ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: 10% இடஒதுக்கீட்டில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியிருப்பினும் அய்ந்து நீதிபதிகளும் பொருளாதார அளவுகோல்படி இடஒதுக்கீடு வழங்குவதை ஆதரித்திருப்பது இடஒதுக்கீட்டின் அடித்தளத்தைத் தகர்த்துவிடவில்லையா?

- சகா சசிகுமார், பெரவள்ளூர்

பதில் 1: நிச்சயமாக. இது பற்றிய தெளிவை ஏற்படுத்த சமூகநீதி மீது ஏற்பட்டுள்ள ஆதிக்கத் தாக்குதல்கள் பற்றி விளக்கிட மக்கள் இயக்கம் நடத்தி, நாடு தழுவிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அனைத்து சமூகநீதிப் போராளிகளின் முக்கியக் கடமையாகும்!

அரசியல் சட்ட அமர்வில் அத்துணை பேரும் உயர்ஜாதிக்காரர்களே தான் இடம் பெற்று இருந்தது வியப்பிலும் வியப்பு அல்ல.

மேலேயேயும் சமூகநீதி இடம் அமலாக்க வேண்டிய தேவையை வலியுறுத்த வேண்டும்.

---

கேள்வி 2: ஆடுகளின் பாதுகாப்புக்கு ஓநாயிடம் ஆலோசனை


கேட்பதைப் போல் 10% இடஒதுக்கீடு வழக்கில் அய்ந்து பேரும் பார்ப்பன நீதிபதிகளே நியமிக்கப்பட்டபோதே நாம் ஆட்சேபம் தெரிவித்திருக்க வேண்டாமா?

- குமரேசன், திண்டுக்கல்

பதில் 2: ஒருவர் போட்ட மனுவையே அச்செய்தி தள்ளப்பட்டதோடு, பரவாமலும் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஆடுகளின் பாதுகாப்பு இப்படி பரிதாபத்திற்குரியதாக ஆக்கப்பட்டுவிட்டது!

---

கேள்வி 3: முன்பு ஒன்பது நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை, அதனைவிடக் குறைவாக அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வால் மாற்றிவிட முடியுமா?

- சிவசுப்பிரமணியம், தாம்பரம்

பதில் 3: மேலே சொன்ன ஆதிக்கத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டால்தான் உண்மையாக எதுவும் கிடைக்கும்.

---

கேள்வி 4: பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள், நடைபாதைகள் எங்கெங்கும் பிச்சைக்காரர்கள். ஆனால், ஆளுநரின் தேநீர் விருந்து 22 இலட்சங்களில்! இது என்ன லூயி மன்னர்களின் சாம்ராஜ்யமா?

- வேலுசாமி, மதுரை

பதில் 4: மக்கள் எழுச்சி மூலமே இவைகளை ஜனநாயகத்தில் தடுத்து நிறுத்திட முடியும்.

---

கேள்வி 5: இந்த நாட்டில் ஒருவரின் வருமானம் ஆண்டுக்கு இரண்டரை லட்சத்தைத் தாண்டினால் அவர் பணக்காரர்; வருமானவரி செலுத்த வேண்டும். ஆனால், உயர்ஜாதியினருக்கு 8 லட்சம் வருமானம் வந்தாலும் அவர் ஏழை. அவருக்கு இடஒதுக்கீடா?

- ஆறுமுகம், புதுக்கோட்டை

பதில் 5: "ஏழைகளுக்கு" இந்த 103வது அரசியல் சட்ட திருத்தம் தரும் விசித்திர விளக்கம் - உயர்ஜாதி ஏழைகள் - அதிலும் ஒரு மாதத்திற்கு ரூ.67,000 சம்பாதிக்கும் ஏழைகள் - `ஏழை' விளக்கம் இதே ஒன்றிய அரசில் பல இடங்களில் பல மாதிரி! - விளக்கிட வேண்டும்.

---

கேள்வி 6: ஆளுநரின் அடாவடித்தனம் அளவு மீறுகிறது. அவரைப் பற்றி குடியரசுத் தலைவரிடம் மனு கொடுப்பதால் ஆகக் கூடியது என்ன?

- பிரபாகர், திருத்தணி

பதில் 6: அது ஒரு ஜனநாயக முறை - அரசியல் சட்ட முறை. அதனால், பெரும்பயன் விளைவதைவிட நாடு புரிந்துகொள்ளும்; மக்கள் எழுச்சியே சரியான விடையைப் பெற்றுத் தரும்.

---

கேள்வி 7: நீதிமன்றங்கள் ஒன்றும் நெருப்புக் கோழிகளல்ல, மணலில் தலை புதைத்துக்கொள்ள என்று அவாள் நீதிபதி சாமிநாதன் கூறியிருப்பது பற்றி தங்கள் கருத்து என்ன?

- ரகுநாதன், கரூர்

பதில் 7: அதே நேரத்தில் அவைகள் வான்கோழிகள்போல் ஆடலாமா? என்பதே நமது கேள்வி.

---

கேள்வி 8: அண்ணாமலை ஒரு மலைக் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் வீட்டில் உணவு உண்டதை பீற்றிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது? சங்கராச்சாரியோடு சரிசமமாக அமர்ந்து அவர் சாப்பிட்டுக் காட்டுவாரா?

- கண்ணபிரான், வந்தவாசி

பதில் 8: பல ஊர்களில் உணவு விடுதிகளில் சாப்பிடுவோர் ஜாதி பார்த்தா உள்ளே விடுகிறார்கள். இப்போது எல்லா ஜாதியினரும் ஜாதி தெரியாமல்தானே சாப்பிடுகிறார்கள்! ஆனால், ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் கலந்துகொண்ட பட்டியல் இனத்தவர் கொடுத்த சாப்பாட்டை வாங்கி ஊருக்கு வெளியே தூக்கி எறிந்த கதையை "நான் ஏன் ஹிந்துவாக இருக்க முடியாது?" என்னும் தலைப்பில் "பன்வர் மெக்வன்ஷி" எழுதிய நூலை அவருக்கு அனுப்புங்கள்.

---

கேள்வி 9: மல்லிகார்ஜுன கார்கே காங்கிஸ் தலைவராகத் தேர்வானபின் அவர் பற்றிய செய்திகள்பெரிதாக செய்தித் தாள்களில் காண முடியவில்லையே?

- ராமகிருஷ்ணன், கூடுவாஞ்சேரி

பதில் 9: திட்டமிட்ட இருட்டிப்பு. ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்; அவர் முகத்தில் பிறக்கவில்லையே! அதனால் ஊடக வெளிச்சம் எளிதில் கிடைக்காது!

---

கேள்வி 10:  10% சதவிகித இடஒதுக்கீட்டுத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வதைவிட, 11 நீதிபதிகள் அமர்வுக்கு உத்தரவிடக் கோருவது பொருத்தமாக இருக்காதா?

- முருகேசன், செங்கல்பட்டு

பதில் 10: முதலில் சீராய்வு மனுவை  1. பல அமைப்புகள் மூலம் போடுங்கள்! 2. மக்கள் பிரச்சார இயக்கத்தைத் தொடரட்டும். 


No comments:

Post a Comment