முதலிடத்தில் தமிழ்நாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

முதலிடத்தில் தமிழ்நாடு

அரசு சாரா கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தகவல் அமைப்பு UDISE 2021-2022ஆம் ஆண்டிற்கான - பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது, 

 அதில் 2021-2022 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மின்சார வசதி, கழிப்பறை வசதி, உணவருந்தும் இட வசதி, மைதானம், எளிதில் சென்று சேரும் போக்குவரத்து வசதி மற்றும் தூய்மையான குடிநீர் வசதிகளை 100 விழுக்காடு பெற்றுள்ளன என்று ஆய்வுகளின் முடிவில் தெரிவித்துள்ளது.  இந்தியாவிலேயே இந்த வசதிகளை 100 சதவீதம் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே ஆகும்.

கற்றல் நிலையை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாட்டின் நிலை 80 புள்ளி 33 விழுக்காடு  - இந்திய அளவிலே  74 விழுக்காடு மட்டுமே.

பிஜேபி ஆளும் மாநிலங்களின் நிலை என்ன? உத்தரப்பிரதேசம் 69%, குஜராத் 79%, மத்தியப் பிரதேசம் 70%, சத்திஸ்கர் 71%.

உயர் கல்வி நிறுவனங்களை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாடே முன்னிலையில் இருக்கிறது - தமிழ்நாடு 49% - இந்திய அளவில் வெறும் 26.3% - பிஜேபி ஆளும் குஜராத் நிலையோ மிகவும் பரிதாபமே வெறும் 20.4%.

இந்தியத் துணைக் கண்டத்தில் மிகச் சிறந்த 100 பல்கலைக் கழகங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 25 - குஜராத் 2, மத்தியப் பிரதேசம் சுழியம் (பூஜ்யம்) உத்தரப்பிரதேசம் - 7, பீகார் - சுழியம், ராஜஸ்தான் - 4.

மருத்துவக் கல்லூரிகளை எடுத்துக் கொண் டாலும் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பதும் தமிழ்நாட்டில் தான்.

திராவிட இயக்கம் என்ன செய்தது என்று வாய்க் கிழிய  பேசுவோரின் உதடுகளைத் தைக்க இந்த எடுத்துக்காட்டுகள் போதுமானவை தானே!

இடஒதுக்கீட்டினால் தகுதி, திறமை ஒழிந்து விடும் என்று ஒரு பொய்யான பிரச்சாரத்தை பார்ப்பனர்கள் பரப்புவது உண்டு.

1928 முதல் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு செயல்பாட்டில் உள்ளது. 

இடஒதுக்கீடு முறை சிறப்பாக உள்ள தமிழ்நாடு தான் இந்தியத் துணைக் கண்டத்திலேயே பிரகாசமாக ஒளி வீசுகிறது.

என்ன விசித்திரம் என்றால், இடஒதுக்கீட்டால் தகுதி திறமை போய் விடும் என்று பிரச்சாரம் செய்ய வந்த பார்ப்பனர்களே இப்பொழுது இட ஒதுக்கீடு கேட்பதும், அதை நியாயப்படுத்து வதுமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு பெரியார் மண் - திராவிட மண் என்பது இப்பொழுது புரிகிறதா?

No comments:

Post a Comment