தந்தை பெரியார் அவர்களின் நவம்பர் நிகழ்ச்சிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

தந்தை பெரியார் அவர்களின் நவம்பர் நிகழ்ச்சிகள்!

 - ஆ.வந்தியத்தேவன்

“குடிசெய்வார்க்கில்லை பருவம் - மடி செய்து மானம் கருதக் கெடும்” - என்ற குறள் நெறிக்கேற்ப விழி மூடுகிற வரை ஓய்வின்றி தொண்டறம் தொடர்ந்தவர் நம் பெரியார்! ஓய்வு-சலிப்பு-சோர்வு இவைகளை தற்கொலைகளுக்கு சமம் என்று புறந்தள்ளிவிட்டு சுற்றிவிட்ட பம்பமரமாய் சுழன்று உலகை வலம் வந்து அரும் பணியாற்றியவர் நம் அய்யா பெரியார்!

தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் எல்லாம் சாலை வசதி இல்லாத அந்தக் காலத்திலும் பயணித்து, வட இந்தியா முழுவதும் மோட்டார் வாகனத்திலேயே சென்று, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, எகிப்து, கிரீஸ், துருக்கி, ரசியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்சு, போர்ச்சுகல் முதலிய அயல் நாடு களுக்குப் கப்பலிலேயே பயணம் செய்து பகுத்தறிவுக் கொள்கைகளை வாழ்நாள் முழுவதும் பரப்பிய பெருமை தந்தை பெரியார் அவர்களுக்கு மட்டுமே உண்டு!

07.11.1912 அன்று ஈரோடு வட்ட நாட்டாண்மைக் கழக உறுப்பினராகப் பொறுப்பேற்று தொடங்கிய பெரியாரின் இலட்சியப் பயணம் 24.11.1973 அன்று வேலூரில் நிறைவு பெற்றது. 94 வயதில் தன் இறுதிக்காலத்திலும் 168 நாள்கள் அந்த கிழச்சிங்கம் துணிச்சலோடு தமிழ்நாட்டை வலம் வந்தது. உடல் நலம் குன்றி நினைவு தடுமாறிய நிலையிலும், திருவண்ணாமலை, திருப்பத்தூர், சுந்திலி, இரும்புலிக்குறிச்சி, திருச்சி ஆகிய ஊர்களில் கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சிகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேட்டுக் கொண்டதை ஏற்க மறுத்து பிடிவாதம் காட்டிய இலட்சிய வேங்கைதான் நம் தலைவர் அய்யா பெரியார்!

இந்த திங்கள் நவம்பர் திங்கள்; அய்யா அவர்கள் நவம்பர்த் திங்களில் மேற்கொண்ட சுற்றுப்பயணங்களை அரிமா நோக்கில் திரும்பிப் பார்த்தால் நாம் வியப்பின் உச்சிக்கே செல்கிறோம்! இவ்வளவு நிகழ்ச்சிகளா என்று திகைத்து நிற்கிறோம். அவைகளில் சிலவற்றை கடல் அளவு நீரில் கையளவு நீரை அள்ளிப் பார்ப்பதைப் போல, நாம் நினைவு கூர்வோம்!

1925ஆம் ஆண்டு நவம்பர் 21, 22 ஆகிய நாள்களில் காஞ்சிபுரத்தில் தமிழ் மாகாண காங்கிரசு இராஜிய மாநாடு நடைபெறுகிறது. தந்தை பெரியார் அவர்களின் வகுப்புரிமை தீர்மானத்தை, கடந்த காலங்களில் ஏற்க மறுத்ததைப் போலவே இந்த மாநாடும் மறுத்து விட்டது. எஸ்.இராமநாதன், சிதம்பரம் என்.தண்டபாணி (பிள்ளை) முதலான பார்ப்பனரல்லாத தலைவர் களோடு, “காங்கிரசை வீழ்த்துவேன்!" என வெஞ்சினம் கூறி வெளியேறுகிறார் அய்யா பெரியார்! 22.11.1925 அன்று மாலை 5.30 மணிக்கு பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டை அதே காஞ்சி மாநகரில் தொடங்குகிறார் பெரியார்.

17.11.1925 அன்று கூடிய கேரள காங்கிரசு கட்சியின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவின் கூட்டம், வைக்கம் மகாதேவர் கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் தீண்டத்தகாதோர் நடந்து செல்ல உரிமை கிடைக்காததால், கிளர்ச்சியை நடத்துவது என்று முடிவு செய்து அறிவித்தது. அன்று மாலையில் நான்காயிரம் பேர் திரண்டிருந்த மாபெரும் கூட்டத்திற்கு, தந்தை பெரியார் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். வைக்கம் சத்தியாகிரக ஆசிரமத்தில் 23.11.1925 அன்று பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களே தலைமையேற்று உரையாற்றினார்.

சோவியத் நாட்டில் நவம்பர் 7 அன்று நவம்பர் புரட்சி வெற்றி பெற்றதை நினைவு கூரும் வகையில் 7.11.1928 அன்று ஈரோட்டில் இருந்து, தந்தை பெரியார், எஸ்.இராம நாதன் ஆகியோரை ஆசிரியர் களாகக் கொண்டு "REVOLT"  ஆங்கில வார ஏடு வெளிவரத் தொடங்கியது.

1938ஆம் ஆண்டு ஆச்சாரி யாரின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து, நவம்பர் 5 கோவை யிலும், 6 தஞ்சையிலும், 8 கேரளாவிலும் போர் முரசு கொட்டினார் பெரியார். 12, 13 ஆகிய நாள்களில், சென்னை ஒற்றைவாடை கொட்டகையில், நீலாம் பிகை அம்மையார் தலைமையில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு கூடியது. மீனாம்பாள் சிவராஜ், பண்டித நாராயணி அம்மாள், மூவலூர் இராமாமிர்தம், பார்வதி, கலைமகள், உண்ணாமுலை, சீதா, மலர் முகத்தம்மாள், ராணி அண்ணாதுரை முதலான வீராங்கனைகள் ஒன்றி ணைந்து மாநாட்டில் `பெரியார்' என்ற சிறப்புப் பெயர் நம் அறிவுத் தந்தைக்கு சூட்டப்பட்டது!

மறுநாள் (14.11.1938) பெத்துநாயக்கன் பேட்டையில் ஹிந்தியை எதிர்த்து களம் கண்டு சிறைத்தண்டனை பெற்ற வீரப் பெண்மக்களைப் பாராட்டி உரையாற்றினார் பெரியார். அதன்பின் 26.11.1938 அன்று பெரியாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1951ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் முதல் நாளில் சேலம் நகர கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் சார்பில் முதல்வர் இராமன், தமிழ்ப் பேராசிரியர் தேவநேயப் பாவாணர் ஆகியோர் முன்னிலையில் தந்தை பெரியார் அவர்களுக்கு வெள்ளிப் பேழை வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

1954ஆம் ஆண்டில், நவம்பர் 6 அன்று திருச்சியிலும், 14 முதல் 19 வரை சென்னையில் சேத் துப்பட்டு, தியாகராயர் நகர், சைதாப்பேட்டை, புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், அயன்புரம் ஆகிய இடங்களிலும்., இராமாயண தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் பெரியார். நவம்பர் 23 அன்று சென்னையில் புறப்பட்டு கப்பல் வழியாக ரங்கூன் சென்ற பெரியார், அங்கு நடைபெற்ற பவுத்த மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் அவர்களுடன், கலந்து கொண்டு உரையாற்றினார். அன்னை மணியம்மையார், சேலம் க.இராசாராம், ஆனைமலை நரசிம்மன், இராம.கிருட்டினம்மாள் ஆகியோர் அய்யாவுடன் ரங்கூன் பயணத்தில் பங்கேற்றார்கள்.

1957ஆம் ஆண்டில், நவம்பர் 3 அன்று தஞ்சை அரண்மனைத் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக தனி (ஸ்பெஷல்) மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களுக்கு எடைக்கு எடை வெள்ளி வழங்கப்பட்டது. ஜாதி அமைப்பினைக்  கட்டிக் காக்கும் சட்டப் பிரிவுகளை அகற்றாவிட்டால், 26.11.1957 அன்று அரசமைப்புச் சட்டத்தை தீயிலிட்டு எரிக்கும் போராட்டத்தை நடத்துவோம் என்று அறிவாசான் பெரியார் இந்த மாநாட்டில் பிரகடனம் செய்தார்!

அடுத்த நாள் முதலே போராட்ட விளக்கக் கூட்டங்களில் பங்கேற்றார் பெரியார். சுவாமி மலை, திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மாய வரம், குடந்தை, தஞ்சை, நாகை, பேரளம், திருவாரூர், காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, தனுஷ்கோடி, புதுக்கோட்டை, ஈரோடு, பேட்டைவாய்த்தலை, குளித்தலை, சிந்தலைவாய், கரூர், லால்குடி, அரியலூர், விருத்தாசலம், கடலூர், நெல்லை, மதுரை, சிறீரங்கம் என நாடு முழுவதும் தொடர் வண்டியில் பயணம் செய்து போராட்டம் ஏன் என்பதை விளக்கி உரையாற்றினார். இதனிடையே நவம்பர் 18 அன்று, விழுப்புரம் அருகில் உள்ள “கிராமம்” என்ற பெயர் கொண்ட கிராமத்தில், கருஞ்சட்டைத் தோழர்கள் போராட்ட விளக்கப் பிரச்சாரக் கூட்டத்தை எழுச்சியுடன் நடத்தி, போர்ப்படைத் தலைவர் பெரியாருக்கு வெள்ளிக்கத்தி வழங்கி சிறப்பு செய்தார்கள்.

நவம்பர் 26 அன்று நாடெங்கும் சட்ட எரிப்புப் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. தந்தை பெரியார் அவர்களை முதல் நாளே காவல்துறை கைது செய்தது. பத்தாயிரம் தோழர்கள் சட்டத்தாளை எரித்தார்கள், அவர்களில் 2997 பேரை கைது செய்து, சிறையில் அடைத்து, ஒரு மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கி கோரத்தாண்டவம் ஆடியது இந்திய அரசு!

இதனைத் தொடர்ந்து 1958 ஆம் ஆண்டின் நவம்பர் திங்களில் 19 நாள்கள் பயணம் செய்து, சிறையிலிருந்து விடுதலை பெற்ற தோழர்களுக்கு நடைபெற்ற பாராட்டுக் கூட்டங்களில் கலந்து கொண்டு, தியாக மறவர்களாம் கருஞ்சட்டைப் பட்டாளத்தினரை வாழ்த்தினார், அய்யா பெரியார். ஜாதி ஒழிப்பு என்பது நம் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று என்பதால், 2 அன்று சிறீரங்கம், திருவானைக்காவிலும், 26 அன்று சிதம்பரத்திலும் கழகம் நடத்திய ஜாதி ஒழிப்பு மாநாடுகளில் கலந்து கொண்டு, சமத்துவ சமுதாயம் காண அழைப்பு விடுத்தார் அய்யா பெரியார்!

1964ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில், 14, 15, 16 ஆகிய நாட்களில் பெங்களுருவில் அய்யா கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் சிறப்பு மிகுந்தவை. வள்ளுவர் விழாவில் குறள் நெறியின் மேன்மையினை விவரித்தார் பெரியார். அய்யாவின் 86ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அய்யா அவர்களை தராசுத்தட்டில் அமர வைத்து, எடைக்கு எடை திராட்சை பழங்களையும், காய்கறி களையும் வழங்கி மகிழ்ச்சியில் திளைத்தனர், கருநாடகத் தமிழர்கள்!

1970ஆம் ஆண்டில் வட மாநில சுற்றுப் பயணம் மேற்கொண்ட பெரியார் நவம்பர்த் திங்கள் முதல் வாரம் முழுவதும் மும்பை நகரில் தாராவி, மாதுங்கா, செம்பூர், புனே, கர்க்கி, மான், கொலபா, குல்லா, போய்வாடாபரேல் என பம்பாய் நகரின் அனைத்துப் பகுதிகளிலும், நடைபெற்ற பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார். மகாத்மா ஜோதிராப்புலே தொழில் நுட்ப பயிற்சிப் பள்ளி, கர்க்கி எஸ்.இ.எஸ்.உயர்நிலைப்பள்ளி ஆகிய கல்வி நிலையங்களின் நிகழ்ச்சிகளிலும் தந்தை பெரியார் அவர்கள் கலந்து கொண்டு மாணவச் செல்வங்களிடம் அறிவுரையாற்றி மகிழ்ச்சி அடைந்தார். 

1971ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் நாளில், சேலம் நேரு மண்டபத்தில் நடைபெற்ற அய்யாவின் 93ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவில், தந்தை பெரியார் அவர்களுக்கு வெள்ளிச் சிம்மாசனம் வழங்கப்பட்டது, பதவிப்பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்காத நம்கால புத்தரான அய்யா பெரியார், அந்த சிம்மாசனத்தில் முதலமைச்சர் கலைஞரை அமரவைத்து வாழ்த்து மழை பொழிந்தார்! அந்த மாதத்தில் 20 நாள்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று பகுத்தறிவு இன முழக்கமிட்டார் அய்யா பெரியார்!

1972ஆம் ஆண்டின் நவம்பர்த் திங்களில், சென்னை, திருச்சி, கோவை, திருப்பூர், பழனி, புதுச்சேரி, காஞ்சி, வேலூர், ஆம்பூர், தருமபுரி, சேலம், ஆத்தூர், இராசிபுரம், கரூர், தஞ்சை ஆகிய ஊர்களில் 23 நாள்கள் பயணம் செய்து தி.க., தி,மு.க பொதுக் கூட்டங்களிலும், மணவிழா நிகழ்ச்சிகளிலும் உரையாற்றினார் பெரியார், கோவையில் பகுத்தறிவாளர் கழகம் நடத்திய விழாவில், ஆந்திர மாநிலத்தின் நாத்திகத் தலைவர் கோராவும், அவரின் துணைவியாரும் கலந்து கொண்டு சாப்பிடும் உணவில் மதத்தின் தலையீடு கூடாது என்று உணர்த்துவதற்காக, அந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் பன்றிக்கறி - மாட்டுக் கறி  விருந்து அளிக்கப்பட்டது அந்த நிகழ்ச்சியில் அய்யா பெரியார் சிறப்புரை ஆற்றினார்.

1973ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் மறைந்த துயரம் நிகழ்ந்த ஆண்டு! முதுமையும் மூப்பும் ஒரு சேர நின்று தாக்கியதையும் தாங்கிக் கொண்டு, நம் அய்யா பெரியார் திருச்சி, செயங்கொண்டம், தா.பழூர், பாண்டமங்கலம், பரமத்தி வேலூர், திருவள்ளரை, மதுரை, இராமநாதபுரம், மன்னார்குடி, தஞ்சை, சென்னை, வேலூர், கடலூர், தர்மபுரி, சேலம், கோவை, திருவாவடுதுறை ஆகிய ஊர்களுக்கு 16 நாள்கள் பயணம் செய்து கழக நிகழ்ச்சிகளில் எழுச்சியுரை நிகழ்த்தினார். அய்யா பெரியார் அவர்கள் தம் வாழ்நாளில் இறுதிப் போருக்காக அறிவித்த தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுக்க இந்நிகழ்ச்சிகளைப் பயன்படுத்திக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்த திங்களான டிசம்பரில் 19 அன்று சென்னை - தியாகராயர் நகரில் நடைபெற்ற இன இழிவு ஒழிப்பு கிளர்ச்சி மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் தன் இறுதிப் பேருரையை நிகழ்த்தினார், அய்யா! குடல் இறக்க வலி தாளாமல் அம்மா, அம்மா, ம்ம்ம் என்று துடியாய்த் துடித்த நம்ம மானத் தலைவர் பெரியார், சிறிது நேரத்தில் சிம்மமாக எழுந்து, "நீ யார்? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? உன் உடை வேறு, என் உடை வேறு! உன் மொழி வேறு! என் மொழி வேறு! என் கலாச்சாரம் வேறு! உன் கலாச்சாரம் வேறு! என் பழக்கவழக்கம் வேறு! உன் பழக்கவழக்கம் வேறு! மரியாதையாக வெளியேறு" என்று கர்ஜித்த காட்சி நம்மால் மறக்க முடியுமா? மரண சாசனமாய் அமைந்து விட்ட, அய்யாவின் ஒலி முழக்கம் நம் செவிகளில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறதே!

பன்னிரெண்டு திங்களில் நவம்பர்த் திங்களில் மட்டும் நம் அய்யா பெரியார் அளித்த அறிவுப் பெருஞ் செல்வங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே நினைவுக்குக் கொண்டு வந்து நாம் பெரும் வியப்புக் கொள்கிறோம்! 

எஞ்சியவைகளை எண்ணும்போது உலக அதிசயங்களில் ஒன்றாக நமக்குத் தோன்றுகிறது. அவைகளையும் பாட மாக கற்போம்! அவைகளைத் துணை கொண்டு, தமிழின மீட்சிக்கான நம் அய்யா வழி பயணத்தைத் தொடர்வோம்!

No comments:

Post a Comment