எனது 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை என் கருத்தைக் கேட்காமலேயே சிறப்புடன் ஏற்பாடு செய்தனர் கழகப் பொறுப்பாளர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

எனது 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை என் கருத்தைக் கேட்காமலேயே சிறப்புடன் ஏற்பாடு செய்தனர் கழகப் பொறுப்பாளர்கள்!

இந்த விழாவில் பங்கேற்றுப் பெருமைப்படுத்திய தலைவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

வெளிநாட்டில் உள்ள எம் குடும்பத்தினர் 90 ஆம் ஆண்டைக் காரணம் காட்டி சென்னை வந்து என்னுடன் தங்கி மகிழ்ந்தனர்! 

அவர்களின் அன்புக்கட்டளைப்படி 3 நாள்கள் வெளியில் சென்றோம்- தந்தை பெரியார் போராடி வென்ற வைக்கம் சென்றோம்!

அதன் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் - கேரள முதலமைச்சரோடு கலந்து பெருவிழா எடுப்பார் என்பது உறுதி!

2023 நவம்பரில் கழகத்தின் சார்பில் ஜாதி ஒழிப்புப் பேரணி - மாநாட்டையும் நடத்துவோம்!

தமிழர் தலைவர்  ஆசிரியர் அறிக்கை

வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் வைக்கம் வீரர் தந்தை பெரியார். வைக்கம் நிகழ்வின் நூற்றாண்டு விழா 2024 இல் வருகிறது. தமிழ்நாடு அரசின் முதலமைச் சரும், கேரள முதலமைச்சரும் இணைந்து அவ்விழாவை சிறப்புடன் நடத்துவர் என்பது உறுதி. அடுத்தாண்டு (2023) நவம்பரில் கழகத்தின் சார்பில் ஜாதி ஒழிப்புப் பேரணி - மாநாடு நடத்தப்படும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

எனது 90 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, எனது பொதுப் பணியை, அதனால் எனக்கும், நமது லட்சியப் பயணத் தோழர்களுக்கும் ஏற்படும் பெரும் உற்சாகத்தைப் பெருக்கவே, எதையும் என்னிடம் கலக்காமலேயே, கழகத் துணைத் தலைவரும் மற்றும் அனைத்துக் கழக உறவுகளும் பொங்கச் செய்து எனக்கு  அறிவித்தனர்.

என்னை மேலும் அயர்வறியாது ஆர்வத்துடன் கழகக் கடமையாற்றிட, மக்களுக்குத் தொண்டு செய் வது, காலநேரம் பாராது - கண்துஞ்சா, மெய்வருத்தம் பாராத, நன்றியை எதிர்பார்க்காத, மானம்பாராத தொடர் பணியாக இருக்கவே நமது இயக்கத்தவர்கள் மட்டுமல்ல, அனைத்துக் கட்சிகளில், இயக்கங்களில் உள்ள கொள்கை உறவுகளும், நமது தலைவர்களும், நமது மானமிகு முதலமைச்சரும், அமைச்சர் பெரு மக்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களான பெருந்தகையாளர்களும் - தாராளமாக ‘விடுதலை' சந்தாக்களை வாரி வழங்கி வருகின்றனர்!

உண்மையான ‘‘ஆனந்தனாக'' வாழ்வதில் 

எனக்கு எத்தனை எத்தனை ஆனந்தம்! 

கொள்ளை மகிழ்ச்சி!!

எனது உற்சாகம் இளமையோடு என்றும் திகழ இவற்றைவிட நல்ல சத்துணவு, பலம் தரும்  பானம் எனக்குத்தான் வேறு எதுவோ?

அறிவு ஆசானை 1944 இல் பார்த்துப் பரவசப்பட்டு, ‘‘பற்றுக அந்தப் பற்றற்றாரின் பற்றினை'' என்று என்னை அவருள் கரைத்துக்கொண்டு, அவர்தம் அறிவுப் பாடங்களை அன்றாடம் சுவாசித்து, எனது மூச்சுக் குழாய் திணறல் அற்று இயங்கும் வண்ணம் உண்மை யான ‘‘ஆனந்தனாக'' (புத்தரின் உண்மையான சீடர்) ஆக்கிக் கொண்டு வாழ்வதில் எனக்கு எத்தனை எத்தனை ஆனந்தம்! கொள்ளை மகிழ்ச்சி!!

இதற்கிடையில் இங்குள்ள நமது கழகப் பொறுப் பாளர்கள் விழாவாக இந்த சாமானியனின் வாழ்வு நீட்டத்தை ஆக்கி மகிழ்ந்துள்ள நிலையில், எனது உழைக்கும் உறுதி, ஓராயிரம் மடங்கு உயர்ந்த நிலை யையே எட்டி வருகிறது!

எப்போதும் எனது வாழ்வு, இல்லறப் பொது வாழ்வுதானே!

எனக்கு முன்னுரிமை - எனது கொள்கை உறவுகள்தானே - கழக வரவுகள்தானே!

எனக்கு முன்னுரிமை - எனது கொள்கை உறவு கள்தானே - கழக வரவுகள்தானே! அதன் பின்னரே எனது குருதி உறவுகள்.

இந்த உணர்வு என்னைப் பற்றிக் கொண்டது பலப்பல ஆண்டுகட்கு முன்பே!

என்றாலும், குருதி உறவுகளின் பாசத்தை, அதிலும் கொள்கை வழியில் மூன்றாம் தலைமுறைப் பெயர்த்தி, பெயரன்கள் தோழமையை மதிக்கத்தானே வேண்டும்.

இந்தத் தலைமுறையில் அவர்களிடமிருந்து நாம் கற்கவேண்டியது அதிகம் உள்ளது என்பது கூச்சப் படாது ஒப்புக்கொள்ளப்படவேண்டிய ஒரு மறுக்க முடியாத மகத்தான உண்மையே!

விழா வெளிச்சம் அவர்களைக் 

கட்டிப் போட்டுவிட்டது

கரோனா (கோவிட்-19) பெருந்தொற்றின் அச் சுறுத்தல் பாதிப்பிற்குப் பின், வெளிநாட்டிலிருந்து அனைவரும் வந்து, சந்தித்து மகிழ இந்த 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை ஒரு வாய்ப்பாகக் கொண்டு ஒன்று திரண்டு வந்தனர்.

வந்தவர்களுடன் வழக்கம்போல் என்னால் அதிக நேரத்தைச் செலவழிக்க முடியாமல், என் பணியில் என் கவனம் பாய்ச்சலாக இருப்பதை - இருந்ததைக் கண்டு அவர்களுக்குப் பீறிட்டது ‘செல்லக் கோபம்' - காட்ட முடியாத அளவுக்கு விழா வெளிச்சம் அவர்களைக் கட்டிப் போட்டுவிட்டது.

குருதி உறவுகளின் அன்புக் கட்டளை!

2 ஆம் தேதி முடியும்வரை காத்திருந்து, அடுத்த நாள் (3.12.2022) எல்லோரும் வந்து, ‘‘எங்களிடத்தில், எங்களுடன் நீங்கள் இருவரும் தனியே நேரத்தைச் செலவழிக்கவேண்டும்; அதற்கு எங்கள் திட்டப்படி நீங்கள் ஒத்துழைப்புத் தரவேண்டுமென'' அன்புக் கட்டளையிட்டு, ‘‘நாளை வெளியே புறப்பட்டு, மூன்று நாள் கழித்து வீடு திரும்புகிறோம் - எங்கள் விடுமுறை முடிய சில நாள்கள்தான் இருக்கிறது - (வெளிநாட்டில்) பணிக்குத் திரும்பவேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது'' என்று கூறி) ‘‘இந்த மூன்று நாள்களும் எங்களின் அன்பினால் பிணைக்கப்பட்ட ‘பிணைக் கைதிகள்'போல் நீங்கள் இருக்கவேண்டும்'' என்றனர்!

நன்றித் திருவிழாவை தந்தை பெரியார் என்ற அந்த மகத்தான ஆசானுக்கு தெரிவிக்க...

ஒப்புக்கொண்டோம் - விமான நிலையம் சென் றோம் - அப்போதுதான் இவர்கள் திட்டம் புரிந்தது. அனைவருக்கும் பிடித்த ஒரு ஊருக்கு நாம் சென்று தங்கப் போகும் திட்டம் என்று கூறி, இந்திய வரலாற்றின் முதல் சமூக மனித உரிமை அறப்போர் தொடங்கிய வைக்கம் பகுதிக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் சுற்று வட்டாரத்தில் தங்க வைத்து - அடுத்த நாள் வைக்கம் தந்தை பெரியார் நினைவகத்திற்கு அனைவரும் சென் றோம். இளையோர்  வளர்ந்த நிலையில், வரலாற்றுச் சாதனைகளை மேலும் ஆழமாக மனதில் பதிய வைத்து, அந்த வேரின்றி இன்று விழுதுகள் இப்படி பட்டங்களும், பவிசுகளும் பெற்றிருக்க முடியுமா? என்பதை உணர்ந்து, நன்றித் திருவிழாவை தந்தை பெரியார் என்ற அந்த மகத்தான ஆசானுக்கு தெரிவிக்க வாய்ப்பை ஏற்படுத்தினர்.

நாங்கள் எப்போதும், எந்த ஊருக்கும் சுற்றுலா சென்றதில்லை; கற்றுலாவுக்குத்தான் கடமையாற்றிட, களப்பணியில் வென்றிட செல்லும் பழக்கம். அதை இளம்தலைமுறையும் உணர்ந்து இப்படிச் சரியாக திட்டமிட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை ஊற்றாக்கியது!

கண்டோம் - கண்டார்கள் - களித்தார்கள்!

எனது தலைமையில், அமைச்சர் 

டாக்டர் நாவலர் திறந்து வைத்தார்!

22 ஆண்டுகளுக்குமுன் (1994) அந்த வைக்கத்தில் நினைவகமும், தந்தை பெரியார் சிலையும் (காட்சியகம் உள்பட) தமிழ்நாடு அரசு சார்பில் அன்றைய முதல மைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களது சீரிய முயற்சி- ஒத்துழைப்போடு, உருவாக்கப்பட்டது. அதன் பிறகு மேனாள் முதலமைச்சர் என்ற பெருமைபடைத்த, வைக்கம் நகரைச் சார்ந்த எம்.ஜி.ஆர் அவர்களின் துணைவியார் திருமதி.வி.என்.ஜானகி அம்மையார் தனது நிலம் ஒருபகுதியை இதற்கு வழங்கி, நினைவகம் உருவாக்கப்பட்டது.  எனது தலைமையில், அமைச்சர் டாக்டர் நாவலர் திறந்து வைத்தார்.

எனது தலைமையில் நடந்தது அன்று! 

அதன் பிறகு, ஒரு ஜாதி ஒழிப்பு மாநாடுகூட திராவிடர் கழகத்தால் நடத்தப் பெற்று, ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பேரணியும்கூட நடந்தது!

2024 இல் நூற்றாண்டு விழா!

வருகிற 2024 இல் வைக்கம் சத்தியாகிரகம் என்ற அந்தப் போராட்ட வெற்றியின் நூற்றாண்டு வருகிற நிலையில், நிச்சயம் அதனை நமது இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களும் கலந்து, ஒரு பெரும் சமூகநீதி - மனித வெற்றித் திருவிழாவாக புதுப்பொலிவோடு, ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கொள்கையின் வலிமையோடு நடப்பது உறுதி!

99 ஆம் ஆண்டு நினைவாக 2023 இல் 

ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாபெரும் மாநாடு

அதை மக்கள் மத்தியில் பரப்ப, வருகிற 2023 நவம்பர் மாதம் - 99 ஆம் ஆண்டின் நினைவாக வைக்கம் வெற்றி விழா - ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாபெரும் மாநாடாக வைக்கம் வீதிகளில் கொள்கைப் பேரணியோடு நடத்திட, நாம் பிரச்சார அடை மழையைப் பொழிவோம்!

நமது முற்போக்கு அமைப்புகள், இடதுசாரி தோழர்களின் முழு ஒத்துழைப்பு நிச்சயம் கிட்டும் என்ற நம்பிக்கையும் நமக்கு உண்டு;  ‘காலத்தை வென்ற கடமை வீரர்'களுக்குக் காட்டவேண்டிய மரியாதையல்லவா? அதைச் செய்யவேண்டியது நமது கடமையல்லவா?

அய்யா நினைவகம் மேலும் பொலிவு பெற நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்து, எழில் குலுங்கும் ஏற்றமிகு நினைவகமாக நடத்த - செய்தி தகவல் தொடர்புத் துறையை முடுக்கி விடவேண்டும் என்று அங்குள்ள பலரும் நம்மிடத்தில் தெரிவித்தனர்.

இந்த மகிழ்ச்சியில் திளைத்தோம். மேலும் போனஸ் மகிழ்ச்சி - கூடுதலாகக் கிடைத்தது - கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்பமை ஜஸ்டீஸ் சா.மணிக்குமார், தனது வாழ்விணையருடன் அங்கு சென்று, அய்யாவிற்கு புகழ் வணக்கம் செலுத்தியது நம்மை புளகாங்கிதம் அடையச் செய்தது!

நன்றி காட்டுவோர் எண்ணிக்கை 

உலகெங்கும் பெருகிய வண்ணம் உள்ளது!

பெரியாரின் தொண்டை நினைத்துப் பெருமையும், நன்றியும் காட்டுவோர் எண்ணிக்கை உலகெங்கும் பெருகிய வண்ணம் உள்ளதை 90 வயது இளைஞன் பார்த்து பூரித்து பீடுநடை போடுகின்றேன், நன்றி!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

13.12.2022

No comments:

Post a Comment