குறுகிய காலத்தில் ஓய்வுபெறும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமனம் உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 23, 2022

குறுகிய காலத்தில் ஓய்வுபெறும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமனம் உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு

புதுடில்லி, நவ. 23- குறுகிய காலத்தில் ஓய்வுபெறக்கூடிய வகையிலேயே தலைமைத் தேர்தல் ஆணையர் களை ஒன்றிய அரசு நியமிப்பதாக உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டி யுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் சீர் திருத்தம் செய்ய வேண்டும் என் பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று (22.11.2022) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஜோசப் ஒன்றிய அரசு மீது அடுக்கடுக்காக குற்றச் சாட்டுக்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்து ஒன்றிய அரசு பேசுவதெல்லாம் வெறும் வாய்வார்த்தைதான். தலைமை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுபவர்கள் குறுகிய காலத்தில் ஓய்வு பெறுவதை கருத் தில் கொண்டே ஒன்றிய அரசு நியமனங்களை மேற்கொள்கிறது.

தலைமை தேர்தல் ஆணையர் களின் அதிகாரத்தை வரையறுக்கும் தேர்தல் ஆணைய சட்டம் 1991இன் பிரிவு 4இல் அவர்களின் பதவிக் காலம் அதிகபட்சம் 6 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை அவர்கள் தேர்தல் ஆணையர்களாக நீடிக்கலாம் என சட்டம் கூறுகிறது. இந்த சட்டத் தின் 2ஆவது அம்சத்தைக் கருத்தில் கொண்டே தலைமை தேர்தல் ஆணை யர்களை அரசு நியமிக்கிறது. 1950களில் தலைமை தேர்தல் ஆணையர்கள் 8 ஆண்டு காலம் அந்த பொறுப்பில் இருந்துள்ளனர். ஆனால், கடந்த 2004க்குப் பிறகு அவர்கள் சில நூறு நாட்கள் மட் டுமே தலைமை தேர்தல் ஆணை யர்களாக இருக்க முடிகிறது. அவர் களுக்கு 65 வயது ஆகிவிட்டதை காரணம் காட்டி அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு விடுகிறது. இதனால், தேர்தல் ஆணையம் பலவீனமாகவே இருக்கிறது.

கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 8 ஆண்டுகளில் 6 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாக இருந்து உள்ளனர். தற்போதைய தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 2015இல் இருந்து 2022 வரையிலான 7 ஆண்டுகளில் 8 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாகி உள்ள னர். தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட இருப்பவர்களின் பிறந்த தேதி அரசிடம் இருப்பதால், அதை அரசு பயன்படுத்திக்கொள் கிறது. இது மிக மிக மிக மோசமான நடவடிக்கை. 1990 முதல் 1996 வரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்து தேர்தல் ஆணையத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற் கொண்ட டி.என். சேஷன் போன்ற வர்கள் தேர்தல் ஆணையத்திற்குத் தேவை. பலவீனமான தேர்தல் ஆணையர்களின் தோள்களில் அதிகப்படியான அதிகாரச் சுமை உள்ளது. 

எனவே, இந்த பொறுப்புக்கு மிகச் சரியான நபர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் விரும்புகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment