கடவுள்மீது பழி போடுவது தப்பிக்கும் தந்திரமே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 4, 2022

கடவுள்மீது பழி போடுவது தப்பிக்கும் தந்திரமே!

கடந்த 30.10.2022 அன்று குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து 147 பேர் இறந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியான மோர்பி நகர  காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பி.ஏ.ஜாலா உள்ளூர் நீதிமன்றத்தில், தொங்கு பாலத்தின் கேபிள்  (ஜூல்தா புல்)  “துருப்பிடித்து இருந்தது” என்றும் “கேபிள் பழுது பார்க்கப்பட்டிருந்தால், இந்த நிகழ்வு நடந்திருக்காது,” என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் ஒருவரும், பாலத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள ஓரேவா நிறுவனத்தின் மேலாளர்களில் ஒருவருமான தீபக் பரேக், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் மற்றும் கூடுதல் மூத்த சிவில் நீதிபதி எம்.ஜே. கானிடம், “அப்படியொரு வருத்தமான நிகழ்வு நடந்தது, கடவுளின் விருப்பம் (பகவான் நி இச்சா)” என்று கூறினார்.

கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் நால்வரை 10 நாள் காவலில் வைக்கக் கோரிய காவல்துறை அதிகாரி ஜாலா, நீதிமன்றத்தில் வாய்மொழி சமர்ப்பிப்புகளில், “அனுமதிக்கக்கூடிய மக்கள் எண்ணிக்கைத்  திறனை நிர்ணயிக்காமல், அரசாங்க அனுமதியின்றி, அக்டோபர் 26 அன்று பாலம் திறக்கப்பட்டது. பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பின் ஒரு பகுதியாக, தளம் (டெக்) மட்டுமே மாற்றப்பட்டது. காந்திநகரில் இருந்து வந்த  FSL (Forensic Science Laboratory) குழு அறிக்கையின்படி வேறு எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை  - உயிர்காக்கும் கருவிகள் அல்லது உயிர்காக்கும் காவலர்களும் முன்னெச்சரிக்கையாகப் பயன்படுத்தப்படவில்லை" என்று கூறினார்.

"பாலத்தை கேபிள்கள் தாங்கியிருந்தன. மேலும் கேபிளில் எண்ணெய் அல்லது கிரீஸ் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. கேபிள் உடைந்த இடத்தில் கேபிள் துருப்பிடித்து இருந்தது. கேபிளை சரி செய்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. என்ன வேலை, எப்படி செய்யப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் எதுவும் பராமரிக்கப்படவில்லை. வாங்கப்பட்ட/பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அதன் தரம் சரிபார்க்கப்பட்டதா, போன்றவையும் விசாரணை செய்யப்பட வேண்டி உள்ளது” என்று மோர்பி நகர காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பி.ஏ. ஜாலா கூறினார்.

அரசு வழக்குரைஞர் எச்.எஸ்.பஞ்சால்  கூறுகையில், ஒப்பந்ததாரர்கள் “தகுதியான பொறியாளர்கள் அல்ல” என்றும், “அவர்களால் கண் துடைக்கும் வேலைகள் மட்டுமே செய்யப்பட்டன என்பதுதான் இதுவரை விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றும் கூறினார்.

“பாலத்தில் அலுமினியப் பலகைகள் இருந்ததால் பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றும் பஞ்சால் தெரிவித்துள்ளார்.

சுரேந்திரநகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.கே.ராவல், காவலில் வைக்கப்பட்ட நான்கு பேருக்காக ஆஜரானார்.  

பாலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மேலாளர் பரேக்கிற்கு எந்தப் பங்கும் இல்லை என்று வழக்குரைஞர் ராவல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தக் கட்டத்தில், பரேக் நீதிபதியிடம் சென்று, கிராபிக் வடிவமைப்பைக் கையாண்டதாகவும், நிறுவனத்தில் மீடியா மேலாளராக இருப்பதாகவும் கூறினார்.

“நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முதல் கீழ்மட்ட ஊழியர்கள் வரை அனைவரும் மிகவும் கடினமாக உழைத்தார்கள், ஆனால் கடவுளின் விருப்பப்படியே (பகவான் நி இச்சா) இது போன்ற ஒரு துயர நிகழ்வு நடந்தது” என்று பரேக் கூறினார்.

வெல்டிங், எலக்ட்ரிக், பொருத்துதல் போன்ற வேலைகளை மட்டுமே ஒப்பந்ததாரர்கள் கையாள்வதாகவும், அவர்கள் பெற்ற பொருட்களின் அடிப்படையில் அவர்கள் அதைச் செய்ததாகவும் வழக்குரைஞர் ஜி.கே.ராவல் அறிக்கையில் கூறியிருந்தார்

"கைது செய்யப்பட்ட நுழைவுச்சீட்டு விற்பனையாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் பயிற்சி பெற்றவர்கள் அல்ல” என்று கூறிய காவல் துறையினர் அவர்களை மேலும் காவலில் வைக்கக் கோரவில்லை.

ஓரேவாவின் இரண்டு மேலாளர்கள் பாலத்தை பழுதுபார்ப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை கவனித்துக் கொள்வதாகவும், புதுப்பித்தல் பணிகளிலும் ஈடுபட்டுள்ளதாகவும் அரசு தரப்புக் கூறியபோது, ​​"இரு மேலாளர்களுக்கும் பாலத்தின் தகுதியைக் கண்டறிதலில் எந்தப் பங்கும் இல்லை” என்று மேலாளர்கள் தரப்பு வழக்குரைஞர் கூறினார்.

இந்த விபத்துக்குக் காரணம் 'கடவுளின் விருப்பமே' என்று பாலத்தைப் பராமரிக்கும் நிறுவனத்தின் மேலாளர் நீதிமன்றத்தில் கூறினார்.

இதைப் போன்றே மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 'யூனியன் கார்பைடு' நிறுவனத்தின் நச்சு வாயு கசிவால் 22 ஆயிரம் பேர் மாண்டனர். நிறுவனத்தின் சார்பில் வாதிட்ட வழக்குரைஞரும் 'நடந்தது கடவுளின் செயல்' என்றார்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஈராக்கின் மீது படை எடுக்குமுன் "கடவுளின் ஆணையப் பெற்றதாக"க் குறிப்பிடவில்லையா?

ஆக கடவுள் என்பது குற்றவாளிகள் தப்பிக்கப் பயன்படும்  ஏமாற்றுத் தந்திரம் என்பது விளங்கவில்லையா?

மேற்கு வங்காளத்தில் ஒரு பாலம் இடிந்து விழுந்து பலரும் இறந்தபோது (தேர்தல் நேரம்) 'கடவுளின் சமிக்ஞை' என்று சொன்ன நரேந்திரமோடி இப்பொழுது குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் 147 பேர்கள் மடிந்தனரே - குஜராத் தேர்தல் நெருங்கும் இந்த நிலையில் 'இது கடவுளின் சமிக்ஞை' என்று கூறுவாரா?

No comments:

Post a Comment