உணவுமுறை குறித்து தந்தை பெரியாரின் பார்வை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 31, 2022

உணவுமுறை குறித்து தந்தை பெரியாரின் பார்வை!

பாணன்

அய்யாவை மதவாதிகளும் இன எதிரிகளும் ஒரே ஒரு காரணம் கொண்டு அவரை இன்றும் தூற்றுகின்றனர். மதவிரோதி என்று கூறுகின்றனர். 

கடவுள் மறுப்பாளர்கள் ஆரம்பக்காலம் முதலே அறிவியலை கைக்கொண்டு இறைமறுப்பை பேசினர். இது புத்தனில் இருந்து தொடங்கியது. 

தந்தை பெரியார்  கடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம், மூடநம்பிக்கைகள் என அனைத்தையும் அறிவியல் பூர்வமாகப் பேசினார்!

தவிர பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, சமதர்மம், கல்வி, பெண்ணுரிமை, வாழ்க்கை ஒப்பந்தம், தொழிலாளர் நலன், தமிழ் வளர்ச்சி, கிராம முன்னேற்றம், மனிதர்களின் பொது நலம், சுயநலம், மனித வாழ்க்கை, கலை, இசை, நாடகம், தமிழர்களின் நன்மைகள்,அயல்நாட்டு வாழ்க்கை முறை, எதிர்கால உலகம் என தந்தை பெரியார் பேசாத துறைகளே இல்லை!       

இன்று கடவுள் நம்பிக்கையாளர்கள் கூட தந்தை பெரியாரை ஊன்றிப் படித்ததால் தான் வியந்து நேசிக்கின்றனர்; தங்கள் தலைவராகவும் ஏற்றுக் கொண்டனர்!அப்படியான பெரியார் மனிதர்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான உணவுமுறை  குறித்தும் பேசியுள்ளார்.  

1) ஆறு அறிவு படைத்த நமக்கு இன்று ஏற்பட்டுள்ள பெருங்கவலையும், குறையும், தொல்லையும் ``உணவு விஷயத்தில் பஞ்சம் - தேவை’’ என்பது முதலாவதாகும். இப்படிப்பட்ட கவலை தோன்றுவது பைத்தியக்காரத்தனமான குறைபாடேயாகும். ஏனெனில் முதலாவது இக்குறை நமக்கு நாமாகவே ஏற்படுத்திக் கொண்ட முறையாகும். எப்படியென்றால்,

2)  நம் மக்களுக்கு அரிசி சோறு தேவையற்றதும் பயனற்றதும்; பழக்கமற்றதுமாகும். நம் வயல்கள் (விவசாயம்) எல்லாம் சமீபத்தில் ஓராயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குள் உண்டாக்கப்பட்டவையே.

3) நாம் மாமிசம் சாப்பிடுவதை விட்டு, காய்கறி பண்டங்களை மட்டும் உண்பது நமக்குக் கேடான பழக்கமாகும். இவைகளும் அரிசிக்குப் பின் உண்டாக்கப்பட்டவையே.

4) ஆடு, கோழி, பன்றி முதலிய மாமிசம் சாப்பிடும் மக்களை மாட்டிறைச்சியும் சாப்பிடும்படி செய்து, அது எளிதாய் குறைந்த விலைக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனப் பெரியார் பேசுகிறார். ('விடுதலை' 13.7.1964)

உணவு முறை பற்றிய பெரியாரின் எழுத்துகளை முழுமையாக படித்தால் நாம் வியந்து போவதைத் தவிர வேறு வழியில்லை.இன்றைக்கு மருத்துவ அறிவியல் பெரிய அளவிற்கு மாறிவிட்டது.  மாவுச்சத்து உணவுகள் எவ்வளவு தீங்கு செய்கின்றன என்கிற விழிப்புணர்வுகளும் வந்துவிட்டன. 

நாளொன்றுக்கு மாவுச்சத்து உணவுகள் (கார்போ ஹைட்ரேட்) 40 கிராம் போதுமானது என்பதை ஆய்வுகள் சொல்கின்றன ஆனால் மனிதர்கள் 300 முதல் 400 கிராம் வரை மாவுச்சத்தை உண்கின்றனர். அதேபோல கொழுப்பு 120 கிராம் வரை தேவை. ஆனால் நாம் 40 கிராம் கூட சாப்பிடுவதில்லை.

ஆக ஒரு மனிதரின் ஆரோக்கியமான உடல் நலத்திற்கு நல்ல கொழுப்பும், சிறந்த புரதமும் அவசியம் தேவை.மற்றபடி அரிசி, கோதுமை, மைதா போன்றவை பெரும் உடல்நலக் கேட்டை ஏற்படுத்துகின்றன.

இதனை 50 ஆண்டுகளுக்கு முன்னரே பெரியார் வெகு இயல்பாகப் பேசிச் சென்றுள்ளார். இன்றைய உணவு ஆய்வாளர்கள் இதைப் பெரும் வியப்பாகக் காண்கின்றனர்.கொழுப்பு, புரதம்‌ குறித்து நாம் கூடுதலாக அறிய வேண்டும். மாமிச உணவுகளின் மூலம் பெறும் கொழுப்பு நமக்கு நன்மை பயப்பவை! அரிசி, கோதுமை, மைதா உள்ளிட்ட மாவுச்சத்துகள் மூலம் உருவாகும் கொழுப்புகள் (Converted Cholesterol) தீமை பயப்பவை. இத்தகைய கொழுப்புகள் தான் உடல்பருமன், நீரழிவுக் குறைபாடு, மாரடைப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிறது.

அதேபோல புரதம் என்பது மாமிச உணவில் அதிகமாக இருக்கிறது; நல்ல ஆரோக்கியத்தையும் அது கொடுக்கிறது. மரக்கறி மூலம் கிடைக்கும் புரதம் பெரிய பயனைத் தருவதில்லை.இதுகுறித்துப் பெரியாரின் பாணியில் பகுத்தறிந்து மேலும் அறிந்து கொள்வது ஆரோக்கியமான சமூகத்திற்கு வலுசேர்க்கும். 

ஏனெனில் 50 வயது கடந்துவிட்டாலே மாமிச உணவுகள் கூடாது என்கிற முடிவிற்குப் பலர் வந்துவிடுகின்றனர்.அதனால் தான் இரண்டு வகையான கொழுப்பு, இரண்டு வகையான புரதங்கள் குறித்து நாம் அறிய வேண்டியுள்ளது! 

நம்மை நோயாளியாக வைக்கவே சைவ உணவு. குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு இறைச்சியைத் தவிருங்கள் என்பதோடு, சிறுவயதில் இருந்தே இறைச்சி உணவை குறையுங்கள் என்று பிஞ்சுகள் மனதிலும் நஞ்சை விதைக்கின்றனர். 

இன்று பல குழந்தைகள் முட்டை சாப்பிடுவதைக் கூட தவிர்க்கக் காரணம் சில பள்ளிகளிலும் கார்ட்டூன்களிலும் மரக்கறி உணவுதான் சிறந்தது என்ற நயவஞ்சகப் பரப்புரையால் - மரக்கறி உணவுதான் சிறந்தது, உயர்ந்தது என்பது சமூகம் விதைக்கும் நஞ்சுகளில் ஒன்று! மனிதர்கள் முதல் முதலாக சாப்பிடத்துவங்கியது இறைச்சி உணவே ஆகும்.  துவக்கத்தில் மனிதன் மரக்கறி உணவை சாப்பிடத் தயங்கினான். 

மரக்கறி உணவைச்சாப்பிட்டால் தாங்களும் அதுபோல் மாறிவிடுவோம் என்று அஞ்சினான். வேட்டையாடிய விலங்குகளின் இரைப்பையில் இருந்த பழங்களை சுவைத்துப் பார்த்த பிறகுதான் சுவைக்காக பழங்களையும் அப்படியே கிழங்குகள் பிறகு தானியங்கள் என்று தனது உணவுப்பழக்கத்தை மாற்றினான். 

மனித உணவுச் சங்கிலியில் மரக்கறி உணவு என்பது ஆற்றங்கரை நாகரீகம் உருவாவதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்று ஆய்வாளர்கள் அறுதியிட்டுக் கூறுகின்றனர். 

தந்தை பெரியார் எந்த ஒரு நிகழ்வையும் சான்றுகளோடு அறிவியல் பூர்வமாக கூறியுள்ளார் என்பதற்கு இன்று நமக்கு விடை கிடைத்துக்கொண்டு இருக்கிறது. எப்படியெனில், அய்ன்ஸ்டனின் கணக்கீட்டை இன்று ஜெம்ஸ் வெப் தொலைநோக்கி உண்மை என்று மெய்ப்பிக்கிறதோ அதுபோல...

No comments:

Post a Comment