மக்கள் மன்றம் வெல்லும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

மக்கள் மன்றம் வெல்லும்!

திராவிடர் கழகத்தின் சார்பில் - ஒன்றிய பிஜேபி அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட 103ஆவது அரசமைப்புச் திருத்த சட்டம் (EWS) என்பது சமூகநீதிக்கு எதிரானது - பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியது என்ற உண்மையின் அடிப்படையிலும் அதனைக் கண்டிக்கும் வகையிலும், எதிர்க்கும் வகையிலும், அந்தச் சட்டம் பின் வாங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும் சமூகநீதியில் அக்கறை உள்ள அனைத்துக் கட்சிகள்  - அமைப்புகளின் கூட்டம் நேற்று (15.11.2022) சென்னைப் பெரியார் திடலில் கூட்டப்பட்டது.

இடஒதுக்கீடு என்பது சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்ட மக்களுக்கானது என்ற அடிப்படையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தமே கொண்டு வரப்பட்டது. 

1928ஆம் ஆண்டு முதலே தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்து வந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து இருபார்ப்பனர்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் செல்லாது என்று தீர்ப்பளித்த நிலையில் தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே கொந்தளிக்கும் எரிமலையாகப் பொங்கி எழுந்தது.

அதன் விளைவாகக் கொண்டு வரப்பட்டதுதான் முதல் சட்டத் திருத்தம், அப்பொழுதேகூட சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்கிற அளவுகோலோடு பொருளாதார அளவு கோலையும் சேர்க்க வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டபோது வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக 5 பேரும், எதிராக 243 பேரும் வாக்களித்தனர் என்பதை மறந்து விடக் கூடாது.

தமிழ்நாடு அரசு கூட்டிய சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தில்கூட முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலம் காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்கள் யாரோ, அவர்களுக்குத்தானே புதிய வாய்ப்புக் கதவுகள் திறக்கப்பட வேண்டும். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்அடிக்கடி குறிப்பிடுவது போல, பசியேப்பக்காரனுக்குத் தானே முதல் பந்தியில் இடம் அளிக்கப்பட வேண்டும். புளிச் சேப்பக்காரனுக்குத்தான் முதல் பந்தியில் முதலிடம் என்றால், அது எப்படி சமூகநீதியாகும்?

1928இல் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற அமைச்சரவையில் திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்களின் முயற்சியால் கொண்டு வரப்பட்ட வகுப்பு வாரி பிரதிநிதித்துவ ஆணையில் (ஆணை எண் 744, நாள்: 13.9.1928) நூறு சதவீதம் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு பகிர்ந்தளிக்கப்பட்டதே!

மொத்த இடங்கள் 12 எனில், அதில் பார்ப்பனரல்லாதார்க்கு (இந்துக்கள்) 5 இடங்கள், பார்ப்பனர்களுக்கு 2 இடங்கள், முகமதியர்களுக்கு 2 இடங்கள், ஆங்கிலேயர் உள்பட கிறித்தவர்கள், ஆங்கிலோ - இந்தியர்களுக்கு 2 இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு இடம் என்று வகைப்படுத்தப்பட்டு வந்ததே.

அதன்படி பார்ப்பனர்களுக்கு 16 விழுக்காடு கிடைக்கப் பெற்றதே, இந்த வாய்ப்பைக் கெடுத்துக் கொண்டவர்கள் யார்? அவர்கள்தானே!

முன்னேறியவர்களுக்காக மூக்கால் அழும் பார்ப்பனர்கள் இதற்குப் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.

16 விழுக்காடு இடஒதுக்கீட்டைச் சுளையாக விழுங்கிய பார்ப்பனர்கள் நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பார்களே, அதே போல, அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்று, அந்த வகுப்புவாரி உரிமைப் பிரதிநிதித்துவ ஆணையைத் தோற்கடித்தவர்கள்தானே.

நேற்றைய தீர்மானத்தில்கூட, இது சுட்டிக்காட்டப் பட்டுள்ளதே! ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைக் கொண்டு வரத் தயாரா?

உயர் ஜாதியினரின் எண்ணிக்கை எத்தனை விழுக்காடு என்று தெரிந்துகொள்ளலாமே! 3 விழுக்காடு மட்டுமே பார்ப்பனர்கள் இருந்தால்,  அந்த அளவில் ஏற்றுக் கொள்ள முன் வருவார்களா?

உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் 10 விழுக்காடு என்பதற்கான தரவுகள், புள்ளி விவரங்கள் என்ன? சட்டத் திருத்தம் கொண்டு வந்த ஒன்றிய பிஜேபி அரசும் சொல்லவில்லை; இதன் மீதான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும் கேட்கவில்லையே ஏன்?

இடஒதுக்கீடு தொடர்பான வேறு வழக்குகளில் இதே நீதிமன்றங்கள்  கேட்கும் முதல் கேள்வி என்ன? எந்த அடிப்படையில், தரவுகளின் அடிப்படையில் இந்த விழுக்காடு என்று கேட்டதா இல்லையா? உயர் ஜாதியில் பொருளாதார நலிவுற்றோருக்கு 10 விழுக்காடு என்பதில் மட்டும் இந்த வினாவை உச்சநீதிமன்றம் எழுப்பாதது ஏன்? ஏன்? ஏன்?

சட்டம் செய்தாகி விட்டது - உச்சநீதிமன்ற தீர்ப்பும் அதனை ஏற்றுக் கொண்டு விட்டது  என்பதால், சமூக நீதிக்குரிய மக்கள், சமூகநீதி இன்னும் தேவைப்படும் மக்கள் கை கட்டி, வாய்ப் பொத்தி வறிதே கிடக்க வேண்டுமா?

எல்லா சக்திக்கும் மேலானது மக்கள் சக்தி.

முதல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டபோது, இப்பொழுதானே அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. அதற்குள் சட்டத் திருத்தம் தேவையா? என்று நாடாளுமன்றத்தில் வினா எழுப்பப்பட்டபோது, அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு, இடஒதுக்கீட்டுக்காக தமிழ்நாட்டில் நடைபெறும் மக்கள் கிளர்ச்சியைச் சுட்டிக்காட்டி, முதல் திருத்தத்திற்குப் பச்சைக் கொடி காட்டினாரே!

அதுதான் இப்பொழுதும்! நீதிமன்றத்தைவிட வலிமையானது வீதி மன்றம் - மக்கள் மன்றம் என்று காட்டுவோம். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இது தொடர்பாகப் பொதுக் கூட்டங்களை பேரணிகளை நடத்தி மக்களை எழுச்சியுறச் செய்வோம்!  முதற் கட்டமாக தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் பெருந்திரள் பொதுக் கூட்டத்தை நடத்துவோம் என்று திராவிடர் கழகம் முன்னெடுத்த - நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும்பான்மை மக்களின் உரிமைப் போராட்டம் இது! போராடுவோம்,  வெற்றி பெறுவோம், வெற்றி கிட்டும் வரை போராடுவோம்! 

வெற்றி நமதே!

No comments:

Post a Comment