மக்களவையில் டி. ஆர்.பாலு கேள்வி!
புதுடில்லி, டிச.15- பல்வேறு மாநிலங்களில் உள்ள நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருவதாக, மக்களவையில் தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர் பாலுவின் கேள்விக்கு, ஒன்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா பதிலளித்துள்ளார்.
மக்களவையில் எழுத்துப் பூர்வமாக கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு, பல்வேறு மாநிலங்களின் சமவெளிகளில் வாழும் நாடோடி பழங்குடியினர் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நிலையில், அவர்களை பட்டியல் பழங்குடியினர் என வகைப்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். இத்தகைய பழங்குடி சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா என அவர் வினவினார்.
இதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, பழங்குடியினரின் பட்டியலில் யாரை யெல்லாம் சேர்ப்பது, விலக்குவது மற்றும் பிற மாற்றங்களுக்கான கோரிக்கைகளை தீர்மானிப்பதற்கான வழிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பரிந்துரைத்த முன்மொழிவுகள் செயலாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் பரிந்துரைகள் கேட்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் அர்ஜூன் முண்டா பதிலளித்துள்ளார்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.

No comments:
Post a Comment