தாம்பரத்தில் 500 படுக்கை வசதிகளுடன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைக்கத் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

தாம்பரத்தில் 500 படுக்கை வசதிகளுடன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைக்கத் திட்டம்

தாம்பரம்,நநவ.21- செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன் ரூ.110 கோடியில் 5 ஏக்கர் பரப்பளவில் தாம்பரத்தில் அமைகிறது. அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் கடந்த, 2019ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டத்துக்கு தேவையான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன்ஒருபகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்துக்கு என தனியாக தலைமை மருத்துவமனை தொடங்க ஆலோசிக்கப் பட்டு வந்தது.

இதனிடையே, குரோம்பேட்டையில் செயல்படும் தாம்பரம் அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. தற்போது, செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரூ.110 கோடியில் 500 படுக்கை வசதிகளுடன், 5 ஏக்கரில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட மருத்துவத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் 19 வட்டார அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதில் தாம்பரம் அரசு மருத்துவமனையும் ஒன்று. ஆனால், அதற்கான அரசாணை இன்னும் வெளியாகவில்லை. மாவட்ட தலைமை மருத்துவமனை அமைய அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனை வளாகத்தில் தலைமை மருத்துவமனை அமைய 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் தரை தளத்துடன் கூடிய 6 மாடி கட்டடத்துடன் 500 படுக்கைகள் கொண்ட அனைத்து வசதிகளுடன் புதிய மருத்துவமனை கட்டப்படவுள்ளது.

மேலும், தற்போது தாம்பரம் அரசு மருத்துவமனையாக குரோம்பேட்டையில் செயல்படும் அரசு மருத்துவமனை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவாக மாற்றப்படவுள்ளது. அங்கு ரூ. 6.8 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் மகளிர் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் கட்டுப்பட்டு வருகிறது. புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும்போது, இங்கிருந்து ஒரு நோயாளி கூட சென்னை அரசு மருத்துவமனைக்கோ அல்லது செங்கல்பட்டு அரசுக்கல்லூரி மருத்துவமனைக்கோ அனுப்பப்படாமல், இங்கேயே சிகிச்சை பெறும் வசதிகள் ஏற்படுத்தப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் கட்டுமான பணிகள் தொடங்குமென எதிர்பார்க்கிறோம் என்றனர்.

No comments:

Post a Comment