10 சதவிகித இடஒதுக்கீடு முறை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாது! உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 13, 2022

10 சதவிகித இடஒதுக்கீடு முறை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாது! உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி உறுதி

சென்னை, நவ.13- ‘‘தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், இப்போதிருக்கும் அனைத்திலும் 10 சதவிகித இட ஒதுக்கீடு முறை அமுல்படுத்தப் படாது. ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்ப உள்ளோம். அதில் அமல்படுத்தமாட்டோம்.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில்  69 சதவிகித இட ஒதுக்கீடே பின்பற்றப்படும்'' என்று உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறியுள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு தீர்ப்பு வழங்கப்பட்ட விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (12.11.2022) சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜக பங்கேற்கவில்லை. 

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் களைச் சந்தித்த அமைச்சர் க.பொன்முடி, ‘10 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப் பளித்திருப்பதை எப்படி சந்திக்க வேண்டும் என் பதை முடிவு செய்வதற்காக சட்டமன்றத்தில் இருக்கிற கட்சிகளை எல்லாம் அழைத்து இன்று (12.11.2022) கலந்துரையாடல் கூட்டத்தை முதல மைச்சர் நடத்தினார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக...

திமுக, காங்கிரஸ், சிபிஅய், சிபிஎம், மதிமுக, பா.ம.க. தவாக, விசிக, மமக, கொமதேக உள் ளிட்ட 10 கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டன. இந்த அனைத்துக் கட்சிகளுமே சமூக நீதிக்கு எதிர்ப்பான இந்தப் பொருளாதார அடிப்படை என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற 10 சதவிகித இடஒதுக்கீட்டை ஆதரித்து உச்ச நீதிமன்றம் அளித்திருக்கின்ற தீர்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தை மீண்டும் அணுக வேண்டும் என்ற அடிப்படையிலான கருத்துகளை சொல்லி யிருக்கின்றனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும் என்று அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர். மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்போது, தமிழ்நாடு அரசும் அதற்கு உறுதுணையாக இருக்கும். சட்டத்துறை வல்லுநர்களுடன் ஆலோசித்து தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும்.

சமூகநீதி கொள்கையில்...

இந்தக் கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ள வில்லை. சமூகநீதி கொள்கையில் தமிழ்நாட்டில் தந்தை பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என அனை வருக்குமே ஒருமித்த கருத்து இருந்தது. சமூக நீதியை அதிகரித்து, இடஒதுக்கீட்டை அதி கரித்தும் முதன்முதலில் சட்டம் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர். அவரைப் பின்பற்றி எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்ததில் அவர்களுக்கும் பங்குண்டு. ஆகவே, திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் சமூகநீதிக் கொள் கையை எப்போதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சிகளாகத்தான் இரண்டு கட்சிகளுமே இருந் திருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு

நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வரும்போது 8.1.2019 இல் அன்று அதிமுக மக்களவை உறுப்பினராக இருந்த தம்பித்துரை அதை எதிர்த்துப் பேசி வெளிநடப்பு செய்தார். மாநிலங்களவையில் நவநீதிகிருஷ் ணனும் எதிர்த்துப் பேசி வெளிநடப்பு செய்தார். அவ்வாறெல்லாம் வெளிநடப்பு செய்து, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும் கலைஞ ருடைய சமூக நீதிக் கொள்கையைப் பின்பற்றிய அதிமுகதான் இன்று (12.11.2022) இந்தக் கூட் டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதற்குக் கார ணம் அதிமுகவில் நிலவும் உள்கட்சி பிரச்சி னையா அல்லது அவர்களது கொள்கையி லேயே அவர்களுக்கு பாஜகவுடன் செல்ல வேண்டும் என்ற எண்ணமா என்று எங்களுக்கு தெரியவில்லை.

நம்பிக்கை இருக்கிறது

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத இரு கட்சிகள் அதிமுகவும் பாஜகவும்தான்; இந்தக் கூட்டத்தில் அதிமுகவும் கலந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் கலந்துகொள்ளாதது எங் களுக்கு வருத்தம் அளித்தாலும்கூட, அவர்கள் இதை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அவர்களும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்வார்கள். தமிழ்நாடு மக்களில் 90 சதவிகிதம் பேர் இந்த சமூகநீதி கொள்கையின் கீழ் வருபவர்கள்தான். ஆனால், ஒரு 10 சதவீதம் பேருக்காக அதிமுக இன்று சென்றுகொண்டிருப்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். ஆகவே, பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்படுவது என்பதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

10 சதவிகித இட ஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்படாது

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில், இப் போதிருக்கும் அனைத்திலும் 10 சதவிகித இட ஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்படாது. ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்ப உள்ளோம். அதில் அமல்படுத்தமாட்டோம்.  தமிழ்நாட்டைப் பொருத்தவரையில்  69 சதவிகித இட ஒதுக்கீடே பின்பற்றப்படும்'' என்று உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.


No comments:

Post a Comment