் அருமையான ஆற்றலுக்கான சிந்தனை யோடு, சிந்தனைத் தடுமாற்றம் இல்லாமல், ஒரு பெரிய பல்கலைக் கழகத்திற்குத் தலைமை தாங்குவதற்கு முன், பல அறிஞர்களை உருவாக்கிய மாபெரும் பேராசிரியர் - 97 வயதானாலும் தடுமாற்றம் இல்லாமல் தன்னுடைய பணியை செய்துகொண்டு, என்றைக்கும் நமக்கெல்லாம் பேராதரவாக இருக்கக்கூடிய - இங்கு உரையாற்றி வாழ்த்திச் சென்ற அருமை அய்யா பேராசிரியர் முனைவர் வேதகிரி சண்முகசுந்தரனார் அவர்களே,

அன்னை தெரசா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், எத்திராஜ் கல்லூரியின் மேனாள் முதல்வராக இருந்து - மேனாள் துணைவேந்தராக இருந்து முத்திரைப் பதித்த அவருடைய இணையர் அம்மா யசோதா சண்முகசுந்தரனார் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற்றி விடைபெற்று சென்றிருக்கக் கூடிய மாநில திட்டக் குழுவின் மேனாள் துணைத் தலைவர் பேராசிரியர் நாகநாதன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் சிறப்பான வகையில், அனை வரையும் வரவேற்று உரையாற்றிய திராவிடர் வரலாற்று மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் கருணானந்தன் அவர்களே,

எனக்குமுன் உரையாற்றிய நம்முடைய கொள்கை வீரர் - நாடாளுமன்றத்தில் இருந்தாலும், மக்கள் மன்றத் தில் இருந்தாலும் எப்பொழுதும் கொள்கையைத் தவறா மல் எடுத்துச் சொல்லக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பு செயலாளர் திருமிகு தோழர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் சிறப்பாகக் கலந்துகொள்கின்ற கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, பொருளாளர் குமரேசன் அவர்களே, இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய அருமை நண்பர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

எல்லாவற்றிற்கும் மேலாக தொடக்க உரை என் றாலும், இளைஞர்கள் மத்தியில் இன்றைக்கு ஒரு நல்ல தொடக்கமாக, இளைஞர்களால், இளைய தலைமுறையினரால் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த நம் குடும்பத்தைச் சார்ந்த, கொள்கைக் குடும்பத்தைச் சார்ந்த கொள்கை யாளர் அருமை மாண்புமிகு மானமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களே,

அவர் ஒரு ஜல்லிக்கட்டு வீரர். அவர்களுக்கு என்ன வேலை என்றால், முரட்டுக் காளைகளை அடக்குவது தான். அவரை சரியாக அடையாளம் கண்டுதான், நம்முடைய முதலமைச்சர் அவர்கள், போக்குவரத்துத் துறையைக் கொடுத்திருக்கிறார். போக்குவரத்துத் துறை என்பது முரட்டுக்காளையாக இருக்கக் கூடியது; திடீரென்று படுத்துக் கொள்ளும்; திடீரென்று பாயும், அதில் பல பேர் தோற்றுப் போயிருக்கிறார்கள்; ஆனால், குறுகிய காலத்தில் வெற்றியோடு அமர்ந்து நம்பிக்கையைப் பதித்து, முதலமைச்சருடைய பாராட் டைப் பெற்றார் என்றால், அவர் ‘‘நம்முடைய பிள்ளை’’ என்று நாங்கள் பெருமையோடு கருதக்கூடிய அமைச்சர் சிவசங்கர் அவர்களே,

இங்கே சிறப்பாகக் கூடியிருக்கின்ற அருமைத் தோழர்களே, பெரியோர்களே, நண்பர்களே!

புத்தகங்களை நீங்கள் வாசிக்கவேண்டும் என்று சொல்வதைவிட, சுவாசிக்கவேண்டும்!

இங்கே அருமையான புத்தகங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதைக் கேட்டுக் கொண்டிருக்கின்ற இளைஞர்கள், இந்தப் புத்தகங்களை நீங்கள் வாசிக்க வேண்டும் என்று சொல்வதைவிட, சுவாசிக்கவேண்டும் - உள் வாங்கவேண்டும்; இந்தக் கருத்தியல்கள் மாமருந்துபோல. நம்முடைய நோய்த் தடுப்பு என்பது இருக்கிறதே - நம்முடைய உடலை நோய்த் தாக்காமல் இருப்பதற்கான எதிர்ப்புச் சக்தி இருக்கிறதே - அதை ‘இம்மியூனிட்டி’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்; அந்த எதிர்ப்பாற்றலைப் பெறவேண்டும். அந்த எதிர்ப்பு ஆற்றல் வரவேண்டுமானால் நண்பர்களே, இதுபோன்ற நூல்களை நீங்கள் படித்தால்தான் ‘நூல்’களை  எதிர்க்கக் கூடிய வாய்ப்பு அந்த ‘நூல்’களால் ஏற்படுகின்ற தொல் லைகளை, நூல்களாலேயே நீங்கள் புரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பைத்தான் - நீதிக்கட்சியைப்பற்றி வெளியிட்டு இருக்கிறோம்.

ஏனென்றால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நடைபெற்றது இது. - நேற்று நடந்ததை இன்றைக்கு மறந்துவிடக் கூடிய நாம் - நூறாண்டுக்கு முன்னால் ஏன் தோற்றுவிக்கப்பட்டது? எப்படிப்பட்ட சூழ்நிலையில் தோற்றுவிக்கப்பட்டது? இன்றைக்கு  அதிலேயிருந்து எப்படி மாறியிருக்கிறது? அதை எப்படி பறிக்க முயலுகிறார்கள்?

இவை அத்தனையையும் தெரிந்துகொள்ளவேண்டு மானால், 1916 ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவிற்கு வெளியிட்ட இந்தப் பார்ப்பனரல்லாதார் அறிக்கை  - கொள்கைப் பிரகடனம்!

விக்டோரியா பப்ளிக் ஹால்!

தோழர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும். விக்டோரியா பப்ளிக் ஹால் என்று மாநகராட்சி அலுவலகம்  - ரிப்பன் பில்டிங் பக்கத்தில் இருக்கிற பழைமை வாய்ந்த கட்டடம்தான் - அதை வி.பி. ஹால் என்று பின்னாளில் சுருக்கினார்கள்.

அந்த மன்றத்தில்தான், தியாகராயர் ஒரு நூற் றாண்டுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கை - அதை இரு மொழிகளிலும் அச்சடித்து, இன்றைக்கும் அது தேவை என்பதற்காக - எப்பொழுதெல்லாம் நோய் வருகிறதோ, அப்பொழுதெல்லாம் மருந்து தேவை; மருத்துவர்கள் தேவை. நோய் எப்பொழுது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது; எந்த வடிவத்தில் வரும் என்று சொல்ல முடியாது.

அணையாத சுடர் - 

தொடர்ந்து செல்லவேண்டிய தொடர்!

அதே இடத்தில், இன்றைக்குத் தியாகராயர் சிலைக்கு மாலையில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தைச் சார்ந்த நம்முடைய தோழர்களும், உணர்வாளர்களும், வணக்கத்திற்கு சென்னை நகர மேயர் அம்மையார் பிரியா அவர்களின் தலைமையில் நாங்கள் எல்லாம் சென்று, நன்றியுணர்ச்சியோடு அவருடைய சிலைக்கு மாலையும் போட்டு, கொள்கைப் பிரகடன அறிக்கை யினை மீண்டும் பதிப்பித்திருக்கிறோம். இளைய தலை முறை அதைத் தாங்கிச் செல்லும்; இந்தச் சுடர் அணை யாத சுடர் - இந்தச் சுடர் தொடர்ந்து செல்லவேண்டிய தொடர் என்பதைக் காட்டுவதற்காக, அங்கேயே அதை வெளியிட்டோம்.

அதுதான் இன்றைக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை அளிக்கிறது. அந்தக் கட்டடமும் பாதுகாக்கப்பட்டு இருக் கிறது; அதைப் பாதுகாக்கக் கூடிய ஆட்சி, நம்மையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் மிகவும் சிறப்பானது.

நீதிக்கட்சி என்பதுகூட 

அதிகாரப்பூர்வமான பெயர் அல்ல!

நீதிக்கட்சி என்பதுகூட அதிகாரப்பூர்வமான பெயர் அல்ல. அதனுடைய அதிகாரப்பூர்வமான பெயர் ‘‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’’ என்பதுதான்.

சுயமரியாதை இயக்கம் என்பதைக்கூட ‘‘சு’’னா ‘‘மா’’னா என்று அந்தக் காலத்தில் சுருக்கிச் சொல்வார்கள். அதைவிட இன்னும் சுருக்கமாக, கொள்கையைக் குறிப்பிட்டுச் சொல்கிறவர் இருப்பார் பாருங்கள்; இன எதிரியாக இருந்தாலும், நம்மை எப்படி அறிமுகப்படுத்து வான் என்றால், ‘‘ஊருக்கு ஒருத்தன், ரெண்டு பேர் இருப்பான்; அவன் யார் தெரியுமா? அதான்யா, சாமி இல்லைன்னு சொல்ற கட்சிக்காரன்'' என்பான்.

கொள்கையை வைத்து யாரையும் தாக்குவதில்லை; ஆளை வைத்துத் தாக்குகிறான்!

அதைக் கேட்டு நாங்கள் ஆத்திரப்பட்டதில்லை. அதற்கு மாறாக பூரிப்புதான் ஏற்படும். காரணம் என்னவென்றால், கொள்கையை வைத்து சொல்றான் பாருங்க அதனால்தான். கொள்கையை வைத்து யாரை யும் தாக்குவதில்லை; ஆளை வைத்துத் தாக்குகிறான்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் நண்பர்களே, இன் றைக்கு இந்த அறிக்கை ஏன் தேவை? என்பதை நம்முடைய டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் சொன்னார்கள்; பேராசிரியர் நாகநாதன் சொன்னார்கள்; மிக அருமையாக நம்முடைய அமைச்சர் சிவசங்கர் அவர்கள் சொன்னார்கள்;  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் அவர்கள் சொன்னார்கள்.

நீதி எப்பொழுது கேட்போம்? 

இப்படி எல்லோருமே சொன்னதினுடைய அடிப் படையில் நீதிக்கட்சி, ‘ஜஸ்டீஸ்' என்ற பத்திரிகையை தொடங்கியது.

நீதி எப்பொழுது கேட்போம்? இந்திய அரசமைப்புச் சட்டம் 46 ஆவது கூறில் இதற்குப் பதில் இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் யார் ஊர்வலம் நடத்தினாலும், ‘‘எங்களுக்கு நீதி வேண்டும்'' என்று கேட்கிறார்கள்.

அந்தக் குரல் எப்பொழுது எழும்? அதைத்தான் எனக்கு முன் உரையாற்றிய அருமைச் சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் சொன்னார்கள்.

‘‘எங்கே அநீதி இருக்கிறதோ, அந்த அநீதியிலிருந்து வெளியில் வருவதற்கு நீதி தேவை’’ என்று கேட்போம்.

அப்படித்தான் கேட்டார்கள்.

இன்னொரு கருத்தை மிக அழகாகச் சொன்னார் அவர்.

யாரையும் தாக்குவதில்லை நாங்கள். 90 விழுக்காடு நாங்கள் இருக்கிறோம்; 90 விழுக்காடு இருப்பவர்கள் படிக்கவேண்டாமா? அவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்கள் இந்த நாட்டுக் குடிமகன்கள் இல்லையா? இன்னுங்கேட்டால், அவர்களைவிட உழைப்பாளிகள் யார் இருக்கிறார்கள்? என்கிற கருத்தையெல்லாம் எடுத்துச் சொன்னார்.

ஆனால், இந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லாமல் இல்லை; முதலிலேயே சொல்லிவிட்டார்கள், அதுதான் மனுதர்மம்.

அந்த மனுதர்மத்தில் தெளிவாக என்ன சொல்லி யிருக்கிறார்கள் - ‘‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வியைக் கொடுக்கக் கூடாது.’’

கொடுக்காதே என்று சொல்வதற்கு ஒரு ஜாதி. அதற்குத் தண்டனை உண்டு என்கிறான்.

புரட்சியாளர் அம்பேத்கரின் கோபம்!

இதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அழகாக எடுத்து அவருடைய நூலில், கோபத்தோடு ஆத்திரம் கொப்பளிக்கச் சொன்னார்.

‘‘நானும் உலகத்தில் எத்தனையோ வரலாற்றைப் படித்திருக்கின்றேன்;  எத்தனையோ மதங்களைப் பார்த் திருக்கிறேன்; மதத் தத்துவ நூல்களைப் படித்திருக்கிறேன். ஆனால், இந்த நாட்டில் எவ்வளவு பெரிய சமூகக் கொடுமை இருக்கிறது’’ என்பதைப்பற்றி சொல்கிறார்,

படிப்பதையே குற்றமாக்குகிறார்கள்; படிக்காதே என்கிறான்.

அவன் படிப்பதைவிட, உழைக்கின்ற மக்களாகிய நாம், 90 விழுக்காடாக உள்ள மக்கள் படிக்கக் கூடாது; மானத்தோடு வாழக்கூடாது; மரியாதையோடு உலவக் கூடாது. அவர்கள் உழைப்பை மட்டும் கொடுக்க வேண்டும்.

மீறி அவன் உழைத்துச் சம்பாதித்தாலும்கூட, மனு தர்மத்தினுடைய அடிப்படையில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது?

‘‘பிராமணன், தொழிலாளிகளுக்குக் கூலி கொடுத் தேனும், கூலி கொடுக்காமலேயும் வேலை வாங்கலாம். அவன் அதிகமாகச் சம்பாதிக்கக் கூடாது; மீறி சம்பாதித்தால், அந்தப் பொருள் அவனுக்குரியதல்ல.’’

இவையெல்லாம் மனுதர்மத்தினுடைய வாசகம். 

2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் ஏமாந்தால்....

மனுதர்மம் இன்றைக்கும் இருக்கிறது; 2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் ஏமாந்தால்,  அரசமைப்புச் சட்டம் கிடையாது - மனு தர்மம்தான் அரசமைப்புச் சட்டம் என்கிற கொடுமை வரும்.

ஆகவேதான், மீண்டும் தியாகராயருடைய பார்ப்ப னரல்லாதார் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறோம்.

அய்யா தந்தை பெரியார் அவருடைய வாழ்நாளில், இப்படி ஒரு கருத்தை வருத்தப்பட்டு சொன்னது இல்லை.

அவருடைய வாழ்நாள் தொண்டன் என்ற முறையிலே, வாழ்நாள் மாணாக்கன் என்ற முறையிலே, பல நேரங்களில் அது எங்களை சிந்திக்க வைத்திருக்கிறது.

‘‘என்னுடைய வாழ்க்கையில் செய்த 

மிகப்பெரிய தவறு!’’ - தந்தை பெரியார்!

ஒருமுறை அய்யா அவர்களை, திருச்சி மாநகராட் சியில் காமராஜர் படத்தை திறப்பதற்காக அழைக் கிறார்கள். உதவியாளர்களாக இருக்கின்ற நாங்களும் சென்றிருந்தோம். அந்நிகழ்வில் அய்யா உரையாற்றும் பொழுது சொன்னார்,

‘‘இன்றைக்கு இவ்வளவு அதிகமாக உழைக்கிறேன், வேகமாகப் போய்ப் பிரச்சாரம் செய்கிறேன் என்றெல் லாம் சொன்னது இருக்கிறதே - அது எதற்காகத் தெரி யுமா? காமராஜர் என்னுடைய திட்டங்களையெல்லாம் செய்கிறார்; அவரைப் பாராட்டுகிறேன்; அவருடைய ஆட்சியைப் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக நான் பேசுகிறேன்; ‘‘காமராஜர் ஆட்சியின் சாதனைகள்'' என்ற தலைப்பில் புத்தகம் போட்டிருக்கிறோம்; ஆனால், இவையெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்; எதற்காக நான் என்னுடைய சக்திக்கு மீறி உழைக்கிறேன் தெரியுமா? (அப்பொழுது அய்யா அவர்கள் மூத்திரச் சட்டி உள்ள வாளியைத் தூக்கிக் கொண்டுதான் உரை யாற்றுகிறார்).

‘‘நான் என்னுடைய வாழ்க்கையில் செய்த ஒரு மிகப்பெரிய தவறு; அதற்குக் கழுவாய்த் தேடுவதற்காக உழைக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு,

‘‘நீதிக்கட்சி என்கிற திராவிடர் இயக்கம் இருக்கிறதே, அந்த இயக்கம் நம்முடைய மக்களுக்கு சேவை செய்து, அவ்வளவு பெரிய சாதனை செய்த காலத்தில், நான் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்திருக்கிறேன், பல ஆண்டுகள். திரு.வி.க.வை வைத்து,  ராஜகோபாலாச் சாரியாருடைய தலைமையில், டாக்டர் வரதராசனார் போன்றவர்களை வைத்து  - அதை உணர்ந்து, அப் பொழுது செய்த வேலைக்கு, கழுவாய்த் தேடுவதற் காகத்தான் இவ்வளவு நாள் உழைத்துக் கொண்டிருக் கின்றேன்;  இன்னும் நீண்ட நாள் உழைத்தால்கூட அந்தக் கறையைப் போக்க முடியாது'' என்றார்.

அவ்வளவு பெரிய தலைவர், அவ்வளவு பெரிய சிந்தனையாளர்; அவ்வளவு பெரிய புரட்சியாளர் இப்படி சொன்னார்.

காரணம் என்ன?

சமூகநீதிக் கொள்கையில் 

உறுதியாக இருந்தவர் தந்தை பெரியார்!

பெரியார் அவர்கள் சமூகநீதிக் கொள்கை என்ற அடிப்படைக் கொள்கையில் உறுதியாக இருந்தவர்.

அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்ற நிலையிலிருந்து, அரசியலுக்கு அவர் அழைத்து வரப்பட்டது சமூகநீதிக்காக.

அந்த சமூகநீதிக்காக, காங்கிரசில் சேருவதற்கு முன்பே, அதே கொள்கைக்காக, இன்னொரு அமைப் பைக் காட்டி, இது தேசிய அமைப்பு - தேசிய அமைப்பின் சார்பாக - பிரசிடென்சி ஆஃப் அசோசியேசன் - அதற்குப் போட்டியாக, அதே கொள்கையைத்தான் நாங்களும் சொல்கிறோம்; நீங்கள் அதற்குத் துணைத் தலைவராக இருங்கள் என்று சொன்னவுடன், அந்த அமைப்பிற்குப் பணம் கொடுக்கிறார்.

ஆனால், இரண்டாண்டுகள்கூட அது நீடிக்கவில்லை. ஏனென்றால், உண்மையான அமைப்பை எதிர்த்து, நீண்டு இருக்க முடியாது.

அதைத்தான் அய்யா அவர்கள் உணர்ந்து சொன் னார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சூழலில், அதற்கு ஒரு பெரிய வடிவம் கொடுத்தார். 

நீதிக்கட்சி தொடர்ந்து 17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அதற்குப் பிறகு அது தோற்றது.

வெற்றிக்குப் பல உரிமையாளர்கள் உண்டு; தோல்வி எப்பொழுதும் அனாதைதான்!

எந்த ஒரு கட்சியும் வெற்றி பெற்று, ஆளுங்கட்சியாக இருக்கும்பொழுது பல பேர் வருவார்கள்; அவர்களுக்கு சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ, அவர்கள் அதைக் கொண்டாடுவார்கள். ஆனால், தோல்வி அடைந்தால் பலர் வெளியேறுவார்கள்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு -

‘‘வெற்றிக்குப் பல உரிமையாளர்கள் உண்டு;

தோல்வி எப்பொழுதும் அனாதைதான்!''

என்பதுதான் அது.

யாரும், இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன் என்று சொல்லமாட்டார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சூழலில், நீதிக்கட்சி தோல்வி அடைந்ததும்,  தந்தை பெரியார் அவர்கள்தான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

‘நல்ல வண்ணம்‘ தோல்வி அடைந்தார்கள்!

அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்,

‘‘இந்தத் தோல்வியைக் கண்டு நீங்கள் எல்லாம் மிகவும் வருத்தத்தோடு இருப்பீர்கள்; இன்னும் சில பேர் இந்த இயக்கத்தைவிட்டு போய்க் கொண்டு இருக் கிறார்கள்; ஏனென்றால், வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காக அவர்கள் எல்லாம் இந்தக் கட்சியில் இருந்தார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; இந்தத் தோல்விதான், மிகச் சரியான தோல்வி; ‘நல்ல வண்ணம்‘ தோல்வி அடைந்தார்கள்'' என்றார்.

சாதாரண வார்த்தையல்ல, அவருடைய வார்த்தை யில், ‘‘நல்ல வண்ணம் தோல்வி அடைந்தார்கள்'' என்கிறார்.

எழுச்சியும், தெளிவும், 

கருத்தும் வர முடியும்!

மேலும், ‘‘அதற்கு என்ன காரணம் என்றால், உத்தி யோகத்திற்குப் போகும்பொழுது நீங்கள் நிறைய பேர் பார்ப்பனர்களை எதிர்த்துப் பேசுகிறீர்கள்; கல்வி என்று வரும்பொழுது அவர்களை எதிர்த்துப் பேசுகிறீர்கள்; ஆனால், வீட்டிற்கு வந்தவுடன், அவர்களை அழைத்து, அவர்களுடைய கால்களில் விழுகிறீர்கள்; அவர் களுடைய மந்திரங்களைத்தானே கேட்கிறீர்கள்; அவர் களுடைய சிரார்த்தம்தானே செய்கிறீர்கள்; அப்படி யென்றால், பார்ப்பனியம் உங்களை ஆட்கொண்டிருக் கிறதா? இல்லையா? அதை என்றைக்கு நீங்கள் ஒழிக்கிறீர்களோ, அன்றைக்குத்தான் இந்த சமுதாயத்தில் எழுச்சியும், தெளிவும், கருத்தும் வர முடியும்‘‘ என்று நீதிக்கட்சித் தலைவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

இங்கே நம்முடைய நாகநாதன் அவர்கள் மிகத் தெளிவாகச் சொன்னார், நீதிக்கட்சித் தலைவர்களுக்குக் கூட வைதீக சிந்தனை, கடவுள் நம்பிக்கை என்றெல்லாம் இருந்தபொழுது, நாயர்தான், ‘‘வந்தேறிகள்’’ என்று சொன்னார்.

டாக்டர் டி.எம்.நாயரின் 

இருபெரும் முழக்கங்கள்!

இங்கே நீங்கள் வாங்கிய புத்தகங்களில், ‘‘டாக்டர் டி.எம்.நாயரின் இருபெரும் முழக்கங்கள் - ஆரிய - திராவிட போராட்ட அரசியல் வரலாற்றின் துவக்கம்‘‘ என்று அவரது இரண்டு உரைகள்.

ஒரு உரை சேத்துப்பட்டில் உள்ள ஸ்பர்ட்டாங் ரோட்டில் நடைபெற்றது. இன்னொரு உரை விக்டோரியா பப்ளிக் ஹாலில்.

அந்த இரண்டு உரைகளையும் ‘‘டாக்டர் டி.எம்.நாயரின் இருபெரும் முழக்கங்கள் - ஆரிய - திராவிட போராட்ட அரசியல் வரலாற்றின் துவக்கம்‘‘ என்ற நூலாக வெளியிட்டு இருக்கிறோம்.

ஓர் உணர்ச்சியை எடுத்துச் சுட்டிக்காட்டியிருக்கிறார் கள்.அருள்கூர்ந்து நீங்கள் வாங்கிய புத்தகங்களை, அல்லது இதுவரை வாங்கவில்லையானால், அந்தப் புத்தகங்களை வாங்கி நீங்கள் தெளிவாகப் படித்துப் பார்த்தீர்களேயானால், எப்படி தந்தை பெரியார் அவர்கள் பிரச்சாரம் செய்தார்களோ, அதேபோன்று டி.எம்.நாயரும் தெளிவாக நோய் நாடி, நோய் முதல் நாடக் கூடிய அளவிற்கு வாய்ப்புகளைக் கண்டு மிக முக்கியமாகச் சொன்னார்கள்.

‘‘பல கோடி ஜனத்தொகையுள்ள இந்திய நாட்டுப் பழங்குடி மக்களான ஆதிதிராவிடர்கள் பறையர் என்றும். தீண்டத்தகாதவர்களென்றும். நெருங்கக்கூடாதவர்களென்றும், பார்க்கக்கூடத் தகாதவர்களென்றும், இந்துக் கோயிலுக்குப் பக்கத்திலேகூட வரக்கூடாதென்றும், குடிதண்ணீர் வசதிகள்கூட இல்லாத ஊர்களுக்கப்பால் வெகு தூரத்தில் பறைச்சேரிகளில் மட்டும்தான் ஓட்டைக் குடிசைகளில் வசிக்க வேண்டுமென்றும் இருக்கிற பல அநாகரிகக் கொடுமைகள் நிறைந்த இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த பாரிஸ்டர் காந்தி, அதை யெல்லாம் அப்படியே அங்கேயே விட்டுவிட்டு இங்கு வந்து உபதேசம் செய்யத் தொடங்கி இருக்கிறார். எங்களுக்கு உபதேசமா? வைத்தியரே! முதலில் உம் வியாதிக்கு வைத்தியம் செய்து கொள் ளும்! என்றானாம் நம் வண்டவாளங்களெல்லாம் அறிந்திருக்கும் ஒரு வெள்ளையன், பாரிஸ்டர் காந்திக்கு முகம் செத்துப்போச்சாம், பாவம்!

வடக்கே மார்வார், குஜராத் நாட்டவர்கள், வியாபாரிகள், வட்டிக்கடைக்காரர்கள் நம் தென் னாடுகளுக்கு வந்து, பரம ஏழையிடமும் வட் டிக்கும் வட்டி சேர்த்து வட்டி வாங்கிக் கொள்ளை லாபமடித்துக் கொண்டு, மூட்டை கட்டிக் கொண்டு போவதைப் பார்க்கிறோம் அல்லவா! வரப்போகும் காந்தி, இருதயமில்லாத கொள்ளை லாப பனியா ஜாதியைச் சார்ந்தவர்தானாம்! ஆதலால் உஷார்! உஷார்!

African colour-Bar all of you hate

Aryan Caste- Bar dooms our fate

இந்த  20 ஆம் நூற்றாண்டிலேயே புதுப்புது மக்கள் வருவதும் போவதும் சகஜமாயிருக்கும் போது, பல லட்சம் ஆண்டுகளுக்குமுன் அஞ்ஞான இருள் இந்நாட்டைச் சூழ்ந்திருந்த காலத் திலே இந்நாட்டுக்குள் புகுந்து சொந்தம் பாராட்டப் புகுந்த ஆரியர்கள்பற்றி, நம் அப்பாவி முன்னோர் ஆரம்பத்தில் அதிகக் கவலை கொள்ளாதிருந்தது ஏதும் ஆச்சரியமில்லையே.

கூட்டங்கூட்டமாக வந்து கொண்டேயிருந்த மத்திய ஆசிய ஆரியக் காட்டுமிராண்டிகள், சீக்கிர மாகவே தங்கள் வாலாட்டத்தை ஆரம்பித்தார்கள்.

நம் மக்களிடம் பல நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்; கதைகள் கட்டினார்கள். செப்படி வித்தை, ஜேப்படி வித்தை காட்டினார்கள்.

இயற்கைச் சம்பவங்களைக் காட்டிக் காட்டி, கடவுள் என்றொன்றைக் கற்பனை செய்து, அது வரையில் “மலைப்பே” “மயக்கமே” இன்னதென்ற றியாத திராவிடர்களின் மூளையைக் குழப்பியே விட்டுவிட்டார்கள்!

கார்ல்மார்க்ஸ் என்னும் பேரறிஞர் தெரியாமலா சொன்னார். தன் புத்தகமான “மூலதனம்‘ (Capital) என்னும் பொருளாதார அறிவுக் களஞ்சியத்தில் - “மதம் மக்களுக்கு மயக்க மருந்து” என்று?

இயற்கைச் சம்பவங்களைக் காட்டி, கடவுள் என்றொன்றை நிலை நாட்டினர். வெற்றி கண்ட ஆரிய வஞ்சகன் தன் வெண்ணிறங்காட்டி, தன்னை உயர்ந்தவனென்றும், திராவிடர்களின் கருநிறங்காட்டி. அவனிலும் தாழ்ந்தவனென்றும் கூறினர். கடவுளின் தலையிலிருந்து வெடித்து வந்தவன் பிராமணன் என்றும் (Head-Born), கடவுளின் கரங்களிலிருந்து வெடித்து வந்தவன் க்ஷத்திரியன் என்றும் (Hand-Born), கடவுளின் இடுப்பிலிருந்து வெடித்தவன் வைசியன் என்றும் (Hip-Born), கடவுளின் பாதத்திலிருந்து வெடித் தவன் “சூத்திரன்” என்றும் (Heel-Born) பல ஆரிய சாகசங்களைக் கையாண்டு திராவிடர்களில் பலரை நம்பச் செய்தனர்.

நான் 30 ஆண்டுகளுக்குமேல் இங்கிலாந்திலும் இங்கும் வைத்தியத் தொழில் செய்துவரும் அனுபவசாலி. ஆனால், இம்மாதிரியான “டெலிவரி கேசுகளை” நான் கண்டதுமில்லை; கேட்டுமறி யேன்.

ஆரியக் கடவுளின் தேகக் கட்டமே அலாதி போலிருக்கிறது. 

இவ்வாறாகக் கடவுளின் மேல் அங்கங் களிலிருந்து “டெலிவரி”யான, ஆரியர்கள்தான், பிரம்ம, க்ஷத்திரிய, வைசியர்கள். அவர்களுக்கே நாட்டிலுள்ள சகல சொத்து சுகங்களும், வீடு வாசல், தோட்டம் தொரவுகளும், பணம் காசுகளும் சொந்தம்.

நான்காம் ஜாதியான சூத்திரர்களும், அவர்ணர் களான பஞ்சமர்களும்தான், இந்நாட்டுக் கறுப்பர் களான திராவிடர்கள்.

இதுதான் அந்தக் கடவுள் கட்டளை. நாலாம், அய்ந்தாம் ஜாதிகளுக்குச் சொத்துரிமை, படிப் புரிமையெல்லாம் கிடையாது, கூடாது. இவர்கள் வேசி பரம்பரை, உடலுழைப்பாலேயே வாழ வேண்டியவர்கள்.

எங்கள் கடவுள் எங்களுக்கு அருளிய வேத, சாஸ்திர புராணங்களில் இதற்கெல்லாம் ஆதாரம் உள்ளது. இவையெல்லாம் பூர்வ ஜென்மப் பாவ புண்ணியங்களின் அடிப்படையில் ஏற்பட்ட தெய் வீகச் சட்டதிட்டங்கள். இதற்குத்தான் “தலைவிதி” என்று சொல்வர். இதையெல்லாம் நம்பி அதன்படி அவனவன் ஜாதி தர்மப்படி நடப்பவனுக்குத்தான். மரணத்துக்குப் பின் மோட்சம் கிடைக்கும். நம்பாதவன் மரணத்துக்குப்பின் நரகத்தில், சித்திரவதை செய்யப்படுவான்.

இந்தக் கடவுள் திட்டத்துக்குத்தான், வர்ணாசிரம தர்மம் என்று பெயர். இவ்வாறு அந்நிய ஆரிய வஞ்சகர்கள் கூறி ஆங்காங்கே அப்பாவி திரா விடர்களைக் கூட்டி வைத்துக்கொண்டு, தங்கள் போதைப் பொருள்களான “சோம பானம்“ “பங்” முதலியவைகளை அவர்களுக்குக் கொடுத்து மயக்கி, ஆரியக் கூத்தாட்டங்களாலும், சூழ்ச்சி களாலும் ஆங்காங்கே ஊர் முக்கியஸ்தர்கள் பலரைக் கையிலும் போட்டுக் கொண்டார்கள். 

மேற்கண்ட ஆரிய சூழ்ச்சிகளைச் சந்தேகித்த படி திராவிடர்கள் அக்காலத்திலும், இக்காலத்திலும் ஜஸ்டிஸ் கட்சிபோல் இருக்கத்தான்  செய்தனர்.

இப்புகைச்சல் கை கலப்பிலும், திராவிட - ஆரியப் போராகவும் ஆங்காங்கே உருவெடுத்து, காட்டுத் தீபோல் நாடெல்லாம் பரவியது. 

ஆரியக்கூட்டம், திராவிடக் கூட்டத்தைவிட மிக மிகச் சிறியதானாலும் அவர்கள் கையாண்ட போராயுதங்களான - தூரத்திலிருந்தும், மறைத்தும் தாக்கக்கூடிய வில், அம்புகளுக்கு முன்னால், பக்கம் நின்று போராட மட்டும் கூடியதான திரா விடர் போராயுதங்களான வாள், வேல் பலனளிக் காது போகவே. பரதேச ஆரியர் வென்றனர்; சுதேச திராவிடர் தோற்றனர்.

இவ்வாறாகவும் சாம, பேத, தான, தண்ட மென்னும் ஆரிய சதுர்வித உபாயங்கள் மூலமும் திராவிடர்களின் ஒற்றுமையையும் குலைக்கலாயினர்.

எப்படியென்றால், திராவிடர்களிலேயே சிலருக்குச் சில இடங்களில் வர்ணாசிரம முறையின்கீழ் உயர்வுகள் கொடுத்தனர். உதாரணமாக, நம் தலைவர் பி.தியாகராய செட்டியாரின் இனமான நெசவாள திராவிடர்களை, “தேவாங்க பிராமணர்” களென்றனர். பட்டு நூல் வியாபாரிகளை, ‘‘சவுராஷ்டிர பிராமணர்’’களென பிரமோஷன் கொடுத்தனர். திராவிடப் பொற்கொல்லர்களை. ‘‘விஸ்வ கர்ம பிராமணர்’’களென்று மாற்றினர்.

திராவிட விவசாயிகளை வன்னிய குல சத்திரியர்களென்றும், பற்பல தொழிலில் ஈடுபட்டிருந்த திராவிடர்களை கவுரவ சத்திரியர் (நாயுடு ரெட்டி) களென்றும். வியாபாரங்களில் ஈடுபட்டிருந்த திராவிடர்களை. கோமுட்டிகளை) “ஆரிய வைசியர்” களென்றும் பிரித்தனர்.

திராவிட நாட்டுக்கோட்டை செட்டிமார்களை, தன வைசியர்களென்றும், இதேபோல் வட நாட்டிலும் தங்களுக்குக் கங்காணி வேலை செய்யத் தயாரென்று சொன்ன திராவிடர்கள் பலரை “பூமிஹார் பிராமணர்”களென்றும், “நாய் பிராமணர்களென்றும், விவசாயத்தில் ஈடுபட்ட வர்களை “குர்மி சத்திரியர்”களென்றும், “ராஜபுத்திர சத்திரியர்”களென்றும், “மகாஜன வைசியர்களென் றும் பலவாறாகப் பெயர் சூட்டி திராவிடர் களுக்குள்ளேயே கோட்டைக்குள்ளேயே குத்து வெட்டு, போட்டா போட்டியும், பொறாமையும் ஏற்படுத்தினர்.

இவ்வாறாக திராவிட இன ஒற்றுமையை நாளாவட்டத்தில் சின்னாபின்னப்படுத்தி, “பிரித்து ஆளல்” முறையைக் கையாண்டு. இத்திராவிட நாட்டையும், திராவிட மக்களையும் அடிமை கொண்டு, அன்றிலிருந்து இன்றுவரை ஆரியர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு இந்தியாவின் ‘புரப்பரைட்டர்’களாகிவிட்டிருக்கின்றனர்.

திராவிடரில் பலருக்குப் பெயரளவில் ஆரிய வர்ணாசிரம உயர்பட்டங்கள் கிடைத்தனவேய றன்றி, காரியக் கிரமப்படி, சொக்கமான ஆரிய பிராமணர்களே அமரும்படியான சங்கராச்சாரி முதலிய பீடங்களில் தேவாங்க பிராமணரான நம் தலைவர் பிட்டி தியாகராயரும், மற்ற எந்த ‘‘டூப்ளிகேட்’’ பிராமணர்களும் அமரவேண்டு மென்று ஆசைப்படுவார்களேயானால், ராமாய ணத்தில், தவம் செய்த பாவத்துக்காக ‘‘சிறீ ராமனால்’’ தலையிழந்த ‘‘சூத்திர’’ சம்பூகன் கதிதான் இவர்களுக்கும் உண்டாகும்.

இதுபோன்ற செய்தி நிறைய இருக்கிறது; இந்தப் புத்தகத்தை நீங்கள் வாங்கிப் படிக்கவேண்டும்.

ஆகவே நண்பர்களே! இந்தச் சூழலில் இருந்துதான் இந்த இயக்கம் பிறந்தது.

‘‘அனைவருக்கும் அனைத்தும்.’’

இந்த ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’  என்று சொன்னதுதான் பலருக்குப் பிடிக்கவில்லை.

ஏகலைவன்களைப் பாராட்ட 

துரோணாச்சாரிகள் தயாராக இல்லை!

ஏனென்று கேட்டால் நண்பர்களே, மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய ஒரு செய்தி, ஏகலைவன் எவ்வளவு திறமையாளனாக இருந்தாலும், அவனுடைய திறமை யைப் பாராட்ட துரோணாச்சாரி தயாராக இல்லை.

மாறாக, தர்மத்திற்கு விரோதமாக செய்தானே என்பதற்காக சூழ்ச்சி செய்தார்கள். குருதட்சணை என்ற பெயராலே, வலது கை கட்டை விரலை வெட்டிக் கேட்கிறார்கள் என்று சொன்னால், - அது நடந்ததா என்பது முக்கியமல்ல - இது கற்பனையாகக் கூட இருக்கலாம்.  இருந்தாலும், அந்தத் தத்துவம் மிகவும் முக்கியம்; அதிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் நமக்கு மிகவும் முக்கியம்.

இன்றைக்கும் ‘நீட்’ தேர்வு அதுதான்!

இன்றைக்கும் புதிய கல்விக் கொள்கை - தேசிய கல்விக் கொள்கைத் திட்டம் அதுதான்!

இராஜகோபாலாச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம் அதுதான்.

ஆகவே, பார்ப்பனர்கள் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள், எந்த அணியிலே இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; எந்த அணியில் இருந்தாலும் பார்ப்பனர்கள் ஒரே அணிதான்.

காரணம், மனுதர்மப்படி நாம் படிக்கக்கூடாது; உயரக் கூடாது என்பது மாற்றி, அவர்களுக்கு வாய்ப்பளிப்பது தான் நம்முடைய நிலை.

ஆகவே, ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு வித்தைகளை அவர்கள் எடுக்கிறார்கள். அண்மையில் வந்திருக்கின்ற உயர்ஜாதியில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு உள்பட.

எனவேதான், நீதிக்கட்சியினுடைய தத்துவங்கள் தேவை -  இன்னமும் நீதி தேவை - நீதிக்காகப் போராடு கின்ற உணர்வு தேவை - எல்லோருக்கும் விழிப்புணர்வு தேவை - அதுதான் இந்தக் கருத்தரங்கத்தினுடைய மிக முக்கியமான கருத்துரை என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி,

வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்தை பெரியாரை 

பேராயுதமாகக் கொள்ளுங்கள்!

இளைஞர்களே, நீதிக்கட்சியினுடைய வரலாற்றைப் படியங்கள்! நீதிக்கட்சியினுடைய தலைவர்களின் உரை யைப் படியுங்கள்! தந்தை பெரியாரை பேராயுதமாகக் கொள்ளுங்கள்!

அதன்மூலம் பாசறையில் நீங்கள் சேருங்கள்! உங்களையும் பாதுகாத்து, எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கு இதைத் தவிர நாதியில்லை.

இல்லையேல், நம் சமுதாயம் பாழ்பட்டுவிடும். பழைய கருப்பனாக ஆகவேண்டிவரும் - மீண்டும் ஏகலைவன்களாக நீங்கள் மாற்றப்படுவீர்கள். உங்கள் கட்டை விரல்கள் பத்திரமாக இருக்க முடியாது!

கவனம்! கவனம்!! கவனம்!!!

வாழ்க பெரியார்!

வளர்க நீதிக்கட்சியின் தலைவர்களின் புகழ்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரை யாற்றினார்.

No comments:

Post a Comment