ஜாதி, மதம் கிருமிகளுக்கு எதிரான பகுத்தறிவு இயக்கம் - எங்கள் திராவிடர் கழகம் - திராவிட தேசியம் என்பதில் தமிழ்த் தேசியமும் அடக்கம்தான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

ஜாதி, மதம் கிருமிகளுக்கு எதிரான பகுத்தறிவு இயக்கம் - எங்கள் திராவிடர் கழகம் - திராவிட தேசியம் என்பதில் தமிழ்த் தேசியமும் அடக்கம்தான்!

‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வுக்கு திராவிடர் கழகத் தலைவர் அளித்த நேர்காணல்

(வரும் டிசம்பர் 2ஆம் தேதியன்று தனது 90 ஆவது வயதில் அடிஎடுத்து வைக்கும், பெரியாரின் கொள்கைச் சார்ந்த சீடரும், திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணி, இந்துத்துவ எதிரிகளுடன் சமூக நீதிக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டு வருகிறார். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில ஏட்டிற்கு அளித்த நேர்காணல் ஒன்றில், திராவிடர் கழகத் தோற்றுநர் பெரியார் ஈ.வெ.ராமசாமியும் அவரது கொள்கைகளும் இன்றைக்கும் மிகமிகப் பொருத்தம் உடையவைதான் என்பதை வலியுறுத்துகிறார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஒரு ட்ரோஜான் (பொம்மைக்) குதிரை என்று வர்ணிக்கும் அவர்,  அதிமுக கட்சியின்  பிளவுக்கு பா.ஜ.க.வை குறை கூறுகிறார். அவர், அதனை ஒரு பொம்மலாட்ட விளையாட்டு என்றும், அதில் இங்கிருக்கும் பொம்மைகளை ஆட்டுவிப்பவர்; டில்லியில்  உள்ளார் என்றும் கூறுகிறார்)

கேள்வி: இன்றைய நவீன வாழ்க்கைக் காலத்திலும், அரசியலிலும் தமக்கு இருந்த சமூக முக்கியத்துவத்தை பெரியார் இழந்துவிட்டாரா?

பதில்: இன்றைக்கும், தமிழ் நாட்டு இளைஞர் களிடையேமட்டுமல்லாமல்,அனைத்துநாட்டு இளைஞர்களிடையேயும் மிகமிகப் பொருத்தமான வராகத்தான்; பெரியார் இருக்கிறார். அடிப்படைவாதி களின் கைகள் பலம் பெற்றுள்ளதால், இளைஞர்கள் நாடும் ஒரே ஆயுதம் பெரியார்தான். அவர் ஒரு தனி மனிதரல்ல, சமசரம் செய்து கொள்ளப்படாத கொள்கைகளின் ஒட்டு மொத்த உருவமாகத் திகழும் ஒரு நிறுவனம் அவர். மதக் கொடுமைகள், அடிப்படைவாதம், பாசிசம் ஆகியவற்றுடன் அவர் வழி நடப்பவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர் என்ற அளவில் பெரியாரும், அவரது கருத்துகளும் இன்றைக்கும் மிகுந்த பொருத்தமுடையதாகவே உள்ளன.

கேள்வி:  பெரியாரின் லட்சியங்களை பாதுகாப்ப தற்கு தி.க.வை விட தி.மு.க. அதிக அளவில் போராடுகிறது என்ற கண்ணோட்டத்தை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?

பதில்:  அது ஒரு திசை மாற்றமாகக் கூறப்படுவது ஆகும். பெரியாரை முன் வைத்துதான் தி;ராவிட கோட்பாட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குதிரைக்கு முன் வண்டியைப் பூட்டுவதா அல்லது வண்டிக்கு முன் குதிரையைக் கட்டுவதா என்பது   கேள்வி அல்ல. முந்தைய தலைவர்களைப் போல,  முதல்  அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மிகுந்த ஆர்வத்துடன் திராவிட கொள்கைப் பாரம்பரியத்தை நிலை நாட்டியும், பரப்பியும் வருகிறார்.

கேள்வி:  தமிழ்நாட்டிலிருந்து பெரியாரிசத்தையும், திராவிடக் கோட்பாட்டையும் வெளியே தள்ளு வதற்கு ஆர்.எஸ்.எஸ். முயன்று கொண்டு இருக்கிறதா?

பதில்: அதற்காக  என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் அவர்கள் செய்துதான் பார்க்கிறார்கள். அது ஒரு பொம்மைக் குதிரை என்பதை விழிப்புணர்வு கொண்டவர்கள் நன்கு அறிவார்கள். அதனால் இங்கே கால் பதிக்க அவர்களால் முடியாது. தமிழ் மொழி உள்ளிட்ட திராவிடன் சூப்பர் மார்க் கெட்டில் உள்ள அனைத்தையும் முயற்சித்து தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் விரும்புகின்றனர். அது ஒரு பேராசை கொண்ட சிந்தனையே.

கேள்வி:  தமிழ்நாட்டில் முஸ்லிம் தீவிரவாதம் வளர்ந்து வருவது பற்றிய கவலை உங்களுக்கு இல்லையா?

பதில் :  திராவிடர் கழகம் ஒரு மனிதநேய இயக்கம். மதவாதத்தையோ அல்லது தீவிரவாதத்தையோ நாங்கள் ஒரு போதும் ஆதரிக்கமாட்டோம். பகுத்தறிவு என்பது மதம், ஜாதி ஆகியவற்றைக் கடந்தது ஆகும். சமூகக் கிருமிகளுக்கு எதிரானவர்கள் நாங்கள். அதற்கான காரணங்களை  ஆழமாகச் சென்று பார்த்து கிருமிகளைக் கொல்ல வேண்டும். நாங்கள் கோட்பாட்டுக்காகப் போரிடுபவர்களே அன்றி, தனிமனிதரிடம் சண்டை இடுபவர்கள் அல்ல.

கேள்வி: தமிழ்நாட்டில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில் : பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவுதான். குதிரை பேரம் செய்வதன் மூலம் அவர்கள் வெற்றி பெறுகின்றனர். ஜனநாயக வழிகளில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. கருநாடகா போன்ற மாநிலத்தில் வேண்டுமானால், அவர்களால் வெற்றி பெற இயலும். ஆனால் தமிழ் நாட்டில் அவர்களால் வெற்றி பெற முடியாது. இது பெரியார், சமூகநீதி மற்றும் பகுத்தறிவு மண். இங்குள்ள கட்சிகள் ஒரு திராவிட கட்சிக்குதான் வாக்களிப்பார்கள். 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு இதுதான். மதச்சார்பற்ற கூட்டணி இங்கு பலமாக உள்ளது. அதிமுக கட்சிக்குள் இருப் பவர்களும், பா.ஜ.கட்சியுடனான கூட்டணியை விரும்ப வில்லை. பா.ஜ.க.விடம் பணபலம், ஊடக பலம், மற்றும் உடல் பலம் இருக்கலாம். ஆனால் எங்களிடம் இருப்பது மன பலம்.

கேள்வி: அஇஅதிமுக,  திமுக இரண்டுக்குமே கோட்பாட்டு முதுகெலும்பாக இருக்கும் திராவிடர் கழகம் அவர்களில் யாருக்கு ஆதரவு தரும்?

பதில்: இரண்டுக்குமே தாய் அமைப்பு நாங்கள்தான்.  கோட்பாட்டு அளவில் திமுக எங்களுடன் நெருங்கிப் போவதால், அவர்கள் எங்களுக்கு நெருக்கமாக இருக் கின்றனர். அஇஅதிமுக அந்த அளவில் கோட்பாட்டு ரீதியாக எங்களுடன் நெருக்கமாக இல்லை. திராவிட இயக்க வரலாற்றை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

கேள்வி: அப்படியானால், தாய் ஒரு குழந்தையை மட்டுமே ஆதரிப்பதாக ஆகாதா?

பதில்: நாங்கள் தருவது ஆதரவல்ல, குழந்தைகளுக்கு வழிகாட்டும் தாய் போன்றவர்கள் நாங்கள். சில குழந் தைகள் தாயுடன் சண்டையிட விரும்புவார்கள். தாயிடம் விசுவாசம் இருக்க வேண்டும். அண்மையில் அஇஅதிமுக வில் தலைமை மாற்றம் ஏற்பட்டபோது, தங்கள் தாயை அவர்கள் மறந்துவிட்டார்கள்.   ஜெயலலிதாவுக்கு சமூக நீதி வீராங்கனை என்ற பட்டத்தை அளித்து கவுரவப்படுத்தியது நாங்கள்தான்.

கேள்வி: சமூகநீதி பற்றிய புதிய வெளிச்சம் பாய்ச்சுபவர்கள் எவராவது வருவதை உங்களால் பார்க்கமுடிகிறதா?

பதில் : அதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ் நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நிலை பெறு வதற்கு ஜெயலலிதாதான் மிகப் பெரிய அளவில் பங்களித்தார். நான் அவருக்கு வழிகாட்டினேன். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தாழ்த்தப்பட்;ட பிரிவினர், பழங்குடியின மக்களுக்கு கல்வி நிறுவன சேர்க்கையிலும், அரசுப் பணி நியமனங்களிலும் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தி நிறை வேற்றுவதற்கு அவர் ஒரு கருவியாக இருந்திருக்கிறார். இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்க இயலாதபடி  அதனை அரசமைப்புச் சட்ட ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பதை உறுதிப்படுத்தியதுடன்  அதற்கு  குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. திராவிடர் கழகம் பெரியாரின் அறிவுச் சுடரை ஏந்;தி சென்று  கொண்டிருக்கிறது. அதனை எங்களுடன் ஏந்திச் செல்ல விரும்பி வருபவர்கள் எவரையும் நாங்கள் நல்வரவு கூறி வரவேற்கிறோம்.

கேள்வி: திராவிடயியத்துக்கு எதிராக  2021 சட்ட மன்றத் தேர்தலுக்குப் பிறகு  தமிழ் தேசியம் தோன்றி உள்ளது. திராவிடயியத்துக்கும், இந்துத் துவாவுக்கும் இடையேயான போர்  இப்போது தீவிரம் அடைந்துள்ளதா?

பதில் : அது ஒரு செயற்கையான, பல புதிய பிரச்சினைகளை உருவாக்க முயலும் ஒரு வேறுபாடுதான். திராவிட தேசியம் என்பதில் தமிழ் தேசியமும் அடங்கி உள்ளது. திராவிடயியமும்,  இந்துத்துவாவும் எதிர் எதிர் துருவங்களைப் போன்றவையாகும். கோட்பாட்டின் படி திராவிடயியம் ஜாதி இல்லை என்று கூறுவது, அனைவரும் சமம்.  சட்டத்திற்கு  முன் அனைவரும் சமம். அனைவருக்கும் சம வாய்ப்புகள் ஆகியவை எங்கள்  கொள்கை. திராவிடன் என்ற பெயர் பெரியாரால் அதிகாரபூர்வமாக அளிக்கப்பட்டது.

கேள்வி:  பா.ஜ.கட்சியுடனான கூட்டணியில்; அஇ அதிமுக வுக்கு உள்ள  பலத்தை நீங்கள் எவ்வாறு  மதிப்பிடுகிறீர்கள்?

பதில்:  அஇஅதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்கு  பா.ஜ. கட்சியே காரணம். அது  ஒரு பொம்மலாட்டம், அதை இயக்குபவர் டில்லியில் உள்ளார்.

கேள்வி:  அஇஅதிமுகவிற்குள்  உள்ள தலைமைப் போட்டி பற்றிய தங்கள்  கருத்து என்ன?

பதில்:  தலைமை என்பது திணிக்கப்படக் கூடாது. தங்களது பணியால் உயர்ந்து, அனைவரையும் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதாக தலைமை இருக்க வேண்டும், ‘இந்தக் கடைசி வரை’ என்ற தனது நூலில் ஜான்  ரஸ்கின் கூறியிருப்பதாவது :  ‘‘எங்களது பிரதமர் பதவியை நாங்கள் டச்சு ஏலத்தில் விற்பதில்லை'' அவர்களின் தடுமாற்றத்துக்கான காரணமே அவர்களிடம் எந்த ஒரு கோட்பாடுமே இல்லை என்பதுதான்.

கேள்வி :  சசிகலாவுக்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா?

பதில் :  தன்னை ஒரு தலைவர் என்று அவர் அழைத்துக் கொள்கிறார். ஒரு நேரத்தில் அவரால் ஆதர வைத் திரட்டி இருக்க முடியும். ஆனால் இப்பொழுது அவருக்கு எந்த வாய்ப்பும் இல்லை.

கேள்வி:  பெரியார் தொடங்கிய ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கும், இப்போதைய போராட்டத் துக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில் :  அப்போதைய எதிரிகள் பலம் வாய்ந்தவர் களாகவும், கோட்பாட்டு அளவில் நாணயம் உள்ள வர்களாகவும் இருந்தார்கள். ஆனால் இப்போது ஹிந்தியைத் திணிக்கும் எதிரிகள் தந்திரம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். ஒரு சமஸ்கிருத கலாச்சாரத்தைத் திணிக்க அவர்கள் விரும்புகின்றனர். எங்களுக்கு அது ஓர் அன்னிய கலாச்சாரம். ஹிந்தி திணிப்பு மிகமிக ஆபத்தானது.

கேள்வி:  அப்படியானால், ஆளுநருக்கான எதிர்ப்பில் திராவிடர் கழகமும் சேர்ந்துவிட்டதா?

பதில்:  அவர் கடமை தவறியதைத்தான் நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். ராஜ் பவனையே அவர்  ஆர்.எஸ்.எஸ்.  அலுவலகமாக  மாற்றிவிட்டார்.

கேள்வி:  அடுத்த தலைமையைப் பற்றி உங்கள்  திட்டம் என்ன?

பதில் :  பெரியார் காலத்திலும் இந்தக் கேள்வி  எழுப் பப்பட்டது. அவருக்குப் பின் யாரும் இருக்கமாட்டார்கள் என்று கூறப்பட்டது. எனது  தகுதியை பெரியார் மட்டும்தான் கண்டு அங்கீகரித்தார். இளைஞர் பிரிவு, மாணவர் பிரிவு தலைவர்கள், பெண்கள் பிரிவு தலைவர்கள் பலர் மற்றும் மூன்று பொதுச் செயலாளர்கள் ஆகியோர் உள்ளனர். இது ஓர்அரசியல் கட்சியல்ல;  காலம் காலத்துக்கு நீடிக்க இயன்ற ஓர் இயக்கம் இது.

நன்றி:  ‘டைம்ஸ் ஆப்  இந்தியா'

நேர்காணல்: ஜெயா.மேனன்

தமிழில் : த.க.பாலகிருட்டினன். 

No comments:

Post a Comment