50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு பெரம்பலூரில் சிப்காட் பூங்கா: முதலமைச்சர் திறந்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு பெரம்பலூரில் சிப்காட் பூங்கா: முதலமைச்சர் திறந்தார்

பெரம்பலூர்,நவ.29- பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அமைக்கப்பட் டுள்ள சிப்காட் தொழில் பூங்காவை 28.11.2022 அன்று திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அமையவுள்ள தனியார் காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார்.

தமிழ்நாடு அரசின் 2022-_2023 பட்ஜெட்டில், கோவை, பெரம்பலூர், மதுரை,வேலூர், திருவள்ளூர் மாவட் டங்களில் தொழில் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், புதியதொழில் பூங்காக்கள் (தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் 243.49 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட் டுள்ளது. இந்தப் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.11.2022)  திறந்து வைத்தார். மேலும், அங்கு ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார்.

அப்போது, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கும், கோத் தாரி ஃபீனிக்ஸ் அக்கார்டு நிறுவனத் துக்கும் ரூ.1,700 கோடிமதிப்பில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின. இதன்மூலம் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், தைவான் நாட்டைச் சேர்ந்த 10 தொகுப்பு நிறு வனங்களுடன், ரூ.740 கோடி முதலீட் டில், 4,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

50,000 பேருக்கு வேலைவாய்ப்பு

இவற்றையும் சேர்த்து, பெரம்பலூர் மாவட்டத்தில் அமையவுள்ள தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.5,000 கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்றும், மொத் தம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிகழ்ச்சியில், அமைச் சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், மக்க ளவை உறுப்பினர்கள் திருமாவளவன், ஆ.ராசா, தொழில்முதலீட்டு ஊக்கு விப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலர் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜாகுல்கர்னி, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எ.சுந்தரவல்லி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப.வெங்கடபிரியா, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறு வனத்தின் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் கலந்து கொண்டனர்.

வானவில் மன்றம்

முன்னதாக, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான் மையை மேம்படுத்தும் வகையில், திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் `வானவில் மன்றம்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் நேற்று (28.11.2022) தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள 13,210 அரசுப் பள்ளி களில், 6 முதல் 8ஆம் வகுப்புவரை பயிலும் 20 லட்சம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 710 தன்னார்வலர்கள் கருத்தாளர்களாக இடம் பெற்றுள் ளனர். முதல்கட்டமாக ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 100 நடமாடும் அறிவியல் ஆய்வகங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப் பினர்கள் திருச்சி என்.சிவா, சு.திருநா வுக்கரசர், பள்ளிக்கல்வித் துறை முதன் மைச் செயலர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார், மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சி யர் மா.பிரதீப்குமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment