புரட்சியாளர் அம்பேத்கரின் மதமாற்ற அறிவிப்பு, தந்தை பெரியாரின் ஆதரவு ரவிக்குமார்(மக்களவை உறுப்பினர்) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 6, 2022

புரட்சியாளர் அம்பேத்கரின் மதமாற்ற அறிவிப்பு, தந்தை பெரியாரின் ஆதரவு ரவிக்குமார்(மக்களவை உறுப்பினர்)

1935 ஆம் ஆண்டு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறப் போகிறேன் என்று அறிவித்தவுடன் அதை வரவேற்று 'குடிஅரசு' பத்திரிகையில் தொடர்ந்து தலையங்கக் கட்டுரைகளை தந்தை பெரியார் வரைந்திருக்கிறார். ’சபாஷ் அம்பேத்கர்’ என்ற தலைப்பிட்டு அவர் எழுதியுள்ள தலையங்கத்தில் (20.10.1935) அம்பேத்கர் அவர்களது உரையையும் நாசிக் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களையும் எடுத்துக்காட்டியிருப்பதோடு, இதே போல ’நாங்கள் ஹிந்துக்கள் அல்ல’ என்று பிரகடனப்படுத்திய பல்வேறு இயக்கங்களையும் நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

” 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஹிந்து மதத்தை, பார்ப்பனர் அல்லாத மக்கள் விட்டு விட வேண்டும் என்றும்; யாரும் தங்களை ஹிந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது” என்றும் பிரச்சாரம் செய்து வருவதை அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். அது மாத்திரமல்லாமல் ’ஹிந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லை’ என்றும், அது ஜாதி பாகுபாட்டின் பயன்களை அனுபவிக்கும் சோம்பேறிக் கூட்டத்தின் கற்பனை எனச் சொல்லி அந்தப்படி பல மாநாடுகளில் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதை’ எடுத்துக்காட்டி இருக்கிறார்.

1922 இல் திருப்பூரில் கூடிய சென்னை மாகாண தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டில் மாகாண காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாக இருக்கும் போதே மனுநூலையும், ராமாயணத்தையும் சுட்டெரிக்க வேண்டும் என்று தாம் பேசியதையும் அந்த கட்டுரையில் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளாவில் ஈழவ மக்கள் பல்வேறு கூட்டங்களை நடத்தி ’தங்களுக்கு மத நம்பிக்கை இல்லை - தங்களை இனி யாரும் ஹிந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது’ என்று தீர்மானங்கள் இயற்றியதையும்; 1933 இல் கூட்டப்பட்ட எஸ்.என்.டி.பி. யோகம் என்னும் அமைப்பின் சமூக மாநாட்டில், சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த சி.கிருஷ்ணன் பி.ஏ.பி.எல். அவர்களது தலைமையில் கூடிய அந்த மாநாட்டில் ஈழவ சமூக மக்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை ஆதலால் ஈழவ சமூக மக்கள் தங்களை ஹிந்துக்கள் என்று யாரும் சொல்லிக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்ததையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

“தோழர் அம்பேத்கர் அவர்களின் கர்ஜனையும் வீரமும் ஞானமும் நிறைந்த தீர்மானமும் பொது ஜனங்களால் எவ்வளவு தான் வெறுக்கப்பட்ட போதிலும், அவர் எவ்வளவுதான் தூற்றப்பட்ட போதிலும், அதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மாத்திரமல்லாமல் இந்தியாவில் உள்ள ஹிந்துக்களில் பார்ப்பனர் அல்லாத மக்களாகிய 100க்கு 97 விகிதாச்சாரம் உள்ள 24 கோடி ஹிந்து மக்களின் விடுதலைக்கு சர்வ சமய சஞ்சீவியாக போகிறது” என்று குறிப்பிட்டிருக்கும் தந்தை பெரியார், அம்பேத்கர் அவர்களுக்கு ஒரு ஆலோசனையையும் அந்தத் தலையங்கக் கட்டுரையில் கூறியிருக்கிறார்: "தோழர் அம்பேத்கருடைய பேச்சுக்கும் ஆதி இந்துக்கள் தீர்மானத்திற்கும் ஏதாவது மதிப்பு இருக்க வேண்டுமானால் அவர் உடனே இந்த காரியத்தை அதாவது ஆதி ஹிந்துக்கள், ஆதி திராவிடர்கள் முதலிய தீண்டப்படாத வகுப்பு என்பவர்களிடையில் உடனே பிரச்சாரம் செய்து அவர்களை ஹிந்து மதத்தில் இருந்து வெளிக் கிளப்பி விட வேண்டும். தோழர் அம்பேத்கரைப் பொறுத்தவரையில் சிறிது நாள் பொறுத்துத்தான் மதத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் நமது பார்ப்பனர்களுக்கு இப்படிப்பட்ட ஆட்கள் ஹிந்து மதத்தை விட்டுப் போய்விட்டால் இவர்களுடைய தொல்லை ஒழிந்தது என்று சந்தோஷமடைந்து விடுவார்கள். ஆகையால் மதம் மாறாமல் இருந்து கொண்டு எவ்வளவு பெயர்களை மதத்தில் இருந்து வெளியாக்கலாமோ அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டியது அம்பேத்கரின் முதல் கடமையாகும்” என்று அந்தத் தலையங்கக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

பத்திரிகையில் தலையங்கம் எழுதியதோடு நிற்காமல் அம்பேத்கருக்கு உடனே தந்தி ஒன்றையும் பெரியார் அனுப்பி இருக்கிறார். “தாங்கள் புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்தது பற்றி வாழ்த் துக் கூறுகின்றேன். தங்களது முடிவை எக் காரணத் தாலும் மாற்ற வேண்டாம். அவசரப்பட வேண்டாம். முதலில் குறைந்தது 10 லட்சம் பேரையாவது மதம் மாற்ற வேண்டும். பிறகே தாங்கள் மதம் மாறுவது பிரயோஜனமாக இருக்கும். மலையாளம் உள்பட தென்னிந்தியா தங்களது முடிவுக்கு பலத்த ஆதரவு அளிக்கும்” என்று அந்த தந்தியில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அது 'குடிஅரசு' பத்திரிகையில் 'வேண்டுகோள்' என்ற தலைப்பில் 20.10.1935 இல் வெளியிடப்பட்டுள்ளது

27.10.1935 தேதியிட்ட 'குடிஅரசு' இதழில் மீண்டும் இதைப் பற்றித் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. ஹிந்து என்ற சொல் எப்படி நிலவியல் ரீதியாகப் பொருளுரைக்கப்பட்டது  என்பதை அம்பேத்கர் சுட்டிக் காட்டியிருப்பார். தந்தை பெரியாரும் அதைக் குறிப்பிட்டிருக்கிறார். ஹிந்து மதம் என்பது முதலில் இந்தியர்களின் மதம் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதை இந்த தலையங்கத்தில் தந்தை பெரியார் குறிப்பிட்டிருக்கிறார். “இந்தியாவுக்கு மகமதியர்கள் முதலிய அயல்நாட்டார்கள் வந்த காலத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு தேச வகுப்பு மக்கள் நடந்து கொண்டு வந்த நடவடிக்கைகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பல்வேறு சமூகத்தாருடைய சடங்கு, பிரார்த்தனை, வழிபாடு கடவுள்கள் முதலியவைகளுக்கும் சேர்த்து எல்லாவற்றுக்கும் ஒரே பெயராக ஹிந்து மதம் அதாவது இந்தியர்களின் மதம் என்பதாகப் பெயரிட்டு விட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ள பெரியார், அக்காலத்தில் ஆரியர்கள் சிறிது செல்வாக்கு பெற்று இருந்ததால் அவர்கள் தங்கள் பழக்க வழக்கம், சடங்கு, தங்களின் வழிபடு கடவுள்கள் ஆகியவைகளையே பிற இந்தியர்கள் மீதும் சுமத்தி அதற்கு அதிகமான செல்வாக்கை உண்டாக்கி வைத்துக் கொண்டிருந்தபடியால் ஆரியர்கள் பழக்க வழக்கம், சடங்கு, வழிபடு கடவுள், அவர்களது இலக்கிய ஆதாரங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் என்பன முதலியவைகளே ஹிந்துக்களின் மதமாகவும், மத ஆதாரங்களாகவும் ஆக்கப்பட்டு விட்டன....” என்று விளக்கியுள்ளார்.

தங்களது எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டுவதற்கும் தம் மீதான விமர்சனங்களிலிருந்து தப்பிப்பதற்கும் ஹிந்து மதம் என்பதற்குக் கறாரான வரையறை எதையும் ஹிந்துக்கள் செய்து கொள்ளவில்லை. அதை சுட்டிக்காட்டும் பெரியார், “அதுவும் ஹிந்து மதம் இதுவும் ஹிந்து மதம் என்றும்; ஒரு ஹிந்து எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ; பல சமயங்களைச் சேர்ந்தது ஹிந்து மதம் என்றும்; அவ்வப்போது தோன்றிய பல பெரியோர்களின் அபிப்பிராயங்கள் எல்லாமே ஹிந்து மதமாகவே இருக்கிறது என்றும்; எந்த மதக்கருத்தும் ஹிந்து மதத்தில் உண்டு என்றும்; எப்படிப்பட்டவனும் ஹிந்துவாக இருக்கலாம் என்றும்; புத்தர்கள், சமணர்கள், ஜெயினர்கள் எல்லோருடைய அபிப்ராயமும் ஹிந்து மதத்தில் இருந்து வந்தது தான் என்றும், ஹிந்து மதத்திற்குப் பொருத்தமானதே என்றும் சொல்லி பொதுவாக இன்று முகமதியர்கள், கிறிஸ்தவர்கள் அல்லாத எவரும் ஹிந்துக்களே என்று சொல்லக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொண் டார்கள்” என எப்படியெல்லாம் தில்லுமுல்லுகளைச் செய்தார்கள் என்பதை விளக்கியிருக்கிறார்.

”இஸ்லாமியர்களை போலவும் கிறித்தவர்களை போலவும் மதம் என்பதற்கு இருந்து வரும் ஆதாரம் கொள்கை குறிப்பிட்டு அவர்களுடைய உபதேசம் என்பதாக எதுவும் இல்லாமல் வார்த்தை அளவில் குருட்டு அபிமான அளவில் ஹிந்து மதம் இருந்து வருகிறது என்பதை எவரும் மறுக்க முடியாது” என்று அந்தத் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ள பெரியார், அம்பேத்கர் அவர்களுடைய அறிவிப்பால் சனாதனக் கூட்டம் தலையில் இடி விழுந்தது போல் ஆகிவிட்டது என்பதைக் குறிப்பிட்டு, அம்பேத்கரின் குற்றச்சாட்டு களுக்கு எந்தவித பதிலும் அளிக்க முடியாதவர்கள் அவரை சிறுமைப்படுத்துவதற்கு எப்படியெல்லாம் முயற்சிக்கிறார்கள் என்பதையும் எடுத்துக்கூறி இருக்கிறார்.

பெரியாரோ மதத்தின்மீது நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளர், சுயமரியாதைக்காரர். ஆனால், அம்பேத்கரோ மதத்தின்மீது நம்பிக்கை கொண்டவர். மனதைப் பண்படுத்துவதற்கு மதம் தேவை எனக் கருதியவர். பவுத்த மதத்தை ஏற்றதற்குப் பிறகு அவர் ஆற்றிய உரையில்கூட அதை அம்பேத்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார். மனிதர்கள் பொருளாதார நிலையில் உயரவேண்டும் என்பதைத் தான் மறுக்கவில்லை என்ற அம்பேத்கர் ஆனால் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு விலங்குகளுக்கு மனம் என்பது கிடையாது, மனிதனுக்கு மனம் இருக்கிறது. மனிதன் உடலைப் பேணுவதோடு மனதையும் பேணவேண்டும். மனதைப் பண்படுத்த வேண்டும்; மனதைப் பண்படுத்துவதை ஒரு பண்பாடாக வளர்த்தெடுக்க வேண்டும்’ என அம்பேத்கர் கருதினார்.

மத நம்பிக்கை கொண்ட அம்பேத்கர் எடுக்கும் முடிவை மதத்தில் நம்பிக்கை இல்லாத பெரியார் ஏன் ஆதரிக்கவேண்டும் எனப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு விடையளிக்கும் விதமாக, 17.11.1935 இல் குடிஅரசில் ஒரு தலையங்கக் கட்டுரையைப் பெரியார் எழுதினார்.

”நமது மத ஒழிப்பு உணர்ச்சியானது சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த தினத்திலேயே பிரச்சாரம் செய்யப்பட்டு விடவில்லை. செங்கல்பட்டு மாநாட்டில் கடவுளுக்கு என காசைத் தொலைக்க வேண்டாம் என்றோம். பூஜை, அபிஷேகம், ஆராதனை, உற்சவம் ஆகியவைகள் கூடாது என்றோம், ஈரோடு மாநாட்டில் கடவுளை பற்றிக் கவலைப்படாதே என்றோம், பிறகு மூன்றாவது விருதுநகர் மாநாட்டில் மதங்களே கூடாது என்றோம், இப்பொழுது இன்னும் தீவிரமாகப் போக ஆசைப்படுகிறோம். ஆனால், அம்பேத்கரைப் போன்ற ஒரு ஆஸ்திகர் அல்லது ஏதாவது மதத்தின் பெயரால் மனிதன் வாழ்ந்தாக வேண்டும் என்று கருதி இருக்கிறவர்களை சுயமரியாதைக்காரர்கள் என்ன செய்வதென்று கேட்கின்றோம். அப்படிப்பட்டவர் களை தூக்கில் போடுவதா? அல்லது எக்கெதியோ அடைந்து எக்கேடோ கெட்டுப்போ என்று அலட்சி யமாய் விட்டு விடுவதா? என்று கேட்கின்றோம்”

"தோழர் அம்பேத்கர் மதம் மாறுவதில் எந்த மதம் மாறப் போகிறார் என்பது நமக்குத் தெரியாது. உலகாயத மதத்தையோ நாத்திக மதத்தையோ தழுவவோ அல்லது முஸ்லிம் மதத்தைத் தழுவவோ போகிறாரோ என்பதும் நமக்கு தெரியாது. எப்படி இருந்தாலும் ஏமாற்றமும் சூழ்ச்சியும் கொண்டதும், சண்டாளன், பாவி, இழிகுலத்தவன், தீண்டத்தகாதவன் என்று மனிதனை வெறுத்துத் தள்ளுவதும், ஒருவர் உழைப்பை ஒருவர் கொள்ளை கொள்வதுமான காரியங்களை மதக் கட்டளையாகக் கொண்டதுமான ஹிந்து மதத்தை விட்டு விடுகிறேன் என்றால், அதை பொறுத்தவரையில் முதலில் அதற்கு உதவி செய்ய வேண்டும். ஒவ்வொரு சுயமரியாதைகாரனுடைய கடமை அல்லவா என்று கேட்கிறோம்” என்ற பெரியார், “ஹிந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும் சில மூடர்களும் சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள், அதை நாம் சிறிதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஹிந்து மதத்தில் சீர்திருத்தத்திற்கு இடமில்லை அதை சீர்திருத்தம் செய்ய யாருக்கும் அதிகாரமும் இல்லை. ஹிந்துமத ஆதாரங்கள் என்பதை நாம் மத வேதம், சாஸ்திரம், புராணம் என்று சொல்லப்படுபவைகளை பொறுத்ததே ஒழிய, சாமிகள் என்றும் மகாத்மாக்கள் என்றும் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்ளும் சில விளம்பரப் பிரியர்களைப் பொறுத்தது அல்ல.” என அழுத்தம் திருத்தமாகக் கூறினார். ஹிந்து மதத்தை சீர்திருத்த முடியாது என்பதற்குத் தந்தை பெரியார் கூறிய காரணங்கள் இன்றைக்கும் பொருந்துகின்றன அல்லவா?

No comments:

Post a Comment