பாடத் திட்டத்தில் வேதங்களும், கீதையுமாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

பாடத் திட்டத்தில் வேதங்களும், கீதையுமாம்

"நாட்டின் பல்வேறு மதங்கள், அவற்றின் போதனைகளுக்கு பள்ளி பாடப்புத்தகங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இந்திய வேதங்கள், பகவத் கீதை உள்ளிட்டவை பாடப் புத்தகங்களில் இடம் பெற வேண்டும்" என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

கல்வி, விளையாட்டுத் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரு நாள்களுக்கு முன் தாக்கல் செய்தது. அதில், தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் கவுன்சிலின்  (என்சிஇஆர்டி)  சார்பாக பள்ளி பாடப்புத்தகங்களில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன. 

நாடாளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "மாணவ, மாணவியருக்கு அச்சுப் பாடப் புத்தகங்கள் மட்டுமன்றி, மின்னணு வடிவிலும் பாடங்களை தொகுத்து வழங்க வேண்டும். மின்னணு வடிவிலான பாடங்கள் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும்.

பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி இந்திய வரலாறு கற்பிக்கப்பட வேண்டும். வரலாற்றுப் பாடங்களில் ஏதாவது தவறு, சர்ச்சைகள் எழுந்தால் உடனடியாக அந்தத் தவறுகள் திருத்தப்பட வேண்டும்.

விக்ரமாதித்தன், சோழர்கள், சாளுக்கியர்கள், விஜயநகர பேரரசு, கோந்த்வானா, திருவிதாங்கூர், வடகிழக்கு பிராந்திய மன்னர்கள்குறித்து பள்ளிப் பாடப்புத்தகங்களில் போதுமான தகவல்கள் இல்லை. இந்தப் பேரரசுகளின் வரலாறு, பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம் பெற வேண்டும்.

பெண் தலைவர்கள், பெண் சாதனையாளர்கள் குறித்த தகவல்கள் பாடப் புத்தகங்களில் குறைவாகவே இடம் பெற்றுள்ளன. அந்தக் குறை நீக்கப்பட வேண்டும். எம்.எஸ். சுப்புலட்சுமி, ஜானகி அம்மாள், சென்னம்மா உள்ளிட்டோரின் வரலாறு, சாதனைகள் பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும். இதன்மூலம் மாணவிகளின் தன்னம்பிக்கையை வளர்க்க முடியும்.

பள்ளி பாடப்புத்தகங்களில் செம்மொழியான தமிழுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. தமிழ், பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளைக் கவுரவிக்க வேண்டும்.    திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் மிகச்சிறந்த ஒழுக்கநெறிகளைப் போதிக்கிறது. பாடப் புத்தகங்களில் திருக்குறள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

வரலாற்று பாடப்புத்தகங்களில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்கள், குற்றவாளிகளைப் போன்று சித்தரிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தத் தவறுகள் திருத்தப்பட்டு, சுதந்திரப் போராட்ட கதாநாயகர்களுக்கு மரியாதை, கவுரவம் அளிக்கப்பட வேண்டும். அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்டத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சுதந்திரத்துக்குப் பிந்தைய வரலாறு பாடப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்தியாவின் பல்வேறு மதங்கள், அவற்றின் போதனைகளுக்கு பாடப்புத்தகங்களில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்திய வேதங்கள், பகவத் கீதை போதனைகள் பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கை தந்திர மாயா ஜாலங்களை உள்ளடக்கமாகக் கொண்டதாகவே இருக்கிறது. 

திருக்குறள், தமிழ் செம்மொழி இவற்றிற்கெல்லாம் பாடத் திட்டங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற சாக்கில், இந்திய வேதங்கள், கீதை எல்லாம் பாடத் திட்டத்தில் இடம் பெற வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது. ஒன்றிய பிஜேபி அரசின் நோக்கம் வேதங்கள், கீதை முதலியவை மாணவர்களுக்கும் புகட்டப்பட வேண்டும் என்பதுதான். அதை மட்டும் நேரிடையாகச் சொன்னால் எதிர்ப்பு எரிமலை வெடிக்கும் என்பதைத் தெள்ளிதில் உணர்ந்த இந்தக் காவிகள் அதனை மறைப்பதற்காகவே திருக்குறள், செம்மொழி என்ற திரையைப் பிடிக்கிறார்கள்.

வேதங்கள் என்ன கூறுகின்றன? எடுத்துக்காட்டுக்கு ஒன்றே ஒன்று - ரிக்வேதத்திலிருந்து..

"தெய்வாதீனம் ஜகத்சர்வம் 

மந்த்ரா தீனம் துதெய்வம்

தன் மந்த்ரம் பிரம்மணாதீனம் 

தஸ்மத் பிரமணப் பிரபு ஜெயத்" 

"உலகு கடவுள்களுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங் களுக்குக் கட்டுப்பட்டவர், மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை. பிராமணர்களே நமது கடவுள்." 

என்கிறது ரிக் வேதம் - இதைத்தான் பாடத் திட்டத்தில் வைக்க வேண்டுமா?

வேதம் (சுருதி), தருமசாஸ்திரங்கள் (ஸ்மிருதி) இவ்விரண் டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாகிறான் (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 2, சுலோகம் 11)

இந்த சுருதி, ஸ்மிருதிகளைத் தான் மாணவர்கள் கற்க வேண்டுமா?

கீதையையும் பாடத் திட்டத்தில் வைக்க வேண்டுமாம்.

"பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியி லிருந்து பிறந்தவர்கள்" (கீதை அத்தியாயம் 9 - சுலோகம் 32).

இந்தக் கீதையைத் தான் சொல்லிக் கொடுக்கப் போகிறார்களா?

"கீதை ஒரு முட்டாளின் உளறல்" என்றார் அண்ணல் அம்பேத்கர்.

"கீதையைப் படிப்பதைவிட கால் பந்து விளையாடக் கற்றுக் கொள்" என்றார் விவேகானந்தர்.

ஒன்றிய அரசு பார்ப்பனீய அரசு! பார்ப்பன மேலாதிக் கத்தை நிலை நிறுத்தும் அரசு. பார்ப்பனர் அல்லாதார் இதனைப் புரிந்து கொள்ள வேண்டாமா? புரிந்து கொண்டு பாடம் கற்பிக்க வேண்டாமா?

No comments:

Post a Comment