‘திசை' புத்தக நிலையம் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

‘திசை' புத்தக நிலையம் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

 மே 17 இயக்க நிறுவனர் திருமுருகன் காந்தியின் ‘திசை' புத்தக நிலைய திறப்பு விழா!

பயனுள்ள ஒரு பணி - அறிவுத் திருப்பணி - அறிவு கொளுத்துகின்ற பணி!

சென்னை, நவ.29   ‘திசை' புத்தக நிலையத் திறப்பு என்பது பயனுள்ள ஒரு பணி - அறிவுத் திருப்பணி என்று சொல்லவேண்டும். அறிவு கொளுத்துகின்ற இந்தப் பணியை இளைஞர்கள், தோழர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றார் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘திசை' புத்தக நிலையம் திறப்பு

கடந்த 17.11.2022  அன்று காலை சென்னை அண்ணா சாலையில்  உள்ள தேனாம்பேட்டையில் ‘‘திசை'' புத்தக நிலையம்'' திறப்பு விழாவிற்கு முன்னிலையேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் உரை யாற்றினார்.

அவரது உரை வருமாறு:

சிறந்த நூல்களையெல்லாம் 

ஒன்று திரட்டி 

ஒரே இடத்தில்...

சீரிய முயற்சியினால் உருவாக்கப்பட்டு இருக்கக் கூடிய ‘திசை' புத்தக நிலையம் என்ற இந்த அறிவுச் சோலையை, பகுத்தறிவு, முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட ஒரு சிறந்த கருத்துத் தோட்டமாக உருவாக்கி, இதில் இருக்கக்கூடிய கருத்துக் கனிகள் எல்லா மக்களையும் சென்றடையவேண்டும் என்பதற்காக சிறந்த நூல்களையெல்லாம் ஒன்று திரட்டி, இங்கே அருமையான ஓர் புத்தக நிலையத்தை திறந்து வைக்க வந்திருக்கின்ற நம்முடைய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர், திராவிட இயக்கத்தின் போர் வாள், அன்புச் சகோதரர் மானமிகு வைகோ அவர்களே,

அதேபோல, சிந்தனையாளர்களின் சிலைகளைத் திறந்து வைத்த நம்முடைய எழுச்சித் தமிழர், பாராட்டு தலுக்கும், பெருமைக்குரிய சிந்தனையாளர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களே,

அதேபோல, முதல் நூலைப் பெற்றுக்கொண்டு, உயர்நீதிமன்றத்தினுடைய பணிகளுக்காக விரைந்து சென்றிருக்கக்கூடிய மாநிலங்களவை திராவிட முன் னேற்றக் கழக உறுப்பினர் மூத்த வழக்குரைஞர் 

என்.ஆர்.இளங்கோ அவர்களே,

நூல்களைப் பெற்றுக்கொண்ட அருமைத் தோழர்கள் குணங்குடி அனீபா அவர்களே, நெல்லை முபாரக் அவர்களே, எழிலன் அவர்களே,

முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய தோழர் ஓவியர் புருசோத்தமன் அவர்களே, தலைமை ஏற்றிருக்கக்கூடிய தோழர் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு முருகன் காந்தி அவர்களே,

சிறப்பு அழைப்பாளர்களாக இப்புத்தக நிலையத் திறப்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்கின்ற தோழர்கள் பேராசிரியர் வீ.அரசு அவர்களே, தோழர் ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களே, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி கே.எம்.ஷெரீப் அவர்களே, தமிழக மக்கள் புரட்சிக்கழகம் தோழர் அரங்க.குணசேகரன் அவர்களே, தமிழக மக்கள் முன்னணியின் தோழர் புதியவன் அவர்களே, மார்க்சிய பெரியாரிய பொது வுடைமை கட்சியின் தோழர் வாலசா வள்ளுவன் அவர்களே, இந்திய தவ்கித் ஜமாத் தோழர் மகமது அவர்களே, விடுதலை தமிழ்புலிகளின் கட்சி தோழர் குடந்தை அரசன் அவர்களே, தமிழ்ப்புலிகள் கட்சி தோழர் நாகை பெருவள்ளுவன் அவர்களே, தமிழர் விடியல் கட்சியின் தோழர் இளமாறன் அவர்களே, டிசம்பர் 3 இயக்கத்தின் தோழர் பேராசிரியர் தீபக் அவர்களே,

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் சசிக்குமாரன் அவர்களே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினுடைய செயல்வீரர் தோழர் குமரன் அவர்களே, தமிழர் விடுதலைக் கழகத்தினுடைய தோழர் சுந்தரமூர்த்தி அவர்களே, ஊடகவியலாளர்களே மற்றும் அனைத்து இயக்கங்களைச் சார்ந்த தோழர்களே, பெரியோர்களே, நண்பர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரையில் இல்லாமல் இருந்தது!

ஓர் அருமையான புத்தக நிலையம் - மக்கள் விரும் புகிற நூல்கள், குறிப்பாக நம்முடைய இயக்க வெளி யீடுகளாக இருக்கின்ற புத்தகங்கள், அந்தந்த இயக்கத் திலேதான் கிடைக்கும் என்பதைப்போலவும், அதே போல, உலகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்களாக இருக்கின்ற பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றவர்கள், இன்னும் முற்போக்குச் சிந்தனை யாளர்களின் அத்துணைப் பேரின் புத்தகங்களும் ஒரே இடத்திலே கிடைக்கக்கூடிய வாய்ப்பு இதுவரையில் இல்லாமல் இருந்தது.

மே 17 இயக்கத்தின் நிறுவன தலைவர் 

தோழர் திருமுருகன் காந்தி

அதற்காகத்தான் இங்கே, முற்போக்குக் கருத்தாளர் கள், புரட்சியாளர்களின் புத்தகங்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கவில்லையே என்கிற அந்த நீண்ட குறையை நிவர்த்தி செய்யும் வகையில், நம்முடைய மே 17 இயக்கத்தின் நிறுவன தலைவராக இருக்கக்கூடிய தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், இந்தப் புத்தக நிலையத்தை சிறப்பாகத் தொடங்கியிருக்கிறார்.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு

என்று வள்ளுவர் அவர்கள் சொன்னதைப்போல, இரண்டுமே இங்கே அமைந்திருக்கக் கூடிய சூழல் இருக்கிறது.

புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்கள்,

நூலைப் படி - சங்கத்தமிழ்

நூலைப்படி - முறைப்படி

நூலைப்படி

காலையில் படி - கடும்பகல் படி

மாலை இரவு பொருள்படும்படி

கற்பவை கற்கும்படி

வள்ளுவர் சொன்னபடி

கற்கத்தான் வேண்டுமப்படி

கல்லாதவர் வாழ்வதெப்படி? 

பொய்யிலே முக்காற்படி

புரட்டிலே காற்படி

வையகமே ஏமாறும்படி

வைத்துள நூல்களை ஒப்புவதெப்படி? 

தொடங்கையில் வருந்தும்படி

இருப்பினும் ஊன்றிப்படி

அடங்கா இன்பம் மறுபடி

ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி

என்று சொல்லி, ஜாதி எனும் சார்ந்த படி நமக்கெல்லாம் தள்ளுபடி என்று சொன்னார்கள்.

அப்படிப்பட்ட அருமையான கருத்துகளைச் சொல்லக்கூடிய இந்த நூல்களை, நம்முடைய தோழர்கள், குறிப்பாக இளைஞர்கள் இங்கே வந்து பயன்பெறக் கூடிய அளவில் வாங்கி, சிறப்படையவேண்டும்.

இந்த நூல் நிலையம், பல்வேறு வகையில், பெரிய நூல் நிலையமாக வரவேண்டும். ஏனென்றால், இதுபோன்ற எல்லா நூல்களையும் திரட்டி, ஒவ்வொரு தலைப்பு வாரியாக அதைப் பிரித்து வைப்பது எளிதல்ல.

பயனுள்ள ஒரு பணி - 

அறிவுத் திருப்பணி!

புரட்சி இயக்கங்களுடைய வரலாறு, திராவிட இயக் கங்களுடைய வரலாறு, அதேபோல, தியாக தீபங் களுடைய வரலாறு என்றெல்லாம் பிரித்து அழகாக செய்திருக்கிறார்கள்.

ஆகவே, இது பயனுள்ள ஒரு பணி - அறிவுத் திருப்பணி என்று சொல்லவேண்டும்.

ஆகவேதான், அறிவு கொளுத்துகின்ற இந்தப் பணியை இளைஞர்கள், தோழர்கள் நன்றாகப் பயன் படுத்திக் கொள்வார்கள் என்று விழைந்து, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

வளர்க அறிவுத் தொண்டு!

பரவுக, காரணம் அறிவு  அற்றங்காங்கும் கருவி!!

வாழ்க பெரியார்!

வளர்க புரட்சி, பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.


No comments:

Post a Comment