மோடி ஆட்சியின் 'வளர்ச்சி' இதுதான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 2, 2022

மோடி ஆட்சியின் 'வளர்ச்சி' இதுதான்!

2014ஆம் ஆண்டில் ஆட்சி அதிகார லகானைப் பிடித்த நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மதவாதம் மற்றும் கார்ப்பரேட் மய ஆட்சியாக ஓங்கி வளர்ந்து விட்டது.

நாங்கள்ஆட்சிக்கு வந்தால் குடி மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் விழும் என்று 'ஜோராக'ப் பேசி மக்களின் கை தட்டலை வாங்கி ஆட்சிப் பீடம் ஏறினார் மோடி; விழுந்தது பணம் அல்ல; மக்களின் தலையில் இடி.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வங்கிகளில்  கடன் வாங்கி அதனைத் திரும்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழும் நிலை மோடி ஆட்சிக் காலத்தில் கொடி கட்டிப் பறக்கிறது!

விஜய் மல்லையா, குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது மாமனார் மெருல் சோக்சி, ஏபிஜி ஷிப்யார்டு (குஜராத்காரர் வங்கிக் கடன் ரூ.23,000 கோடி) என்று பட்டியல் நீளும்.

வங்கிகளில் வாராக் கடன் ரூ.10 புள்ளி 72 லட்சம் கோடி மோடி ஆட்சியில்; இதில் முதல் பரிசைத் தட்டிக் கொண்டு விட்டது.

2016 நவம்பர் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு என்ன நடந்தது? 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்'காம்!

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது; வங்கிகள் திரும்பப் பெற்றுக் கொள்ளும் என்ற அதிரடி சத்தம் கொடுத்தார் பிரதமர் மோடி.

மக்கள் கால்கள் கடுகடுக்க, நாள் கணக்கில் வங்கிகளில் வரிசையில் நின்று, செத்து மடிந்தவர்களும் கணக்கில் அடங்காது. பிரதமர் சொன்னபடி கறுப்புப் பணம் காணாமல் போய் விட்டதா? உண்மையைச் சொல்லப் போனால் கறுப்பு வெள்ளையானதுதான் மிச்சம்!

தொழில்கள் நசிந்தன. தொழிலாளர்கள் வேலைகளை இழந்தனர். மக்கள் மூட்டை முடிச்சுகளுடன், குழந்தைக் குட்டிகளுடன் ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்து செல்லும் மானுட வதை!

2022 ஜனவரியில் வெளிவந்த ஆய்வறிக்கை என்ன கூறுகிறது? இந்தியாவின் பில்லியனர் (பில்லியன் என்பது (நூறு கோடி) கிளப்பில் உள்ளவர்கள் 102இல் இருந்து 142 ஆக உயர்ந்துள்ளனர்.  அதே நேரத்தில் 50 விழுக்காடு மக்களின் சொத்து 6 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான கவுதம் அதானி, கடந்த சில ஆண்டுகளாகவே உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துவருகிறார்.

இந்த நிலையில், உலகப் பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததாக கடந்த வாரம் செய்திகள் பரபரப்பான நிலையில், தற்போது இந்திய பணக்காரர்கள் வரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.

 ஹாருன் இந்தியா என்ற  ஆய்வு நிறுவனம், அய்.அய்.எப்.எல். என்ற பொருளாதாரக் கண்காணிப்பு மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து நடத்தி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி,

* கவுதம் அதானி 10,94,400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுடன் இந்தியாவின் முதல் பணக்காரராக திகழ்வதாகவும்,

* அவருக்கு அடுத்தபடியாக முகேஷ் அம்பானி 7,94,700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுடன் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு, இந்திய பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

"தனது சரக்கு வர்த்தக நிறுவனத்திலிருந்து நிலக்கரி, துறைமுகம், எரிசக்தித் துறை எனப் பல துறைகளில் தனது தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய அதானி மட்டும்தான் ஒரு லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் கூடிய ஏழு நிறுவனங்களை உருவாக்கிய ஒரே இந்தியர் ஆவார்" என்று மேற்கூறிய பட்டியலை வெளியிட்டுப் பேசிய ஹமன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை ஆய்வாளருமான அனஸ் ரஹ்மான் ஜுனைட் தெரிவித்தார்.

அதானி குழுமத்தில் தற்போது அம்புஜா சிமென்ட் மற்றும் ஏசிசி நிறுவனமும் சேர்ந்துவிட்டதால், இந்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

* 2021ஆம் ஆண்டில், முகேஷ் அம்பானியைக் காட்டிலும் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பின்தங்கி இருந்த அதானி, தற்போது அம்பானியை விட 3 லட்சம் கோடி ரூபாய் அதிகமான சொத்து மதிப்புகளுடன் முன்னணியில் உள்ளார். 

"2012 ஆம் ஆண்டில், அதானியின் சொத்து, அம்பானியின் சொத்து மதிப்பில் ஆறில் ஒரு பங்காக கூட இல்லை. அப்படியான ஒரு நிலையில், அவர் அடுத்த பத்தாண்டுகளில், அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தியாவின் முதலிடப் பணக்காரர் ஆவார் என்று அப்போது யாராலும் நினைத்தே பார்த்திருக்க முடியாது" என்று ஜுனைட் தெரிவித்தார். 

அதானிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பணக்காரராக அம்பானி உள்ள நிலையில், இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பில் 59 சதவீதத்தை இவர்கள் இரண்டு பேரும் பகிர்ந்துகொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடந்த 5 ஆண்டுகளில் 15.4 மடங்கு சொத்து அதிகரித்த நிலையில், வினோத் சாந்திலால் அதானி  குடும்பத்தினரின் சொத்து  9 புள்ளி 5  மடங்கு, ராதாகிஷன் தமானி  குடும்பத்தினரின் சொத்து 3 புள்ளி 8  மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி ஆட்சியின் சாதனை சாதாரணமானதல்ல அசாதாரணமானது என்பது இதுதான்!

No comments:

Post a Comment