சீரிய பகுத்தறிவாளரும், தந்தை பெரியார்மீது பெரும் பற்றுக் கொண்ட மிசோரம் மாநில மேனாள் ஆளுநர் ஆ. பத்மநாபன் அவர்களுக்கு நேற்று (14.12.2022) 94ஆம் ஆண்டு பிறந்த நாள். ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் நேரில் வாழ்த்து தெரிவிப்பதை கடமை, போற்றுதல் எனக் கருதிடும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேற்று பிறந்த நாள் வாழ்த்தினை நேரில் தெரிவித்தார்.
சென்னை - அடையாறு - சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள ஆ. பத்மநாபன் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்துகளை தமிழர் தலைவர் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தமிழர் தலைவர் தமது இல்லத்திற்கு வருவதை அறிந்த ஆ. பத்மநாபன் அவர்களது குடும்பத்தினர், உறவினர் ஆகியோர் 90 வயதைக் கடந்து வாழும் இரு வரலாற்று நாயகர்களின் சந்திப்பின்பொழுது உடன் இருந்தனர்.
எப்பொழுதும் ஆசிரியர் அவர்கள் தமது இல்லத்திற்கு வருகை தரும் பொழுது வாசலில் வந்து வரவேற்பதை பண்பாடாகக் கருதிடும் ஆ. பத்மநாபன் அவர்கள், நேற்று சென்ற பொழுதும் 'வாங்க எங்களது தலைவரே!' என கொள்கைப் பாச உணர்வுடன் வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
சென்ற ஆண்டு பிறந்த நாளுக்குப் பின் ஓராண்டு கடந்து விட்ட நிலையில் உடல் நலம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் சென்ற நிலையில் 'அதே சுறுசுறுப்பான நடை - யாருடைய உதவியுமின்றி நடந்து செல்லும் பாங்கு - அந்த கணீர் குரலில் வெளிப்பட்ட பேச்சு!' என ஆண்டு அதிகமாகி வரும் நிலையில், ஆ.பத்மநாபன் அவர்களின் அன்றாட தனித்த செயல்பாடு, சுறுசுறுப்பு என 94ஆம் அகவையில் இளைய தலைமுறையினர் பின்பற்றத்தக்க ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்.
டிசம்பர் 2ஆம் நாளன்று 90ஆம் அகவை தொடங்கிய தமிழர் தலைவர், 94ஆம் ஆண்டு அகவை தொடங்கிடும் மேதகு ஆ. பத்மநாபன் அவர்களுக்கு மகிழ்ச்சிப் பெருக்குடன் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். டிசம்பர் - 2 ஆசிரியர் பிறந்த நாளன்று நேரில் வர இயலாமையினை ஆ. பத்மநாபன் குறிப்பிட்டு, தமிழர் தலைவருக்கு சால்வை அணிவித்து 90ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்து மகிழ்ந்தார்.
தமிழர் தலைவரின் கையைப் பற்றியவாரே ஆ. பத்மநாபன் அவர்கள் உரையாடினார். "உங்களது 90ஆம் ஆண்டு பிறந்தநாள் (டிசம்பர் 2) விழாவினை தொலைக்காட்சியில் பார்த்தேன். பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்தியாவிலேயே 90 வயதிலும் தொடர்ந்து சுறுசுறுப்பாக கொள்கையுடன் சமூகப் பணி செய்து வருபவராக உங்களைத் தவிர யாரையும் பார்க்க முடியவில்லை." என ஆ. பத்மநாபன் பெருமையுடன் குறிப்பிட்டார். தமிழர் தலைவர், அந்த உரையாடலின் பொழுது, பெரியார் இயக்க அறக்கட்டளை சார்பாக நடைபெற்று வரும் பல்வேறு கல்விக் கூடங்கள் - குறிப்பாக, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக உருவாக்கத்தில் ஆ. பத்மநாபன் அவர்களின் பங்கு முக்கியமானது என நன்றிப் பெருக்குடன் குறிப்பிட்டார்.
தந்தை பெரியாரின் தொடர்பை நேரில் மரியாதை நிமித்தம் சந்திப்பதோடு நிறைவு செய்திடாமல், பெரியார் 1971-இல் தொடங்கிய பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவராக இருந்து, பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பியத்திலும் ஆ. பத்மநாபன் உரிய பங்கினை ஆற்றினார்.
ஆ. பத்மநாபன் அவர்கள் தான் படித்த பச்சையப்பன் கல்லூரி, மாணவர் தலைவராக இருந்த அன்றைய தினம் 1940இல் சென்னைக்கு வருகை தந்த பாபாசாகேப் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை விமான நிலையத்திற்கு சென்று வரவேற்று அழைத்து வந்தவர் அப்பொழுது அம்பேத்கர் அவர்களைச் சந்தித்த சில பிரமுகர்கள், தங்களை அம்பேத்கர் அவர்கள் வழி நடத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டபொழுது, 'நான் உங்களை வழி நடத்துவதா? நாங்கள் பின்பற்றும் தலைவரான தந்தை பெரியார் இங்குதான் உள்ளார்" என குறிப்பிட்டபொழுது, அதுசமயம் தான் உடன் இருந்ததை ஆ. பத்மநாபன் நினைவுபடுத்திக் கூறினார்.
மேனாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்களுடன், ஆளுநர் பொறுப்பில் இருந்தபொழுதும், பின்னரும் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். ஆ. பத்மநாபன் ஆவார். எப்பொழுது சந்திக்கச் சென்றாலும், கே.ஆர். நாராயணன், தன்னிடம் வழமையாகக் கேட்பது - 'கலைஞர் எப்படி இருக்கிறார்? வீரமணி எப்படி உள்ளார்? பெரியார் இயக்கம் எப்படி இருக்கிறது?' என மிகவும் அக்கறையுடன் விசாரிப்பாராம். அந்தக் கொள்கை உணர்வின் அடிப்படையில்தான் திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை மேனாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் திறந்து வைத்தார்.
தந்தை பெரியார் தொடர்ந்து போராடி ஒடுக்கப்பட்ட மக்கள் பொதுத் தெருவில் நடந்து செல்லும் உரிமையை பெற்றுத் தந்த கேரளா - வைக்கம் பகுதியில் பிறந்தவர் கே.ஆர். நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னர் பாபுஜி என அன்போடு அழைக்கப்படும் பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் சென்னைக்கு வரும் பொழுதெல்லாம் போர்ட் டிரஸ்ட் குப்புசாமி அவர்களுக்கு தகவல் வந்துவிடும். தான் சென்று சந்திப்பதை வழக்கமாகக் கொண்டதை ஆ.பத்மநாபன் அவர்கள் நினைவுபடுத்தினார். ஆசிரியர் அவர்களும், பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் தந்தை பெரியார் மீதும், அவர்தம் இயக்கத்தின்மீதும் பற்று, அக்கறை கொண்டிருந்ததை குறிப்பிட்டதுடன் சென்னைக்கு வரும் நேரங்களில் பெரியார் திடலுக்கு வருவார் அல்லது தன்னை சந்திக்க வரச் சொல்லி அழைத்து பேசி விட்டுச் செல்லுவதை பாபுஜி வழமையாகக் கொண்டிருந்தார் என தமிழர் தலைவர் பழைய நாள்களை நினைவு கூர்ந்தார்.
ஆசிரியர்அவர்கள் ஆ. பத்மநாபன் அவர்களுடனான உரையாடலின் பொழுது மேலும் குறிப்பிட்டதாவது:
"1988 களில் எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின்னர் நிலவிய தமிழ்நாடு அரசியல் சூழலில், குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சி பிறப்பிக்கப்பட்டது. அப்பொழுது ஆளுநரின் ஆலோசகராக ஆ. பத்மநாபன் அவர்கள் பொறுப்பில் இருந்தார். அந்தச் சூழலில் தனக்குள்ள அதிகார வரம்பினை சரியாகப் பயன்படுத்தி, சென்னை - எழிலகம் வளாகத்தில் (கடற்கரை சாலை - உழைப்பாளர் சிலை அருகில்) பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் சிலையினை அமைப்பதற்கு ஆவன உத்தரவினை வழங்கியவர் ஆ. பத்மநாபன் அவர்கள். பின்னர் 1989இல் கலைஞர் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற நிலையில் பாபுஜிக்கு சிலை அமைத்திடும் பணிகள் தொடங்கப்பட்டு அவரது சிலையினை 28.6.1990 அன்று கலைஞர் திறந்து வைத்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் அன்று நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் அவர்கள் சம்பூர்ணானந்த் சிலையை திறந்து வைத்தார் (பொத்தானை அழுத்தித்தான் திறந்து வைத்தார்) என்ற காரணத்தால் சிலை தீட்டுப்பட்டு விட்டது என திறக்கப்பட்ட சிலையினை ஆதிக்கவாதிகள் 'கங்கை நீர்' ஊற்றிக் கழுவினார்கள். அப்படி அதிகார நிலையில் இருந்த போதிலும் அவமதிக்கப்பட்ட பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் சிலையை தமிழ்நாட்டில் சரியான இடத்தில் திறந்து வைத்த பெருமை அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களையே சாரும். சிலை அமைப்பதற்கான அனுமதி மற்றும் ஆவன அதிகாரங்களை அளித்து வழி ஏற்படுத்தியதில் அன்றைய ஆளுநர். ஆலோசகர் என்ற நிலையில் ஆ. பத்மநாபன் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு.
அரை மணி நேர சந்திப்பு - உரையாடல் என்ற நிலையிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுகளை அந்த நிகழ்வுகளின் அங்கமாக இருந்த இரு பெருமக்கள் பேசியது ஓர் ஆவணப் பதிவாக - அடுத்த தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய பதிவாகவே இருந்தது.
ஆசிரியர் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, தானே எழுந்து சென்று எவருடைய உதவியும் இன்றி, ஆப்பிள், மாதுளைப் பழங்களை எடுத்து வந்து ஆசிரியருக்கு அளித்து மகிழ்ந்தார்.
அவரிடம் அளிக்கப்பட்ட ஆசிரியர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலரைப் பார்த்து - ஆசிரியரின் முகப்பு ஓவியத்தைப் பார்த்து- 'இப்படிப்பட்ட தலைவர் நமக்குத்தான் உள்ளார். இந்தியாவில் வேறெங்கும் ஆசிரியரைப் போன்ற தலைவரைப் பார்க்க முடியாது' என மலரைப் பார்த்து ரசித்துப் பாராட்டினார். அன்று வெளிவந்த 'விடுதலை' ஏட்டினையும் பெற்று படித்துப் பார்த்தார். 94ஆம் அகவை தொடங்கிய நிலையிலும் ஆ. பத்மநாபன் அவர்களிடம் இருந்த வளங்குன்றா புலனுணர்வு, வியப்படைய வைத்தது. ஆ. பத்மநாபன் அவர்களின் இல்லம் சென்று வாழ்த்தி மகிழ்ந்த தமிழர் தலைவரின் கடமை, கொள்கை உறவும் வியந்து போற்றுதலுக்குரியது.
வியப்பின் வடிவங்களாக வாழும் வரலாற்று நாயகர்கள் இருவரது சந்திப்பு - உரையாடல், கருத்துப் பற்றாளர்களுக்கு கனிவான ஒரு விருந்து; நேரில் பார்த்துச் சுவைத்தது அனைவரும் அறிந்திட வேண்டும் என்பதுதான் இந்தப் பதிவின் நோக்கம்.
ஆசிரியர் - ஆ. பத்மநாபன் சந்திப்பின் பொழுது ஆ. பத்மநாபன் அவர்களின் துணைவியார், ஆ. சண்முகம் (மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி- ஆ. பத்மநாபனின் இளைய சகோதரர்), ப. ஆனந்தகுமார், ப. ரவி (மகன்கள்) மற்றும் சரசுவதி (மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி) மற்றும் உறவினர்கள் சிலர் இருந்தனர்.
விடை பெற்றுக் கொண்ட ஆசிரியர் அவர்கள், இருக்கையிலேயே இருந்திட வேண்டியும், எப்பொழுதும் போல ஆ. பத்மநாபன் வாசல் வரை வந்து ஆசிரியர் அவர்களை வழி அனுப்பி வைத்தார். தமிழர் தலைவருடன் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் சென்றிருந்தார்.
தொகுப்பு: வீ. குமரேசன்



No comments:
Post a Comment