கோயில்களில் மருத்துவ முதலுதவி மய்யம் கூடாதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 6, 2022

கோயில்களில் மருத்துவ முதலுதவி மய்யம் கூடாதா?

"தினமலர்" - 'இது உங்கள் இடம்' பகுதியில் வாசகர் கருத்து என்கிற பெயரில் தமிழ்நாடு அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பதை வழமையாகக் கொண்டுள்ளது அந்த 'இனமலர்' ஏடு! கோயில்களில் மருத்துவ முதலுதவி அமைப்பது பஞ்சமா பாதகமா?

இதுபோன்ற கருத்துகள்மூலம் வயிற்றெரிச்சலில் 'இனமலர்' விடுகின்றது சாபமா? அச்சுறுத்தலா? என்கிற கேள்வி எழுகிறது.

மருத்துவ சிகிச்சை அளிக்கின்ற எண்ணம் முற்றிலும் மனித நேயத்தின் அடிப்படையில்தானே? இதைக்கூட புரிந்து கொள்ளாமல்,  ஆரியம் அலறுவது ஏன்? திருவண்ணாமலை கோயில் - மதுரை மீனாட்சி அம்மன், சிறீரங்கம் கோயில்களில் தீ விபத்துகள் நிகழவில்லையா? கடவுள் சக்தி ஆட்டம் கண்டு விட்டதே! கோயில் விழாக்களில் நெரிசலில் சிக்கி உயிர் இழப்பதும், காயம் அடைவதும் சர்வ சாதாரணம் தானே. பக்தர்களைக் கடவுள் காப்பாற்றவில்லையே - ஏன்?

"கடவுளை மற மனிதனை நினை" என்றார் தந்தை பெரியார். அந்த மனிதநேயத்தோடுதான் அரசு மருத்துவ உதவிக்கு முன் வந்துள்ளது.

மக்களின் உடல் நலனைப் பேணுகின்ற மருத்துவ சிகிச்சைகளால் மக்கள் நலம்பெற்று வாழ்வது பார்ப் பனர்களுக்குப் பொறுக்காதோ, அதனால்தான் பார்ப்பன துவேஷமாகக் கருதுகிறதோ 'இனமலர்'?

பொதுமக்கள் நலனை நாடுகின்ற திட்டத்துக்கு எதிர்ப்பு - முட்டுக்கட்டைகளைப் போடுவது என இதுபோன்ற கருத்துகளின் மூலம்  வளர்ச்சித்திட்டங்கள், நலத் திட்டங்களுக்கு தடையாக  'இனமலர்' இருக்கிறது.

உண்மைத்தன்மையை எவரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

"இறைவனின் இருப்பிடமான கோவில்களில் கை வைத்தால் பொசுங்கி விடுவீர்கள்!" என்று சாபம் விடுகிறார்.

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 

"கோவில், புனிதமான இடம். அங்கு ஆன்மிக சிந்தனைகளும், பக்தியும் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள், மருத்துவ சிகிச்சைக்கான முதலுதவி மய்யம் அமைத்துள்ளது, அறநிலையத் துறை.

அறநிலையத் துறையின் இந்தச் செயல், இறை நம்பிக்கை உள்ள பல ஹிந்துக்கள் மனதை புண்படுத்தியுள்ளது. கடந்த கும்பாபிஷேகத்தின் போது, அப்போதைய ஜெயலலிதா அரசு, அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கழிப்பறை கட்டியதே, பல ஆன்மிக பக்தர்களை மனம் நோகச் செய்தது. அந்த வரலாறு மீண்டும் திரும்ப வேண்டாம்.

முதல்வர் ஸ்டாலின் அவர்களே... தமிழகத்தில் எந்த ஊரிலும், நடமாட சரியான சாலை இல்லை; மழைநீர் வடிய எந்த முன்னேற்பாடும் இல்லை. அதை கவனிப்பதை விட்டு விட்டு, கோவில்களை இடிப்பதும், அறநிலையத் துறை என்ற பெயரில், கோவில்களில் அராஜகம் செய்வதும், நல்ல அரசுக்கு அழகல்ல.

உங்களது ஹிந்து காழ்ப்புணர்ச்சியையும், பார்ப்பன துவேஷத்தையும், போலி மதச் சார்பின்மையையும், மனிதர்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல், இறைவன் ஜோதிமயமானவன்; தீப்பிழம்பு. அவனின் இருப்பிடமான கோவில்களில் கைவைத்தால், பொசுங்கி விடுவீர்கள்; உஷார்!"

- 'தினமலர்'   இணையம் 

'இது உங்கள் இடம்' பகுதி, 2.12.2022

பக்தி பெருகி வழிகிறது - மக்கள் பெரும் அளவில் கூடுவதாகப் பெருமைப் பேசுகின்றனர். அப்படியானால் அந்த மக்களுக்குக் கழிப்பறை கட்டுவதும், மருத்துவ முதலுதவி மய்யம் அமைப்பதும் அவசியம் தேவை என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் பக்தர்களா?

பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும்?

உங்களுக்கு எது வேண்டும் பக்தர்களே என்பதுதான் முக்கிய கேள்வி.

குடந்தை மகா மகம் முடிந்த பிறகு, அந்தத் தண்ணீரை மாவட்ட ஆட்சியர் பரிசோதனைக்கு அனுப்பியதில் 28 விழுக்காடு மலமும், 40 விழுக்காடு சிறுநீர் கழிவும் இருந்தன  என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டதே!

மக்களின் உயிருக்கும், உடலுக்கும் பாதுகாப்பு தேவைதானே!

அதனை ஓர் அரசு செய்தால் எதிர்ப்பது அடி முட்டாள்தனமே!


No comments:

Post a Comment