‘‘பெரியார் பேருரையாளர்'' பெரும்புலவர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 4, 2022

‘‘பெரியார் பேருரையாளர்'' பெரும்புலவர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் உரை

 பெரியார் கடவுள் மறுப்பாளர்தான்! ஆனால், கடவுள் நம்பிக்கையாளர்கள் அவரை விரும்புவார்கள்

பெரியார் நீதிபதிகளையும் கண்டிப்பார்; ஆனால், நீதிபதிகள் அவரை விரும்புவார்கள்!

காரணம் பெரியாருக்கு சுயநலம் இல்லை; 

மனிதப் பண்பாடும், மனிதநேயமும்தான் முக்கியம்!

சென்னை அக்.4  பெரியார் கடவுள் மறுப்பாளர்தான்! ஆனால், கடவுள் நம்பிக்கையாளர்கள் அவரை விரும்பு வார்கள். பெரியார் நீதிபதிகளையும் கண்டிப்பார்; ஆனால், நீதிபதிகள் அவரை விரும்புவார்கள்! காரணம் பெரியாருக்கு சுயநலம் இல்லை; மனிதப் பண்பாடும், மனிதநேயமும்தான் முக்கியம்! என்றார் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

‘‘பெரியார் பேருரையாளர்''  பெரும்புலவர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழா

30.9.2022 அன்று மாலை  தஞ்சாவூர் பேருந்து  நிலை யம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் ‘பெரியார் பேருரையாளர்' பெரும்புலவர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழாவிற்குத்  தலைமை தாங்கிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டிய நிகழ்ச்சி!

மிகுந்த மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் வரலாற் றில் பதிவு செய்யப்படவேண்டிய ஒரு நிகழ்ச்சி இது என்ற பெருமையோடும் நடைபெறக்கூடிய பெரும் புலவர் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராம நாதன் அய்யா அவர்களுடைய நூற்றாண்டு என்ற ஒரு சிறப்பான அருமையான கருத்தரங்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்கள். நம் அனைவரையும் நல்ல கருத்து விருந்துக்கு, அறிவு விருந்துக்கு கடந்த இரண் டரை மணிநேரத்திற்கு மேலாக ஆக்கிக் கொண்டிருக்கக் கூடிய இந்த அரங்கத்தில், நம்மை ஊக்கப்படுத்துகின்ற வகையிலும், இங்கே வெளியிடப்பட்ட நூல்கள் - அய்யா இராமநாதன் அவர்களைப்பற்றிய அறிவார்ந்த கருத்துக் கருவூலங்களையெல்லாம் பெற்று, ஊக்கத்தை நூற் றாண்டு விழா குழுவிற்கு அளித்துக் கொண்டிருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேனாள் அமைச்சர் என்பதைவிட, எந்நாளும் திராவிட இயக்கத்தினுடைய ஒப்பற்ற செயல்வீரர், சீரிய செம்மல் என்ற பெருமைக் குரிய அய்யா எஸ்.என்.எம்.உபயதுல்லா அவர்களே,

ஆற்றல் வாய்ந்த பெரும்புலவர்

செந்தலை கவுதமன்

அதேபோல, தமிழ்நாடு அரசின் பார்வேந்தர் விரு தாளரும், நம்முடைய பகுத்தறிவுக் குடும்பம், பெரியார் குடும்பத்தைச் சார்ந்தவரும், பல மாணவர்களை உற்பத்தி செய்திருக்கின்ற மிகப்பெரிய ஆற்றல் வாய்ந்த பெரும்புலவர் செந்தலை கவுதமன் அவர்களே,

நாவலர் ந.மு.வே. நாட்டார் கல்லூரியின் செயலாளர், சிறந்த விருதாளர், ஆழ்ந்த புலமையாளர் அய்யா பெரியவர் கலியபெருமாள் அவர்களே, நாவலர் ந.மு.வே. நாட்டார் அவர்களுடைய கல்லூரி தலைவர், பேராசிரியர், உணர்வாளர் மு.இளமுருகன் அவர்களே,

கரந்தை தமிழ்ச்சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினர், தஞ்சை மாநகராட்சியினுடைய மாமன்ற உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வன் அவர்களே, தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் எழிலரசன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் புத்தகங்களைப் பெற்று அமர்ந் திருக்கக்கூடிய தஞ்சை மாநகராட்சியின் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்களே,

ஒரு நல்ல கடமையை திராவிடர் கழகத்தின் சார்பாக தஞ்சையில் நடத்தப்படும் என்ற அந்த அறிவிப்பை - செம்மைப் படுத்தக் கூடிய வகையில் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்களே,

முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய விழாக் குழு செய லாளர் பொறியாளர் சிறந்த கொள்கையாளர் சித்திரக்குடி தோழர் பழனிராசன் அவர்களே,

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர் களே, மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் அவர் களே, மண்டலத் தலைவர் அய்யனார் அவர்களே, மண்டல செயலாளர் குருசாமி அவர்களே, மாவட்டச் செயலாளர் அருணகிரி அவர்களே, தஞ்சை புலவர் அய்யா கந்தசாமி அவர்களே, மாநகரத் தலைவர் நரேந் திரன் அவர்களே, மாநகர செயலாளர் டேவிட் அவர்களே,

மற்றும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பங்கேற் றுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செய லாளர் அயன் பாதுஷா அவர்களே,

தமிழ்ப் பல்கலைக் கழக பெரியார் அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியர் முனைவர் இராமலிங்கம் அவர் களே, அருமைச் சிந்தனையாளர் திருக்குறள் சோம சுந்தரம் அவர்களே,

மாமன்ற உறுப்பினர் புண்ணியமூர்த்தி அவர்களே, பேராசிரியர் பெரியசாமி அவர்களே, சித்திரக்குடியில் அய்யா ந.இராமநாதன் அவர்களால் செதுக்கப்பட்டு, கொள்கை ரீதியாக இன்றைக்கு வாழ்க்கை முறையை - சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு என்று வாழ்ந்து காட்டக் கூடிய அருமை நண்பர்கள் சித்திரக்குடி அய்யா தோழர் ஆண்டவர் அவர்களே, சித்திரக்குடி கண்ணன் அவர்களே, சித்திரக்குடி கலைக்கோவன் அவர்களே, புலவர் செல்லக் கலைவாணன் அவர்களே, முனைவர் அதிரடி அன்பழகன் அவர்களே,

பகுத்தறிவு சிந்தனைப்பாற்பட்ட ஊடகத் துறை தலைவர் அழகிரிசாமி அவர்களே,

கோபு பழனிவேல் அவர்களே, மகளிரணி செயலாளர் கலைச்செல்வி அவர்களே, நெடுவை ஜெயமணி அவர்களே, மற்றும் அய்யா இராமநாதன் அவர்களுடைய குடும்ப உறவுகளே, கொள்கை உறவுகளே, மற்றும் ஆவடி மாவட்டக் கழக செயலாளர் தோழர் சித்திரக்குடி இளவரசன் அவர்களே,

இன்னும் ஏனைய இயக்கத்தினுடைய அருமைப் பெரியோர்களே, அனைத்து இயக்கங்கள், அமைப்பு களைச் சார்ந்த சான்றோர் பெருமக்களே, புலவர் பெரு மக்களே, ஊடகவியலாளர்களே உங்கள் அனைவருக் கும் அன்பான வணக்கத்தினையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியாரியல் பாடங்கள் - 

உலகளாவிய பாடங்களாகும்

இங்கே முத்தாய்ப்பான விஷயங்கள் என்ன வென்றால், இங்கே புத்தகங்களை நிறைய வாங்கி யிருக்கிறீர்கள். ஆயிரம் பக்கங்களுக்கு மேலாக அய்யா இராமநாதன் அவர்களுடைய பெரியாரி யல் பாடங்கள் - அந்தப் பாடங்கள் உலகளாவிய அளவிற்குப் பாடங்களாகும்.

காலத்தைத் தாண்டிய பாடங்கள் - காலத்தை வெல்லும் பாடங்கள். இன்னும் கேட்டால், காலத்தை முந்தும் பாடங்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு - தந்தை பெரியார் எப்படி சிந்தித்தார்கள் என்பதை - மிக அழகாக, மற்றவர்களால் இவ் வகையில் விளக்க முடியுமா? என்று அய்யப்படும் அளவிற்கு, பெரும்புலவர் இராமநாதன் அய்யா அவர்கள், ஆழங்கால் பதித்தவர் இலக்கியத்தில்.

பெரும்புலவர் இராமநாதன் அய்யாவின் நூற்றாண்டை திராவிடர் கழகம் கொண்டாடுகிறது

அவருடைய இலக்கிய செறிவும், அறிவும், அவ ருடைய சுயநலத்திற்குப் பயன்படவில்லை. நம்முடைய இனநலத்திற்குப் பயன்படுத்தினார். எனவேதான், அவரு டைய நூற்றாண்டை திராவிடர் கழகம் இப்பொழுது பெரிய அளவிலே கொண்டாடுகிறது.

தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்று சின்ன தோர் கடுகு உள்ளம் அவருடைய உள்ளம் அல்ல. தொல்லுலக மக்கள் எல்லாம் என்னுடைய மக்கள் என்று - அவருடைய வாழ்க்கை ஒரு தொண்டற வாழ்க்கை. இல்லறத்தில் இருந்துகொண்டு தொண்டறம் செய்யலாம். இதைத்தான் தந்தை பெரியார் நமக்குக் கற்றுக் கொடுத்தார்.

‘‘சனாதனம், சனாதனம்'' என்று 

உளறிக் கொண்டிருக்கிறார்கள்

‘‘சனாதனம், சனாதனம்'' என்று இப்பொழுது உளறிக் கொண்டிருக்கிறார்களே, என்னவென்று புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்களே, அந்த சனாதன தத் துவத்தில் என்ன சொன்னார்கள் என்றால், ஒன்று இல்லறம் என்று சொன்னால், அதற்கடுத்துத் துறவறம்.

இது நம்முடைய பண்பாடு அல்ல. கல்யாணம் என்று ஒன்றை நடத்தும்பொழுதே, காசி யாத்திரை சடங்கு ஒன்றைச் செய்வார்கள். முதல் நாளே சாமியாராக வேண்டும் என்று நினைப்பார்கள். சாமியாராக ஆவ தற்கு எதற்குக் கல்யாணம் செய்யவேண்டும்? நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.

கல்யாணம் செய்யாமலேயே சாமியாராகப் போய் விடலாமே! இங்கேகூட நம்முடைய சாமியார் ஒருவர் இருக்கிறார். அவர் பகுத்தறிவு சாமியார் - விசிறி சாமியார். அவருடைய உருவம் எப்படி இருக்கிறது என்பது எங்களுக்கு முக்கியமல்ல - உள்ளம் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

இல்லறம் என்று சொல்லுகிற நேரத்தில், அதற்கடுத்து சந்நியாசம், சந்நியாசம் என்று சொன்னார்கள்.  வருணா சிரம தர்மங்களில் மிகப்பெரிய அளவிற்கு சந்நியாசம் முக்கியம் என்று சொன்னார்கள். அது நம்முடைய பண்பாடு அல்ல.

தமிழிலே எழுதவேண்டிய அளவிற்குப் 

பெரியார் ஆணையிட்டார்

இது ஒரு பெரிய அரங்கம் - பெரும்புலவர்கள் எல்லாம் இங்கே இருக்கிறீர்கள். நான் சாதாரணமானவன் - அவர்கள் அளவிற்கு நான்  தமிழறிஞனோ அல்லது தமிழ் படித்தவனோ அல்ல - தவிர்க்க முடியாமல், தமி ழிலே எழுதவேண்டிய அளவிற்குப் பெரியார் ஆணையிட்டார் - ஆகவே எழுதி பழக்கப்பட்டு இருக்கிறேன், அவ்வளவுதானே தவிர, வேறொன்றுமில்லை. அடக்கத் தோடு சொல்லிக் கொள்கிறேன், உண்மையும் அதுதான்.

ஆகவே அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன் றைக்கு அதை நல்ல தமிழ்படுத்தி, இல்லறம் - துறவறம் என்று சொன்னார்கள். ஆனால், உள்ளபடியே துறவிகள் இப்பொழுது கிடையாது. சாமியார்கள் இருக்கிறார்கள், சந்நியாசிகள் இருக்கிறார்கள். ஆனால், துறவிகள் இல்லை.

சந்நியாசம் என்பது 

தமிழ் வார்த்தையும் கிடையாது

சந்நியாசிகளுக்கு வேலை என்னவென்று தெரியும்; சாமியார்கள் என்னென்ன செய்வார்கள் என்றால், ஜெயி லுக்குப் போவார்கள்; அதற்காக பெயிலுக்கு அலை வார்கள். ஆகவே, சந்நியாசம் என்பது வேறு - அது தமிழ் வார்த்தையும் கிடையாது. தமிழ்ப்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் துறவி என்று சொன்னார்கள்.

ஆனால், அய்யாதான், இல்லறத்திற்குப் பிறகு துறவறம் என்பதல்ல. இல்லறத்தில் இருந்துகொண்டே செய்யக்கூடிய அறம் இருக்கிறதே, அதுதான் தொண் டறம் என்று காட்டினார்கள்.

இராமநாதன் அய்யா அவர்களால்  

சித்திரக்குடி அறிமுகமாகிறது

அந்தத் தொண்டறத்தைத் தன்னுடைய வாழ் நாளில், தனக்கென்று பயன்படும் அளவிற்கு இல்லாமல் - ஒரு சிறு வட்டத்திற்குள், சித்திரக் குடியில் அவர் பிறந்தாலும், உலகம் இன்றைக்கு இராமநாதன் அய்யா என்றால், யார் என்று தெரிந்து கொண்டிருக்கிறது. இராமநாதன் அய்யா அவர் களால்  சித்திரக்குடி அறிமுகமாகிறது என்று ஊருக் குப் பெருமை சேர்க்கக்கூடிய அளவிற்கு அவரு டைய தொண்டறம் அவரை உயர்த்தியிருக்கிறது.

ஒரே பற்று மானுடப் பற்று - 

வளர்ச்சிப் பற்று - அறிவுப் பற்று

மனிதநேயம், மாண்பு மிக முக்கியமானது. நாம் மனிதர்களைத் தேடுகிறோம். மானுடத்தினுடைய வானம் வசப்படும் என்று சொன்னார் புரட்சிக் கவிஞர் அவர்கள்.

மானிடப் பரப்பைப் பார் என்று சொன்னார்கள். ஆனால், அந்த மானிடப் பற்று என்று சொல்லுகின்ற நேரத்தில், தந்தை பெரியார் சொன்னார்,

உங்களுக்கு எந்தப் பற்று உள்ளது என்று அவரிடம் கேட்டார்கள்,

‘‘எனக்கு எந்தப் பற்றும் இல்லை. ஒரே பற்று மானுடப் பற்று - வளர்ச்சிப் பற்று - அறிவுப் பற்று'' என்று சொன் னார்.

பல நேரங்களில் அய்யா அவர்கள் கோபமாக சொல்லுவார்கள், வேகமாகச் சொல்லுவார்கள்- அதற் கெல்லாம் சரியான விளக்கம் என்று சொல்லி,  எழுத்துப் பூர்வமாக வகுப்பறைகளில் இளைஞர்களுக்குச் சொல் லக்கூடிய அளவிற்கு ஒரு கருவூலத்தைத் தந்திருக் கின்றார் என்று சொன்னால், அந்தப் பணிக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது. அய்யா இராமநாதன் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை - திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கள், தன்மானம் உள்ளவர்கள், திராவிட உணர்வாளர்கள் கொண்டாடுவதற்கு அதுதான் காரணம்.

புலவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள்; பெரும்புலவர்கள் என்னை மன்னிக்கவேண்டும்; அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் எல்லாம் நம்முடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான், உணர்வாளர்கள்தான். மாறுபட்டவர்களுக்கு நான் தெளிவாகச் சொல்கிறேன்.

நான்தான் கடைசி அறிவாளி என்றோ வள்ளுவர்தான் கடைசி அறிவாளி என்றோ சொல்லமாட்டேன்!

பெரியார் சொல்கிறார், ‘‘எங்களைவிட அறிவாளிகள் இல்லை என்று அர்த்தமல்ல. நிறைய பேர் இருக்கிறார்கள். நான்தான் கடைசி அறிவாளி என்றோ, வள்ளுவர்தான் கடைசி அறிவாளி என்றோ சொல்லமாட்டேன். நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், அதேநேரத்தில்,  சில கருத்துகளைத் துணிவோடு சொல்லவேண்டும். அந்தத் துணிவு வரவேண்டும்'' என்று சொன்னார்.

புரட்சிக்கவிஞருக்குள் 

ஒரு பெரிய சிந்தனை மாற்றம்

அந்தத் துணிவு என்று பார்த்தீர்களேயானால், தந்தை பெரியார் சொன்ன கருத்தை, ‘சுப்பிரமணியர் துதி அமுதை'' பாடிக் கொண்டிருந்த புரட்சிக்கவிஞர், முதன் முதலில் மயிலாடுதுறையில் கேட்கிறார். அதைக் கேட்ட வுடன், அவருக்குள் ஒரு பெரிய சிந்தனை மாற்றம்.

‘‘பெரியார் ஒரு முழுப் புரட்சியாளர்’’

அதேபோன்று, அய்யா புலவர் ந.இராமநாதன் அவர் கள். பெரியார் சிந்தனைகளைக் கேட்டவுடன், அவர் களை ஈர்த்த சிந்தனை, செய்தி என்னவென்பதற்குச் சான்று,  அவர்களது இந்தப் புத்தகம் ஆகும். அருள் கூர்ந்து இந்த அறிவார்ந்த அரங்கத்தினருக்கு, குறிப்பாக இளைஞர் களை நான் கேட்டுக்கொள்வது, வேறு எதை நீங்கள் படித்தாலும், படிக்காவிட்டாலும், அய்யா இராம நாதன் அவர்களுடைய நூற்றாண்டு விழாவில், இந்த ஒரு புத்தகத்தை வாங்கிச் செல்லுங்கள்; ‘‘பெரியார் ஒரு முழுப் புரட்சியாளர்'' - இந்தத் தலைப்பில் அய்யா அவர் கள் மூன்று நாள்கள் பேசினார். நாங்கள்தான் அதற்கு ஏற்பாடு செய்தோம். அந்த உரையினுடைய தொகுப்பு தான் இந்த நூல்.

இதுபோன்ற ஓர் ஆழமான தத்துவ ரீதியாக ஈர்ப்பு உள்ள ஒரு புத்தகம் - பெரியாரியத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஏனென்றால், இன்றைக்கு அம்பேத்கரைக்கூட நெருங்கி, அணைத்து அழித்துவிடலாம் என்று நினைக் கிறார்கள். ஆனால், பெரியாரை, சதி செய்யக்கூடிய வர்களால் நெருங்க முடியவில்லை.

காரணம் என்ன?

பெரியார் என்பவர் எரிமலை!

இமயமலையில்கூட அவர்கள் ஏறலாம்; ஆனால், எரிமலையிடம் அவர்களால் செல்ல முடியாது. பெரியார் என்பவர் எரிமலை. இமய மலை அல்ல அவர்.

எரிக்கவேண்டியவற்றை அவர் எரிப்பார். ஜாதி, மூடநம்பிக்கை, வருணாசிரம தர்மம், சனாதன தர்மம், பெண்ணடிமை இவை அத்தனையும் எரிப்பார்.

பெரியாருடைய கருத்துகள் என்பது எப்படிப்பட்டன என்பதை இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு இடத்திலும் விளக்கப்பட்டு இருக்கிறது.

பெரிய புத்தகம் என்றால், வாங்குவார்கள்; படிக்க மாட்டார்கள். ஆனால், இந்த நூலை நாம் அச்சடித்து வெளியிட்டபொழுது, நன்கொடை ரூ.35 தான். 

தயவு செய்து இளைஞர்கள், தோழர்கள், அய்யாவைப் பற்றி மாறுபட்ட கருத்துள்ளவர்களாக இருந்தாலும், அய்யா ந.இராமநாதன் அவர்களின் ‘‘பெரியார் முழு புரட்சியாளர்'' என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்!

அவருடைய கனிந்த அனுபவம், பழுத்த அனுபவம், முதிர்ந்த அனுபவம்; அந்த முதிர்ந்த அனுபவத்தினால், அவர் எடுத்துச் சொல்லுகின்ற முறை நேர்த்தியானது.

அப்பாசாமி நாயுடு

திருவாரூருக்குப் பக்கத்திலுள்ள விடயபுரத்தில், மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார். அங்கேதான் தந்தை பெரியார் ‘கடவுள் மறுப்பு' வாசகத்தை சொல்லுகிறார்.

அங்கே அப்பாசாமி நாயுடு என்பவர், வைதீக சிந்தனை உள்ளவர்தான். ஆனால், பெரியாரிடம் மிகுந்த பற்றுள்ளவர். 

பெரியார் கடவுள் மறுப்பாளர்தான் - ஆனால், கடவுள் நம்பிக்கையாளர்கள் அவரை விரும்புவார்கள்.

பெரியார் அவர்கள் நீதிபதிகளைக் கண்டிப்பார் - நீதிபதிகள் அவரை விரும்புவார்கள்.

பெரியார் அவர்கள் பத்திரிகையாளர்களைக் கண் டிப்பார் - பத்திரிகையாளர்கள் அவரை விரும்புவார்கள்.

பெரியார் அவர்கள் மாணவர்களைக் கண்டிப்பார் - மாணவர்கள் அவர் பின்னாலே செல்வார்கள்.

இந்த ஈர்ப்பு வேறு எந்தத் தலைவருக்கும் கிடையாது.

(தொடரும்)


No comments:

Post a Comment